Election bannerElection banner
Published:Updated:

`சிறப்பு டி.ஜி.பி... மாவட்ட எஸ்.பி... எவனா இருந்தா எனக்கென்ன?' - அந்த துணிவுக்கே சல்யூட் மேடம்!

Tamilnadu Police
Tamilnadu Police ( Photo: Vikatan )

இந்தச் சமுதாயமும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களும் பாதிக்கப்பட்ட பெண்களை நோக்கி வழக்கமாகக் கேட்கும் `அப்பவே ஏன் சொல்லல?’ என்ற பழைய கேள்வியைக் கேட்டு, அதன் மூலம் தங்களை `நல்லவர்களாக’ நிரூபித்துக்கொள்ள வாய்ப்பில்லாத சூழலை ஏற்படுத்தியிருக்கிறார் அந்த பெண் எஸ்.பி. #VoiceOfAval

இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தங்களது `மீ டூ’ கதைகளைப் பெண்கள் பகிர ஆரம்பித்தபோது, `இதை ஏன் அப்பவே சொல்லல; இத்தனை வருஷம் கழிச்சு சொல்றே... இதுல உன் தப்பும் ஒருவகையில இருக்கு; அதனால உனக்கு ஏதோ ஆதாயம் கிடைச்சிருக்கு; அதனாலதான் அப்பவே சொல்லல’ என்று அந்தப் பெண்களைத் திருப்பித் தாக்கியவர்கள், இதை படிப்பவர்களில் 90% இருக்கக்கூடும்!

#MeToo
#MeToo

அந்த 2018க்கும் இந்த 2020க்கும் இடையில் சமூகத்தில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. காவல்நிலையங்களில் பதிவாகும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியேதான் இருக்கின்றன. பதிவாகாமலேயே புதைக்கப்படும் பாலியல் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையும் அதைவிட அதிகமாகவேதான் இருக்கிறது. இத்தகைய சூழலில்தான், ‘அப்பவே ஏன் சொல்லல?’ என்று கேட்கும் இந்தச் சமுதாயத்துக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்... தமிழகத்தின் ஒரு மாவட்டத்தையே கட்டிக் காப்பாற்றும் பெரும் பொறுப்பிலிருக்கும் காவல்துறை எஸ்.பியான பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர்.

ஆம், கடந்த சில தினங்களாக மீடியாவில் பேசப்பட்டு வரும் அதே பெண் எஸ்.பிதான். காவல்துறையிலிருக்கும் சில கறுப்பு ஆடுகளின் ஆண் திமிர்... அதிகாரத்திமிர் இவற்றுக்கு எதிராக அவர் தொடுத்திருக்கும் போர், யாரும் எதிர்பாராதது. இத்தகைய போரைத் தொடுக்கும் அளவுக்கு அந்தப் பெண் எஸ்.பி துணிந்தது... பெண்கள் மட்டுமல்ல, உண்மையாகவே பெண்களை மதிக்கும் ஆண்களும் சேர்ந்து சல்யூட் செய்யவேண்டிய செயல்!

Tamilnadu Police
Tamilnadu Police
Photo: Vikatan

தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த, உயரதிகாரியான சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி மீது சென்ற வாரம் அவர் கொடுத்த புகார், தமிழகத்தை தாண்டியும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 21-ம் தேதி நடந்த சம்பவம் குறித்து, உயரதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலமாக புகார் செய்தார். நேரில் புகார் தெரிவிக்க சென்னைக்கும் கிளம்பினார். யாருக்கும், எதற்கும் தயங்காத தன்னுடைய இந்த உடனடி நடவடிக்கை மூலம்.... இந்தச் சமுதாயமும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களும் பாதிக்கப்பட்ட பெண்களை நோக்கி வழக்கமாகக் கேட்கும் ‘அப்பவே ஏன் சொல்லல?’ என்ற பழைய கேள்வியைக் கேட்டு, அதன் மூலம் தங்களை ‘நல்லவர்களாக’ நிரூபித்துக்கொள்ள வாய்ப்பில்லாத சூழலை ஏற்படுத்தியிருக்கிறார் அந்த பெண் எஸ்.பி.

ஆனால், அதற்குள்ளாக அவர் பட்டபாடு... ‘அப்பவே ஏன் சொல்லல?’ என்று இத்தனை ஆண்டுகளாக பெண்களை நோக்கிக் கேட்டு வந்தவர்களுக்கு, 'அப்படி சொன்னால் என்ன ஆகும்?' என்று கன்னத்தில் அறைந்து பதில் சொல்வதாகவேத்தான் இருக்கின்றது.

Police (Representational Image)
Police (Representational Image)
Photo: Vikatan

குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பியான அந்த நபர், தன்னுடைய ஆண் திமிர் மற்றும் அதிகாரத் திமிர் அத்தனையையும் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டு கெட்ட ஆட்டம் போட ஆரம்பித்தார். பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி, புகார் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக அவரின் அலைபேசி மற்றும் அலுவலக தொலைபேசி என்று அலைபாய்ந்து அழைத்தும், அவர் போனை எடுக்கவில்லை.

அடுத்ததாக, பெண் எஸ்.பியின் அலுவலகத்தில் பணிபுரியும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூலமாக உயரதிகாரியின் அழுத்தம் செலுத்தப்படுகிறது. சமரசத்தில் ஆரம்பித்து, எச்சரிக்கைவிட்டு, மிரட்டல்வரை சென்றிருக்கிறார் அந்த இன்ஸ்பெக்டர். ‘முடிஞ்சதை பார்த்துக்கோங்க’ என்றபடி, அவர் பெயரையும் புகாரில் சேர்த்தார் பெண் எஸ்.பி. புகார் தெரிவிக்க சென்னைக்குக் கிளம்பியவரின் காரை மறித்து, கட்டப்பஞ்சாயத்து செய்ய அனுப்பப்பட்டார் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. அந்த அடாவடிகளுக்கும், அவரை அனுப்பிய சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பியின் அதிகாரத்துக்கும் துளியும் வளையாமல், தன் தைரியத்தை பதிலாகச் சொல்லிவிட்டு, நேரில் சென்று புகாரைப் பதிவு செய்தார்.

Women Police (Representational Image)
Women Police (Representational Image)
Photo: Vikatan / Kalimuthu.P

ஐ.பி.எஸ் பட்டம் பெற்ற, துணிச்சலுக்கு பெயர்போன காவல்துறையில் பணிசெய்கிற, சட்ட நுணுக்கங்கள் அறிந்த, அதிகார அடுக்குகளில் பழக்கம் உள்ள ஒரு பெண் எஸ்.பியே, தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையைப் புகாராகப் செய்வதற்கு உள்ளாகவே இத்தனை அழுத்தங்கள், எச்சரிக்கைகள், மிரட்டல்களுக்கு ஆளாகிறார் என்றால், சாமாயன்யப் பெண்களிடம் ‘அப்பவே ஏன் சொல்லல?’ என்ற கேள்வியை கேட்க இந்தச் சமுதாயத்துக்கு என்ன அருகதை இருக்கிறது?

இதற்கிடையே, சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி மீது பதியப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆர் காப்பி மூலமாக பெண் எஸ்.பி தன் புகாரில் கூறியுள்ள விவரங்கள் வெளியில் கசிய ஆரம்பித்துள்ளன. அதில், ‘என் கணவர், தன் தந்தைக்கு (மாமனாருக்கு) ‘சமாதான’ அழைப்பு வந்தது பற்றி என்னிடம் கூறினார். அதுவரை என் மாமனாருக்கு இதுபற்றி தெரியாது. அதன் பின்னரே எனக்கு நடந்த அநீதி பற்றி அவர் அறிய நேர்ந்தது.

Police Walkie Talkie
Police Walkie Talkie
Photo: Vikatan / Sakthi Arunagiri.V

தன் அதிகார துஷ்பிரயோகத்தால் முதலில் என்னை புகாரளிக்கவிடாமல் என் துறையை சேர்ந்தவர்களால் தடுக்கமுயன்றனர். என் குடும்ப உறுப்பினர்கள் மூலம் புகாரை வாபஸ் வாங்க எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர் உயர் பதவியிலிருப்பதால் ஏற்கெனவே சாட்சிகளையும் ஆதாரங்களையும் அழிக்க முயன்றார். எனவே, விசாரணைக்கு முன்பாகவே அந்தப் பொறுப்பிலிருந்து அவரை மாற்றம் செய்யவேண்டும். காவல்துறை உயரதிகாரியால் எனக்கு நடந்த கொடுமைகள், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது’ என்று தெளிவாகவும் திருத்தமாகவும் நடந்ததை எல்லாம் அதில் குறிப்பிட்டிருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.

வரிகளாக, செய்தியாக இந்தப் புகாரை நாம் படிக்கலாம். ஆனால், மனைவியாக, மருமகளாக என ஒவ்வொரு நொடியும் சமுதாயத் தாக்குதல்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டபடியே இருக்கும் அந்தப் பெண் எஸ்.பியின் நிலையைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், அதன் மேலடுக்கு தாண்டி அவர் மனஅடுக்கு நமக்குப் புரியலாம். அவருக்கு ஆதரவாக நின்றுவரும் அவருடைய குடும்பம் எதிர்கொண்டிருக்கும் சமூக வினைகளையும் புரிந்துகொள்ளலாம்.

suppressed woman(Representational image)
suppressed woman(Representational image)
Pixabay

பொதுவாக இங்கு ஒரு பெண்ணுக்கு பாலியல் குற்றம் நிகழ்த்தப்படும்போது, ‘இதெல்லாம் நடக்குறதுதான், விலகிப் போயிடுறதுதான் வழி’ என்று அறிவுரை சொல்லப்படுகிற, ‘இதை வெளியில சொன்னா நம்ம மானம்தான் போகும்‘ என்று குடும்பத்தால் கோபம் தணிக்கப்படுகிற, ‘நாளைக்கு என்ன ஆவ தெரியுமா?’ என்று ஆண் அதிகாரத்தால் எதிர்காலம் குறித்து அச்சமூட்டப்படுகிற சூழலில், அசுரத் துணிச்சலுடன் தன் புகாரைப் பதிவு செய்திருக்கும் பெண் எஸ்.பிதான்... இன்று நாம் நம் பிள்ளைகளுக்குச் சுட்டிக்காட்ட வேண்டிய சூப்பர் ஹீரோ.

பெண் எஸ்.பியின் மீது தொடர்ந்து அதிகாரத்தை செலுத்தி, அவரை அச்சமூட்டி, அடியபணிய வைத்துவிடலாம் என்ற தன் ‘வழக்கமான’ ஃபார்முலாவை எல்லாம் இறுதிவரை பயன்படுத்திப் பார்த்தார் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி. ஆனால், அவரது ஒவ்வொரு நகர்விலும் இன்னும் திமிறி, அவரை பாதுகாக்க அனுப்பப்பட்ட ‘காக்கிச்சட்டை கட்டப்பஞ்சாயத்து’ அதிகாரிகளின் பெயரையும் தன் புகாரில் இணைத்து அதிர்ச்சி கொடுத்து என... தன் மீது செலுத்த நினைத்த பதற்றம், பயத்தை எல்லாம் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபிக்கே திருப்பி அனுப்பிய பெண் எஸ்.பியின் நெஞ்சுரத்துக்கு... நம் ஒவ்வொருவரின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

Law (Representational Image)
Law (Representational Image)
Photo: Unsplash

பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பியின் மனத் திடம் கொஞ்சம் சரிந்திருந்தாலும், என்ன ஆகியிருக்கும்? ‘பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உயரதிகாரி குறித்து, அவர் புகார் அளிக்கக் கிளம்ப, கடைசியில் அவரை எப்படியோ சமாதானப்படுத்தி அந்த உயரதிகாரி பெருமூச்சு விட்டாராம்‘ என்று மீடியாக்களில் ஒரு கிசுகிசுவாக முடிந்திருக்கும் இந்த அநியாயம். ஆனால், நிமிர்ந்து எரியும் நெருப்பாக இருந்து, அவர் தன் புகாரை பதிவு செய்ததால்தான், இன்று பிரச்னையின் வீரியம் ஆண் என்கிற 'லைசென்ஸுடன்' அனைத்துத் துறைகளிலும் திரியும் இதுபோன்ற கயவர்களுக்கு கொஞ்சமேனும் கிலியை கிளப்பியிருக்கிறது. இதன் மூலம் பிற பெண்களின் மனதிலும் தைரிய ஜோதியை ஏற்றி வைத்ததற்காக... பெண் எஸ்.பிக்கு நம் ஒவ்வொருவரின் பூங்கொத்துகள்.

பெண் எஸ்.பி புகார் அளித்த பின்னர், குற்றம் சுமத்தப்பட்ட சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியை விசாரிக்க, விசாகா கமிட்டி குழு அமைக்கப்பட்டது. நடந்த சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி அதிரடியாக மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவரை பாதுகாக்கத் துடித்த சக காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி போலீஸார் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட எஸ்.பி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்திருக்கிறது.

Sexual Harassment (Representational Image)
Sexual Harassment (Representational Image)
`காருக்குள் என்ன நடந்தது?!’ - பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகாரில் இருப்பது என்ன?

இத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்கும் காரணம், எந்தச் சூழலிலும் பின்வாங்காமல் தன் புகாரை பதிவு செய்த பெண் எஸ்.பியின் அசாத்திய உறுதி. `நீங்கள் செய்தது குற்றம், நான் புகார் கொடுத்தே தீருவேன். நான் காவல்துறை எஸ்.பி. பொதுமக்களுக்கு ஆபத்து நேர்ந்தாலும் சரி... அவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலிருக்கும் எனக்கு ஆபத்து நேர்ந்தாலும் சரி, நடவடிக்கை எடுக்கவேண்டிய என் பொறுப்பை ஒருபோதும் உதறமாட்டேன்’ என்று தனியொரு பெண்ணாக துணிந்த தோழிக்கு... நம் அனைவரின் நன்றிகள்.

இந்தச் சந்தர்ப்பத்தில்... பிரியா ரமணியைப் பற்றியும் சில வரிகள் பேசி ஆகவேண்டும். முன்னாள் மத்திய அமைச்சரும், பத்திரிகையாளருமான எம்.ஜே.அக்பர் தொடர்ந்திருந்த அவதூறு வழக்கில் பத்திரிகையாளர் பிரியா ரமணி சமீபத்தில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இது, மீ டூ இயக்கத்தின் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், உண்மையில் இது துயரமான வெற்றி.

Journalist Priya Ramani
Journalist Priya Ramani
AP Photo/File

அக்பர் பாலியல் தொல்லை தருகிறார். பாதிக்கப்பட்ட பிரியா ரமணி, அக்பர் தனக்குப் பாலியல் தொல்லை தந்ததை பொதுவெளியில் குற்றம்சாட்டுகிறார். அவருக்கு ஆதரவாகக் கிட்டத்தட்ட 20 பெண்கள், ‘எங்களுக்கும் அக்பர் பாலியல் தொல்லை தந்தார்’ என்று பொதுவெளியில் பகிர்கிறார்கள். அக்பர், சமுதாயத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கும் தன் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக, பிரியா ரமணி மீது அவதூறு வழக்குத் தொடர்கிறார். அந்த வழக்கிலிருந்துதான், பிரியா ரமணி விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண் மீதே `களங்கம்‘ ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி, அதிலிருந்து அந்தப் பெண் விடுபடவே நீண்ட சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. இந்நிலையில், அக்பருக்கு என்ன தண்டனை என்ற கேள்வியே மறக்கடிக்கப்பட்டு, பிரியா ரமணி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதையே வெற்றியெனக் கொண்டாடும் அவலத்தில்தான் இந்தச் சமூகம் பெண்களை வைத்திருக்கிறது. ‘பெண்கள் வாய் திறக்கலாம், எத்தனை ஆண்டுகள் கழித்தும் புகார் சொல்லலாம், உயர் பொறுப்பில் இருப்பவர் என்றாலும் அவர் மீதான பாலியல் புகாரைத் தெரிவிக்கலாம்‘ என்ற அடிப்படை உரிமையையே நீதிமன்றம் சென்றுதான் பெற வேண்டியிருக்கிறது. அதற்கு இரண்டு வருடங்கள், மூன்று நீதிபதிகள், 90 பக்க தீர்ப்பறிக்கை தேவையாக இருக்கிறது.

woman power(Representational Image)
woman power(Representational Image)
Pixabay

பிரியா ரமணிக்குக் கிடைத்திருக்கும் தீர்ப்பு, பெண்களுக்குக் கொடுத்திருக்கும் திடமும், ஆண்களுக்கு அனுப்பியிருக்கும் எச்சரிக்கையும் முக்கியமானது. பெண் அடிமைத்தனத்தின் மீது எழும்பியுள்ள இந்த சாபமான சமுதாயத்தில், ஒரு மத்திய அமைச்சரை எதிர்த்து ப்ரியா ரமணி எழுப்பிய குரலும், எதிர்கொண்ட சட்டப் போராட்டமும் மிக வலிமையானது.

இன்னொரு பக்கம், பெண் உரிமைகளில் பிரியா ரமணிகள் மூலம் நாம் கடந்த வந்துள்ள இந்தத் தூரம் பெரிது எனினும், போக வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதையும் உணர வேண்டும். தொலைவு விரிந்து கிடக்கும் அந்தப் பயணத்தில், தற்போது தமிழக பெண் எஸ்.பி மேற்கொண்டிருக்கும் வேகநடை... நம்மை சில மைல்கள் முன்னே நடக்க வைத்துள்ளது.

Journalist Priya Ramani
Journalist Priya Ramani
AP Photo/File
பெண் எஸ்.பி-க்கு நேர்ந்த அவலங்கள்... இன்னும் எவ்வளவு ரௌடியிஸம் செய்திருப்பீர்கள் ராஜேஷ் தாஸ்?

இதுவரை பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் அழுகைகள், ஆற்றாமைகள், துன்பங்கள், கதறல்கள் எல்லாவற்றையும் தன்னுடைய ரௌத்திரமாகச் சேர்த்துக் கொண்டு நீதியை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தத் திமிர்ந்த பெண்ணை வாழ்த்துவோம், பாராட்டுவோம், கொண்டாடுவோம், பின்தொடர்வோம்.

பெண்களின் சார்பாக... Super thanks, Love and Hugs எஸ்.பி மேடம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு