Published:Updated:

`சினிமா மாறிருக்கு; இந்த சீனும் படத்தில் இருந்திருக்கணும்!' - மாஸ்டர் Deleted Scene குறித்து மாணவிகள்

ரத்தம் சிந்தப்படுவது, உடைமைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவது மட்டும் வன்முறை ஆகாது. மனித மதிப்பீடுகளின் கொலையும் மனித உரிமையை மீறும் கருத்துருவாக்கமும்கூட வன்முறைதான். தமிழ் சினிமாவில் இது அடிக்கடி பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிறது.

`வரலாறு' படத்தில் ஹீரோயினை பாலியல் அத்துமீறல் செய்து வசனம் பேசிய நடிகர் அஜித், அண்மையில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் `நோ மீன்ஸ் நோ' என்று பெண்களுக்கு பாதுகாப்பு வளையம் அமைத்திருப்பார்.

சிவகாசி திரைப்படத்தில் மாடர்ன் டிரெஸ்ஸில் வலம்வந்த நடிகை அசினிடம், `இதெல்லாம் ஒரு டிரெஸ்ஸா', பெண்களின் உடையில்தான் தவறு என்று வசனம் பேசிய நடிகர் விஜய், பிகில் திரைப்படத்தில், வர்ஷா பொல்லம்மாவை விளையாட அனுமதிக்க மறுக்கும் அவரின் கணவர், உடையைக் காரணம் காட்டும்போது, வசனத்தால் அவருக்குப் புரிய வைத்து `சிங்கப்பெண்ணே' என்றார். தற்போது, மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளிலும் பெண்கள் உடை குறித்து விஜய் பேசியுள்ள வசனங்கள் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

Master
Master
Screenshot from Amazon Prime Video India
விஜய்யின் `மாஸ்டர்'... தியேட்டரில் ரிலீஸான 16 நாள்களில் அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஏன்?!

தமிழர்களின் ரத்தத்தில் கலந்தது சினிமா. தமிழ் சினிமா பன்னெடுங்காலமாக சமூகத்தைப் பிரதிபலித்தும் வருகிறது. ரத்தம் சிந்தப்படுவது, உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது மட்டும் வன்முறை ஆகாது. மனித மதிப்பீடுகளின் கொலையும் மனித உரிமையை மீறும் கருத்துருவாக்கமும்கூட வன்முறைதான். தமிழ் சினிமாவில் இது அடிக்கடி பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிறது.

`பொம்பளையாச்சேன்னு பார்க்கிறேன்', `பொண்ணு சிரிச்சா போச்சு', `என்ன இருந்தாலும் ஒரு ஆம்பளய இப்படிப் பேசக் கூடாது, அதுவும் ஒரு பொம்பள பேசவே கூடாது' எனத் தமிழ் சினிமாவில் வசனங்கள், காட்சிகள், பாடல்கள், பாத்திரங்கள், கதைக் கரு, உத்திகள், நகைச்சுவை எனப் பல்வேறு தளங்களில் பெண்கள் மீது அவ்வப்போது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவது வழக்கம். மறுபுறம் பெண்களை 36 வயதினிலே, காற்றின் மொழி போன்ற திரைப்படங்கள் மூலம் தூக்கிப்பிடித்துக் கொண்டாடுவதும் தமிழ் சினிமாதான்.

இப்படி பெண்களுக்கு எதிராகக் கருத்து வன்முறைகளைத் தொடுத்து வந்த தமிழ் சினிமாவில், சில படைப்புகள் பெண்கள் மீதான பார்வையை மாற்றி அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டன. இந்தப் பட்டியலில் தற்போது விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் சேர்ந்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் கல்லூரிப் பேராசிரியராக விஜய் நடித்துள்ளார். திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் பின்னர் ஆன்லைன் தளமான அமேஸான் பிரைமிலும் வெளியிடப்பட்டது. தற்போது, மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Master
Master
Screenshot from Amazon Prime Video India
`சிங்கப்பெண்ணே' பாடிய வாய், இந்த வசனத்தை எப்படி உச்சரித்தது விஜய்?' -`மாஸ்டர்' கவனத்துக்கு!

மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்டு யூடியூபில் வெளியான அந்தக் காட்சியில், விஜய் வேலை பார்க்கும் கல்லூரியில் மாணவியிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்ட இரு மாணவர்களைக் கல்லூரி நிர்வாகம் மன்னித்துவிட முயலும். அந்த மாணவியும் பயத்திலும் அவமானத்திலும் இந்த விஷயத்தைப் பெரிதாக்க வேண்டாம் என்று விஜய்யிடம் கெஞ்சுவது போன்ற காட்சி. அப்போது இன்னும் சிலரும் மாணவியையே குறைசொல்ல, ``இன்னும் எத்தனை நாளைக்கு பொண்ணுங்க போடுற டிரெஸ்ஸையே குறை சொல்லுவீங்க. சமீபத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குழந்தை வெறும் பேம்பர்ஸ்தான் போட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொட்டுப் பேசுறது தப்பு, ஒட்டி உட்காருவது தப்புன்னு சொல்றதை விட்டுட்டு, எப்படித் தொடணும்னு சொல்லிக் கொடுங்க! மாத்த வேண்டியது பெண்களின் உடையை இல்ல. ஆண்களின் சிந்தனையை" என்று விஜய் உணர்ச்சி பொங்கப் பேசியிருப்பார். இந்தக் காட்சியை பலர் பகிர்ந்து, `இந்த சீனை ஏன் நீக்கினார்கள், இதைப் படத்தில் வைத்திருக்கலாமே' என்று பதிவிட்டு வருகின்றனர்.

மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து கல்லூரி மாணவிகள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள சில மாணவிகளிடம் பேசினோம்...

மைத்ரேயி
மைத்ரேயி

இது குறித்துப் பேசிய மாணவி மைத்ரேயி, ``சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல. அதன் மூலம் மக்களுக்கு சமூக கருத்துகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்று பல இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களும் நினைக்கத் தொடங்கிவிட்டனர். சினிமா மாறியிருக்கு.

அந்த வரிசையில் தன் படத்தின் வாயிலாக நல்ல கருத்தை மக்களிடம் சொல்லி வரும் விஜய், மாஸ்டர் திரைப்படத்தில் பெண்கள் தைரியமாக, யார் துணையும் இன்றி சமூகத்தை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல கருத்தை முன் வைத்திருப்பார். அப்படத்தின் நீக்கப்பட்ட காட்சியிலும் பெண்களின் உடையில் தவறு இல்லை, ஆணின் சிந்தனையில்தான் பிரச்னை உள்ளது என்ற விஷயத்தைப் பற்றிப் பேசியுள்ளார். இந்தக் காட்சி திரையிடப்பட்டிருந்தால், சமுதாயத்தில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

தற்போது இருக்கும் சமுதாயத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு ஏதாவது நேரிட்டால், அதனால் பாதிக்கப்படுவது அந்தப் பெண்ணும், அவளின் குடும்பத்தினரும்தான். பாதிப்பு ஏற்படுத்திய ஆணுக்கு இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை. பெண்கள் பல அவமானங்களைச் சந்தித்து வரும் இந்நேரத்தில் இந்தக் காட்சிகள் திரையில் வெளியாகியிருந்திருக்கலாம். திரைப்படத்தைப் பார்த்து நடிகர்களைப் பின்பற்றும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதுவும் படத்தின் இந்தக் காட்சி நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இனி வரும் காலத்திலும் இது போல் கருத்துகளை அனைத்து நடிகர்களும் தங்கள் படங்களில் வைக்க வேண்டும், சினிமா மிகப்பெரிய ஊடகம். அதன் மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும், ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

ல.வசுந்தரா
ல.வசுந்தரா

``பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் மீதான சமுதாயத்தின் பார்வை ஆகிய இரண்டு குறித்து நீக்கப்பட்ட காட்சிகள் தெளிவாக விவரித்திருக்கின்றன. இது நம் சமூகத்துக்குத் தேவைப்படும் ஒரு மெசேஜ். இந்தக் காட்சியை ஏன் நீக்கினார்கள் என்பது புரியவில்லை. இது போன்ற காட்சிகளை வரவேற்கிறோம்" என்றார் மாணவி ல.வசுந்தரா.

மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி

மாஸ்டர் படத்தின் காட்சிகள் குறித்துப் பேசிய மாணவி மஹாலக்ஷ்மி, ``அனைத்தும் வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. பெற்றோர்களைப் பார்த்துதான் குழந்தைகள் வளர்கிறார்கள். அதனால் பெற்றோர்கள் தவறு செய்யாமல், குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் வெளியிலும் ஒழுங்காக இருப்பார்கள். இதைப் பற்றி நீக்கப்பட்ட காட்சிகள் தெளிவாகப் பேசியுள்ளன" என்றார்.

மாணவி சாய் சஹானா, ``பெண் என்றாலே அவளுக்குக் கட்டுப்பாடுகள் அதிகம். ஆணுக்கு முழு சுதந்திரம் அளித்து வளர்க்கும் இந்தச் சமுதாயம் பெண் பிள்ளைகளை அப்படி வளர்ப்பதில்லை. பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும், அவள் எப்படிப் பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இது நியாயமல்ல. பாலியல் வன்முறை சம்பவம் நடந்தால் சமுதாயம் உடனே பெண் என்ன உடை அணிந்திருந்தாள் என்று கேட்பது சரியானதல்ல, உடையை எப்படித் தொடர்பு படுத்த முடியும்?

சாய் சஹானா அ.மு.
சாய் சஹானா அ.மு.

சமூகம் மாற வேண்டும், பெற்றோர்கள் ஆண்களைச் சரியாக வளர்க்க வேண்டும். அந்த விஷயத்தைச் சொல்லும் இந்தக் காட்சி படத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். விஜய் மாஸ் ஹீரோ, பெண்களைப் பற்றி அவரின் ரசிகர்கள் சிலரின் எண்ணங்களும் தவறாக இருக்கலாம். இந்தக் காட்சி இடம் பெற்றிருந்தால் அது மாறியிருக்கும்" என்றார்.

`தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா? தெருவினிலே விழுந்தாலும் வேறொரு கை படலாமா?' என்று ஒரு பெண்ணின் மறுமணம் பற்றிய பெண்ணின் சிந்தனை மறுப்பு, பெண் மீதான கருத்து வன்முறைதான். இதுவே ஆணுக்கெனும்போது, `இன்னொருத்தி வடிவினில் இருப்பவளும் நானல்லவா?' என்று ஆவியாக வந்தாவது ஆணுக்கான மறுமணத்தை பெண்ணே செய்து வைப்பாள். இதற்கு ஆண் எப்போதும் மறுப்பு சொல்வதில்லை. இது போன்ற பாரபட்ச சிந்தனைகள் தமிழ் சினிமாவில் அதிகம் உண்டு. இனி வரும் காலத்தில் ஆண், பெண் என பாகுபாடின்றி சமத்துவ கருத்துகள் சமூகத்தை மாற்ற வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு