சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

மனிதம் வளர்போம்! - லதானந்த்

துணிவு

மனிதம் வளர்போம்! - லதானந்த்

கலங்காத உள்ளம் படைத்தவர்களே
இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!

- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

மனிதம் வளர்போம்! - லதானந்த்

யம், வலி, மரணம், நிச்சயமற்ற நிலை, மிரட்டல் போன்றவற்றை எதிர்கொள்ளும் ஆற்றலின் பெயர்... துணிவு! 'தைரியம் புருஷ லட்சணம்’ என்று துணிச்சலை ஆணுக்கான விஷயமாகப் பார்த்த அந்தக் காலத்திலேயே, பாண்டிய சபையில் நீதி கேட்டு, துணிச்சல் மிக்கவளாகத் தன்னை நிரூபித்தவள் கண்ணகி.

துணிச்சலுடன் ராணுவத்தில் சேர்ந்து, உயிரைப் பணயம் வைத்து, வீர தீரச் செயல்கள் புரிந்தவர்கள் பலர். அவர்களுக்கு 'பரம்வீர் சக்ரா’ எனும் உயரிய விருது வழங்கப்படுகிறது.

நண்பர்கள், உறவினர்கள், மேலதிகாரிகள் ஆகியோரிடம் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டுவதற்கும் துணிவு அவசியம். 'நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!’ என முழங்கிய புலவர் நக்கீரனின் துணிவை மறக்கமுடியுமா என்ன?!

உடல் மற்றும் மனம் என இரண்டு வகைகளாக வலிமையைச் சொல்வார்கள். போர்க்களத்தில் துணிவுடன் சண்டையிடுவது, தேக வலிமை. ஆனால், மனோ வலிமை எனப்படுகிற துணிவு இல்லையெனில், தேகத்தின் வலிமை குன்றிவிடும். போர்க் களத்தில் வலிமை மிக்க எதிராளியை வீழ்த்த, அவனது மனோதைரியத்தை குன்றச் செய்வது ஒரு யுக்தி. மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் எனத் திரித்துச் சொன்னதும், துரோணரின் மனோதைரியம் குன்றிப்போனது; அதைக்கொண்டே எதிரிகள் வென்றனர் என்கிறது மகாபாரதம். சொத்து- சுகங்களையும், பதவி- படாடோபங்களையும் தூக்கி எறிவதற்கான துணிச்சல் இருந்ததால்தான், 'பரதன் நாடாளுவான்; நீ காட்டுக்குப் போ!’ என்று சொன்னதும், சிரித்த முகத்துடன் கிளம்பிச் சென்றார் ஸ்ரீராமபிரான்.

தந்தையின் ஆசைப்படி ஐ.சி.எஸ் தேர்வு எழுதியவர், இந்திய அளவில் நான்காம் இடத்தைப் பிடித்து வென்றார். பிறகு, அதைத் தூக்கியெறிந்துவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் துணிச்சலுடன் களமிறங்கினார். அவர்... நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!

நவகோபால மித்ரா என்பவரின் வீட்டுத் தோட்டத்தில், பூங்கா அமைக்கும் வேலை நடந்து கொண்டு இருந்தது. அதைச் சில சிறுவர்கள் ஆவலோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கே இருந்த ஒருவரின் தலையில் இரும்புச் சட்டம் விழுந்துவிட்டது. ரத்தம் பெருக்கெடுத்தது. அதைக் கண்டு பயந்து, அங்கே இருந்த சிறுவர்கள் பலரும் ஓடிவிட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுவன் மட்டும் ஓடாமல், துணிவோடு அருகில் சென்று, அடிபட்டவருக்கு வேண்டிய முதலுதவியைச் செய்தான். அந்தச் சிறுவனின் பெயர், நரேன்; அவர்தான் பின்னாளில், அனைவராலும் சுவாமி விவேகானந்தர் எனப் போற்றப்பட்டார்.

மனிதம் வளர்போம்! - லதானந்த்
##~##
போஜ மகாராஜா, தினமும் அஷ்ட லட்சுமியருக்குப் பூஜைகள் செய்து வந்தார். ஆனாலும், அவருக்கு ஏழரைச் சனி பிடிக்கும் காலம் நெருங்கியது. அவரது செல்வம், ஆரோக்கியம் போன்ற அனைத்தும் அவரை விட்டு விலகும் தருணம் வந்தது. அப்போது ஆதிலட்சுமி தோன்றி, 'உன்னை விட்டு நாங்கள் விலகும் காலம் வந்துவிட்டது. இத்தனை காலமாக எட்டு லட்சுமியரை யும் சிரத்தையுடன் வணங்கி வந்தாய். ஆகவே, உனக்கொரு வரம் தருகிறோம். எங்களில் ஒரேயரு லட்சுமி மட்டும் உன்னிடம் இருக்கச் சம்மதம் எங்களுக்கு! உனக்கு எந்த லட்சுமி வேண்டும்?'' என்று கேட்டாள். உடனே போஜராஜன், ''என்னுடன் தைரியலட்சுமி இருக்கவேண்டும்'' என்றார். ''அப்படியே ஆகட்டும்’ என்றாள் ஆதிலட்சுமி. மறுநாள்... விடிந்ததும் பூஜையறைக்குச் சென்றார். அங்கே, அஷ்டலட்சுமியரும் இருந்து ஆசீர்வதித்தனர். 'அட... இதென்ன! தைரியலட்சுமி இருந்தால் போதும் என்றேன். இங்கே அஷ்டலட்சுமிகளும் இருக்கிறார்களே!’ எனக் குழம்பினார். அவரது குழப்பத்தைப் புரிந்துகொண்ட ஆதிலட்சுமி ஒரு புன்னகையோடு, ''தைரியலட்சுமி எங்கு இருக்கிறாளோ, அங்கே மற்ற லட்சுமியரும் இருப்போம்'' என்றாள்.

உலக சுகங்களில் ஆசையற்றவர் களிடம், துணிச்சல் இயல்பாகவே இருக்கும். 'துறவிக்கு வேந்தனும் துரும்பு’ என்பார்கள். தைரியம், துணிச்சல் என்று சொல்லும்போது குருட்டுத் தைரியத்தையும், அசட்டுத் துணிச்சலையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. போதை வஸ்துக் களால் விளைகிற தைரியம், நிரந்தரம் இல்லை என்பதோடு தீமையைத் தரவல்லது. துணிச்சலைக் காட்டுவதாக நினைத்துக்கொண்டு இன்றைய இளைஞர்கள் மோட்டார் வாகனங்களில் தலைதெறிக்கும் வேகத்தில் பறப்பதும், ஓடுகிற பஸ்ஸில் தாவி ஏறுவதும், உள்ளே இடம் இருந்தும் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பதும் வீரத்தில் சேர்த்தியில்லை.

கோபத்தைக் கொட்டிவிடுவது மட்டும் தைரியம் இல்லை; அடக்கிக் கொள்வதும் தைரியம்தான். எதிராளி யின் கோபத்தை ஒரு புன்னகையோடு எதிர்கொள்வதற்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும். அந்நியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடும் காந்தியை லத்தியால் அடித்துக் கீழே தள்ளுவான் பிரிட்டிஷ் போலீஸ் ஒருவன். காந்தி அலட்டிக்கொள்ளாமல் எழுந்து போய், அந்நியத் துணி ஒன்றை எடுத்து, எரியும் நெருப்பில் மீண்டும் நிதானமாகப் போடுவார். 'காந்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற, காந்தியின் துணிச்சலையும், மனோதிடத்தையும் மிகச் சிறப்பாக விளக்கும் இந்தக் காட்சி ஏகோபித்த கைதட்டலைப் பெற்றது!

(தொடரும்)