சிறப்பு கட்டுரை
Published:Updated:

பாலின் உள்ளே நெய் போலே..!

மனிதனும் தெய்வமாகலாம் - 16பி.என்.பரசுராமன், ஓவியம்: மு.ராஜ்குமார்

பாலின் உள்ளே நெய் போலே..!

சில(பல)வற்றை நாம் தெளிவாக ஒப்புக் கொள்ள வேண்டும். வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறோமோ இல்லையோ, நமக்குத் தெரியும்; நம் மனசாட்சிக்குத் தெரியும். அப்படி ஒப்புக்கொள்ளப்பட வேண்டியவற்றில் ஒன்றுதான்... 

'நமக்கு ஒன்றும் தெரியாது; அடுத்தவர் சொல் லிக் கொடுத்துதான், நாம் ஒவ்வொன்றையும் தெரிந்துகொண்டிருக்கிறோம்’ என்பது.

''அதெல்லாம் பொய். இதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. எனக்கே எல்லாம் தெரியும். நானேதான் கற்றுக்கொண்டேன். எனக்கு குரு என்று யாரும் இல்லை. நானேதான் படித்தேன்; நானேதான் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்' என்று வாதம் செய்தால், அது பிடிவாதம்!

சற்று யோசித்துப் பாருங்கள்... 'அஆ’ சொல்லிக்கொடுத்து எழுத்து அறிவித்த ஆசிரியர் ஒருவர்; பள்ளி, கல்லூரிகளில் பாடம் சொல்லிக் கொடுத்தவர் ஒருவர்; பணிபுரியச் சென்ற இடத்தில் நமக்கு வேலை கற்றுக் கொடுத்துப்

பயிற்சி தந்தவர் ஒருவர். இன்னும்... வெளியிடங் களில் நமக்குத் தெரியாத பல விஷயங்களை நமக்குச் சொல்லித் தந்தவர்களில் முகமறியாத நபர்களும் இருக்கலாம்.

ஆக, எந்த ஒன்றையும் அடுத்தவர் சொல்லிக் கொடுத்துதான் நாம் தெரிந்துகொள்கிறோம்.

சாதாரண விஷயங்களுக்கே இவ்வளவு குருமார்கள் நமக்குத் தேவையென்றால், ஆத்ம தத்துவத்தை பிரம்ம தத்துவத்தை நமக்குச் சொல்லிக் கொடுக்கத் தகுதியான ஒருவர் வேண்டாமா?

பாலின் உள்ளே நெய் போலே..!

ஆகவேதான், அவற்றை அறிய விரும்பிய சீடன் ஒருவனுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போன்ற பாவனையில் கைவல்லிய நவநீதம் அமைக்கப்பட்டுள்ளது (தகுந்த குருநாதரிடம் பலமுறை பாடம் கேட்க வேண்டிய நூல் இது).

அனுபவசாலியான குருநாதர் வேத வேதாந்தக் கருத்துக்களை விவரித்துவிட்டு...

'காய்ச்சிய பாலில் நெய் போல்

கலந்து ஒன்றாகக் கடைந்து எடுக்கும்

ஆச்சியம் என்ன உன்னை

அறிந்து நீ புரிந்துகொள்ளே’

          (கைவல்லிய நவநீதம்  59)

என்கிறார். காய்ச்சிய பாலில் கலந்திருக்கும் நெய்யைக் கடைந்து எடுக்கிறோம் அல்லவா? அதுபோல, உன் உள்ளே கலந்து (மறைந்து) இருக்கும் ஆன்மாவை அறிந்துகொள், புரிந்து கொள் என்கிறார் குருநாதர்.

அபூர்வமான, அதே நேரம் எளிமையாகத் தகவலைச் சொல்லும் பாடல் இது.

பாலில் நெய் மறைந்து இருப்பதைப் போல, நமக்குள் ஆத்மா மறைந்து இருக்கிறது. இந்த ஆத்மாவை எப்போது, எப்படி உணர்ந்து அறிவது? பாடலில், 'காய்ச்சிய பால்’ எனக் கூறியிருப்பதைக் கவனியுங்கள்.

பாலைக் காய்ச்சும்போது, அது கொதித்துப் பொங்கும். சிறிதளவு தண்ணீர் தெளித்தால், அப்படியே அடங்கிவிடும். அதுபோல, வேத வேதாந்த ஆராய்ச்சி செய்யும்போது, ஏராளமான சந்தேகங்களும், குழப்பங்களும் எழும்பி, மனமானது பொங்கத்தான் செய்யும். அதை, குரு உபதேசம் வழிகாட்டுதல் எனும் நீரால் அடக்க வேண்டும்.

'பிரிவது எப்படி என்றக்கால்

பாலின் உள்ளே நெய் போலே..!

பிணம் ஆகும் உடல் நாம் என்னும்

அறிவினைக் கொல்லல் வேண்டும்

ஐம்பூத விகாரம் அன்றோ

வெறியதோர் துருத்தி மூச்சு

விடுவது போல மூக்கால்

எறி பிராணனும் நீ அல்லை

இராசத குண விகாரம்’

(கைவல்லிய நவநீதம்  60)

நம் ஒவ்வொருவருக்கும் பலப்பல பெயர்கள் உண்டு. பதவியை முன்னிட்டு அழைக்கப்படும் பெயர்கள், பெற்றோர் வைத்த பெயர்கள், நண்பர்கள் செல்லமாகக் கூப்பிடும் பெயர்கள் எனும் அவையெல்லாம் போய்விடும். அதன்பின்... பொதுவாக, 'பிணம்’ என்று ஒரு பெயர் சூட்டப்படும். மூச்சு நின்றுவிட்டால், அவ்வளவுதான்!

இதைத்தான் 'பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு’ எனத் திருமூலர் விவரிக்கிறார். அப்படிப்பட்ட பிணமாகும் உடலையே 'ஆத்மா’வாகக் கருதும் எண்ணத்தை நீக்கவேண்டும்.

'உயிரோடு இருக்கும்போது நான் மூச்சு விடுகிறேனே’ என்றால்...

''கொல்லன் பட்டறையில் துருத்தி கூடத்தான் மூச்சு விடுகிறது. அது ஒரு பெருமையா? ஆகையால், அந்தப் பிராணனும் நீ இல்லை. அது ரஜோகுண காரியம்'' என்கிறார் குருநாதர்.

இவ்வாறு ஒவ்வொன்றாக விவரித்துக்கொண்டு வந்த குருநாதர், ''ஆகையால், உடம்பே நான் (ஆத்மா) என்ற எண்ணத்தை விட்டு வெளியில் வா!'' என்றார்.

குருநாதர் சொன்னபடியே, 'உடம்பு நானல்ல, பிராணவாயு (மூச்சுக் காற்று) நானல்ல’ என ஒவ்வொன்றாக, முறையாக விலக்கிக்கொண்டு வந்த சீடன், கலங்கினான்.

''குருநாதா! நீங்கள் சொன்னபடியே விலக்கிக்கொண்டு வந்தேன். முடிவில் சூனியம்தான் தெரிகிறது. கறுப்பாக அந்தகாரம் போல் இருக்கும் அந்த சூனியத்தையா நான் பிரம்மமாக உணர்வேன்? தூய்மையான குருவே, விளக்கிச் சொல்லுங்கள்!'' என வேண்டினான்.

பாலின் உள்ளே நெய் போலே..!

அவனை அமைதிப்படுத்தினார் குருநாதர். தான் ஏற்கெனவே சொன்ன பத்து முட்டாள்கள் கதையை நினைவுபடுத்தி, ''மகனே! முன்பு சொன்ன பத்து முட்டாள்கள் கதையில், ஒவ்வொருவனும் அறிவு மயக்கத்தால் ஒன்பது பேர்தான் உள்ளோம் என எண்ணிக் கலங்கினான். எண்ணிய எவனும் தன்னை அறியவில்லை. பின்னரே அனைவரும் உண்மையை உணர்ந்து தெளிந்தார்கள். அதாவது, ஒருவனைக் காணோம் எனக் கலங்கிய ஒவ்வொருவனும் இறுதியில், காணாமல் போனவன் தான்தான் என்று உணர்ந்தான் அல்லவா?

எனில், அவன் சூனியமா? ஆகையால், நீ பார்த்த சூனியம் நீயல்ல! அதை உணர்ந்து தெளிந்த நல்லறிவே நீ! சூனியம் முதலான அனைத்தையும் பார்ப்பவன் நீயே! ஞானமே நீ!'' என அறிவுறுத்தினார்.

''அன்புள்ள மகனே! காண்பது அடங்கலும் காண்பான் நீயே!' என்கிறார் குருநாதர். பெற்று வளர்த்து, ஆளாக்கி, அனைத்தையும் செய்த தந்தையிடம் அன்பாக இருப்பதுதானே முறை? அதுபோல, சீடன் இருக்கவேண்டும் என்பதற்காகவே அவனை 'அன்புள்ள மகனே’ என விளிக்கிறார் குருநாதர். எந்தவொரு தந்தையும் பிள்ளையை வஞ்சிக்க மாட்டார். அதுபோல, 'நான் சொல்வதெல்லாம் உன் நன்மைக்கே தவிர, உன்னை ஏமாற்றுவதற்காக அல்ல’ என்றும் உணர்த்துகிறார். இந்த அளவுக்குப் பொறுப்போடு உபதேசித்து வந்த குருநாதர், ''ஆகையால், உன் ஆத்ம ஸ்வரூபத்தை நீயே அனுபவித்து உணர்ந்துகொள்!' என்கிறார்.

''என்னங்க இது..? கொஞ்ச நேரத்துக்கு முந்திதான் 'எல்லாமே அடுத்தவங்க சொல்லிக் கொடுத்துதான் தெரிஞ்சுக் கிட்டோம்’னு சொன்னீங்க. அப்ப, இந்த ஆத்ம ஸ்வரூபத்தையும் குருநாதரே சொல்லிக் கொடுக்க வேண்டியதுதானே?'' என்கிறீர்களா?

சொல்லிக் கொடுக்கலாம்தான். 'சர்க்கரை இனிக்கும்’ என்று சொல்லித் தரலாம். ஆனால், நாமே சுவைத்துப் பார்த்தால் தானே இனிப்பு என்பது எப்படிப்பட்டது என்பதை உணர முடியும். அப்படி, என்னதான் அடுத்தவர்கள் சொல்லிக் கொடுத்தாலும், நம் முயற்சி இல்லாமல் முன்னேற முடியாதல்லவா?

குருநாதர் சொல்லிக் கொடுக்கிறார். ஆனால், நாம்தான் அதை அனுபவத்தில் கொண்டு வர வேண்டும். அனுபவத்தில் வராதவரை, எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அது வீண்தான்!

தொடரும்