சாத்திரங்கள் வஞ்சிக்குமா?பி.என்.பரசுராமன்
சிலவற்றைச் சிந்தித்துப் பார்த்தால், குழப்பம்தான் மிஞ்சும். ஓா் உதாரணம்... தவறு செய்துவிட்ட செல்வந்தா் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவா் சிறையில் இருக்கும்போது இறந்துவிட்டார். அவருக்கான காரியங்களை எல்லாம் முடித்த பின்னா், அவரின் சொத்துக்களை எல்லாம் அவா் பிள்ளை தன் பெயருக்கு மாற்றிக்கொண்டான்.
அப்போது ஒருவா், “இவங்க அப்பா சொத்தை இவன் தன் பெயருக்கு மாத்திக்கிறது நியாயம்தான். ஆனால், அதே நியாயப்படி பார்த்தா, தண்டனை வாங்கி ஜெயில்ல இருந்த இவங்க அப்பா தண்டனைக் காலம் முடியறதுக்குள்ள செத்துட்டாரே! அப்போ அவா் அனுபவிக்க வேண்டிய மீதித் தண்டனையை அவா் பிள்ளையான இவன் அனுபவிக்க வேண்டாமா?” என்று கேட்டார்.
இந்தக் கேள்வியில் நியாயம் இருப்பது போலத் தோன்றும். ஆனால், அதில் குதா்க்கம் இருக்கும். நமக்குப் புரியவும் புரியாது. இதே பிரச்னைதான் கைவல்லிய நவநீத சீடனுக்கும் உண்டானது.
அதை நேருக்கு நேராகக் கேட்பதற்கு முகாந்திரமாக, குருநாதரிடம் கண்ணாடி பற்றிக் கேட்கிறான்.
‘துலக்கமான கண்ணாடியை அடிக்கடி துலக்கினால் பழுதன்றே...’ என்கிறான்.
அதாவது, ‘தூய்மையாக்கப்பட்ட கண்ணாடியை அடிக்கடி துடைத்துத் தூய்மை செய்தால், அதில் தவறு இல்லையல்லவா?’ என்று கேட்டுவிட்டு, அடுத்த கேள்வியைத் தொடுக்கிறான் சீடன்.
முன் வினைப்பயனை அனுபவித்துதான் தீா்க்கவேண்டும் என குருநாதா் சொன்னாரல்லவா? அதை அனுசாரித்துதான் கேள்வி கேட்கிறான்.
கைதவங்களைச் சாத்திரம் சொல்லுமோ?
கருணையால் எனை ஆளும்
ஐயனே! குருவே! எவர் ஆகிலும்
அனுபவத்தால் அன்றிச்
செய்த கன்மங்கள் விடாது என்ற வசனமும்
சென்ம சஞ்சிதம் வேகத்
துய்ய ஞானத்தீ சுடும் என்ற வசனமும்
துணிவது எப்படி நானே?
(சந்தேகம் தெளிதல் படலம்-49)
ஜன்மாந்திர வினைகள் அனுபவித்தால்தான் தீரும். நியாயம்தான். சாஸ்திர நூல்கள் இதைத்தான் சொல்கின்றன. ஆனால்...

ஞானத் தீ அனைத்துவிதமான வினைகளையும் சுட்டுப் பொசுக்கிச் சாம்பலாக்கிவிடும் என்று ஞான நூல்கள் கூறு கின்றனவே! அது பொய்யா?
முன்னுக்குப் பின் முரணாக, ஞான நூல்கள் சொல்லுமா? இது வஞ்சனை செய்து ஏமாற்றுவதாகாதா? எதை நம்பி ஏற்றுக்கொள்வது? இந்தச் சந்தேகம் அந்தச் சீடனுக்கு மட்டுமல்ல, நமக்கும் உண்டு.
முன் வினைப்பயனை அனுப வித்துதான் தீா்க்க வேண்டும் எனும்போது, அஜாமிள உபாக் கியானம், மார்க்கண்டேய சாரிதம், சத்தியவான்- சாவித்திாி கதை முதலானவை எப்படி
உண்மையாகும்?
இந்தச் சந்தேகத்தைக் கேட்கிறான் சீடன். அதுவும் எப்படிக் கேட்கிறான் பாருங்கள்!
தொடா்பு உள்ளவா்களிடம், ஏதாவது ஒரு வகையில் பிரதிபலனை எதிர்பார்த்துச் செலுத்தப்படுவது அன்பு. ஆனால், தொடா்பே இல்லாதவா்களிடமும், எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் செலுத்தப்படுவது அருள்; கருணை! குருநாதா் அப்படிப்பட்டவா். அதனால்தான், ‘கருணையால் எனை ஆளும் குருவே’ என்கிறான் சீடன். இந்த அளவுக்கு விவரம் புரிந்த ஒரு சீடன் கேட்கும்போது குருநாதா் மறுப்பாரா?
ஆன பாவிகள் அடைவன நரகங்கள்
அவசியம் ஆனாலும்
தான மந்திர விரத ஓமங்களால்
தவிரும் என்பது பொய்யோ
ஈனமாம் பல சன்ம சஞ்சித வினை
எத்தனை ஆனாலும்
ஞானமாம் கனல் சுடும் என்ற மறைமொழி
நம்பினால் வீடு உண்டே
(சந்தேகம் தெளிதல் படலம்-51)
‘செய்தவை சுற்றி வந்து சூழும் என்பது உண்மைதான். அதே நேரம் அவற்றை விலக்கவும் முடியும்’ என்கிறார் குருநாதா்.
இன்னின்ன பாவங்களுக்கு இன்னின்ன தண்டனை என, ஞான நூல்கள் (தேவி பாகவதம், மார்க்கண்டேய புராணம், கருட புராணம் முதலா னவை) கூறுவது உண்மைதான். நரகங்களைப் பற்றி அந்நூல்கள் கூறுவதும் உண்மைதான். கூடவே, அந்தப் பாவங்களில் இருந்து விடுபடுவதற்கான பிராயச்சித்தங்களும் அந்த நூல்களில் சொல்லப்பட்டி ருக்கின்றன.
உதாரணமாக, தெய்வ நாமங் களைச் சொல்வது, மந்திர ஜபம் செய்வது, ஹோமங்கள் செய்வது, யாகங்கள் செய்வது, விரதங்கள் அனுஷ்டிப்பது, கங்கை- காவிரி முதலான புண்ணிய நதிகளில் நீராடுவது முதலானவை, அனைத்து விதமான பாவங்களையும் தீா்த்து நற்கதி அளிக்கும். இவற்றையெல்லாம் நம்பிக்கை யோடு ஆத்மார்த்தமாகச் செய்ய வேண்டும்.
அடுத்து, ‘நமக்குத் தெரிந்தவைதான் இவை. ஆனால்... தெரிந்தாலும், செயல்படுத்த முடிவதில் லையே, அது ஏன்?’ என்று சீடன் கேட்கிறான்.
என் மனம் திருக்கோயிலாத் தினம் குடி
இருந்து அருள் குருமூர்த்தி
சென்ம சஞ்சித வினைகள் வேர் அறுத்திடும்
தேவரீர் மெய்ஞ் ஞானம்
தன் மயம் தரும் மகிமையை விபுதராம்
சமர்த்தரும் அறியாமல்
கன்மமாம் குழியினில் விழுந்து அழிகின்ற
காரணம் உரையீரே!
(சந்தேகம் தெளிதல் படலம்-52)
என்னதான் பொிய அறிவாளிகளாக, மேதாவி களாக இருந்தாலும், மெய்ஞ்ஞானம் வினைகளை முழுவதுமாக நீக்கும் என்பது தெரிந்திருந்தும் கெட்டுப்போகிறார்களே! ஆசைகளைத் தூண்டி, அல்லல் படுகுழியில் ஆழ்த்தும் செயல்களில் (கா்மங்களில்) ஈடுபடுகிறார்களே... இதற்குக் காரணம் என்ன?
சீடனின் இந்தக் கேள்விக்கு குருநாதர் தரும் பதில் என்ன?
- தொடரும்