தொடர்கள்
Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது..! - 34

பசித்து உண்போம்!சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

ன்றைய வாழ்க்கைச் சூழலில் விஞ்ஞானம் சார்ந்த மருத்துவம் மிகுந்த வளர்ச்சி அடைந்திருக்கிறது. மற்றொரு புறம் நோய்களும் அதிகரித்திருக்கின்றன. தாத்தா பாட்டி காலத்தில் உணவு உட்கொண்ட பிறகு, வெற்றிலை போடுவதைப்போல, இன்றைய காலத்தில் உணவுக்கு முன்னும் பின்னும் மாத்திரை மருந்துகள் நம் வாழ்க்கையை ஆக்கிரமிக்கின்றன.

இன்றைய நோய்கள் பலவற்றை வாழ்க்கைமுறை சார்ந்தவை என்றே மருத்துவர்கள் வகைப்படுத்துகிறார்கள். உணவுப் பழக்கத்தில், வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டாலே பல நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடலாம். ருசிக்குச் சாப்பிடுவதை விடுத்து, பசிக்குச் சாப்பிடுவது என்று தொடங்கினாலே போதும். ஆனால் இதைப் பற்றிய விழிப்பு உணர்வு இளைய தலைமுறையினரிடையே மிகக் குறைவாகவே இருக்கிறது.

திருவள்ளுவர் மருந்து என்றோர் அதிகாரம் வகுத்திருக்கிறார். மருத்துவம் என்பது, நோயைக் கண்டறிதல், சிகிச்சை ஆகிய இரு கூறுகளை உடையது.

பாதை இனிது... பயணமும் இனிது..! - 34

மரபு சார்ந்த மருத்துவமுறைகளில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் நிலையை ஆராய்ந்தே நோயின் தன்மையை அறிந்துகொள்வர்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. (திருக்குறள்: 941)


வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்றும் குறைந்தாலும் மிகுந்தாலும் நோய் உண்டாகும் என்கிறார் திருவள்ளுவர்.

உடல் என்ற அற்புதமான இயந்திரம், மிக நுணுக்கமான அம்சங்களின் கலவையாக உள்ளது. அதன் இயக்கத்தைப் புரிந்துகொண்டு, அதன் சமநிலையைப் பாதுகாப்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது.
முற்காலங்களில் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் உணவு உண்ணும் பழக்கம் மக்களிடையே இருந்தது. மக்கள் ஆரோக்கியமாகவே வாழ்ந்தனர். கடுமையான உடல் உழைப்புக்குப் பிறகு, நன்கு உண்டு இளைப்பாறினர். காலாற நடந்தனர். ஆனால், இன்று நடைப்பயிற்சி என்பது மிகுந்த சிரமத்துக்கிடையே செய்கின்ற ஒரு வேலையாக இருக்கிறது. பக்கத்து தெருவுக்குக்கூட, வண்டியில் செல்வதே பழக்கமாகிவிட்டது. சிறுவர்கள் வீட்டுக்கு வெளியே சென்று ஓடியாடி விளையாடுவது குறைந்து, வீடியோ கேம்ஸிலும் அலைபேசியிலும்தான் தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

உண்ட உணவு செரிக்காமல் அடுத்தவேளை உண்ணும் உணவு, நம் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கும். சிலர் நேரம் பார்த்து உண்கிறேன் என்ற பெயரில் மணி பார்த்து சாப்பிட உட்காருவர். நேரம் என்பது புறத்தில் உள்ள கடிகாரம் நிர்ணயிப்பதல்ல; நம் உடலாகிய கடிகாரம் நிர்ணயிப்பது, அதற்குப் பசிக்கும்போது உண்பதே சிறந்தது.

அவ்வாறு பசித்து உண்டால், உடலுக்கு நோய் ஏற்படாது, மருந்து உண்ண வேண்டிய அவசியம் இருக்காது. உண்கின்ற முறையில் உண்டால். உணவே மருந்தாகும்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் (திருக்குறள்: 942)


முன்பு உண்ட உணவு செரித்துவிட்டதை உணர்ந்துகொண்டு, அடுத்த வேளை உணவை அளவறிந்து உண்டால், நீண்ட காலம் வாழலாம் என்பது திருவள்ளுவப் பெருந்தகை நமக்கு வழங்கும் அறிவுரையாகும். சரியான உணவை, சரியான அளவு உட்கொள்ள வேண்டும். உணவு உண்ணாமல் இருப்பவருக்கும் தியானம் கைகூடாது, அதிகமாக உண்பவருக்கும் தியானம் கைகூடாது என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

உடலுக்கு நலம் பயக்கும் உணவையே உண்ண வேண்டும். அதுவும் சரியான அளவில் உண்ண வேண்டும். உடல்நலத்தைக் கண்டுகொள்ளாமல் விடுவதும், பிறகு அளவுக்கு மீறி உடலை வருத்திக் கொள்வதும் தேவையற்றவை.

வயிற்றில் அரைப்பகுதி உணவு, கால் பகுதி நீர், கால் பகுதி காற்றுக்கென்று வெற்றிடம்... இதுதான் ஆரோக்கியத்தின் முதல் படி! அளவறிந்து குறைவாக உண்பவனிடம் இன்பம் நிற்பது போல, பெருந்தீனிக்காரனிடம் நோய் நிற்கும் என்கிறார் திருவள்ளுவர்.

இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய் (திருக்குறள்: 946)


நோயின் அறிகுறிகளை நீக்க மட்டும் மருந்து உண்பது பொருந்தாது. நோயின் தன்மையை அறிந்து, அதன் காரணத்தை அறிந்து, அதனை நீக்கும் வழியையும் அறிந்து, உடலுக்குப் பொருந்தும்படி மருத்துவம் செய்ய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். (திருக்குறள்: 948)


- பயணிப்போம்