Published:Updated:

‘`தமிழகத்தின் மேயர்களாகிய நாங்கள்!’' - அரசியல் சபையில் அதிகரித்திருக்கும் பெண்களின் குரல்கள்

 நாகரத்தினம், பிரியா ராஜன்,   கல்பனா
பிரீமியம் ஸ்டோரி
நாகரத்தினம், பிரியா ராஜன், கல்பனா

செ.சல்மான், இரா.குருபிரசாத், துரை.வேம்பையன், எம்.புண்ணியமூர்த்தி, நவீன் இளங்கோவன், மு.கார்த்திக், லோகேஸ்வரன்.கோ, கே.பாலசுப்ரமணியன், ஜெ.முருகன், ச.ஃபிசா

‘`தமிழகத்தின் மேயர்களாகிய நாங்கள்!’' - அரசியல் சபையில் அதிகரித்திருக்கும் பெண்களின் குரல்கள்

செ.சல்மான், இரா.குருபிரசாத், துரை.வேம்பையன், எம்.புண்ணியமூர்த்தி, நவீன் இளங்கோவன், மு.கார்த்திக், லோகேஸ்வரன்.கோ, கே.பாலசுப்ரமணியன், ஜெ.முருகன், ச.ஃபிசா

Published:Updated:
 நாகரத்தினம், பிரியா ராஜன்,   கல்பனா
பிரீமியம் ஸ்டோரி
நாகரத்தினம், பிரியா ராஜன், கல்பனா

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ஈ.ஜெ.நந்தகுமார், ச.வெங்கேடசன், கே.அருண், எஸ்.தேவராஜன்

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பெண்களுக்கு 50% பகிர்வு அளிக்கப்பட்டது மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது அடுத்த சிறப்பான தொடக்கம். அவர்களின் அறிமுகமும், குரல்களும் இங்கே...

மக்கள் பணிதான் முக்கியம்! - சென்னை மேயர் பிரியா ராஜன்

சென்னையின் மூன்றாவது பெண் மேயர், வட சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர் என்ற பெருமைக்குரியவராகியிருக்கிறார் 28 வயதாகும் பிரியா ராஜன். இவரின் அப்பா அந்தப் பகுதியில் தி.மு.க இணைச்செயலாளர். எம்.காம் பட்டதாரியான பிரியா ராஜனுக்கு சிறு வயதிலிருந்தே ஆசிரியர் பணிதான் விருப்பம். இப்போது சென்னையின் மேயர் பொறுப்பு கைகளில்.

``பெரிய பதவி கிடைத்துவிட்டதாக துளியும் நான் நினைக்கவில்லை. மிகப் பெரிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறதாகவே கருதுகிறேன். சென்னையைப் பொறுத்தவரையில், வாகனங்கள் அதிகமாக இருப்பதால் அதிகளவில் ஏற்படும் காற்று மாசு, கோடையில் தண்ணீர் பிரச்னை, மழைக்காலத்தில் வெள்ளம் என சரிசெய்யப்பட வேண்டிய பிரச்னைகள் நிறைய உள்ளன. இதற்கு முன்பு என் குடும்பம், குறிப்பாக என் மகள் மட்டும்தான் என் உலகம். இப்போது அவர்களைவிட மக்கள் பணியைத்தான் நான் முக்கியமாகக் கருதுகிறேன்.”

பிரியா ராஜன், வசந்தகுமாரி, மகாலட்சுமி
பிரியா ராஜன், வசந்தகுமாரி, மகாலட்சுமி

நான் பட்ட கஷ்டத்தை மக்கள் படக்கூடாது! - தாம்பரம் மேயர் வசந்தகுமாரி

25 வயதிலேயே மேயரானதால் தமிழகத்தின் முதல் இளம் பெண் மேயர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி. படித்தது பி.டெக் கெமிக்கல் இன்ஜினீயரிங், பிடித்தது அரசியல். கணவருக்கும், கணவர் குடும்பத்துக்கும் நேரடி அரசியல் தொடர்பு கிடையாது. வசந்தகுமாரிக்குள் அரசியல் விதை போட்டது அவரின் அப்பா கமலக் கண்ணன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க-வில் இருப்பவர்; அந்தப் பகுதியில் வட்டச் செயலாளர். 18 வயதில் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்து, கடந்த மூன்று வருடங்களாக தன் வார்டில் ஐடி விங் ஒருங்கிணைப்பாளராக உள்ளார் வசந்தகுமாரி.

“கவுன்சிலர் என்பதே கனவாத்தான் தெரிந்தது. மேயரானதும் முதல்ல பதற்றம்தான் வந்தது. எளிய மக்கள் படுற எல்லா கஷ்டங்களையும் நானும் அன்றாட வாழ்க்கையில சந்திச்சிருக்கேன். அந்தப் பிரச்னைகளை சரிசெய்யப் பாடுபடுவேன். குறிப்பா மக்களுக்கு சுகாதாரமான குடிநீர், தரமான சாலை, சிறந்த கல்வி கிடைப்பதை உறுதி செய்வேன். தாம்பரத்தின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு. அதையெல்லாம் பூர்த்தி செய்வேன்.’’

மக்கள் பிரச்னை என் பிரச்னை! - காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி

14 வருடங்களாக சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த மகாலட்சுமி தன் பணியிலிருந்து விலகித் தேர்தலைச் சந்தித்து மேயர் ஆகியிருக்கிறார். அப்பா, தாத்தா என அனைவரும் தி.மு.க அனுதாபிகளாக இருந்தாலும் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை. மகாலட்சுமியின் கணவர் யுவராஜ் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருப்பதால் இந்த வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது

‘`கணவர் தீவிர அரசியல்ல இருக்கிறதால எனக்கும் அரசியலில் ஈடுபாடு வந்தது. முன்னர், நான் ஒரு வொர்க்கிங் வுமன். தினமும் காலையில எழுந்து பஸ்ஸோ, ரயிலோ பிடிச்சு செங்கல்பட்டு போய் வொர்க் பண்ணிட்டு வந்த ஆள். அதனால, தினமும் வீட்டிலிருந்து வெளியே காலடி எடுத்து வைக்கிறதுல இருந்து இரவு வீடு திரும்புற வரை ஒவ்வொரு பெண்ணும், பொதுமக்களும் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்வாங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அதையெல்லாம் சரி செய்வேன். மக்களோட பிரச்னைகளை என் பிரச்னையா என்னால உணர்ந்து செயலாற்ற முடியும்.’’

ஆறு மாதத்துக்கு ஒருமுறை செயல்பாட்டு அறிக்கை! - மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த்

மதுரை, மாநகராட்சியாகி தரம் உயர்த்தப்பட்ட 50 ஆண்டுக்கால வரலாற்றில் இரண்டாவது பெண் மேயராகப் பொறுப்பேற்றுள்ளார் இந்திராணி பொன் வசந்த். எம்.ஏ பட்டதாரி. கணவர் பொன் வசந்த், ஆரப்பாளையம் பகுதி தி.மு.க செயலாளர். தேர்தலில் 6,851 வாக்குகள் பெற்று எதிர்த்துப் போட்டியிட்ட 11 வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்தார் இந்திராணி. பொன் ஆதவன், பொன் பரிதி என இரண்டு குழந்தைகள்.

‘`எனது முதல் பணியாக குடிநீர், தரமான சாலை, போக்குவரத்து வசதி, தெருவிளக்கு வசதி, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நிர்வாக அமைப்புகளை பலப்படுத்தி உடனடியாகத் தீர்வு காண்பேன். இரண்டாவதாக, எனது செயல்பாடுகளை மக்கள் அறியும்படியாக ஆறு மாதத்துக்கு ஒருமுறை செயல்பாட்டு அறிக்கையை மக்கள் மன்றத்தில் நிதியமைச்சர் வழியில் சமர்ப்பிப்பேன். அனைத்து மாமன்ற உறுப்பினர்களை இணைத்து தூய்மையான முன்னேற்றத் துக்கான மாமதுரையை நேர்மையான வழியில் உருவாக்கப் பாடுபடுவேன்.’’

 இந்திராணி பொன் வசந்த், சுந்தரி, கவிதா கணேசன்
இந்திராணி பொன் வசந்த், சுந்தரி, கவிதா கணேசன்

ஒரு வாரத்துல முடிக்கணும்! - கடலூர் மேயர் சுந்தரி

கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி, தி.மு.க நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா என்ற பழக்கடை ராஜாவின் மனைவி. 55 வயதாகும் இவருக்கு மூன்று பிள்ளைகள், நான்கு பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். இதுவரை குடும்ப நிர்வாகத்தைப் பார்த்து வந்த சுந்தரி, இனி மாநகராட்சியின் நிர்வாகத்தைப் பார்க்க இருக்கிறார்.

‘`பி.ஏ பொது நிர்வாகம் படிச்சிருக்கேன். கடலூர் மக்களைப் பொறுத்தவரை அவங்களோட முதல் எதிர்பார்ப்பே நல்ல குடிநீர்தான். நிறைய இடங்கள்ல குடிநீரில் கழிவுநீர் கலந்து வருது. அதனால மக்கள் காசு கொடுத்து குடிநீரை வாங்குறாங்க. இதையெல்லாம் சரிசெய்யணும். எங்க மாவட்டம் கடலோரமா இருப்பதால மழைக்காலங்களில் வீடுகளுக்குள் மழை நீர் போயிடும். அதுக்குத் தீர்வு கொண்டு வரணும். கடலூர் மாவட்ட நுழைவாயில்ல பிரமாண்ட வளைவை அமைக்கணும். என்னைத் தேடி மக்கள் வரக் கூடாது, நான்தான் அவங்களைத் தேடிப் போகணும். கோரிக்கைகளை அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் முடிக்கணும்; திட்டங்களை ஆறு மாசங்களுக்குள் முடிக்கணும்.’’

‘க்ளீன் கரூர்’ திட்டம் ரெடி! - கரூர் மேயர் கவிதா கணேசன்

கவிதா கணேசன் எம்.எஸ்சி, பி.எட் பட்டதாரி. கணவர் கணேசன், கரூர் வடக்கு மாநகர செயலாளர் மற்றும் தி.மு.க தலைமைக்கழகப் பேச்சாளர். ஆண், பெண் என இரட்டை குழந்தைகள். மகள் காவ்யா கணேசன் எல்.எல்.பியும், மகன் கார்க்கி கணேசன் பொறியியலும் படிக்கிறார்கள். கடந்த 2006 - 2011 வரை இனாம் கரூர் நகர்மன்றத் தலைவராக இருந்திருக் கிறார் கவிதா கணேசன்.

“நான் சாதாரண கூலித்தொழிலாளியின் மகள். அப்பா, மாட்டுவண்டி ஓட்டினார். என் கணவரும் சாதாரண பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். தி.மு.கவில் 30 வருஷமா பேச்சாளரா இருக்கார். 2006-ல் கலைஞர் உள்ளாட்சியில் பெண்களுக்கு 35 சதவிகிதம் இட ஒதுக்கீடு தந்தப்போ, இனாம் கரூர் நகராட்சி தலைவரானேன். அரசியல் ஆர்வத்தால டீச்சர் கனவை உதறினேன். செக்கு எண்ணெய் உற்பத்தி, என்னோட இன்னொரு முகம். ‘சிங்கார சென்னை’ மாதிரி, ‘க்ளீன் கரூர்’ என்ற திட்டத்தை முன்னெடுக்க இருக்கேன். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யணும். மக்கும் குப்பைகளை வீடுகளில் சேகரிச்சு, அதைக்கொண்டு மாநகராட்சி சார்பில் மாடித்தோட்டம் அமைக்க இருக்கோம். வருவாய் இல்லாமல் இருக்கும் கரூர் மாநகராட்சியில பல்வேறு வகையில வருவாயைப் பெருக்கும் திட்டங்களை செயல்படுத்தணும்.’’

நான் அரசுப் பள்ளியில் படித்தவள்! - வேலூர் மேயர் சுஜாதா

வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா எம்.ஏ., பி.எட் பட்டதாரி. ‘டெட்’ தகுதித் தேர்வுகளை எழுதிவந்த சுஜாதா, தனது கவனத்தை அரசியல் பக்கம் திருப்பினார். 2001-ல் தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டவருக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்குள், வேலூர் மாநகர மகளிரணி அமைப்பாளராக கட்சிப் பதவி வழங்கப்பட்டது. இப்போது மேயர் பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

‘‘நான் அரசுப் பள்ளியில் படித்தவள். என் மாநகராட்சியிலிருக்கும் எல்லா அரசுப் பள்ளிகளிலும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிகரா தரம் உயர்த்துவேன். எல்லா வார்டுகளிலும் பெண்களுக்கு தனிக் கழிவறை வசதியை ஏற்படுத்துவேன். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் சாலைகளை படுமோசமாகப் போட்டிருக்காங்க, அதை சரிசெய்வேன். பெண்கள் முன்னேற்றத்துக்குப் பல திட்டங்கள் இருக்கு. தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியா வேலூரை மாற்றுவேன்.’’

சுஜாதா, நாகரத்தினம், கல்பனா
சுஜாதா, நாகரத்தினம், கல்பனா

நாற்காலியில் உட்கார்ந்ததும் வாழ்க்கையே மாறிடுச்சு! - ஈரோடு மேயர் நாகரத்தினம்

ஈரோடு மாநகராட்சியின் இரண்டாவது பெண் மேயர், தி.மு.க.,வைச் சேர்ந்த நாகரத்தினம்.

51 வயதாகும் நாகரத்தினம் 9-ம் வகுப்பு வரை படித்தவர். கணவர் சுப்பிரமணியம் ஈரோடு தி.மு.க.,வின் மாநகரச் செயலாளர். ஜெயபிரபு, கவின் ராஜ்குமார் என இரு மகன்கள் உள்ளனர். இதுவரை இல்லத்தரசியாக மட்டுமே இருந்தவர், தன்னுடைய முதல் அரசியல் என்ட்ரியிலேயே கவுன்சிலரானதோடு, மேயர் நாற்காலியையும் பிடித்து அசத்தியிருக்கிறார்.

“நான் 1986-ல் இருந்து தி.மு.கவில் உறுப்பினர். எங்க வீட்டுக்காரங்க மூணு தடவை காசிபாளையம் நகராட்சி சேர்மனா இருந்திருக்காங்க. இப்போ ஈரோடு தி.மு.க., மாநகரச் செயலாளரா இருக்காங்க. இந்தத் தேர்தல்ல நான் தெருவுல இறங்கி ஓட்டுக்கேட்கப் போனது, மக்கள் என்ன ஜெயிக்க வெச்சது, மேயர் நாற்காலியில் உட்கார்ந்ததுனு வாழ்க்கையே மாறிப்போயிருக்கு. தினமும் கிடைக்கும் மரியாதையைப் பார்க்கும்போது, இந்த நாற்காலியோட பொறுப்பை அதிகமா உணர்றேன். முதற்கட்டமா, ஈரோடு மாநகராட்சியில் பல வருஷமா கிடப்புல இருக்க பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முடிக்கணும். அப்புறம், சாயக்கழிவு தண்ணி குடிநீர்ல கலக்குறதால மக்களுக்கு உடல்ரீதியா நிறைய பிரச்னை வருது. அதுக்காக ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டத்தை சீக்கிரமா மாநகராட்சி முழுக்க கொண்டு போய்ச் சேர்க்கணும்.’’

24 மணி நேரமும் என்னை சந்திக்கலாம்! - கோவை மேயர் கல்பனா

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர், 40 வயதாகும் கல்பனா. பத்தாம் வகுப்புப் படித்துள்ளவர், கணவருடன் இணைந்து இ-சேவை மையம் நடத்தி வருகிறார். குழந்தைகள் காவியா, கிருத்திக் சாய் பள்ளியில் படிக்கிறார்கள். தி.மு.க அடிப்படை உறுப்பினர். கணவர் ஆனந்தகுமார், மணியகாரம்பாளையம் பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர்.

“மூணு தலைமுறையா தி.மு.க-வுல இருக்கோம். இந்தத் தேர்தல்ல பெண்களுக்கு நிறைய அரசியல் பகிர்வு கொடுக்கப்பட்டது சிறப்பான முன்னெடுப்பு. என்னைப் பொறுத்தவரை, தேர்தல் களத்துல நிறைய சவால் இருந்துச்சு. நேரடியா, மறைமுகமானு எதிர்ப்பும் இருந்துச்சு. இப்பவும் என்னைய மேயரா ஏத்துக்கற பக்குவம் சிலருக்கு வரல. அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லை. மக்களால தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கோம். மக்களுக்கு என்ன தேவையோ, அதை நிறைவேற்றுவோம். கோவையில நிறைய சாலை மோசமா இருக்கு. அதையெல்லாம் சரி செய்யணும். குடிநீர், சாக்கடை, குப்பைனு அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யணும். பொதுமக்கள், குறிப்பா பெண்கள் 24 மணி நேரமும் எங்களை சந்திச்சு பிரச்னைகளை சொல்லலாம்.”

மாநகராட்சி வரி பாக்கியை வசூல் செய்யணும்! - திண்டுக்கல் மேயர் இளமதி

திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயர், இளமதி. பிபிஏ பட்டதாரி, நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். நிலக்கோட்டையில் பாரம்பர்ய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர் கணவர் ஜோதி பிரகாஷ் குடும்பமும் தீவிர தி.மு.க-வினர். ஜோதி பிரகாஷ், வடமதுரையில் உள்ள ஆசிரியர் கூட்டுறவு நாணய சங்கச் செயலாளர். இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2006 - 2011-ம் ஆண்டில் திண்டுக்கல் நகராட்சியின் 22-வது வார்டு கவுன்சிலராக இருந்தவர், இப்போது திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயர்.

``திண்டுக்கல் மாநகரில் பாதாள சாக்கடை திட்டம், ரோடு வசதி, சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் நகரை தூய்மையாக வைத்தல் உள்ளிட்டவைக்காக முதல்கட்ட வேலைகளைத் தொடங்க உள்ளேன். மாநகராட்சிக்குக் கிடைக்க வேண்டிய வரி பாக்கியை வசூல் செஞ்சு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை படிப்படியாக நிவர்த்தி செய்து கொடுக்கணும். மேலும் மாநகராட்சியை ஒட்டியுள்ள ஊராட்சிகளை இணைத்து 65 வார்டுகளா மாற்றத் திட்டம் இருக்கு. அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர்கிட்ட ஆலோசித்து அதற்கான பணிகளையும் தொடங்க இருக்கேன்.’’

இளமதி,சங்கீதா இன்பம்
இளமதி,சங்கீதா இன்பம்

அர்ப்பணிப்போடு மக்கள் பணி செய்வேன்! - சங்கீதா இன்பம், சிவகாசி மாநகராட்சி மேயர்

விருதுநகர் மாவட்டத்தின் முதல் மாநகராட்சியான சிவகாசி மாநகராட்சியின் முதல் பெண் மேயர் சங்கீதா இன்பம். பி.ஏ. படிப்பை முடிக்க இயலாத சூழல் சங்கீதாவுக்கு. கணவர் இன்பம், சிவகாசி நகர தி.மு.க. வர்த்தக அணிச் செயலாளர். இந்தக் காதல் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். மகள் யாஷிகா பொறியியல் பட்டதாரி, மகன் பிர்லா அப்பாவின் அச்சுத் தொழிலைப் பார்த்துவருகிறார்.

‘`44 வயதைக் கடந்து மக்கள் பணியில அடியெடுத்து வெச்சிருக்கேன். கணவர் முழுநேரமா அரசியல்ல சுழல்றவர். நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர். இப்போ நானும் சுழல ஆரம்பிச்சுட்டேன். தமிழகத்திலேயே அதிகமான தொழிலாளர் வருங்கால வைப்புநிதி செலுத்தும் மாநகராட்சி சிவகாசி. பட்டாசுத் தொழிலை நம்பி இங்க லட்சக்கணக்கான மக்கள் பிழைப்பு நடத்துறாங்க. அவங்களுக்கு இ.எஸ்.ஐ மூலம் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வழிவகை செய்யணும். நகரின் உஷ்ணத்தைத் தணிக்க ‘பசுமை சிவகாசி’ திட்டத்தை முன்னெடுக்க இருக்கோம். ஆனைக்குட்டம் தடுப்பணை ஷட்டர் பிரச்னை குறித்து விரைவில் அதிகாரிகளுடன் கலந்து பேசி தீர்வு காண முயல்வோம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism