ராஜஸ்தான் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மம்தா பூபேஷ் நடத்திய பொது விசாரணையின் போது, புகாரளிக்க வந்த பெண் ஒருவர், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமைச்சர் மம்தா பூபேஷ் நடத்திய பொது விசாரணை நிகழ்வின்போது புகார் அளிப்பதற்காக ஒரு பெண்ணும், அவருடன் 8 வயது சிறுமி மற்றும் அவரின் சகோதரர் வந்திருக்கின்றனர். அப்பெண்ணின் புகாரை ஏற்க மறுத்தது மட்டுமன்றி, அமைச்சரின் ஊழியர்கள் ஜெய்ப்பூரில் உள்ள குடியிருப்பில் இருந்து அப்பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளுகின்றனர்.
அந்தப் பெண் கதறுவதைக்கூட பொருட்படுத்தாமல் அமைச்சரின் ஊழியர்கள் தொடர்ச்சியாக அவரை வெளியே தள்ளும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளன.
இந்தச் சம்பவம் வைரலானதை தொடர்ந்து, பாஜக செய்தித் தொடர்பாளர் ராம்லால் சர்மா, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளார். முதல்வர் அசோக் கெலாட் உணர்ச்சி உடையவராக இருந்தால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சமூக வலைத்தளத்தில், தன்னுடைய எதிர்ப்பைப் பதிவிட்டுள்ளார். அதில், `பெண்கள் குரல் எழுப்பும் போது, அவர்கள் அமைச்சர்களால் வெளியேற்றப்படுவார்கள். இந்த ஆட்சியில், ஏழைப் பெண்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். பெண்களைக் கட்டாயப்படுத்தி காங்கிரஸ் அமைச்சரின் வீட்டில் இருந்து வெளியேற்றும் வீடியோவை பார்க்கும் போது, மாநிலத்தில் உள்ள மற்ற பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது’ என்று ஆதங்கப்பட்டுள்ளார்.