கட்டுரைகள்
Published:Updated:

பெண்களிடையே அதிகரித்துள்ள குடிப்பழக்கம், அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்... இதுதான் பின்னணியா?!

குடிப்பழக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
குடிப்பழக்கம்

கடந்த மூன்று ஆண்டுகளில், மன அழுத்தத்தால் பெண்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, பெண்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்திருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு கூறுகிறது.

`கம்யூனிட்டி அகயின்ஸ்ட் டிரங்கன் டிரைவிங் (Community Against Drunken Driving - CADD)’ என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான மூன்று ஆண்டுகளில் பெண்களின் குடிப்பழக்கம் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஓர் ஆய்வு நடத்தியது. இதில் 18 முதல் 68 வயது வரையுள்ள 5,000 பெண்கள் கலந்துகொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியான பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில், மன அழுத்தத்தால் பெண்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பெண்களுக்கு குடும்பத்தை மொத்தமாகக் கவனித்துக்கொள்ளும் சுமையும், மன அழுத்தமும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலகட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது. குறைந்தபட்சம் 30% பெண்கள் தங்களது குடிப்பழக்கம் அதிகரித்திருப்பதாகவும், அவ்வப்போது மற்றும் பார்ட்டி போன்ற நிகழ்வுகளில் குடிக்கும் பெண்களில் 42.3% பேர் கொரோனா காலத்தில் தங்களது குடிப்பழக்கம் அதிகரித்து உள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆய்வின் பிற விவரங்கள் இங்கே...

பெண்களிடையே அதிகரித்துள்ள குடிப்பழக்கம், அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்... இதுதான் பின்னணியா?!

(சதவிகிதக் கணக்குகள் இவ்வாய்வுக்கு உட்பட்டவர்களைக் குறிக்கின்றன)

45.7% பெண்கள் மன அழுத்தத்தாலும், 34.4% பெண்கள் மது கிடைப்பதாலும், 30.1% பெண்கள் சலிப்பாலும் அதிகமாகக் குடிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஏதேனும் நினைவுகளையோ நபரையோ மறப்பதற்கு பெண்கள் அதிகமாகக் குடிப்பதாகச் சொல்கின்றனர்.

60% பெண்கள் மதுவுக்காக அதிக பணத்தைச் செலவிட்டுள்ளனர்.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், தள்ளுபடிகள், சில்லறைக் கடைகள் ஆகியவை 77% பெண்களின் அதிக குடிப்பழக்கத்துக்குக் காரணமாக மாறியுள்ளன.

வீட்டில் மது அருந்துவதுதான் சௌகர்யமாக இருப்பதாக பெரும்பான்மை பெண்கள் கூறுகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸிடம் இது குறித்துப் பேசினோம்.

``இன்றைய பெண்களில் பலருக்கு வீடு, அலுவலகம் எனப் பொறுப்புகள் அதிகமானபோது மெள்ள மெள்ள மன அழுத்தம் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. விளைவாக சில பெண்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகத் தொடங்கினார்கள்.

பெண்களிடையே அதிகரித்துள்ள குடிப்பழக்கம், அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்... இதுதான் பின்னணியா?!

குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின்போது, தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் கொரோனா வந்துவிடுமோ என்ற பயம், பெரும்பாலும் வீட்டிலேயே குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருந்ததால் ஏற்பட்ட நெருக்கடி, அதிகமான வேலைப்பளு, கஷ்டங்களை வெளியே சொல்ல முடியாத நிலை ஆகிய அனைத்தும் பெண்களுக்கு மன அழுத்தத்தை அதிகப்படுத்தின.

குடிப்பழக்கம் ஆண்களைவிட பெண்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிகம் பாதிக்கும். மரபியல் ரீதியாக, ஆண்களுக்கு XY குரோமோசோம்களும், பெண்களுக்கு XX குரோமோசோம்களும் இருக்கின்றன. X குரோமோசோமுக்கே உண்டான சில பலவீனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று குடிப்பழக்கத்துக்கு அடிமையாவது. அதனால் ஆண்களைவிட பெண்கள் சீக்கிரம் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிடுவார்கள்.

குடிப்பழக்கம் மூளையை மழுங்கடிக்கும். மதுவால் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்துகளை உறிஞ்சும் தன்மை உடலில் குறைந்துவிடும். மேலும், பலவிதமான மனநோய்களும் ஏற்படும்.

சுபா 
சார்லஸ்
சுபா சார்லஸ்

பெண்கள், ஆண்கள் என அதிகம் பேர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், மனித சமுதாயமே சீர்கெட்டுவிடும். சமுதாயத்தின் அடிப்படையே குடும்பம்தான். குடும்பத்தில் குழந்தைகள் பெற்றோரையே அதிகமாகச் சார்ந்திருக்கிறார்கள். தங்களின் அம்மா குடிபோதையில் இருக்கும்போது, குழந்தைகள் ஆன்லைன் கேம்ஸ், தவறான பழக்கவழக்கங்கள் என மாற்றுப் பாதைக்குச் செல்லலாம். இதனால் சமுதாயம் பெரிதாக பாதிக்கப்படும். ஒழுக்க மதிப்பீடுகள் குறையலாம். பல பிரச்னைகள் வரலாம்.

குடிப்பழக்கம் என்பதே வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடானது. ஆண் குடித்தாலும் பெண் குடித்தாலும் அதே விதிதான். அதை யார் செய்தாலும் கைவிட வேண்டும்’’ என்கிறார்.