தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவிகித சம பகிர்வுடன் போட்டியிட்டு அரசியல் அரங்குக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் பெண்கள். 2கே கிட்ஸ் முதல் 70+ சீனியர்கள் வரை நிறைந்திருக்கும் இந்த வெற்றியாளர்களுக்கான வாழ்த்து, கோரிக்கை, அறிவுரையை பகிர்ந்துகொள்ளச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந் தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் வாசகர்கள் பகிர்ந்த கமென்ட்டில் சிறந்தவை இங்கே...
Anbu Bala: அரசியல் அரங்கில் பெண்களின் பகிர்வு குறைவாக இருக்கும்போது, அங்கு அவர்கள் சிறு பான்மையினராக இருக்கும் சூழலில், அவர்கள் இயக்கமும் கட்டுப்படுத்தப்படும். இன்று சம பலத்துடன், 50% பகிர்வுடன் செல்லும் பெண்களுக்கு இந்த எண்ணிக்கையே அவர்களது பலம். ஒருவருக்கு ஒருவர் துணையாகக் கைகோத்து கலக்குங்கள்.
Nive Siva: வாழ்த்துகள் சகோதரிகளே... உறுதியுடன் உரிமைகளைப் கேட்டுப் பெறுங்கள். தனிநபராக உங்களையும், உங்கள் மக்கள் பணிகளையும் கவனிக்க வைக்குமளவுக்குத் திட்டடங்களுடன் இறங்குங்கள்.
Valli Subbiah: வீட்டைப் போலவே உங்கள் பகுதி யையும் பொறுப்புடன் முன்னேற்றவும், குறைகளைக் களையவும் செயல்படுங்கள் தோழிகளே. முக்கியமாக, பெண் கவுன்சிலர்கள் வீட்டு ஆண்களின் கைப்பாவை என்ற அவப்பெயரை உதறிட சுயமாக, தைரியமாக செயல்படுங்கள்.

Fathima Rinosa Fathima: பதவி என்பது பெரும் பொறுப்பு. வீட்டு ஆண்களின் தலையீடு இல்லாமல் அதைக் கையாளுங்கள். நலத்திட்டங்களை முறையாக நிறைவேற்றுங்கள்
Sobana Balamurugan: நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். உங்கள் திட்டங்கள், செயல்கள், நம்பகத்தன்மை எல்லாம் மறுமுறையும் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு சிறப்பாக இருக்கட்டும்.
BanuMiss Svm: கல்லூரி மாணவிகள் முதல் சீனியர்கள் வரை அரசியல் அரங்குக்குள் நுழையும் பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அரசியல் பகிர்வு என்பது, நூற்றாண்டுகளாகப் பெண்கள் கேட்டுப் போராடிக்கொண்டிருப்பது. 50% பெண்கள் அரசியல் அதிகாரத்துக்கு வரும்போது, அங்கு என்னவெல்லாம் மாற்றங்கள் நடக்கும் என்பதை, பெண்களால் என்ன வெல்லாம் சாதிக்க முடியும் என்பதை செய்து காட்டுங்கள்.
Kavin Sarvesh: பெண்களுக்கு வாக்களித்ததற்குப் பெருமைப்படுமளவிற்கு உங்கள் சேவை இருக்கட்டும். குறிப்பாக, கல்லூரி மாணவிகளும், இளம் பெண்களும், பட்டதாரிப் பெண்களும், மக்கள் பணிகளை கல்வியறிவு, தொழில்நுட்ப உதவியோடு முன்னெடுத்துச் செல்லுங்கள்.