பாதை இனிது... பயணமும் இனிது ..!சுவாமி ஓங்காராநந்தர்
பரப்பளவில் மிகச் சிறிய நாடு அது. ஆனால், மக்களின் வாழ்க்கைத் தரம், தொழில் முன்னேற்றம், சட்டம் ஒழுங்கு முதலியவற்றில் தலை சிறந்து விளங்கும் நாடு. சிங்கப்பூர் என்ற அந்த நாட்டைச் செதுக்கிய சிற்பி 'லீ குவான் யு’ சமீபத்தில் மறைந்தார். எப்பேர்ப்பட்ட மாமனிதர் அவர்!
சிங்கப்பூர் மட்டுமல்ல, ஆசியாவின் பொருளாதாரத்தையே மாற்றி அமைத்தவர் அவர். லஞ்சம் ஊழல் இன்றி, கடும் சட்டதிட்டங்களுடன் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும், கவலையின்றி உறங்குவதற்கும் தனது தூக்கத்தைத் தியாகம் செய்து உழைத்தவர். உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்த இந்த மனிதரின் சாதனையைக் கண்டு வியக்காதவர் இல்லை.
லீ குவான் யுவுக்கு மட்டும் எப்படி அது சாத்தியமாயிற்று? ஒரு தேசத்தை உருவாக்குவது என்பது அத்தனை எளிதா?
அவரை உந்தித் தள்ளியது, அவருக்கு இருந்த மன உறுதியே ஆகும்.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. (திருக்குறள் 661)
'ஒரு செயலின் திட்பம் என்று சொல்லப்படுவது, ஒருவனுடைய மனதின் உறுதியே ஆகும். மற்றவையெல்லாம் அதற்கடுத்தபடிதான்’ என்கிறார் திருவள்ளுவர்.
எல்லோரும் கனவு காண்கிறார்கள்; சிந்திக்கிறார்கள்; முயற்சி செய்கிறார்கள்... ஆனால், ஒரு சிலர் மட்டுமே வெற்றியாளர்களாக, சாதனையாளர்களாக உலகையே திரும்பிப் பார்க்கவைக்கிறார்கள். ஏன்? அதற்குக் காரணம் அவர்களின் மன உறுதி!

அதனால்தான் மகாகவி பாரதியார், 'மனதில் உறுதி வேண்டும்’ என்று பாடுகிறார். வெற்றிக்கான மந்திரச்சாவி மன உறுதியே ஆகும்.
வீரதீரத்துடன் செயலில் இறங்குவார்கள் சிலர். ஆனால், சின்னதாக வரும் தடைகளைக்கூட எதிர்கொள்ள பயந்து, பின்வாங்கி ஓடிவிடுவார்கள். வேறு சிலர் தடைகள் வந்த பிறகு செய்வதறியாது விழிபிதுங்கி நிற்பார்கள்.
மன உறுதி மிக்கவர்கள் எப்போதும் விழிப்பு உணர்வுடன் செயல்படுவார்கள். தான் இறங்கப்போகும் செயல்களில் எத்தகைய நெருக்கடிகள் வரும் என்பதை முன்கூட்டியே அறிவார்கள். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அவற்றையும் தாண்டி பிரச்னைகள் தோன்றினாலும், மனம் தளராமல் அவற்றைச் சமாளிப்பார்கள்.
செயலில் கவனத்தைச் செலுத்தாமல், அதனைப் பற்றிப் பேசிப் பேசியே காலத்தைக் கடத்துபவர்களைப் பார்த்திருக்கலாம். தன்னுடைய செயல்களைப் பற்றிப் பெரிதாக விளம்பரம் செய்து கொள்வதில்தான் அவர்கள் நாட்டம் கொள்வார்களே தவிர, செயலை வெற்றியாக்க என்ன வழி என்று யோசிக்க மாட்டார்கள். உண்மையான வெற்றியாளன் தனது கனவை பத்திரமாக வைத்திருப்பான். அவன் உலகின் அங்கீகாரத்துக்காக ஏங்க மாட்டான். செவ்வனே செயலாற்றிக் கொண்டிருப்பான். காலம் கனியும்போது, உலகம் அவனை அடையாளம் கண்டுகொள்ளும்.
தான் சாதிக்கப்போகும் விஷயத்தைப் பற்றிப் பெரிதாக வெளியில் அலட்டிக்
கொள்வதால், பல்வேறுவிதமான இடையூறுகள் தோன்றக்கூடும் என, திருவள்ளுவர் ஒரு தந்தையின் அக்கறையோடு எச்சரிக்கிறார்...
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும் (திருக்குறள்: 663)
செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாகச் செய்யும் தகுதியே ஆண்மையாகும்; இடையில் வெளிப்பட்டால், நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். வாயால் பேசுவது மிக எளிது. ஆகாயத்தில் கோட்டை கட்டி, கேட்பவர் வாய் பிளக்கும் வண்ணம் பலரும் பேசுவார்கள். ஆனால், செயல் என்று வரும்போது, பின்வாங்கிவிடுவார்கள். சொல்லுதல் யார்க்கும் எளிது; சொல்லிய வண்ணம் செய்தல் அரிது!
நினைத்ததெல்லாம் நடக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்பு கிறோம்; ஆனால், அவ்வாறு நடப்பதில்லையே?!
மனத்திட்பம் மட்டும் இருந்துவிட்டால், ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதி உள்ளத்தில் வேரூன்றிவிட்டால், ஒருவன் தான் நினைத்ததைச் சாதித்தே தீருவான் என்கிறார் திருவள்ளுவர்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (திருக்குறள்: 666)
இந்தத் திருக்குறளை பெரிய எழுத்துக்களில் எழுதி, வீட்டில் கண்ணில் படும் இடங்களில் எல்லாம் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள்; கூடவே, உங்கள் உள்ளத்திலும் பதிய வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் செயல்களில் ஒரு வேகம் பிறக்கும்; வெற்றி கிட்டும். அத்தகைய மந்திர ஆற்றல் பொருந்திய குறள் இது.
வினைத்திட்பம் மிகுந்தவனுக்குத் தோற்றம், வயது, கல்வித்தகுதி, பின் புலம் எதுவுமே தடையல்ல! வசதிமிக்க மாணவன் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருப்பதையும், அடிப்படை மின்சார வசதிகள்கூட இல்லாத வீட்டிலிருந்து படித்து, மாநிலத்தில் முதலிடம் பெறும் மாணவனையும் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். செயலே இன்பம்; செயலே ஆனந்தம்; செயலில் ஈடுபடுவதைப் போன்ற சுகம் வேறில்லை. இந்த மனநிலையோடு செயலாற்றுபவன், இடையில் ஏற்படும் துன்பங்களைக் கருத்தில் கொள்ள மாட்டான்.
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை (திருக்குறள்: 669)
'இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும்போது, துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு அதைச் செய்து முடிக்க வேண்டும்’ என்கிறார் வள்ளுவர்.
பயணிப்போம்