திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

மதிப்புக்குரிய வாசகர்களே...

மதிப்புக்குரிய வாசகர்களே...
News
மதிப்புக்குரிய வாசகர்களே...

மதிப்புக்குரிய வாசகர்களே...

மதிப்புக்குரிய வாசகர்களே...

வணக்கம்.

உங்கள் ‘சக்தி விகடன்’, பதின்மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பரவசமான தருணம் இது. ஒவ்வொரு சக்தி விகடன் இதழ் வெளியாகும்போதும், அது பற்றிய உங்களின் கருத்துக்களை உடனடியாக எங்களோடு பகிர்ந்துகொண்டு, உங்களின் மேலான ஆலோசனைகளால் அடுத்தடுத்த இதழ்களை இன்னும் இன்னும் மெருகேற்றி வருவது நீங்கள்தான். எனவே, இந்த இனிய தருணத்தில் முதற்கண் உங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரிதும் மகிழ்கிறோம்.

சக்தி விகடனின் ஒவ்வோர் ஆண்டுச் சிறப்பிதழிலும் உங்களைப் பெரிதும் ஈர்க்கும் விதமாக ஏதேனும் புதிய தொடர்கள் வெளியாவது வழக்கம் என்பது நீங்கள் அறிந்ததே.அந்த விதத்தில், மூன்று புதிய தொடர்கள் இந்த இதழில் தொடங்குகின்றன.

கயிலை... காலடி... காஞ்சி!

நம்மிடையே நடமாடும் தெய்வமாய் வாழ்ந்து மறைந்த மகா பெரியவா நிகழ்த்திய அற்புத லீலைகள், அந்த மாமுனி குறித்த அபூர்வ தகவல்கள்... குறிப்பாக, அவர் தமது இறுதி பத்தாண்டு காலம் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது நிகழ்ந்த சிலிர்ப்பூட்டும் சம்பவங்கள் என இந்தத் தொடரை பரமாசார்யரின் பக்தர்கள் மட்டுமின்றி, அனைத்து ஆன்மிக அன்பர்களும் படித்து இன்புறும் வண்ணம் எளிய நடையில் எழுதுகிறார் நிவேதிதா. இன்னொரு சிறப்பு... இந்தத் தொடரில் காஞ்சி மாமுனியின் மிக மிக அபூர்வ புகைப்படங்களையும் நீங்கள் தரிசிக்கப் போகிறீர்கள்!
மனசெல்லாம் மந்திரம்!

நம் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு பிரச்னை இருக்கத்தான் செய்யும்.

திருத்தல தரிசனம், கடவுள் வழிபாடு எனப் பல வழிகளில் நம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயல்கிறோம். நமது துயர்களைத் துடைத்தெறிவதில் மந்திரங்களுக்கும் மகத்தான பங்குண்டு. என்ன மந்திரத்தை உச்சரித்து, எப்படி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என எளிமையாக விளக்கி, மந்திரங்களின் மகிமையை நமக்குப் புரியவைக்கிறார் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். படியுங்கள்; பயன்பெறுங்கள்!

ஊர்வலம்!

உங்கள் ஊரின் பெருமைகள், உங்கள் ஊரில் உள்ள திருக்கோயில்கள், திருவிழாக் கள், உங்கள் ஊரில் அவதரித்த மகாபுருஷர்கள், அவர்களின் அருளாடல்கள்... என உங்கள் ஊரைப் பற்றி மற்றவர்களும் அறிந்து வியக்கும் வண்ணம் ஏராளமான குட்டிக் குட்டித் தகவல்களின் தொகுப்பே இந்தத் தொடர். இதில் ஒரு சந்தோஷமான செய்தி என்ன தெரியுமா? இதைத் தொகுக்கப்போவது வாசகர்களாகிய நீங்கள்தான். உங்கள் கைப்பக்குவத்தை மற்றவர்களுக்கு வழங்கும் பரிசாரக சேவை மட்டுமே எங்களுடையது. எனவே, உங்கள் ஊரைப் பற்றிய பெருமைமிகு தகவல்களைத் திரட்டி அனுப்பி, தமிழ்கூறும் நல்லுலகை பிரமிக்கச் செய்யுங்கள்.

இந்த மூன்று தொடர்கள் மட்டுமல்லாது, அறிவிக்கப்படாத இன்னும் பல புதிய அம்சங்களும் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றையும் நிதானமாகப் படியுங்கள்; ரசியுங்கள். உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழக்கம்போல் உடனுக்குடன் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடடே... சொல்ல மறந்துவிட்டேனே! உங்களைப் போன்று சக்தி விகடன் மீது அக்கறையும் அபிமானமும் கொண்ட ஏராளமான வாசகர்கள் போனிலும், நேரிலும், இ-மெயில் மூலமாகவும், சமூக வலை தளங்கள் மூலமாகவும் வைத்த ஒரு யோசனை...

ஒவ்வொரு சக்தி விகடன் இதழுடனும் ஒரு சிறப்பு இணைப்புப் புத்தகம் தரலாமே என்பது! உங்கள் விருப்பத்தையும் இந்த இதழிலிருந்து நிறைவேற்றுவது எனத் தீர்மானித்துள்ளோம். இந்த இதழுடன் சிறப்பு இணைப்பாக உங்கள் கைகளில் தவழும் ‘கஷ்டங்களைப் போக்கும் இஷ்ட தெய்வங்கள்’ புத்தகம் உங்கள் மனதைப் பெரிதும் கொள்ளை கொள்ளும் என்பது திண்ணம்!
வாருங்கள், ஆன்மிகம் மணக்கும் ஆலயத்துக்குள் ஆனந்த வலம் வருவோம்!

 - ஆசிரியர்