Published:Updated:

``பெண் மனம் எதிர்பார்க்கும் சுதந்திரம் என்ன?!" - ஒரு பெண்ணின் கடிதம்

பாதுகாப்பு படையில் பெண்கள்
பாதுகாப்பு படையில் பெண்கள்

படிக்கும் படிப்பிலிருந்து திருமண வயதுவரை சமூக முடிவுகளுக்குட்பட்டு, தன் ஆசைகளைத் தீயிட்டு, ஒரு குடும்பத்தின் வெளிச்சமாய் மாறி நிற்கும் பெண்களின் மனது, எதிர்பார்க்கும் சுதந்திரம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சுதந்திரம்... வார்த்தையிலேயே மனசுக்குள் சிறகு பூட்டிவிடக்கூடிய உணர்வு.

சுதந்திரம், ஆழ்கடலில் தேங்கிப்போன உடலுக்குக் கிடைத்த ஒரு பிடி காற்று. சுதந்திரம், இறுகிப்போன கல்லறை மேல் விழுந்து நெகிழச் செய்யும் மெல்லிய ரோஜா இதழ். சுதந்திரம், அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளின் ஒட்டுமொத்த விடுதலை. சுதந்திரம், வரையறைக்குள் அடக்க முடியாத உணர்வு.

ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று மீண்டதை நெஞ்சு நிமிர்த்திக் கொண்டாடுகிறோம். குடும்ப வரையறை, சமூக வரையறை எனக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்கி, சுயத்தை, சுதந்திரத்தைத் தொலைத்த பெண்களின் உணர்வுகளைப் பற்றி யோசிக்கிறோமா?

படிக்கும் படிப்பிலிருந்து திருமணத் தேதிவரை, சமூக முடிவுகளுக்குட்பட்டு, தன் ஆசைகளைத் தீயிட்டு, ஒரு குடும்பத்தின் வெளிச்சமாய் மாறி நிற்கும் பெண்களின் மனது, எதிர்பார்க்கும் சுதந்திரம் என்ன, பெண்களைப் பொறுத்தவரை, தங்கள் சுதந்திரத்திற்கான வரையறை என்ன? விளக்கும் ஒரு பெண்ணின் கடிதம் இது.

பெண்
பெண்

காலம் மின்னல் வேகத்தில் யுகங்களாகச் சுழன்றாலும், அதைக் காட்டும் கடிகார முள்கள் தேங்கியிருப்பது ஒரு வட்டத்திற்குள்தான். மகள், மனைவி, அம்மா, பாட்டி என வெவ்வேறு பரிமாணங்களில் ஒரு பெண் தன் முக்கியத்துவத்தை உணர்த்தினாலும், அவள் முடங்கிக்கிடப்பது குடும்பப் பொறுப்பு, குடும்ப கௌரவம் என்ற பெயர்களில் ஆண்களின் அதிகாரங்களுக்குள்தான்.

ஒரு பெண்ணின் வெற்றிக்கு, ஆண் துணையாக நிற்கலாம். ஆனால், ஒரு பெண்ணின் வெற்றி எதைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதே, அவள் உலகின் ஏதோ ஓர் ஆணால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதுதான் பெண்ணினத்தின் சாபம். பெண் சுதந்திரம் என்பது விக்கிரமாதித்தன் கதைகளில் வருவதுபோன்று ஏழு கடலுக்கு அப்பால் உள்ள கிளியின் உயிரில் பூட்டிவைக்கப்படவில்லை. நண்பன், தந்தை, சகோதரன், கணவன், சக பணியாளர், மகன் எனப் பெண்கள் கூடவே பயணிக்கும் ஆண்கள் கையில் சிக்கிய பட்டாம்பூச்சியின் சிறகுகளாகத்தான் அது துடிதுடித்துக்கொண்டிருக்கிறது.

100 ஆண்கள் வெற்றியடைந்தால், ஒரு பெண் வெற்றியடைகிறாள். சில துறைகளில் இந்த சதவிகிதம் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கலாம். என்றாலும், மொத்தத்தில் பெண்களின் வெற்றி சதவிகிதம் இங்கு குறைவுதான். அதற்காக, ஆண்கள் அளவுக்கு பெண்களுக்குத் திறமை இல்லை என்றா நினைக்கிறீர்கள்? நூற்றில் ஒரு பெண்ணுக்குத்தான், விரும்பிய துறையை, வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கிடைக்கிறது என்பதுதான் உண்மையான காரணம், துயரமான நிதர்சனம்.

அடிமைத்தனம் (மாதிரி படம்)
அடிமைத்தனம் (மாதிரி படம்)

`என் மகளுக்கோ, மனைவிக்கோ என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியாதா?' என்பவர்கள் பலர். இப்படித்தான் ஆண்களின் அக்கறை என்ற பெயரில் பல பெண்களின் கனவுகள் சிதைக்கப்படுகின்றன. அவர்களில் சில பெண்கள், அக்கறை என்ற பெயரில் தங்கள் விருப்பங்கள் அழிக்கப்படுகின்றன என்பதைக்கூட உணராதவர்களாக இருப்பது பரிதாபம்.

சாதனையாளர்கள் பட்டியலில் இன்று இந்தச் சமுதாயம் கொண்டாடும் ஒவ்வொரு பெண்ணையும், முதலில் எதிர்த்தது, தடுத்தது பெரும்பாலும் அவளின் குடும்பமாகத்தான் இருக்கும். `பாதுகாப்பு' என்ற பெயரில் இந்தச் சமுதாயம் கொடுக்கும் ஒவ்வோர் அக்கறையும், ஒவ்வொரு விதமான தடை என்பதை உணர்வதுதான் பெண் சுதந்திரம் பெறுவதற்கான முதல் படி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெண் குழந்தை பிறந்தால், `பரவாயில்ல, அடுத்து ஆம்பளப்புள்ள பொறக்கும் கவலைப்படாம இருங்க' என்பதில் ஆரம்பிக்கிறது இந்தச் சமூகத்தில் பெண்கள் மீதான வன்முறை. எழுத்தில் இன்று சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் நானும் இதற்கு விதிவிலக்கல்ல.

சைக்கிள் ஓட்டுவதிலிருந்து ட்யூஷன் போவதுவரை, `பொம்பளப் புள்ளைக்கு இதெல்லாம் தேவையா?' என்ற கேள்வி என்னைத் துரத்திக்கொண்டே இருந்தது. சில நேரங்களில் என்னை பலவீனமாக்கவும் செய்தது.

`பொம்பளப் புள்ள வெளியூர்ல படிச்சு என்னத்த சாதிக்கப்போகுது?', `பெரிய மனுஷி ஆனதுக்கு அப்புறமும் கூடப்படிக்கிற பசங்ககூடயெல்லாம் பேச்சு தேவையா?', `பொம்பளப் புள்ளைன்னா பாவாடை சட்டை போட்டாதான் அழகு', `பொம்பளப் புள்ளய 23 வயசுக்கு அப்புறமும் கண்ணாலம் பண்ணாம வெச்சுருக்கீங்க?', `விளக்கு வெச்சதுக்கு அப்புறமும் பொம்பளப் புள்ள வீடுவந்து சேரலையா?', `கண்ணாலம் ஆகி 5 வருஷம் ஆகியும் இன்னும் வயித்துல புழுப் பூச்சி உண்டாகலையா..?' இப்படி எத்தனையோ கேள்விகளை அன்றாடம் எதிர்கொண்டிருக்கிறேன்.

நான் மட்டுமல்ல, உங்கள் வீட்டுச் சமையலறையில் நேரம் காலம் பார்க்காமல் உழைத்து வெந்துகொண்டிருக்கும் உங்களின் அம்மாவோ, மனைவியோ, மகளோ, அக்கா, தங்கைகளோ... யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தக் கேள்விகளால், பெண்கள் கனவுகளைத் தொலைத்து வீட்டில் முடங்கினார்கள் என்று சுருக்கமாகச் சொல்லி முடித்துவிடுவது நியாயமாக இருக்குமா? பணியிடம், தொழில், அரசியல், சமூகம் என எங்கெங்கோ பயணித்துப் போராடி சாதிக்க வேண்டிய பெண் சக்தியெல்லாம், இன்னும் வீட்டுக்குள்ளேயே வீணாகிக்கொண்டிருக்கிறது என்பது எத்துணை துயரம், அவலம்?

பெண்கள்
பெண்கள்

சதை, குருதி, எலும்பு எனப் பிறப்பில் ஆணும் பெண்ணும் ஒரே உயிரினம்தான். அவர்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், பெண்ணை `வீக்கர் செக்ஸ்' ஆக்கியது இந்தச் சமூகம்தான். யோசித்துப் பாருங்கள், நம் வீட்டில் இருக்கும் 30 வயதுப் பெண் `தனியே' பக்கத்துக் கடைக்குச் செல்கிறாள் என்றால், 8 வயதுச் சிறுவனை அவளுக்குத் துணைக்கு அனுப்பும் கலாசாரத்தில்தான் நாம் இன்னும் உழன்று கொண்டிருக்கிறோம். பெண் பலவீனமானவள், ஆண் வீரமானவன் என்ற மூடநம்பிக்கை கருவேலம் விதைகளாய் இந்தச் சமூகத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது.

பிரசவ அறையில், உயிருக்கே உத்தரவாதமில்லாத அளவுக்கு அச்சம்காட்டிய ஆயிரம் வலிகளைக் கடந்தும், குழந்தை முகத்தைப் பார்த்த நொடியில் புன்னகைக்கும் பெண்ணின் வலிமையைவிட ஒரு வலிமை இந்த உலகில் இருக்கிறதா? பெண்களின் கண்ணீர் பலவீனம் என்றும், ஆண்களின் கண்ணீர் பாசத்தின் வெளிப்பாடு என்றும் கட்டமைத்தது இந்தச் சமூகம்தானே?

``எதுலயெல்லாம் சுதந்திரம் வேணும்னு நினைக்கிறீங்க?'' - என் தோழிகள் சிலரிடம் கேட்டேன்.

``கிச்சன்லயிருந்து ஒருநாள் விடுமுறை கிடைச்சா போதும்! அது எவ்ளோ பெரிய விடுதலை தெரியுமா?!"

``ஒரு டாட்டூ போட்டுக்க, நாலு வருஷமா வீட்டுல கேட்டுக்கிட்டிருக்கேன்!"

``நான் ஆண் நண்பர்கள்கிட்ட பேசுறதை என் குடும்பம் இயல்பா எடுத்துக்கணும்!"

``என் திருமண வயசை நான்தான் தீர்மானிக்கணும்!''

``முடியை ஷார்ட்டா வெட்டணும்னு நினைச்சா, அட அதுக்குக்கூட அம்மா, கணவர்னு அனுமதி கேக்க வேண்டியிருக்கு!"

``குத்துப்பாட்டை சத்தமா வெச்சு டான்ஸ் ஆடணும்!"

``சமையல், வீட்டு வேலைனு எந்தத் தொல்லையும் இல்லாம, ஒரு நாள் முழுக்க கதை புத்தகம் படிக்கணும்!''

சின்னச் சின்ன ஆசைகளுக்குக்கூட தங்களின் சிறகுகள் சிறைபட்டிருப்பதைச் சொன்னவர்களிடம், இன்னும் ஆழமாக யோசித்துச் சொல்லும்படி கேட்டேன்.

ஐ. டி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் என் தோழி, ``நான் செய்யுற அதே வேலைகளைச் செய்யும் நண்பனுக்கு, என்னைவிட அதிக சம்பளம், அதிக ஊதிய உயர்வு. இது என் மனசுக்குள்ள ஆயிரம் கேள்விகளை எழுப்பிட்டே இருக்கு. சம்பள நிர்ணயத்துல ஏன் பெண்கள் எப்போதும் பாலின பேதத்துக்கு ஆளாகுறாங்க?

பெண்கள் உரிமை
பெண்கள் உரிமை

இன்னொரு பக்கம், ஆண்கள் 8 மணிநேரம் ஆபீஸ் வேலைபார்த்தா போதும். பெண்கள் அதுக்கு அப்புறமும் வீட்டு வேலைகள், குழந்தைகள் படிப்புனு 13 மணி நேரம் வேலைபார்க்குறோம். இந்த உழைப்புச் சுரண்டல்ல இருந்தெல்லாம் எப்போ நமக்கு விடுதலை?'' என்றாள்.

இன்னும், மாதவிடாய் விடுப்பு, சொத்தில் சம உரிமை, பெற்றவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் உரிமை, குழந்தை வேண்டும், வேண்டாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை, தனக்கு நடந்த பாலியல் வன்முறையை தன் குடும்பத்தில் வெளிப்படையாகப் பேசும் உரிமை, ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை, ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பு, குடும்பத்தில் சம உரிமை, மரியாதை, தன் கேரக்டர் மற்றவர்களால் மதிப்பீடு செய்யப்படுவதிலிருந்து விடுதலை எனப் பலவற்றையும் அடுக்கிய தோழிகள்... `இதெல்லாம் எப்போதான் கிடைக்கும்..?!' என்று பெருமூச்சு விட்டார்கள்.

அமெரிக்கா: `சர்வதேச கவனம்; பெண்கள், இளம் வாக்காளர்கள்!' - கமலா ஹாரிஸூக்கு குவியும் ஆதரவு

நம் நாடு 74-வது சுதந்திரதினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையிலும், பெண் சுதந்திரமும் பெண்ணின விடுதலையும் இன்னும் கோரப்படும் விஷயங்களாகவே இருப்பது வேதனை.

மேலே குறிப்பிட்ட கோபங்கள், ஏக்கங்கள், கேள்விகள், வருத்தங்கள் உங்கள் வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் உரியவைதான். அவர்களுக்கான சுதந்திரமும் விடுதலையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களிடம்தான் கட்டுண்டு கிடக்கின்றன. வீடு தன் கதவை முதலில் அவர்களுக்குத் திறந்துவிடட்டும். சமூகம் அவர்களை சம உரிமை கொடுத்து வாரிக்கொள்ளட்டும்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

இப்படிக்கு,

மாற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் உங்கள் வீட்டுப் பெண்களில் ஒருத்தி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு