Published:Updated:

"இளம்பெண்களே... கனவுகளை நோக்கி நகருங்கள்" சந்திரயான் 2வில் பணியாற்றும் ரித்து கரிதால் #RituKaridhal

சந்திரயானில் பணியாற்றும் ரித்து கரிதால் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

ரித்து கரிதால்
ரித்து கரிதால் ( facebook )

"இந்தப் பணியை ஆண் செய்ய வேண்டும்; சில குறிப்பிட்ட பணிகளைப் பெண் செய்ய வேண்டும் என்று பாரபட்சம் கொள்ளாமல், செய்யும் வேலையில் பேரார்வமும் தன்னம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டும் இயங்க வேண்டும்" என்ற நம்பிக்கைகளை விதைக்கும் பெண்மணியாகத் திகழ்கிறார் ரித்து கரிதால்.

ரித்து கரிதால்
ரித்து கரிதால்

சந்திரயான் 2-ல் பணிபுரிந்த பெண்களில் வனிதாவும் ரித்து கரிதாலும் பலரின் பாராட்டுகளைப் பெற்றுவருகின்றனர். வனிதாவைப் பற்றிய பல செய்திகள் வெளிவந்த நிலையில் ரித்து கரிதால் பற்றிய செய்திகளைச் சேகரித்தேன்.

ரித்து கரிதால், உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர். நடுத்தர வசதிகொண்ட குடும்பச் சூழல்தான் என்றாலும், இவரின் சிறுவயது முதலே, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியே வளர்த்து வந்திருக்கின்றனர் இவரின் பெற்றோர். ரித்துவுக்கு இரண்டு சகோதரிகள்; இரண்டு சகோதரர்கள்.

சிறு வயதிலிருந்தே விண்வெளியைப் பற்றிய ஆர்வம் மிகுந்தவராக இருந்திருக்கிறார் ரித்து கரிதால். அவரின் பொழுதுபோக்கே விண்வெளி, இஸ்ரோ, நாசா உள்ளிட்டவற்றைப் பற்றிய செய்திகளைத் தேடித் தேடிப் படிப்பதுதான். படித்ததோடு, அந்தச் செய்திகளைக் கத்தரித்து பத்திரப்படுத்தவும் மறக்க வில்லை. இவை போன்ற செயல்களே அவரை அனைத்துச் செயல்களிலும் புதிய அணுகுமுறையைக் கொண்டிருக்கச் செய்தது.

சந்திராயான்
சந்திராயான்

ரித்து, லக்னோ யுனிவர்சிட்டியில் தன் இளங்கலை பொறியியல் படிப்பையும், IISC பெங்களூரில் முதுகலைப் படிப்பான 'விண்வெளி பொறியியலையும் மேற்கொண்டு பட்டம் பெற்றார். ரித்து கரிதாலைப் பற்றி அவர் பட்டம் பெற்ற லக்னோ யுனிவர்சிட்டி பேராசிரியை மனிஷா குப்தா பேசுகையில், "எந்த ஒரு செயலையும் பொறுப்புணர்வோடும் நிபுணத்துவமுடனும் ஈடுபடுவதில் ஆற்றல் பெற்றவர் ரித்து கரிதால்' என்கிறார். ரித்து GATE பொறியியல் நுழைவுத்தேர்வை, அவர் டாக்டர் பட்டப் படிப்பில் சேர்ந்து ஆறாவது மாதத்துக்குள் வெற்றிபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ரித்து தன் கனவு வேலையாக நினைத்தது விண்வெளி தொடர்பான பணியைத்தான். அது நனவானது 1997-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இஸ்ரோவில் வேலைக்குச் சேர்ந்தார். இப்போது 22 வருட அனுபவங்களுடன் நிறைவாகச் செயலாற்றிக்கொண்டிருக்கிறார்.

ரித்து ஒரு நேர்காணலில் தன் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிக் கூறுகையில், "சிறு வயதிலிருந்தே அறிவியல் மீது தனக்கு இருந்த தீராத பேரார்வம் இருந்தது. அதுதான் அறிவியலை மற்றுமொரு பாடமாகப் பார்க்காமல், தனிக் கவனம் குவிக்க வைத்தது." என்கிறார். மேலும், "இஸ்ரோவில் எனக்குப் பணிவாய்ப்பு வந்தபோது, பெற்றோர் என்மீது கொண்ட மிகுந்த நம்பிக்கையின் காரணமாகத் துணிச்சலோடு அனுப்பினர். அதுவே என் இலக்கைத் தொடர உதவியது" என்கிறார் ரித்து கரிதால்.

ரித்து கரிதால்
ரித்து கரிதால்
facebook

"எது ஒன்றின் மீது ஆர்வம் இருக்கும்பட்சத்தில், எத்தனை தடைகள் வந்தாலும் அவர், அதைத் தகர்த்துக்கொண்டு செல்ல முடியும் என்றும் அந்தத் தடைகள் எதுவும் ஒரு பொருட்டில்லை" என்று கூறும் ரித்து கரிதால், தனது குடும்ப வாழ்க்கையைப் பற்றிப் பகிர்கையில், "பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான அழகான பகுதியாக எது இருக்க முடியுமென்றால், அவள் துணைவன் தனக்கு உறுதுணையாக எந்தச் சூழ்நிலையிலும் இருப்பார் என்பதை அனுபவமாக உணரும்போதுதான். நான் வேலைக்குச் செல்லும்போது உதவியாக இருப்பதோடு, சில சமயங்களில் விடுப்பு எடுத்துக்கூட வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வதோடு, எங்கள் மகளையும் மகனையும் வளர்ப்பதில் பெரும் பங்கு எடுத்துக்கொண்டார். இந்தப் பரஸ்பர புரிதலே எனக்குப் பெரும் பலமாக இருந்தது" என்கிறார்.

இளம்பெண்களுக்கு தன் ஆலோசனையாக, "அன்புக்குரிய இளம்பெண்களே! உங்கள் கனவுகளையும் பேரார்வத்தையும் நோக்கிப் பயணியுங்கள். எத்தனை தடைகள் வந்தாலும் பிரச்னைகளை எதிர்கொண்டாலும் அவற்றைக் கண்டு கவலைகொள்ளாமல் தொடர்ந்து உங்கள் கனவுகளை நோக்கி நகருங்கள். எதன்பொருட்டும் உங்கள் கனவுகளைக் கைவிட்டுவிடாதீர்கள். பெற்றோர்களும் பெரிய இலக்கை அடைய விரும்பும் மகள்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். நிச்சயம் அவர்கள் உங்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள்' என்று நம்பிக்கை மொழிகளைக் கூறுகிறார்.

ரித்து கரிதால்
ரித்து கரிதால்
Facebook

எளிமையான பொருளாதாரம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்த ரித்து கரிதால், "நாம் செய்யும் செயலில் உள்ள நேர்மையையும் ஆர்வத்தையும் நம் அருகில் இருக்கும் மனிதர்கள் உணரும்போது நம்மிடம் மாறுபட்ட சிந்தனை கொண்டவர்களாக இருந்தாலுமே, அந்தச் சிந்தனையை மாற்றிக்கொண்டு நமக்கு உதவியாக இருப்பார்கள்" என்று மனிதர்களைப் பற்றிய பாசிட்டிவ் உணர்வுகளைத் தருகிறார் ரித்து.