Published:Updated:

ஆணவக் கொலைகள் முதல் பாலியல் வன்முறை வரை... அனைத்துக்கும் தீர்வா பெண்கல்வி? #Ambedkar129

அம்பேத்கர்
அம்பேத்கர்

அவள், வன்கொடுமையால், ஆணவக்கொலையால், குடும்ப வன்முறையால் என எப்படி பாதிக்கப்பட்டிருந்தாலும் அவளுக்குக் கல்வியைக் கொடுங்கள். கல்வி மட்டுமே அவளைக் கேள்வி எழுப்பச் செய்யும்.

கல்வியின் மீது தீராத ஆர்வம்கொண்ட பெண்களுக்கு அம்பேத்கர் மறுக்கமுடியாத பற்றுதல். அம்பேத்கரை வாசித்தல் பெண் விடுதலையின் தவிர்க்க முடியாத அங்கம். இன்று அம்பேத்கரின் 129 வது பிறந்தநாள். ஒரு சமூகத்தின் வளர்ச்சி அதன் பெண்களின் வளர்ச்சியில் இருக்கிறது என்றவர் அவர். 2020-ம் ஆண்டில் இந்தியச் சமூகத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?

Representational Image
Representational Image

உலகமே கொரோனாவுக்குப் பயந்து வீட்டில் ஒடுங்கியிருந்த சூழலில் கூட பீகாரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண், மருத்துவர் ஒருவரால் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டிருக்கிறார். இந்தியச் சமூக வளர்ச்சிக்கான ஒரு சோற்றுப்பதம் இது.

2017-ம் ஆண்டில் மட்டும் 32,000-க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைப் புகார்கள். பெண்கள் தைரியமாக வெளிவந்து புகார் அளிப்பது அதிகரித்திருக்கிறது என்றாலும், 2017-ன் இறுதியில் 1,27,800 வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படாமல் நிலுவையிலேயே இருக்கின்றன. இவைதவிர, கொரோனா ஊரடங்கு காலத்தில் முதல் பதினைந்து நாள்களில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் மீதான வன்முறைப் புகார்கள் வந்ததாக தேசிய மகளிர் ஆணையம் பதிவு செய்திருந்தது. தேசிய குடும்ப சுகாதார சர்வே இந்தியாவின் 30 சதவிகிதப் பெண்கள் தங்களது வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள் என்கிறது. அதே சர்வேயின் 2015-2016ம் ஆண்டுக் கணக்கீட்டின் படி வீட்டில் இருக்கும் பெண்களில் 52 சதவிகிதம் பேர் தங்களைக் கணவர் அடிப்பது சரியே என நம்புகிறார்கள்.

இவை தவிர ஆசிட் வீச்சுகள், வரதட்சணைக் கொலைகள், சாதி ஆணவக் கொலைகள் எனப் பெண்கள் மீதான வன்முறையின் பட்டியல் நீளும். அண்மையில் சேலம் கொளத்தூரில், தான் காதலித்த வேற்றுசாதியில் நபரைத் திருமணம் செய்துகொண்ட பெண், தன்னுடைய குடும்பத்தாலேயே கடத்தப்பட்டது அதற்கு உதாரணம். இத்தனைக்கும் திருமணம் செய்துகொண்ட இருவருமே படித்தவர்கள், பொருளாதார ரீதியாகச் சுதந்திரமானவர்கள். இருந்தும் அந்தப் பெண்ணுக்குத் தான் விரும்பியவரைத் திருமணம் செய்யும் சமூகச் சுதந்திரம் இல்லை. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 2017-ம் ஆண்டு கணக்கீட்டின்படி 300-க்கும் மேற்பட்ட சாதி ஆணவக் கொலைகள் ஏற்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 377-ஐ அழித்தொழிக்கும் அளவுக்குச் சமூகப் பார்வை விரிவடைந்திருந்தாலும் சாதி ஆணவக் கொலைக்கு எதிரான சட்டத்தை இயற்றுவதில் மட்டும் அரசு தயக்கம் காட்டிக்கொண்டிருக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு என ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் 2014-ம் ஆண்டுக்கான சர்வே குறிப்பிட்டிருந்தது.

கொளத்தூர்
கொளத்தூர்

2014-ம் ஆண்டு தொடங்கி ``பெண்குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண்குழந்தைகளைப் படிக்க வைப்போம்” என்பதே அரசின் குரலாக இருக்கிறது. முரணாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இழைத்த எம்.பி.க்கள் பலர் அதே அரசில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இவை அத்தனைக்கும் இடையில்தான் அம்பேத்கர் குறிப்பிட்ட பெண்களின் வளர்ச்சி குறித்தும் விவாதிக்க வேண்டியிருக்கிறது. அம்பேத்கர் பெண்களுக்கான கல்வியை முக்கியத்துவப்படுத்தியவர்; அதன்வழி அவர்கள் அரசியல்பட வேண்டும் என்பதே அவரது கொள்கை. சாதி ஒழிப்பைப் பெண்களால் சாத்தியப்படுத்த முடியும் என அவர் நம்பினார்.

…அவர்கள்தாம் தம் பிள்ளைகளின் கல்வியைப் பெறும் செயல்பாட்டிலும் முன்னோடிகளாக இருப்பார்கள் என நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அடுத்தகட்டமாக நமது பெண்கள் நமது குழந்தைகளுக்குக் கல்வி தருவார்கள். அறியாமையை வளர்க்கும் அனைத்துச் சடங்குகளையும் தூக்கியெறிவார்கள்... நமக்கு ஒரு புரட்சித் தேவைப்படும். நமது தலைமுறையின் முக்கால்வீதம் பேர் இதற்காகத் தொலைந்து போனாலும் பரவாயில்லை; மீதமிருக்கும் கால்வீதம் பேராவது மனிதர்களாகச் சுயமரியாதையோடு வாழ்ந்து ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கட்டும். எனது தாய்களே சகோதரிகளே மாற்றத்துக்கான முதல் அடி உங்களுடையதாக இருக்கட்டும்
பாபாசாகேபின் அருகிருந்து நூலில் இருந்து…

இதற்கான விளக்கம் அவரது சொந்த வாழ்விலிருந்தே கிடைக்கிறது. மாற்றத்துக்கான முதல் அடியை மனைவி ரமாபாய் எடுத்துவைத்ததால்தான் பீம், டாக்டர் அம்பேத்கர் B.A;M.A; M Sc; Ph.D; L.L.D; D.Sc;D.Litt; Barrister-at-law இந்தியாவுக்குக் கிடைத்தார்.

ரமாபாய்
ரமாபாய்

ஆனால், பெண்களுக்கு இங்கே கல்வி முழுமையாகக் கிடைக்கிறதா? பிரதமர் சொன்னது போல உண்மையிலேயே பெண் குழந்தைகளைப் பாதுகாக்கின்றோமா? படிக்க வைக்கின்றோமா? இதுதொடர்பாக 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வே புள்ளிவிவரம் மட்டுமே நமக்குக் கிடைக்கப் பெறுகிறது. அதன்படி இந்தியாவில் பெண்களின் படிப்பறிவு 65 சதவிகிதம் மட்டுமே. அதில் பெரும்பாலான பெண்கள் உயர் நடுத்தர மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பப் பின்னணியை உடையவர்கள். ஒடுக்கப்பட்ட பல சமூகத்துப் பெண்களில் இன்னும் முதல்தலைமுறைப் பட்டதாரியே உருவாகவில்லை. படித்த 65 சதவிகிதமும் அந்தப் பெண்களின் திருமணத்தைக் குறிக்கோளாகக் கொண்டதாகவே இருக்கும்.

தீண்டாமைக்குள் தீண்டாமையை அனுபவிக்கும் புதிரை வண்ணார் சமூகத்தில் இதுவரை ஒரேயொரு பெண் முனைவர் மட்டுமே உருவாகியிருக்கிறார். அந்தச் சமூகத்தில் இன்றுவரை ஒருவர் கூட மருத்துவராகவில்லை. மேலும் பலருக்குக் கல்வி குறித்த விழிப்புணர்வே இருப்பதில்லை. நீட், கேட் என உலகத்தரத்தை எட்ட முயற்சிக்கும் அதே நேரம் சமமான கல்வியைத் தரும் வாய்ப்பில் கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

Anitha
Anitha
Illustration: Hasif Khan

சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட பின்னணியை உடைய சிறுமிகளில் கல்வி இன்றளவும் ஏன் சிக்கலாக இருக்கிறது? 2019-ம் ஆண்டில் `சமகல்வி இயக்கம்' என்னும் அமைப்பு வெளியிட்ட சர்வேயின்படி அதற்கு முந்தைய மூன்றாண்டுகளில் மட்டும் 1400-க்கும் மேற்பட்ட சிறார் திருமணங்கள் தமிழகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. கல்வி சந்தையாக்கப்பட்டது, அருகில் பள்ளிக்கூடங்கள் இல்லாதது, குடும்பம் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிக்கல்கள் இவை அத்தனையும் சேர்த்து அந்தச் சிறுமிக்குப் படிப்பின் மீதே ஆர்வத்தைக் குறைக்கிறது. அதனால் சிறார் திருமணங்கள் பெருகுகின்றன. இதற்கிடையே நீட் போன்ற சமூகநீதியைச் சிதைக்கும் ஆபத்துகள் வேறு.

மனிதன் தனது வருமானத்தில் 10 சதவிகிதத்தைப் புத்தகங்களை வாங்கப் பயன்படுத்தவேண்டும்
டாக்டர் அம்பேத்கர்

இத்தனை நெருக்கடிகளுக்கு நடுவில் பெண்களிடம் `கல்விதான் உங்களுக்கான தீர்வு’ என்பதைப் புரியவைப்பது கடினம். சுதந்திர இந்தியாவில் தொடங்கப்பட்ட பெண்களுக்கான அமைப்புகள் அம்பேத்கர், பெரியார் போன்ற பெண் விடுதலைக்கான குரல்களைப் பின்பற்றி உருவானவைதான். இவை அத்தனையுமே பெண் கல்வியைக் கட்டாயப்படுத்துவன. இருந்தும் அதுசார்ந்த செயல்பாடுகள் குறைந்தே இருக்கிறது. பெண்பிள்ளைகளின் பள்ளி இடைநிற்றலைத் தடுக்க கல்லூரி இடைநிற்றலைத் தடுக்க இதுபோன்ற இயக்கங்கள் களத்தில் தெளிவான பார்வையோடு செயல்பட வேண்டியிருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா? சட்டமேதை அம்பேத்கரால் தன்னிடம் இருந்த செடிகளின் தாவரவியல் பெயரைச் சரியாகச் சொல்ல முடியும். அறிவியல் மீதிருந்த ஆர்வம்தான் அதற்குக் காரணம். மனிதன் தனது வருமானத்தில் 10 சதவிகிதத்தைப் புத்தகங்களை வாங்கப் பயன்படுத்தவேண்டும் என்பார் அம்பேத்கர். வறுமைப் பின்னணியை உடைய பெண்களுக்கு அது சாத்தியமில்லை என்றாலும் அவர்களுக்காக உழைக்கும் இயக்கங்கள் இதை நடைமுறைப்படுத்தலாம். பெண் குழந்தைகளுக்கு அறிவியல் மீது ஆர்வத்தை உண்டுபண்ணும் கல்விமுறையை இயக்கங்கள் வழியாக அறிமுகப்படுத்தலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கான செலவு 6 சதவிகிதம் வேண்டும் என வலியுறுத்தும் நாம் அதில் பெண்கல்விக்கான ஒதுக்கீட்டையும் வலியுறுத்த வேண்டும்.

பெண்களுக்கான கல்வி குறித்து வலியுறுத்தும் அம்பேத்கரிய ஆய்வாளர் பேராசிரியர் வைசாலி தன்விஜய், ``இந்த நூற்றாண்டில் அதிகமான பெண்கள் திருமணத்துக்காகவும் அது சார்ந்த பொருளாதாரத்தைச் சரிக்கட்டவுமே படிக்கிறார்கள். மற்றபடி, படிப்பது குறித்த பேரார்வம் சிலரிடம் மட்டுமே இருக்கிறது. கல்வி திருமணத்துக்கானது என்கிற குறிக்கோள் மாறவேண்டும். கல்வியின் மீதான பெண்களின் பகுத்தறிவுப் பார்வையை விரிவுபடுத்தவேண்டும். கல்வியின் மீதான பெண்களின் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். மேலும் கல்வியின் வழியாகப் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் சார்ந்த சுதந்திரம் மட்டுமே தற்போது பெண்களுக்குச் சாத்தியப்பட்டிருக்கிறது. ஆனால் பெண்கள் கல்வியின் வழியாகச் சமூக அதிகாரத்தைக் கையிலெடுக்கவே அம்பேத்கர் வலியுறுத்தினார். சமூக அதிகாரம் குறித்து இங்கே பெண்களிடம் போதிய விவாதமே உண்டாகவில்லை. குடும்ப அமைப்புகளில் இருக்கும் பெண்களுக்குச் சமூக அதிகாரத்தின் முக்கியத்துவமும் அது இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக் கூடிய வளர்ச்சியும் புரிவதேயில்லை” என்கிறார்.

அம்பேத்கர்
அம்பேத்கர்
அம்பேத்கர், வெறுமனே தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரா?

சமூக அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு பெண்ணால் மட்டுமே சமூகத்துக்கும் பிற பெண்களுக்கும் அதே விடுதலையைப் பெற்றுத்தர முடியும். அவள் வன்கொடுமையால், ஆணவக்கொலையால், குடும்ப வன்முறையால் என எப்படி பாதிக்கப்பட்டிருந்தாலும் அவளுக்குக் கல்வியைக் கொடுங்கள். கல்வி மட்டுமே அவளைக் கேள்வி எழுப்பச் செய்யும். கல்வி மட்டுமே அவளை ஆற்றுப்படுத்தும் அதிகாரமயப்படுத்தும் அரசியல்படுத்தும். அப்படிக் கல்வியைப் பெறும் பல பெண்களின் ஒருமித்தக் குரல்களால்தான் ஆணவக்கொலைகளுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவர முடியும்; பாலியல் வன்புணர்வு உட்படப் பெண்கள் மீது திணிக்கப்படும் பல மனித உரிமை மீறல்களுக்கான நிரந்தரத் தீர்வையும் எட்டமுடியும். பெண்களுக்குக் கல்வியின் வழியாகக் கிடைக்கும் சமூக விடுதலை மட்டுமே இங்கே சாதியை ஒழிக்கும்.

அடுத்த கட்டுரைக்கு