Published:Updated:

``நாடாளுமன்றப் பெண் உறுப்பினர்கள் அவமதிக்கப்படுகிறார்களா?" - ஓர் அலசல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள்
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள்

``நாடாளுமன்றத்தில் உள்ள பெண் உறுப்பினருக்கே இதுதான் நிலையென்றால், சாதாரண பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை எப்படியிருக்கும் என்பது அச்சமூட்டுவதாக இருக்கிறது.’’

மகாராஷ்டிர ஆட்சி மாற்றக் குளறுபடிகளை எதிர்த்து மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல்கொடுத்தனர். அப்போது, உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை நெருங்கிவிடாதபடி அவைக் காவலர்கள் அவர்களைப் பிடித்து அப்புறப்படுத்தினார்கள்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அப்போது, பெண் எம்.பி-க்கள் என்று கூட பொருட்படுத்தாமல்,  சபைக் காவலர்கள் தமிழக எம்.பி ஜோதிமணி மற்றும் கேரள எம்.பி ரெம்யா ஹரிதாஸ் ஆகிய இருவரையும் பிடித்துத் தள்ளியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மக்களவைத் தலைவர், சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளார்.

புகார் மீதான விசாரணை நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள்மீது, இந்த விதமான அணுகுமுறை நிகழ்வது இது முதல்முறை அல்ல. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்கிற பாரபட்சமில்லாமல் இவை தொடர்ச்சியாக நடந்துவருகின்றன. மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தனது சொந்தக் கட்சியினராலேயே மரியாதைக்குறைவாகத் தாக்கப்பட்டது, அதற்கு சிறந்த உதாரணம். இதுபோலவே அமேதி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஸ்மிருதி இரானியும் தனது மகள் பற்றி எழுதிய பதிவு ஒன்றுக்காக வசைச் சொற்களால் தாக்கப்பட்டார்.

ஸ்மிருதி இரானிக்கு எதிரான சைபர் தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டேதான் உள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான நுஸ்ரத் ஜகான் மற்றும் மிமி சக்ரபர்த்தி ஆகியோர், நாடாளுமன்றத்துக்கு பேன்ட் - ஷர்ட் அணிந்து சென்றதற்காகத் தரக்குறைவாக வசைபாடப்பட்டார்கள். நுஸ்ரத் ஜஹான் மதம் மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர் என்பதால், ட்விட்டரில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக இடும் பதிவுகளுக்கு, கொலைமிரட்டல் வரையிலான எதிர்ப்புகளைச் சந்தித்துவருகிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அணிந்திருந்த உடையைச் சுட்டிக்காட்டி, அவர்மீது சைபர் தாக்குதல் மேற்கொண்டார்கள். நாட்டிலுள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்ற அவையில் கேள்வி எழுப்பவேண்டிய பொறுப்புள்ள பெண் உறுப்பினர்களையும் இதுபோன்ற நேரடியான மற்றும் சைபர் வலைதளத் தாக்குதல்கள் விட்டுவைப்பதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர் ஒருவரைப் பாலியல் ரீதியாக வசைச்சொற்களைப் பயன்படுத்தித் தாக்கியதாக, சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தது 2018 டிசம்பர் மாதத்தில். அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் 'மீ டு' தொடர்பான விவாதத்தின்போது சாரா ஹான்சன் யங் என்கிற பெண் உறுப்பினரை, சக உறுப்பினர் டேவிட் லியான்ஜெம் பாலியல் ரீதியாக தாக்கிப் பேசினார்.

சாரா - டேவிட்
சாரா - டேவிட்

ஊடகங்களிடம் பேசும்போதும் அதே சொற்களை உபயோகித்திருக்கிறார். அதுதொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள அந்த நாட்டு நீதிமன்றம், டேவிட்  சாராவுக்கு இந்திய மதிப்பீட்டின்படி 58 லட்ச ரூபாய் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என்றும், அவரது செய்கை எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடியது இல்லை என்றும் குறிப்பிட்டுத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதுபோன்ற நடவடிக்கைகள் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் ஏன் சாத்தியமில்லை என்கிற கேள்வி எழுகிறது.

"நாங்கள், ஸ்மிருதி இரானி தாக்கப்பட்டபோது அதற்கு எதிராகக் குரல் கொடுத்தோம். ஆனால், அதுவே எங்கள்மீது அப்படியொரு தாக்குதல் நிகழும்போது அவர்கள் அதுபோல குரல்கொடுப்பதில்லை. பெண்கள் என்கிற ஒற்றுமை உணர்வு அவர்களிடம் இருப்பதில்லை. அதுதான் பிரச்னை" என்கிறார் ஜோதிமணி.

ரெம்யா ஹரிதாஸ்
ரெம்யா ஹரிதாஸ்

மேலும் அவர் பேசுகையில், "நாங்கள் தாக்கப்பட்டதன் மீதான விசாரணையும் அதுகுறித்த நடவடிக்கையும் என்னவென்று இனிமேல்தான் தெரியவரும். ஆனால், எங்களுக்காக எங்கள் தரப்பு கட்சிகள் சார்பிலிருந்துதான் குரல்கள் வந்தன. ஆளுங்கட்சிகள் இதை மகாராஷ்டிர ஆட்சிக் குளறுபடிகள் சார்ந்த அரசியல் ரீதியான பிரச்னையாக மட்டுமே பார்ப்பதால், ஆளுங்கட்சிப் பெண் உறுப்பினர்கள் எங்களுக்காகக் குரல்கொடுக்கவில்லை. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் மரியாதையையும் கேள்விக்குறியாக்கும் செயல்பாடுகள் பல்வேறு தளங்களில் தொடர்ந்து நிகழ்ந்தபடி இருக்கின்றன.

ஜோதிமணி
ஜோதிமணி

என்மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டபோது, சென்னை சைபர் க்ரைமில் புகார் அளித்திருந்தேன். அதன்மீதான நடவடிக்கை என்னவென்று இன்றுவரை தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் உள்ள பெண் உறுப்பினர் ஒருவருக்கே இதுதான் நிலையென்றால், சாதாரண பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை எப்படியிருக்கும் என்பது அச்சமூட்டுவதாக இருக்கிறது. இதுபோன்ற வன்முறைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் எங்களுக்கே இப்படியென்றால், பிறகு மற்ற பெண்கள் எப்படி துணிந்து குரலெழுப்புவார்கள்?" என்கிறார் ஆதங்கத்துடன்.

நாட்டின் கடைக்கோடி தொடங்கி நாடாளுமன்ற சபைகள் வரையிலும் இருக்கும் அத்தனை பெண்களின் பாதுகாப்பும் இங்கு ஒரே நிலையில்தான் இருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதன் 60-வது ஆண்டு நேற்று நாடாளுமன்ற அவைகளில் அனுசரிக்கப்பட்டது. இந்த நாள், தேசிய சட்ட தினமாகவும் கொண்டாடப்படுகிறது. நாட்டின் கடைக்கோடி தொடங்கி நாடாளுமன்ற அவைகள் வரையிலும் இருக்கும் அத்தனை பெண்களின் பாதுகாப்பும் இங்கு ஒரே நிலையில்தான் இருக்கிறது. அவர்களுக்கான பாதுகாப்பும் அவர்கள் மீதான வன்முறைகுறித்தும் சட்டரீதியான நடவடிக்கைகள் அலட்சியமாகவே கையாளப்படுகிறது என்றால், யாருக்காக இந்தச் சட்டதினம் கொண்டாடப்படுகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு