Published:Updated:

`பெண் குழந்தையைப் பெற்றது குற்றமா?'-வரதட்சணைக் கொடுமையால் இளம்தாய் தற்கொலை; உருக்கும் கடிதம், வீடியோ

தற்கொலை

``இனி இந்த உலகத்தில் மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை இருக்கவே கூடாது. எதற்கு இவர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள்? காசு, பணம் இதுதான் வாழ்க்கையா? அன்பு, அரவணைப்பு எதுவுமே இல்லையா?” - இளம்தாயின் தற்கொலைக் கடிதம்.

`பெண் குழந்தையைப் பெற்றது குற்றமா?'-வரதட்சணைக் கொடுமையால் இளம்தாய் தற்கொலை; உருக்கும் கடிதம், வீடியோ

``இனி இந்த உலகத்தில் மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை இருக்கவே கூடாது. எதற்கு இவர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள்? காசு, பணம் இதுதான் வாழ்க்கையா? அன்பு, அரவணைப்பு எதுவுமே இல்லையா?” - இளம்தாயின் தற்கொலைக் கடிதம்.

Published:Updated:
தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சந்தைப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஹஃப்சா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தஸ்தகீர் என்கின்ற இளைஞரை காதலித்து, தன் பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன சில மாதங்களிலேயே வரதட்சணை விவகாரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.

அதையடுத்து, கர்ப்பமாக இருந்த ஹஃப்சா, தன் கணவரும், அவரின் குடும்பத்தினரும் வரதட்சணைக் கொடுமை செய்வதாகக் கூறி தன் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஹஃப்சாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில்தான், நேற்று காலை தனக்கு தூக்கம் வருவதாகவும், வீட்டின் மேல் அறையில் ஓய்வெடுக்கச் செல்வதாகவும் தாயிடம் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். மாலை அறையைவிட்டு கீழே வந்த ஹஃப்சா, தன் தாயிடம் தனக்கு தூக்கம் வரவில்லை என்றும், எலி பேஸ்ட் சாப்பிட்டுவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட ஹஃப்சா கணவருடன்
தற்கொலை செய்துகொண்ட ஹஃப்சா கணவருடன்

பதறிப்போன அவரின் தாய், அக்கம் பக்கத்தினர் உதவியோடு அவரை திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே ஹஃப்சா பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீஸார், ஹஃப்சாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதையடுத்து ஹஃப்சா வீட்டில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார், அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தையும், தற்கொலைக்கு முன்பு அவர் பேசிய வீடியோவையும் கைப்பற்றினர். ஹஃப்சா எழுதிய அந்தக் கடிதத்தில்...

``என் தற்கொலைக்கு காரணம் மாமியார், மாமனார், நாத்தனார் கவுஸீன், பெரிய நாத்தனார் ஷாகிதா மற்றும் அவர் கணவர், என் கொழுந்தனார்தான். அவர்களின் கொடுமையால்தான் நான் தற்கொலை செய்துகொண்டேன். என் நாத்தனார் கவுஸீன் என்னை வாழவிடாமல் வரதட்சணை கொடுமை செய்கிறார். எனக்கு குழந்தை பிறந்த பிறகு, ஒரு லட்சம் வரதட்சணை கொண்டு வந்தால்தான் சேர்ப்பேன் என்கிறார். ஐந்து வருடமாக நான் தஸ்தகீரை காதலித்து வந்தேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கல்யாணத்துக்கு முன்பு ஐந்து முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். இப்பொழுது என் குழந்தை பிறந்த பிறகும் தற்கொலைக்கு முயற்சி செய்கிறேன். நான் என் வாழ்க்கையை வாழவில்லை. கல்யாணத்துக்குப் பிறகு, ஒரு வாரம்தான் என் கணவருடன் வாழ்ந்தேன். கர்ப்பமாக இருக்கும் பொழுதும் வளைகாப்பு சீர் செய்யவில்லை. எனது 5 பவுன் வளையல்களைத் திருடிக்கொண்டதால் ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டேன். எனக்கு சீதனமாகக் கொடுத்த 50 பவுன் நகை, ராயல் என்ஃபீல்டு வண்டி, அனைத்து சீர் பொருள்களையும் என் கணவர் வீட்டாரிடம் ஒப்படைத்துவிட்டேன். கல்யாணமான முதல் இரவில் அனைத்தையும் வாங்கிக்கொண்டார்கள். இருப்பினும் அதைத் தாங்கிக்கொண்டேன். என் நாத்தனார் கௌஸீன் என்னுடைய 5 பவுன் வளையல்களைத் திருடியதை என் கண்களால் பார்த்தேன். அதை நான் கேட்ட காரணத்தால் என் கணவர் வீட்டார் என் தலையில் ரத்தம் வரும் வரை அடித்தனர். கல்யாணத்துக்கு முன்பே 5 லட்சம் வரை செலவு செய்திருக்கிறேன்.

விஷம்
விஷம்

அவை அனைத்தும், நான் பெற்ற குழந்தைக்குச் சேர வேண்டும். அதை நஷ்ட ஈடாகப் பெற்று என் பெண் குழந்தையின் எதிர்காலத்துக்கு உதவ வேண்டும். எனக்கு பெண் குழந்தை பிறந்த காரணத்தால், பச்சிளம் குழந்தை என்றுகூட பாராமல் அதைக் கொன்றுவிடும்படி என் மாமியார் என் கணவரிடம் சொன்னார். அதற்கான மறுப்பு தெரிவித்ததால் என்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள். பெண் பிள்ளையைப் பெற்றது என் குற்றமா?

நான் என் தாத்தாவிடம் செல்கிறேன். அவருக்கு பக்கத்தில் என்னை அடக்கம் செய்யுங்கள். எனது போன் மற்றும் நான் படித்து முடித்த காலேஜ் டிகிரி சர்டிஃபிகேட் வரை அனைத்துமே வாங்கிக் கொடுங்கள். இது ஒரு பெண் பிள்ளை பெற்ற தாயின் போராட்டம். அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்த பிறகு, என்னை அடக்கம் செய்ய வேண்டும். நான் காதலித்து பாவத்துக்கு நானே எனக்கு தண்டனை கொடுத்துக்கொண்டு தற்கொலை செய்யப் போகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் உள்ளதைக் கண்ணீருடன் வீடியோவில் பதிவு செய்திருக்கும் ஹஃப்சா, ``என் கணவர் வீட்டில் என்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார்கள். என் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். என்னைப் போல் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். இனி இந்த உலகத்தில் மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை இருக்கவே கூடாது. எதற்கு இவர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள்? காசு, பணம் இதுதான் வாழ்க்கையா? அன்பு, அரவணைப்பு எதுவுமே இல்லையா? என் குழந்தையை விட்டு நான் எப்படி போவது? என் குழந்தையுடன் இருக்க வேண்டும் என்று நிறைய ஆசைப்பட்டேன். அவளை எவ்வளவு கஷ்டப்பட்டு பெற்றேன் தெரியுமா ?

தற்கொலை - சித்திரிப்பு படம்
தற்கொலை - சித்திரிப்பு படம்

இப்போது அவளையும் நான் விட்டுட்டுப் போறேன். அவரை நான் மிகவும் காதலித்தேன். என் பிள்ளையை என் புருஷன்கிட்ட கொடுக்காதீங்க. என் அப்பா, அம்மாவே வளர்த்துக்குவாங்க. முடிந்த அளவு போராடிவிட்டேன். என்னால் முடியவில்லை” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

ஹஃப்சாவின் தந்தை தௌலத் கொடுத்த புகாரின் அடிப்படையில், கணவர் தஸ்தகீர், சையத் ஜிலானி, ஷிரின், ரப்பானி, கௌஸீன், ஷாகிதா, முஸ்தாக் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது போலீஸ்.

வரதட்சணை, பெண் குழந்தை வெறுப்பு, குடும்ப வன்முறை எல்லாம் இன்று வரை தொடர்ந்துகொண்டிருப்பதும், நம் பெண் பிள்ளைகளின் உயிரை விலையாக விழுங்கிக்கொண்டிருப்பதும் நம் சமுதாயத்தின் சாபம், தோல்வி, கேடு.