Published:Updated:

பெண்கள் மீதான வன்முறை உத்தரப்பிரதேசத்தில் உச்சமாக இருப்பது ஏன்?!

அநீதி
News
அநீதி

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கையாளும் விதத்தில் மற்ற மாநிலங்களை விட அதிக குரூரமாகவும், இதயமற்றும் நடந்துகொள்கிறது உ.பி. ஆண், பெண் பேதமின்றி இங்கு மக்களின் மனநிலையே பெண்களின் சுதந்திரத்திற்கும், தனித்துவத்திற்கும், உரிமைக்கும் எதிரானதாக இருக்கிறது.

2021... மற்றோர் ஆண்டு. மார்ச் 8... மற்றுமொரு பெண்கள் தினம். மீண்டும் ஒரு நாள் கொண்டாட்டம். ஆனால், தேய்ந்துபோகும் பெண்களின் பாதுகாப்பு, பறிக்கப்படும் பெண்களின் சுதந்திரம் எனத் தொடர்கிறது அதே அவலநிலை. பேசப்பட வேண்டிய பெண்களின் பிரச்னைகள் இந்தியா முழுக்கவே நிறைய உண்டுதான். ஆனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கையாளும் விதத்தில் மற்ற மாநிலங்களைவிட அதிக குரூரமாகவும், இதயமற்றும் நடந்துகொள்கிறது உத்தரப்பிரதேசம்.

ஹத்ராஸ் இளம்பெண் உடல் தகனம்
ஹத்ராஸ் இளம்பெண் உடல் தகனம்

உன்னாவ் முதல் பண்டா வரை அக்கிரமக்காரர்கள் அசுர அரச பலத்துடன் நீதிக்குப் புறம்பாக செயல்பட்டது இந்த மாநிலத்தில்தான். பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை தீக்கிரையாக்கிய போலீஸ் அதிகாரிகள் முதல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களே பாலியல் குற்றவாளிகளாக இருப்பதுவரை பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் உச்சமாக இருக்கிறது உபி. ஆண், பெண் பேதமின்றி இங்கு மக்களின் மனநிலையே பெண்களின் சுதந்திரத்திற்கும், தனித்துவத்திற்கும், உரிமைக்கும் எதிரானதாக இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சமீபத்திய நிகழ்வு ஒன்று அதற்கு சாட்சி, 2018-ம் ஆண்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண்ணும் அவரது தந்தையும் நீதி கேட்டு சட்டத்தின் படியேறுகின்றனர். குற்றம்சுமத்தப்பட்டவன் கைது செய்யப்படுகிறான். வழக்கு விசாரணையில் இருக்கிறது, சில தினங்களிலேயே அவன் ஜாமீனில் விடுதலையாகிறான். விடுதலையானதும் தன் மீது கொடுத்த வழக்கை திரும்ப பெறுங்கள் என அந்தப் பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது தந்தையையும் அச்சுறுத்துகிறான். காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்படுகிறது, தீர்வு இல்லை. அவனது ஜாமீன் ரத்து செய்யப்படவில்லை. அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். இப்போது அவனும், அவனது புது மனைவியும் சேர்ந்தே பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது தந்தையையும் அச்சுறுத்துகிறார்கள். வழக்கை வாபஸ் பெறச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். மறுக்கும் பெண்ணையும் தந்தையும் குண்டுகள் துளைக்கும் என குற்றமிழைத்தவனின் மனைவி மிரட்டுகிறார். அன்று மாலையே பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, அந்தப் பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய அதே நபரால் சுட்டு கொல்லப்படுகிறார். இந்த கொடூரமும் அந்தப் பெண்ணின் கண் முன் நடந்தேறுகிறது.

கதறும் ஹத்ராஸ் பெண்
கதறும் ஹத்ராஸ் பெண்

உடல் வஞ்சிக்கப்பட்டு, மனம் வஞ்சிக்கப்பட்டு, நிம்மதி பறிக்கப்பட்டு, நீதி தாமதிக்கப்பட்டு, ஒரே துணையாய் நின்ற தந்தையும் கொல்லப்பட்டு நிர்கதியாக நிற்கும் இந்தப் பெண்ணை போலவே உபியில் பல பெண்கள் தவிக்கிறார்கள் என்பதே இன்றைய யதார்த்தம். அதை மாற்றியமைக்க வேண்டிய அரசும் அதிகாரத்தை அடக்குமுறையாகப் பயன்படுத்துவதே சிக்கல். அதுவும் கட்சி பேதமின்றி! இன்றைய எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக இருந்த காலத்திலிருந்தே இவையெல்லாம் நடக்கிறது. ஆண்டுதோறும் இந்தக் கொடுமைகள் அதிகரிப்பதே இப்போது நம் முன்னிருக்கும் ஆபத்து. இதில் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் சாதிய அடக்குமுறைகளையும் சேர்த்துக்கொண்டால் உத்தரப்பிரதேசம் குற்றப்பிரதேசமாகவே இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2013-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 16 வயது பெண், கோர்ட்டில் வாக்குமூலம் ‌கொடுத்து விடக்கூடாது என்பதற்காக அவரது நாக்கை துண்டித்த கொடூர செயல் நடந்தது உபி-யில்தான். பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் ஒரு பெண் அதை தன்னளவிலோ, குடும்பத்தின் வரையிலோ மறைத்துக் கொண்டால் பிரச்னையில்லை. அதுவே அவளுக்கு நிகழ்ந்ததை வெளியுலகிற்கு சொன்னால், இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக துணிந்து நின்றால், சட்டத்தின் மீது நம்பிக்கைகொண்டு நியாயம் வேண்டினால் அவள் சந்திப்பது மேலும் மேலும் கொடுமைகளை மட்டுமே. மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளும் அதற்கு சாட்சி.

ஹத்ராஸ்..!
ஹத்ராஸ்..!
HASSIFKHAN K P M

இவையெல்லாம் என்றோ நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு என்பதில்லை. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் உபியின் பெண்களின் நிலை குறித்தான சில செய்தி தலைப்புகள் அதன் நிகழ்கால தீவிரத்தை உணர்த்தும்.

வீட்டில் தனியாக இருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை இருவர் துப்பாக்கிமுனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.

உத்தரப்பிரதேசம் உன்னாவ்வில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 2 பட்டியலின சிறுமிகள் படுகொலை.

உத்தரப்பிரதேசத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர், அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே ஆசிட்டை ஊற்றிக் கத்தியால் குத்தினார்.

உத்தரப்பிரதேசத்தில் இரு இளைஞர்களின் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஹத்ராஸ் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை இருவர் துப்பாக்கிமுனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.

உ.பி., கோண்டா மாவட்டத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் மீது அதிகாலை 2 மணிக்கு ஆசிட் வீச்சு.

இன்னும் இதுபோல் நிறைய செய்திகளில் பொதுவாக இருப்பது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், சாதிய அடக்குமுறை ஆகிய இரண்டும்தான். உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான அநீதிகளை வெறும் பாலியல் இச்சைகளின் வெளிப்பாடாக மட்டுமே பார்க்கவியலாது என்பதுதான் நான் சொல்லவருவது. ஒரு பெண்ணின் உடல் மீது ஆண் மனநிலை கொண்டிருக்கும் ஒரு ஆதிக்க உணர்வு மட்டுமே உ.பியின் பிரச்னையல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதிருக்கும் ஆதிக்க மனநிலையே அதற்கு காரணம்.

"நிர்பயா வழக்காக இருக்கட்டும், இந்த ஹத்ரா நிகழ்வாக இருக்கட்டும்… பாலியல் வன்முறையைத் தாண்டி அந்தப் பெண்ணின் உடல்மீது அவர்கள் காட்டும் வக்கிரம் நம்மைத் திகைக்க வைக்கிறது. உண்மையில் அந்தப் பெண்ணின் மரணம்கூட அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. இந்த வக்கிரத்தை வெறும் ஆணாதிக்கம் என்கிற வரையறைக்குள் சுருக்கி விட்டுப் போக முடியாது" என ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார் பெண்ணியலாளர் ஓவியா.

தன் பதின்ம பருவத்து மகள் தனக்கு விருப்பமில்லாத ஒருவருடன் உறவில் இருந்தது பிடிக்காமல், மகளின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்ற தந்தையின் கொடூரம்தான் உ.பி குறித்த நேற்றைய செய்தி. இப்படி உத்தரப்பிரதேசத்தின் மகள்கள் சிக்கியிருப்பது பாலியல் குற்றவாளிகளிடமோ, அரசிடமோ, சாதிய திமிரிடமோ, ஆணிடமோ மட்டுமல்ல. அங்கு பெண்கள் சிக்கியிருப்பது பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த சமூகத்தின் மனநிலையில். அதை நாளையே களைவது சாத்தியமில்லை. ஆனால் இந்தக் கொடுமைகளுக்கு எதிரான வலுவான குரலாக அரசின் அங்கங்களும், அரசும் ஒலிப்பதே முதல்படி.

உ.பி காவல்துறை
உ.பி காவல்துறை

ஆனால், பாலியல் வன்கொடுமை குறித்து முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்ய 200 தினங்களுக்கு மேல் காத்திருக்கும் பெண்கள் பலர் உபியில் இருக்கிறார்கள் என்கிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஓர் ஆய்வறிக்கை.

கடந்த அக்டோபர் மாதம் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau) வெளியிட்ட 'க்ரைம் இன் இந்தியா' (2015 - 19 வரையிலான) ஆய்வு முடிவுகளின்படி, கடந்த 4 வருடங்களில் உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 66.7% அதிகரித்துள்ளது. இந்திய மாநிலங்களில் இதுவே அதிகம். அது மட்டுமன்றி, கடந்த 2019-ல் இந்தியாவில் பதிவான பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்குகளில் 15% உத்தரப்பிரதேசத்தில்தான் பதிவாகியுள்ளது. தோராயமாக, அங்கே ஒரு நாளுக்கு 164 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடக்கிறது என்கின்றன இந்த ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரங்கள். அஸ்ஸாமில் இது 177.8 ஆகவும், டெல்லியில் இது 144 ஆகவும் இருக்கிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்களின் பாதுகாப்பு பற்றி மேற்கு வங்காள தேர்தல் பிரசாரத்தில் பேசியது கவனிக்கத்தக்கது. பாலியல் வன்கொடுமையிலும், குடும்ப வன்முறையிலும் உயிரிழந்துகொண்டிருக்கும் பெண்களை பற்றி அவரது ஆட்சியிலும் சரி, அவர் ஆற்றிய உரையிலும் சரி கண்டுகொள்ளப்படவில்லை. மாறாக ஒரு ஹிந்து பெண்ணை, முஸ்லீம் ஆண் காதலித்து கரம்பிடிப்பதை 'லவ் ஜிகாத்' என்று கூறி அதை தடுக்க சட்டம் இயற்றுவதே பெண்களின் பாதுகாப்பு என்று பேசியிருக்கிறார். அந்த உரையில், "பெங்காலில் பெண்களை மோசடி செய்தி ஏமாற்றி காதலில் விழ செய்யும் 'லவ் ஜிகாத்' நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இந்த மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. உபியில் இதற்கு எதிராக மதமாற்று தடை சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் வங்காள அரசு இந்த ஆபத்தான நிகழ்வுகளை தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை." இந்து பெண்கள் காதலுக்காக மதம் மாறுவது ஆபத்து... அது பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் எனில் தினம் நடக்கும் பாலியல் கொடூரங்களும், உயிர் சேதங்களும்? கேள்விகள் மட்டுமே நம்மிடம் மிச்சமிருக்கின்றன.

 உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

இந்நிலையில்தான், பெண்கள் தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது உபி அரசு. பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து பெண் பிள்ளைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்புவோம் என பெற்றோர்களிடம் உறுதிமொழி வாங்க இருக்கிறது.

உண்மையில், பள்ளிக்கும், கல்லூரிக்கும், வேலைக்கும், நீதிகேட்டு காவல்நிலையத்திற்கும், நீதிமன்றங்களுக்கும் செல்லும் பெண்கள் நிச்சயம் பத்திரமாக வீடு திரும்புவார்கள் என்பதே உத்தரப்பிரதேச அரசு அம்மக்களுக்கு கொடுக்க வேண்டிய உறுதிமொழி.