Published:Updated:

`வன்கொடுமைக்கு ஆளானவரைப் போல அந்தப் பெண் நடந்து கொள்ளவில்லை!' - தருண் தேஜ்பால் வழக்கில் நீதிமன்றம்

தருண் தேஜ்பால்
தருண் தேஜ்பால் ( Vikatan / Rajesekaran.K )

``பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரிடம் காணக்கூடிய எந்தவொரு மருத்துவ ஆதாரமும் இல்லை. அதே நேரத்தில் குற்றம் சாட்டுபவரின் உண்மைத்தன்மையைச் சந்தேகிக்கும் காரணிகள் இருந்தன" எனக் கூறியிருப்பது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

2013-ம் ஆண்டில் கோவா ஹோட்டலில் தன் சக ஊழியரைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலிருந்து இவர் கோவா நீதிமன்றத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்டார். இந்த தீர்ப்பின் முழு விவரம் நேற்றுதான் வெளியாகியிருக்கிறது. அதில் நீதிபதி குறிப்பிட்டிருக்கும் சில விஷயங்கள் அதிர்ச்சிகரமாக உள்ளன.

புகார் அளித்த அந்தப் பெண் குறித்து நீதிபதி, ``பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணைப்போல அந்தப் பெண் நடந்து கொள்ளவில்லை. அதற்கு எந்தவொரு மருத்துவ ஆதாரமும் இல்லை. அதோடு குற்றம் சாட்டியவரின் உண்மைத்தன்மையைச் சந்தேகிக்கும் காரணிகளும் இருக்கின்றன" எனத் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

Court (Representational Image)
Court (Representational Image)

527 பக்கத் தீர்ப்பில், கூடுதல் அமர்வு நீதிபதி ஷாமா ஜோஷி, ``பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரிடம் காணக்கூடிய எந்தவொரு மருத்துவ ஆதாரமும் இல்லை. அதே நேரத்தில் குற்றம் சாட்டுபவரின் உண்மைத்தன்மையைச் சந்தேகிக்கும் காரணிகள் இருந்தன" எனக் கூறியிருப்பது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

``பாதிக்கப்பட்டவரின் வாதம் எந்தவிதமான தவறான நடத்தையையும் நிரூபிக்கவில்லை. தொடர்ச்சியான இரண்டு இரவுகளில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறுபவர் அதற்காக நம்பத்தகுந்ததாக எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. தனது இருப்பிடம் குறித்து தேஜ்பாலுக்கு செய்தி அனுப்பிய அந்தப் பெண்ணின் செயல் இயற்கைக்கு மாறானது" எனவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

நவம்பர் 7, 2013 மற்றும் நவம்பர் 8, 2013 ஆகிய தேதிகளில் ஹோட்டல் லிஃப்டில் தேஜ்பால் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்திருந்தார். ``சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவரைப் பார்த்து பயந்துபோனவர். தன்னுடைய இருப்பிடத்தை அவருக்கு எப்படி வெளிப்படுத்துவார்?” என்று நீதிமன்றம் கேட்டிருக்கிறது.

Sexual harassment
Sexual harassment
Pixabay

``2013 நவம்பர் 8 அன்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு அந்தப் பெண்ணின் மொபைலிலிருந்து இரண்டு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் ஒப்புக்கொண்டார். மேலும், இந்த எஸ்.எம்.எஸ் எந்தவொரு எஸ்எம்எஸ்ஸுக்கும் பதிலளிக்கும் விதமாக அல்லாமல், தன்முனைப்புடன் அனுப்பப்பட்டிருக்கிறது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

``மேற்கூறிய செய்தியைக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தானாகவே அனுப்புகிறார், அதே செய்தியை அவர் சில நிமிடங்களிலேயே மூன்று முறை அனுப்பியிருக்கிறார். இது அந்தப் பெண் குற்றம் சாட்டப்படுகிறவரால் அதிர்ச்சியடையவில்லை அல்லது அவருக்கு பயப்படவில்லை என்று தெளிவாக நிறுவுகிறது.

``நவம்பர் 9 அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அந்தப் பெண்ணிடம் முந்தைய நாள் பாதிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியையும் காணமுடியவில்லை. மாறாக, அன்று அவர் உற்சாகத்துடனே காணப்படுகிறார். தேஜ்பால் பாலியல் வன்கொடுமை செய்தாரா, பாதிக்கப்பட்டவரைப் பேசவிடாமல் தடுக்க கிரிமினல் சக்தியைப் பயன்படுத்தினாரா அல்லது லிஃப்ட்டிலிருந்து வெளியேறுவதைத் தவறாகத் தடுத்தாரா என்பது உள்ளிட்ட பிற பிரச்னைகள் அனைத்தும் நீதிமன்றத்தில் சரிவர நிரூபிக்கப்படவில்லை'' என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sexual harassment at workplace(Representational image)
Sexual harassment at workplace(Representational image)
Pixabay

குறிப்பாக, விசாரணை அதிகாரிகள் அந்த ஹோட்டலின் முதலாம் தளத்தின் சிசிடிவி காட்சிகளைப் பெறுவதில் வேண்டுமென்றே தாமதம் செய்ததும், அதற்குள் அவை அழிக்கப்பட்டுவிட்டதும் நீதிமன்றத் தரப்பால் குறைகளாகச் சுட்டிக்காட்டப்பட்டன.

நவம்பர் 19, 2013 அன்று தேஜ்பால் அந்தப் பெண்ணுக்கு அனுப்பிய `முறையான மன்னிப்பு மின்னஞ்சல்' ஆதாரத்தையே அரசு தரப்பு பெரிதும் நம்பியிருந்தது. ஆனால், அது அனுப்பப்பட்டது தெஹல்காவின் நிர்வாக இயக்குநரின் அழுத்தம் காரணமாகத்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வாக்குமூலம் தூண்டுதலால் பெறப்பட்டால், அது குற்றவியல் நடவடிக்கையில் ஏற்கத்தக்கதல்ல என்று இந்திய சாட்சி சட்டத்தின் 24-வது பிரிவு கூறுகிறது.

நீதிமன்றத்தின் கருத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இவ்வேளையில், `கோவா மண்ணில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பை அப்படியே விட்டுவிட மாட்டோம்' என்று கூறியுள்ள அம்மாநில அரசு, இப்போது இந்த வழக்கை மேல் முறையீட்டுக்கு எடுத்துச் செல்லவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

- எஸ்.சங்கீதா

அடுத்த கட்டுரைக்கு