தொடர்கள்
Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 8

எங்கே போச்சு 3-ம் நம்பர் ஆடு?யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 8

ரீயாக்ட், ரெஸ்பாண்ட் பத்திப் பேசிட்டிருந்தோம். சட்டுனு கோபப் படுறது, எதிராளி ஏதாவது சொன்னா, அவனை மடக்கணும்னே பதிலுக்கு நாமளும் ஏதாவது குதர்க்கமா சொல்றதெல்லாம் ரீயாக்ட் பண்ற தாகும். நாம யோசிக்காம உடனுக்குடன் செய்யுற இந்த எதிர்வினை பல நேரங்கள்ல நமக்குக் கெடுதலாவே முடியும். அதனால, எந்த ஒரு சூழல்லயும் பதறாம ஒரு விநாடி யோசிச்சு, முறையா ரெஸ்பாண்ட் பண்றதே சரி!

தினமும் அதிகாலை சைக்கிளிங் போறது என்னோட வழக்கம். அப்படி சில மாதங்களுக்கு முன்னால ஒரு முக்கிய வேலையா, நான் பாண்டிச்சேரியிலிருந்து அரியாங்குப்பம் வரைக்கும் சைக்கிள்ல போயிட்டிருந்தேன். அது ஞாயிற்றுக்கிழமைங்கிறதால ரொம்ப டிராஃபிக்கும் இல்லை. அதனால சரசரன்னு வேகமா போயிட்டிருந்தேன். கொஞ்சம் தூரம் போனதும்தான் கவனிச்சேன், எனக்கு முன்னால கண்ணுக்கெட்டின தூரத்துல ஒரு பையன் சைக்கிள்ல சிட்டா பறந்துட்டிருந்தான். சர்… புர்ருனு வாகனங்களை அநாயாசமா ஓவர்டேக் பண்ணி, அவன் போயிட்டிருந்த லாகவத்தைப் பார்த்து அசந்தே போனேன்.

என்னைவிட வயசுல ரொம்பச் சின்ன பையன் என்னமா ஓட்டறான்னு எனக்குள்ளேயே ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன். அவனை ஓவர்டேக் பண்ணணும்னு தோணிடுச்சு. அவனோடதும் ஸ்போர்ட்ஸ் சைக்கிள் போலத் தெரிஞ்சுது. நல்ல விஷயம்தானே! நமக்கு சமமான தகுதியோடு இருந்தால்தானே அவர் நமக்கு போட்டியாளர்!

வேகமாக சைக்கிளை மிதிச்சேன். அந்தப் பையன் படு ஸ்பீடா போயிட்டிருந்தான். நானும் விடறதாயில்லை. விறுவிறுன்னு அவனை ஃபாலோ பண்ணினேன். ஒரு கட்டத்துல கிட்ட நெருங்கிட்ட மாதிரி இருக்கும்; ஆனா, குறுக்கே ஏதாவது வண்டி, வாகனம் வந்து நான் சைக்கிளை ஸ்லோ பண்ணதும், அவன் எங்கேயோ போயிருப்பான். மாரீச மான், ராமனை ஆட்டங்காட்டி ஆட்டங்காட்டி தொலைதூரம் இழுத்துட்டுப் போனது மாதிரி, அந்தப் பையன் அவனை அறியாமலே என்னை இழுத்துட்டுப் போனான்னுதான் சொல்லணும்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 8

ஒரு கட்டத்துல அவனை நான் ஓவர்டேக் பண்ணிட்டேன். வேகமா அவனை கிராஸ் பண்ணி, கொஞ்ச தூரம் முன்னால போய் ஓரங்கட்டி நின்னேன். எதையோ சாதிச்ச மாதிரி ஒரு ஃபீலிங்! அடுத்த சில விநாடிகள்ல அந்தப் பையன் என்னைக் கடந்து போனான். ‘போடா, போ! நான் உன்னை பீட் பண்ணிட்டேன். யாருகிட்ட…?’னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே அவனை ஏளனமா ஒரு லுக் விட்டேன். எனக்குத்தான் அந்தப் பொடி யனை ஜெயிச்ச சந்தோஷம் இருந்ததே தவிர, தான் ஒரு பந்தயத்துல கலந்துக்கிட்டுத் தோத்துட்டோம்கிற விஷயம் அந்தப் பையனுக்குத் தெரியவே இல்லைங்கிறதுதான் நிஜம்.

அப்புறம் நிதானமா, நான் போகவேண்டிய இடத்தைப் பத்தின யோசனை வந்தது. அவ்வளவுதான்… தூக்கிவாரிப் போட்டுது எனக்கு. அரியாங்குப்பத்துக்குத் திரும்புற ரோட்டைத் தாண்டி ரொம்பத் தூரம் வந்திருந்தேன். அந்தப் பையனை முந்தணும்கிற, தேவையே இல்லாத இந்தப் போட்டியினால எனக்கான திருப்பம் வந்ததை நான் கவனிக்கவே இல்லை.

இப்படித்தான் பாஸ், தேவையே இல்லாம பல விஷயங்கள்ல நாம நம்மகூட வேலை செய்யற வங்களை, பக்கத்து வீட்டு எதிர்வீட்டுக்காரங்களை, நண்பர்களை, உறவினர்களையெல்லாம் நம்ம போட்டியாளரா நினைச்சுக்கிட்டு, அவங்களுக்கு நம்மை நிரூபிச்சுக் காட்டணும்கிறதுக்காக நம்ம திறமை, உழைப்பையெல்லாம் செலவழிச்சு, கடைசியில நமக்கான இலக்கைக் கோட்டை விட்டுக்கிட்டிருக்கோம்.

நம்மைவிட நல்ல வேலையில் இருக்கிறவங்க, பணம் காசு உள்ளவங்க, பெரிய படிப்பு படிச்ச வங்க, அழகானவங்க, வலுவானவங்க, அழகான பெண்டாட்டி, பிள்ளைன்னு அருமையான குடும்பம் கொண்டவங்கன்னு எங்கேயுமே, எப்போதுமே, யாராவது சிலர் இருக்கத்தான் செய்வாங்க. அவங்களையெல்லாம் போட்டியா நினைச்சு செயல்பட்டா, நம்ம லைஃப்தான் போராட்டமா ஆயிடும், இல்லையா பிரதர்?

எனவே, நமக்கான பாதையில் ஓடுவோம்; நமக்கான வாழ்க்கையை வாழ்வோம்! மத்தபடி, தேவையில்லாத விஷயங்கள்ல மூக்கை நுழைச்சு, நம்ம எனர்ஜியை வேஸ்ட் பண்ண வேண்டாமே!

கனடாவின் டொரொன்டோ நகருக்குப் பக்கத் துல, ஒரு சின்ன டவுன்ல, ஒரு பள்ளிக்கூடத்தில் படிச்ச குறும்புக்கார மாணவிகள் ரெண்டு பேர் பண்ணின ஒரு தமாஷ் பத்தி இங்கே சொல்லியே ஆகணும்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம், அந்த ரெண்டு பொண்ணுங்களும் மூணு ஆடுங்களைப் பிடிச்சுட்டு வந்தாங்க. ஒவ்வொரு ஆட்டின் உடம்புலயும் 1, 2, 4-ன்னு நம்பர்களை பெயின்ட் பண்ணி,
ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ள விட்டுட்டாங்க. வேணும்னே 3-ம் நம்பரை அவங்க எழுதலை.

மறுநாள் காலையில, ஸ்கூல் பிரின்சிபாலும், ஹெட் மாஸ்டரும், மத்த டீச்சர்ஸும் வந்து பார்த்தப்போ, வாசல்ல, நடைபாதைகள்ல, வெராண்டாக்கள்ல ஆட்டுப் புழுக்கைகள் கிடந்திருக்கு. ஏதோ வெளி ஆடுகள் தவறுதலா உள்ளே நுழைஞ்சிருக்குன்னு தெரிஞ்சுது. உடனே ஆளுக்கொரு பக்கமா தேடி, அந்த மூணு ஆடுகளையும் கண்டுபிடிச்சுட்டாங்க. ஆனா, ‘3-ம் நம்பர் ஆட்டை மட்டும் காணோமே, எங்கே போச்சு’ன்னு ஆளாளுக்கு மண்டையைப் பிச்சுக்கிட்டாங்க. எவ்வளவு தேடியும் அது கிடைக்கவே இல்லே!

அந்த ஸ்கூல் வளாகம் ரொம்பப் பெரிசுங்கிறதால, காணாமப்போன அந்த 3-ம் நம்பர் ஆட்டைத் தேடுறதுலேயே அவங்களுக்கு அன்றைய பொழுது போயிடுச்சு. ஸ்கூலுக்கே லீவு விட்டுட்டாங்கன்னா பார்த்துக்குங்களேன்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 8

எப்படிக் கிடைக்கும் அந்த 3-ம் நம்பர் ஆடு, அப்படி ஒண்ணு இல்லவே இல்லைங்கிறப்போ?

இப்படித்தான் பாஸ், நாமளும் நம்மகிட்ட இருக்கிறதை விட்டுட்டு இல்லாததைத் தேடி அலைஞ்சுக்கிட்டு இருக்கோம். கிடைக்கலேன்னவுடனே எரிச்சல், கோபம்னு எல்லாத்துக்கும் ஆளாயிடறோம். நம்மகிட்ட எது இருக்கோ அதைக் கொண்டு திருப்திப்படுவோம். அதை இன்னும் எப்படிச் சிறப்பா செய்யறதுன்னு யோசிப்போம். வெற்றியும் சந்தோஷமும் தன்னால வரும்.

ஸோ, 3-ம் நம்பர் ஆட்டைப் பத்திக் கவலைப்படுறதை நிப்பாட்டுவோம்; அதைத் தேடுற வெட்டி வேலையை விடுவோம். என்ன சொல்றீங்க?

- இன்னும் பேசலாம்

பரிசு யாருக்கு?

‘நான்கு இலக்க எண்களிலேயே 1089 என்ற எண்ணுக்கு முக்கியமான சிறப்பு உண்டு. அந்தச் சிறப்புத் தன்மை இன்னொரு நான்கு இலக்க எண்ணுக்கும் உண்டு. அந்த எண் என்ன? அது என்ன சிறப்புத் தன்மை?’ என்று சென்ற இதழில் கேட்டிருந்தேன்.

இந்த நான்கு இலக்க எண் தனது ரிவர்ஸ் எண்ணை மிச்சமின்றி வகுக்கும் என்பதுதான் அந்த எண்ணின் சிறப்புத் தன்மை. 9801/1089=9. இதே சிறப்புத் தன்மை கொண்ட மற்றொரு நான்கு இலக்க எண் 2178. இந்த இரண்டு எண்கள் தவிர, வேறு எந்த நான்கு இலக்க எண்ணுக்கும் இந்தச் சிறப்பு இல்லை.

இந்தச் சரியான விடையை குரல் பதிவாகவும் எஸ்.எம்.எஸ். வழியாகவும் அனுப்பி இருந்தவர்களில் சென்னை, மணப்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தி தியாகராஜன் என்ற வாசகிக்கு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய ‘மேலே, உயரே, உச்சியிலே’ புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

இளைஞர்களுக்கு உலகின் நம்பர் ஒன் பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே…

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 8

 1. வெறுப்பு நிறைந்திருக்கும் உலகில் நாம் ஒருபோதும் நல்லெண்ணத்தைக் கைவிடக்கூடாது; கோபம் நிறைந்திருக்கும் உலகில் நாம் அமைதியைக் கைவிடக்கூடாது; விரக்தி நிறைந்திருக்கும் உலகில் நாம் நம் கனவுகளைக் கைவிடக்கூடாது; ஏமாற்றங்களே நிறைந்திருக்கும் உலகில் நாம் நம்பிக்கையைக் கைவிடக்கூடாது!

 2. பொய் வேகமாக ஓடலாம்; ஆனால், உண்மைதான் நீண்ட நேரம் களைப்படையாமல் ஓடும்!

 3. உங்கள் வாழ்க்கை இனிய இசையாக அமைய வேண்டுமானால், உங்கள் நரம்புகளுக்குள் ரத்தம் உற்சாகமாக நடனமாட வேண்டும். ஒவ்வொரு ஜீவராசிக்கும், ஒவ்வொரு பொருளுக்கும்கூட ஒரு ரிதம் இருக்கிறது. உங்களுக்கான இசையை நீங்கள் அனுபவிக்கிறீர்களா?

 4. தங்களின் அப்பாவித்தனத்தாலும், குற்றமற்ற தன்மையாலும் குழந்தைகள் தங்களை மிக லேசானவர்களாகவும், அன்பானவர்களாகவும் வைத்திருக்கிறார்கள். அவர்களை நாம் அனுமதித்தால், நம்மையும் அதுபோல் வைத்திருக்க நமக்குக் கற்றுக் கொடுப்பார்கள்.

 5. ஒருவரை எடை போடுவதற்கு முன், அவரை நேசியுங்கள்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 8

சவால்!

பத்து இலக்கங்கள் கொண்ட எண் ஒன்றை நான் குறித்து வைத்துள்ளேன். அந்த எண்ணில் எத்தனை பூஜ்யங்கள் இருக்கிறதோ, அந்த எண்ணிக்கைதான் அந்த எண்ணின் முதல் இலக்கம்; எத்தனை 1 உள்ளதோ, அந்த எண்ணிக்கைதான் அந்த எண்ணின் இரண்டாம் இலக்கம்; எத்தனை 2 உள்ளதோ, அந்த எண்ணிக்கைதான் மூன்றாம் இலக்கம். இப்படியே தொடர்ந்து… எத்தனை 9 உள்ளதோ, அந்த எண்ணிக்கையே பத்தாம் இலக்கம் என்பதாக அமைந்துள்ளது.

எனில், அந்தப் பத்து இலக்க எண் என்ன?

அட, கண்டுபிடிச்சுட்டீங்களா?! உடனே, 044-66802923 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, ‘ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு’ என்று சொல்லிவிட்டு, உங்கள் குரலிலேயே உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள். அல்லது, 98406 67184 என்ற எண்ணுக்கு மெஸேஜ் தட்டிவிடுங்கள்; அல்லது வாட்ஸப்புங்கள்! குரல் பதிவாகக்கூட வாட்ஸப்பில் அனுப்பலாம். பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.