சிறப்பு கட்டுரை
Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது! - 7

உத்தமர்தம் உறவு! சுவாமி ஓங்காராநந்தர்படங்கள் : அனந்த பத்மநாபன்

பாதை இனிது... பயணமும் இனிது! - 7

அவர் கண்மலர்வதற்காக, அவரது காலடியில் ஒருவரும், தலைப் பக்கம் மற்றொருவரும் காத்திருந்தனர். அவர் கண் விழித்ததும், முதலில் தனது காலடியில் அமர்ந்திருந்தவனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். 'வேண்டுவதைக் கேள்’ என்றார்.  

'உங்கள் அருள்துணை வேண்டும். நீங்கள் எங்களுக்குப் பக்கபலமாக நின்று உதவ வேண்டும்' என்று கேட்டுக்கொண்டான், காலடியில் காத்திருந்தவன். 'அப்படியே ஆகட்டும்' என்று அருளினார் அவர். பின்பு, தலைமாட்டில் காத்திருந்தவனைப் பார்த்தார். 'உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார். 'உங்கள் சேனை முழுவதையும் எனக்குத் தாருங்கள்' என்று வேண்டிப் பெற்று, வெற்றிக் களிப்போடு திரும்பினான் அவன்.

காலடியில் அடக்கத்துடனும் பவ்வியத்துடனும் அமர்ந்திருந்தவன், பகவான் கிருஷ்ணனின் அருட்துணையை மட்டும் பெற்று, நிறைவோடு திரும்பினான். போரிலும் பெருவெற்றி பெற்றான். அர்ஜுனன் என்று பெயர் பெற்ற அவனது வெற்றிக்குக் காரணம், கண்ணபிரானின் அருட்துணை, நல்லார் இணக்கம்.

கண்ணனின் தலைமாட்டில் அமர்ந்திருந்த துரியோதனனின் தோல்விக்குக் காரணம், தீயோர் நட்பு. துரியோதனன் அறிவில் சிறந்தவன்தான்; தர்மத்தின் நுணுக்கங்கள் அனைத்தும் அறிந்தவன்தான். ஆனால், அறிதல் வேறு; கடைப்பிடித்தல் வேறு.

உலகில் மூன்று விதமான சேர்க்கைகள் இருக்கின்றன. நீர்த்துளி ஒன்றை சூடான இரும்புக்கல்லின்மீது விட்டால், அது ஆவியாகிக் காணாமல் போய்விடும். அதுவே ஒரு தாமரை இலையின் மீது விழுந்தால், தற்காலிகப் பொலிவு பெறும். ஆனால், அதே நீர்த்துளியானது சுவாதி நட்சத்திரத்தன்று மழைத்துளியாக, கடலுக்குள் ஒரு சிப்பியில் விழுந்தால், முத்தாக உருப்பெறும்.

முதலாவது, தவறானவர்களுடன் நட்புறவாடுதல். இது மிக ஆபத்தானதும், தவிர்க்கப்பட வேண்டியதும் ஆகும். அத்தகையோரிடமிருந்து விலகுவது மிக முக்கியம். இல்லையென்றால், சூடான இரும்புக்கல்லின்மீது விழுந்த நீர்த்துளியைப்போல் அழிய நேரும்.

பாதை இனிது... பயணமும் இனிது! - 7

இரண்டாவது வகையினரோடு பழகும்போது, மகிழ்ச்சி கிடைப்பதுபோல் தோன்றும். மற்றபடி, உருப்படியாக ஒன்றும் இருக்காது. தாமரை இலையின் மீது விழுந்த நீர்த்துளியைப் போன்று தற்காலிகமான மகிழ்ச்சி அது. அத்தகைய நட்பில் ஒரு கட்டத்துக்கு மேல் வெறுமை சூழ்ந்துவிடும்.

மூன்றாவது, உயர்ந்தோருடனான நட்பு. நல்லார் இணக்கம். அறிவிலும் ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவர்களுடன் பழகினால் நம் அறிவு ஒளிரும்; உள்ளமும் மலரும். நல்லார் இணக்கம் என்றென்றும் நல்முத்தாக நம் வாழ்க்கையைப் பிரகாசிக்கச் செய்யும்.

வெற்றியோடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நல்ல தலைவருக்குப் பின்னால், நல்லோர் பலரின் ஆசிகளும் வழிகாட்டுதலும் மறைந்திருப்பது, எவரும் மறுக்கமுடியாத உண்மை. அறநெறியில் ஆழ்ந்த அறிவும், தொலைநோக்குப் பார்வையும், சீரிய வாழ்க்கை முறையும் கொண்ட நல்லோரின் தொடர்பு, ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியம்.

நல்லார் இணக்கம் என்பது மாபெரும் வரம். வாழ்க்கையில் என்னவெல்லாம் வேண்டும் என்று

பாதை இனிது... பயணமும் இனிது! - 7

இறைவனிடம் பிரார்த்தனை செய்யத் துவங்குகையில், ராமலிங்க அடிகளார் முதலில், 'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்’ என்றுதான் வேண்டுகிறார். நல்லாருடனான இணக்கம் நம் புத்தியில் உள்ள முட்டாள்தனத்தைப் போக்கும்; வாக்கில் சத்தியத்தைப் பொழியும்; நம் பெருமையை உயர்த்த வழிகாட்டும்; பாவங்களைப் போக்கும்; உள்ளத்தைத் தெளிவுபடுத்தும்; திசைதோறும் நம்முடைய புகழைப் பரப்பும். இப்படி அனைத்து நன்மைகளையும் தரவல்லது அது.

'கடும் வெயிலில் நாள்தோறும் நின்றாலும், பிறர் இளைப்பாறுவதற்கு இதமான நிழலையும், பசியாறுவதற்குப் பழங்களையும் தரும் மரங்கள், நல்மனிதர்களைப்போல!’ என்கிறது சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று.

'நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே  நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று’ என்கிறார் ஔவைப்பாட்டி, தனது 'மூதுரை’யில்.

எல்லா காலங்களிலும் தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் நல்ல மாந்தர்களின் கால்தடங்கள் நம் பூமியைப் புனிதப்படுத்தி வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள துன்பங்களைப் போக்கிக்கொள்ளவும், இனி துன்பம் வராமல் காத்துக் கொள்ளவும் நமக்கு வழிகாட்டக்கூடிய வல்லமை படைத்தவர்கள் அவர்கள்.

சேருமிடம் அறிந்து சேர வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கென்றே திருவள்ளுவர் 'பெரியாரைத் துணைக்கோடல்’, 'சிற்றினம் சேராமை’ என இரண்டு அதிகாரங்களை வகுத்துள்ளார். எவருடன் பழகுகிறோம் என்பதில் ஒரு தலைவன் மிகுந்த கவனம் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறான். தீயோருடன் சேர அஞ்சுவது பெரியோரின் இயல்பாகும். நமது எண்ணங்களின் தூய்மை, செயல்களின் தூய்மை இரண்டுமே நாம் பழகுபவர்களைச் சார்ந்தது என்பதை ஒரு தலைவன் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.

அறன் அறிந்து மூத்த றிவுடையோர் கேண்மை

திறன்அறிந்து தேர்ந்து கொளல். (திருக்குறள்: 441)

மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனம்தூய்மை தூவா வரும். (திருக்குறள்: 455)

பயணிப்போம்