Published:Updated:

உத்தரப்பிரதேசத்தின் குடும்பக் கட்டுப்பாட்டு சட்ட வரைவு; பெண்களுக்கு ஏன் எதிராக இருக்கிறது?

இந்தச் சட்டம் பெண்களுக்கு எதிராகத் திரும்பும் என்று பெண்ணிய அமைப்புகள் அஞ்சுகின்றன. ஆனால், செப்டம்பர் கடைசி வாரத்தில் ஊடகங்களைச் சந்தித்த உத்தரப் பிரதேச முதல்வர், புதிய சட்டத்தைத் தமது அரசு முன்னெடுக்கும் என்று உறுதிபடக் கூறியிருக்கிறார்.

ஜூலை 11-ம் நாளை ஐக்கிய நாடுகள் அவை உலக மக்கள் தொகை தினமாக அனுசரித்து வருகிறது. இந்த ஆண்டு அந்த நாளில் இந்தியர்களுக்கு, குறிப்பாக உத்தரப்பிரதேச மக்களுக்கு ஒரு வியப்பு காத்திருந்தது. உத்தரப் பிரதேச அரசு, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஒன்றுக்கான வரைவை அன்றைய தினம் வெளியிட்டது. இரண்டு குழந்தைகளோடு பிள்ளைப் பேற்றை நிறுத்திக்கொள்கிற பெற்றோர்களுக்குப் பல சலுகைகளை அந்தச் சட்டம் முன்மொழிந்தது.

பொதுவாக, கல்வியும் செல்வமும் மிகுந்த சமூகங்களில் மக்கள் தொகை தானே மட்டுப்படும். ஆகவே, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதைவிட மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் எனும் கருதுகோள் வலுப்பெற்று வரும் காலமிது. எனவே, இப்படி ஒரு சட்டம் அவசியமற்றது என்று, உத்தரப் பிரதேச சட்ட வரைவை அறிவாளர்கள் விமர்சிக்கின்றனர். இந்தச் சட்டம் பெண்களுக்கு எதிராகத் திரும்பும் என்று பெண்ணிய அமைப்புகள் அஞ்சுகின்றன. ஆனால், செப்டம்பர் கடைசி வாரத்தில் ஊடகங்களைச் சந்தித்த உத்தரப் பிரதேச முதல்வர், புதிய சட்டத்தைத் தமது அரசு முன்னெடுக்கும் என்று உறுதிபடக் கூறியிருக்கிறார்.

கர்ப்பிணி (Representational Image)
கர்ப்பிணி (Representational Image)

இந்தியாவில் அதிக மக்கள் வாழும் மாநிலம் உத்தரப் பிரதேசம் - 20 கோடி. இது இந்திய மக்கள் தொகையில் 16.5%. அதே வேளையில் தனி நபர் ஈட்டும் வருமானத்தில் மிகவும் பின்னால் நிற்கிற மாநிலமாகவும் உத்தரப் பிரதேசம் இருக்கிறது. 2018-19 நிதியாண்டில் உத்தரப் பிரதேசத்தின் தனி நபர் ஆண்டு வருமானம் - ரூ.61,351 (இந்தியா- ரூ.1,26,406; தமிழகம்- ரூ.1,93,750). இந்தப் பின்னடைவுக்கு மக்கள் தொகைப் பெருக்கம்தான் காரணம், அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு நம்புகிறது. அதனால் குடும்பக் கட்டுப்பாட்டை விசையோடு முன்னெடுக்கிறது.

சட்டமும், சலுகையும், பெண்களும்!

இரண்டு குழந்தைகளோடு பிள்ளைப் பேற்றை நிறுத்திக் கொண்டு, தம்பதிகளில் ஒருவர் கருத்தடை சிகிச்சை செய்து கொண்டால், அவர்களை நோக்கி மானியங்களும் சலுகைகளும் பாயும் என்கிறது புதிய சட்டம். அவர்களுக்கு வரிச் சலுகைகள் கிடைக்கும். கல்வியிலும், அரசு வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை கிட்டும். அரசுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் அளிக்கப்படும். புதிய விதிகளுக்குக் கட்டுப்படுபவர்கள் மட்டுமே ஊராட்சித் தேர்தல்களில் போட்டியிடத் தகுதி பெறுவார்கள்.

இப்படியான சலுகைகளையும் மானியங்களையும் பெற, தம்பதிகளில் ஒருவர் கருத்தடை செய்துகொண்டிருக்க வேண்டும் என்கிறது புதிய விதி. ஆய்வாளர்கள் இது இரு விதங்களில் கேடானது என்கிறார்கள். முதலாவதாக, இப்போது அதிகமான பயன்பாட்டில் இருக்கும் கருத்தடைச் சாதனங்களை இது அங்கீகரிக்கவில்லை.

Baby - Representative Image
Baby - Representative Image
Photo by Kristina Paukshtite from Pexels
பணியிடத்தில் பாலியல் கொடுமை: விமானப்படை அதிகாரிக்கே இதுதான் நிலை; நீங்கள் தேசத்துக்குப் பாதுகாப்பா?

ஆணுறை, லூப், மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவோர்தான் இந்தியாவில் அதிகம், உத்தரப் பிரதேசத்திலும் அதிகம். அவர்களால் அரசு விரித்திருக்கும் புதிய குடைக்குள் ஒதுங்க முடியாது. குடையின் நிழலைப் பெற அறுவை சிகிச்சை கட்டாயம்.

இரண்டாவதாக, தம்பதிகளில் ஒருவர் என்கிறது விதி. எனில், அந்த ஒருவர் உத்தரப் பிரதேசம் போன்ற ஒரு மாநிலத்தில் யாராக இருப்பார் என்பதை யூகிப்பது கடினமன்று. ஒரு புள்ளி விவரம் இதைப் புலப்படுத்தும். குடும்ப நலக் கணக்கெடுப்பு - 4 (NFHS-4)-ன் படி உத்தர ப்பிரதேசத்தில் 17.3% பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கின்றனர். ஆண்களில் இது 0.1% மட்டுமே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனைவிமார் தள்ளி வைக்கப்படுவதும், கைவிடப்படுவதும், குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதும் சகஜமாக நிலவும் ஒரு சமூகத்தில், புதிய விதி அவர்களை அறுவை சிகிச்சையை நோக்கித் தள்ளும் என்று அஞ்சுகின்றனர் பெண்ணியச் செயற்பாட்டாளர்கள்.

வறுமையும் கல்லாமையும், ஆண் மேலாதிக்கமும் நிறைந்திருக்கும் ஒரு மாநிலத்தில் பெண்களே அதிகம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள நேரும். பெண்களைவிட ஆண்கள் இந்த சிகிச்சையைச் செய்துகொள்வதுதான் பாதுகாப்பானது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், ஆண்கள் அந்த அறிவுரையைக் கேட்கப் போவதில்லை.

மக்கள் தொகைக் கட்டுப்பாடு கட்டாயமா?

சட்டங்களாலும் சலுகைகளாலும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்கிற கொள்கை காலாவதியாகி வருகிறது. ஐ.நா-வின் மக்கள்தொகை தினத்தின் குறிக்கோள்களில் கல்வி, ஆண்-பெண் சமத்துவம், வறுமை ஒழிப்பு, உடல் நலம், மனித உரிமை முதலான மக்கள் நல அம்சங்கள்தான் முன்னுரிமை பெறுகின்றன. சிறிய குடும்பத்தை அது ஆதரிக்கிறது. ஆனால், குடும்பக் கட்டுப்பாட்டை ஐ.நா கட்டாயமாக்கவில்லை. முன் கூறிய நலத் திட்டங்கள் நடப்பிலுள்ள நாடுகளில் இயல்பாகவே குடும்பங்கள் சிறிதாக இருக்கின்றன.

Yogi Adityanath
Yogi Adityanath
Twitter / myogiadityanath
லக்கிம்பூர் விவசாயிகளின் கொலைக்கு நீடிக்கும் அமைதி; இதுதான் உங்கள் பதிலா மோடி?

உலகெங்கிலும் ஓரளவுக்கு வசதியுள்ள பெற்றோர் எண்ணிக்கையில் குறைந்த குழந்தைகளையே விரும்புகின்றனர். அவர்களை வளர்த்து ஆளாக்குவதைத் தங்கள் லட்சியமாக வைத்துக்கொள்கின்றனர். மாறாக, வசதி குறைந்த குடும்பங்களில் கல்வியும் குறைவாக இருக்கிறது. வறுமையான சூழலில் சிசு மரணங்களும் அதிகம் நிகழ்கின்றன.

உத்தரப் பிரதேசத்தில் 2018-ம் ஆண்டில் பிறந்த ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளிலும் 43 குழந்தைகள் உயிர் தரிக்கவில்லை. (இந்திய சராசரி - 32, தமிழகம் - 15, கேரளா -7). கூடுதல் குழந்தைகளைப் பெற்றால், வயதான காலத்தில் பிள்ளைகள் தங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் என்கிற கருத்தியலும் செல்வாக்கு செலுத்துகிறது. அதனால் குழந்தைகளின் எண்ணிக்கையை அவர்கள் கட்டுக்குள் வைப்பதில்லை. ஆகவே, மக்களின் வாழ்நிலையை மேம்படுத்தாமல் குடும்பக் கட்டுப்பாட்டை முன்னெடுப்பது பலன் தராது என்பதுதான் வரலாறு தரும் பாடம்.

ஆண் குழந்தை மோகம்

மேலும், குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட சமூகங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. நமது சமூகம் ஆண் மேலாதிக்கமும் அதன் காரணமாக ஆண் குழந்தை மோகமும் உள்ள சமூகம். 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 940 பெண்கள்தாம் இருக்கிறார்கள். உத்தரப் பிரதேசத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் இது இன்னும் குறைவு - 912. ஆனால், கேரளாவில் 1,000 ஆண்களுக்கு 1,084 பெண்கள் இருக்கிறார்கள். தமிழகமும் மோசமில்லை - 996 பெண்கள்.

பெண்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்? ஆய்வாளர்கள் சொல்லும் காரணங்கள் இவை: பல பெண் குழந்தைகள் பிறந்ததும் ̀காணாமல்' போய்விடுகின்றன; இன்னும் பல பெண் குழந்தைகள் கருவிலேயே பாலினம் கண்டறியப்பட்டு சிதைக்கப்படுக்கின்றன. இந்த நிலையில் புதிய குடும்பக் கட்டுப்பாட்டுச் சட்டங்களும் சேர்ந்து கொள்ளுமானால், அது பெண்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்துவிடும்.

Baby (Representational Image)
Baby (Representational Image)
Image by Christian Abella from Pixabay
`மொத்த சீனாவையும் மாற்றிய முடிவு!' - ஒற்றைக் குழந்தை திட்டத்தால் எப்படி முடங்கியது சீனா?

கருவள விகிதம்

கருவள விகிதம் என்பது ஒரு பெண் சராசரியாக ஈன்றெடுக்கக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை. உத்தரப் பிரதேசத்தில் 1999-ல் கருவள விகிதம் 4.07 ஆக இருந்தது. பொதுவாக, கருவள விகிதம் 2.1 ஆக இருந்தால் மக்கள்தொகை கூடாமலும் குறையாமலும் இருக்கும். இதற்கு பதிலீட்டு விகிதம் என்று பெயர். 2016-ல் உத்தரப் பிரதேசத்தின் கருவள விகிதம் 2.7 ஆகச் சரிந்தது. பெரும் கட்டுப்பாடுகள் இல்லாமலேயே இது நிகழ்ந்தது. புதிய சட்டத்தின் நோக்கம், இந்த விகிதத்தை 2026-ல் பதிலீட்டு விகிதமாக, அதாவது 2.1 ஆக ஆக்க வேண்டும் என்பது. புதிய சட்டங்கள் எதுவும் இல்லாமல், பெண்களுக்குக் கல்வியும் வேலை வாய்ப்பும் வழங்குவதன் மூலம் இதைச் சாதிக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

புதிய சட்டம் அமலுக்கு வந்தால் பெண்களை அது மேலும் பலவீனமாக்கும். கணிசமான பெண்கள் அறுவைசிகிச்சைக்கு வற்புறுத்தப்படும் சாத்தியங்கள் உருவாகும். சட்ட விரோதமாகக் கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் பரிசோதிக்கப்படும். பெண் சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்படும். பாலியில் சமநிலை பிறழும்.

மாறாக, நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு மக்கள் கல்வியிலும் செல்வத்திலும் முன்னேற வழி வகுக்கப்பட்டால், மக்கள் தாங்களாகவே குடும்பங்களைச் சிறிதாக்கிக் கொள்வார்கள்.

- மு.இராமனாதன்,

எழுத்தாளர், பொறியாளர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு