Published:Updated:

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த கணவர்; கார்ப்பரேட் வேலையை உதறி ராணுவத்தில் இணைந்த மனைவி!

நித்திகா கவுல்
நித்திகா கவுல் ( Screenshot from video of @proudhampur )

ஆலிவ் பச்சை சீருடையுடன் ராணுவ வீரர்களுக்கே உரிய மிடுக்கு நடையுடன் வந்து உயர் அதிகாரியிடமிருந்து மரியாதையைப் பெற்று நித்திகா இந்திய ராணுவத்தில் சேர்ந்த அந்தத் தருணம் காண்போரை நெகிழ்ச்சியூட்டும் வண்ணம் அமைந்திருந்தது.

ராணுவத்தில் பணிபுரிந்து வீரமரணமடைந்த தன் கணவரின் நினைவாக, கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியிலிருந்த இளம்பெண் அந்தப் பணியை உதறி ராணுவத்தில் சேர்ந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் அண்மையில் நடந்துள்ளது. இந்திய ராணுவ அதிகாரியான மேஜர் விபுதி ஷங்கர் தவுன்டியால் என்பவர் 2019-ம் ஆண்டு காஷ்மீர் மாவட்டம் புல்வாமா நகரில் நடைபெற்ற தீவீரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதில் மிகவும் வேதனையான செய்தி என்னவென்றால் 2018-ம் ஆண்டுதான் இவருக்கும் நித்திகா கவுல் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

நித்திகா கவுல்
நித்திகா கவுல்
Screenshot from video of @proudhampur

திருமணம் முடிந்த ஒரே வருடத்தில் கணவரை இழந்தபோதும் நித்திகா அப்படியே முடங்கிப் போகவில்லை. பாதியிலேயே விட்டுச் சென்ற கணவரின் தேசம் காக்கும் பணியைத் தொடர முடிவெடுத்தார். இதற்காக அதுவரை பார்த்துக்கொண்டிருந்த தனது கார்ப்பரேட் பணியை உதறிவிட்டு ராணுவத்தில் சேர்வதற்கான `ஷார்ட் சர்விஸ் கமிஷன்’(short service commission) தேர்வை எழுதினார். அதில் தேர்வான பிறகு சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (OFFICERS TRAINING ACADEMY) பயிற்சியில் சேர்ந்தார். வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்த நித்திகா இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் அதிகாரியாக தற்போது பொறுப்பேற்றுள்ளார்.

ஆலிவ் பச்சை சீருடையுடன் ராணுவ வீரர்களுக்கே உரிய மிடுக்கு நடையுடன் வந்து உயர் அதிகாரியிடமிருந்து மரியாதையைப் பெற்று நித்திகா இந்திய ராணுவத்தில் சேர்ந்த அந்தத் தருணம் காண்போரை நெகிழ்ச்சியூட்டும் வண்ணம் அமைந்திருந்தது.

நித்திகாவின் இந்த வருகையை இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தின் பிரிவு உச்சி முகர்ந்து கொண்டாடியுள்ளது.

2019-ம் ஆண்டு தீவிரவாதிகளுடனான சண்டையின்போது தேசத்திற்காக தனது இன்னுயிரையே தியாகம் செய்தார் மேஜர் விபுதி ஷங்கர் தவுன்டியால். அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் நமது நாடு அவருக்கு `ஷவுரிய சக்ரா’ விருது அளித்து பெருமைப்படுத்தியுள்ளது.

இன்று அவரது மனைவி நித்திகா இந்திய ராணுவச் சீருடையில் தோன்றி தன் கணவரை இன்னும் அதிகமாகப் பெருமைப்படுதியிருக்கிறார். ராணுவச் சீருடையில் நட்சத்திரங்கள் மின்ன அவரைப் பார்க்கும் நாங்களும் பெருமிதம் அடைகிறோம்” என்று நித்திகாவைப் பாராட்டி பாதுகாப்பு அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

``இந்தியப் பெண்கள் சக்தியின் அடையாளமாக நீங்கள் திகழ்கிறீர்கள். உங்கள் சீருடையில் சுடர்விடும் நட்சத்திரங்களைப் பார்த்து உங்களது கணவர் விபுதி ஷங்கர் தவுன்டியால் இன்று நிச்சயம் புன்னகை சிந்தியிருப்பார். உங்களை நினைத்து அவர் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்திருக்கக்கூடும்.உங்களது அனைத்து முயற்சிகளுக்கும் எங்களது வாழ்த்துக்கள்” என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் ட்வீட் செய்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு