Published:Updated:

பெண்களும் அர்ச்சகராகலாம்! சாத்தியமாகுமா சம உரிமை?

கிருஷ்ணவேணி அம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
News
கிருஷ்ணவேணி அம்மாள்

தாயை முன்னிலைப்படுத்திய சமூகம் நம்முடையது. கடவுள் வழிபாட்டையும் பெண்தான் தொடங்கி வைத்தாள்.

‘பெண்களும் அர்ச்சகராகலாம்’ - தமிழக அரசின் இந்த அறிவிப்பு, பெண்களின் சம உரிமை மீட்புக்கான மற்றுமொரு முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது. ஆதிகாலம் தொட்டே இதற்கு எடுத்துக்காட்டுகள் இருந் தாலும், சமகால உதாரணமாக அரை நூற்றாண்டுக்கும் மேல் பொலிவுடன் நின்றுகொண்டிருக்கிறது, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம். மாதவிடாய் நாள்களிலும் கருவறைக்குள் சென்று பெண்கள் அர்ச்சனை செய்வது, இன்றுவரையிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பு குறித்து பல துறை சார்ந்தவர்களிடம் கேட்டோம்.

தமிழ் சைவப் பேரவைத் தலைவர் கலையரசி நடராஜன், ``தாயை முன்னிலைப்படுத்திய சமூகம் நம்முடையது. கடவுள் வழிபாட்டையும் பெண்தான் தொடங்கி வைத்தாள். புராணங்கள், ஆகமங்கள், திருமுறைகள் ஆகியவற்றில் அம்மை, அர்ச்சனை செய்து இறைவனை வழி பட்டதற்கான சான்றுகள் இருக்கின்றன. 1300 ஆண்டுகளுக்கு முன்பு, தாடகேஸ்வரத்தில், (இன்றைக்கு திருப்பனந்தாள்) தாடகை என்ற பெண் குழந்தை கருவறைக்குள் சென்று அபிஷேகம் செய்ததாகத் திருமுறை சொல்கிறது. அதனால், பெண், இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டது தமிழ்ச் சமூகத்துக்கு புதிதல்ல. பூந்தமல்லி கண்ணப்பாளையத்தில் இருக்கிற அருள்மிகு சைவப்பெருமான் ஆலயத்தில் கடந்த ஆறு வருடங்களாக அத்தனை பணிகளையும் பெண்கள்தான் செய்து வருகிறார்கள். பெண்களும் அர்ச்சகராக லாம் என்ற அரசு அறிவிப்பின் மூலம் பெண்கள் தம் பண்டைய பெருமையை மீட்டுவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது’’ என்கிறார் பெருமிதத் துடன்.

``ஆதிகாலத்தில் பெண் மடாதிபதிகளாக, பூசாரிகளாக இருந்திருக்கிறார்கள். இடைப் பட்ட காலத்தில்தான் இதில் மாற்றங்கள் ஏற்பட்டு, கோயிலில் இருந்த பெண்களுக்கான உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. மாதவிடாய் நேரத்தில் வீட்டுக்குள்ளேயே வரக் கூடாது என்றிருந்த காலகட்டத்தையெல்லாம் கடந்து விட்டோம். நம் உரிமையை, அதிகாரத்தை நிலைநாட்டும் உச்சபட்ச அதிகாரமான ஆலய வழிபாட்டிலும் சமபங்கு என்பது தவிர்க்க முடியாத, நடந்தே ஆக வேண்டிய நிகழ்வு.

பெண்களும் அர்ச்சகராகலாம்!
சாத்தியமாகுமா சம உரிமை?

நம் குழந்தைகளுக்குக் கடவுளை பெரும்பாலும் ஆண் உருவத்தில்தான் காட்டுகிறோம். அதற் கடுத்த நிலையில் இருக்கிற பூசாரியும் ஆண் என்றால், பெண் குழந்தைகள் ஆணே உயர்ந் தவன் என்று நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று அவர்கள் நம்ப வேண்டுமென்றால், பெண்கள் அர்ச்சகராவது உடனடியாக நடக்க வேண்டும்’’ என்கிறார் பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியா.

கடந்த ஒன்பது வருடங்களாக சென்னை, வில்லிவாக்கத்தில் தங்களுடைய குடும்பத்துக்கு சொந்தமான விநாயகர் ஆலயத்தில் அர்ச்சகராக இருக்கிறார் 75 வயது கிருஷ்ண வேணி அம்மாள். ‘`அந்தக் காலத்தில் நாப்கின் கிடையாது. துணியை மீறி ரத்தப்போக்கு தரையில் சிதறிவிடலாம். அதனால், பலரும் வந்து செல்கிற ஆலயத்துக்கு மாதவிடாய் காலத்தில் செல்ல வேண்டாம் என்று பெண் களே தவிர்த்திருக்கலாம். அது பெண்கள் அர்ச்சகராக இருந்த உரிமையைக் காலப்போக்கில் பறித்திருக்கலாம். இன்றைக் கும் அதையே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி? நான் அர்ச்சகர் பணியைச் செய்ய ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் என் ஆலயத்துக்கு வரவில்லை. `ஒரு பெண் அர்ச்சக ராக இருப்பதா’ என்ற மனப்பான்மையே காரணம். பெண்ணைப் படைத்ததும் கடவுள்தான். அப்படியிருக்க, ஆண்களை மட்டும்தான் அவர் ஏற்றுக்கொள்வார் என்பது கற்பிதமே. பெண்களுக்கு மாதவிடாய்போல, ஆண்களுக்கும் உடல்ரீதியில் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதையெல்லாம் காரணம் காட்டி அவர்களை ஒதுக்காத கடவுள், மாதவிடாயைக் காரணம் காட்டி பெண்களை மட்டும் தடுப்பாரா என்ன?’’ என்கிறார் யதார்த்தமாக.

சபரிமலைக்குப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, பெண்களுக்கான கட்டமைப்புகள் உருவான பிறகு, சபரிமலைக்கு வாருங்கள் என்று சொன்ன நடிகை ரஞ்சனியிடம் பேசினோம். ``பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றுக்கு முதலில் முற்றுப்புள்ளி வைப்போம். பெண்களுக் கெதிரான வழக்குகளில் அரசு விரைந்து செயல்பட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கட்டும். இவையெல்லாம் நடந்து, பெண்களும் அர்ச்சகரானால் மகிழ்ச்சிதான்’’ என்கிறார் இவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பெண்களும் அர்ச்சகராகலாம்!
சாத்தியமாகுமா சம உரிமை?

``ஆலயத்தில் அர்ச்சகராவதற்கு வேதம் படித்திருக்க வேண்டும், அதிகாலை எழுந்திருக்க வேண்டும், நீண்ட நேரம் கருவறையில் நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் இது ஆண்களுக்குப் பொருத்தமான வேலை என்று முடிவெடுத்தார்கள். அதற்காகப் பெண்களுக்கு அர்ச்சகராகும் தகுதியில்லை என்று அர்த்தமில்லை. இது உணர்வுரீதியான விஷயமென்பதால், சமூகம் விரும்பினால் பெண்கள் அர்ச்சகராகலாம்’’ என்கிறார் பிரபல ஆன்மிக எழுத்தாளர் இந்திரா செளந்தர் ராஜன்.

``கொரோனா என்கிற பதற்றமான காலகட்டத்தில் இது போன்ற உணர்வுபூர்வமான விஷயத்தை அரசு பேசாமல் இருப்பதே நல்லது. மாற்றத்தைக் கொண்டு வந்தே ஆக வேண்டுமென்றால் சாதி, மதம் பார்க்காமல் அனைத்து மதங்களுக்கும் கொண்டு வர வேண்டும். மற்றபடி, என்னுடைய கட்சி சொல்வதுதான் என்னுடைய கருத்தும்’’ என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார் பா.ஜ.க மாநில கலைப்பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம்.

உரிமைகளை ஒவ்வொன்றாய் மீட்போம்! சம உரிமை சமுதாயம் சாத்தியமாகட்டும்!