
பூச்சரம்!

விசித்திர விளையாட்டு!
பெவிலியன் என்பது சதம் அடிப்பவர்களுக்கு சொர்க்கமாகவும், அதேநேரம் பூஜ்யம் எடுப்பவர்களுக்கு நரகமா கவும் தோற்றமளிக்கிறது.
இந்த பெவிலியனிலிருந்து விவேகம் என்னும் கிரிக்கெட் மட்டையைக் கையில் எடுத்துக்கொண்டு மனிதனாகப் பிறவி எடுத்து, வாழ்க்கை எனும் விளையாட்டு அரங்கத்தில் விளையாட வருகிறார் பேட்ஸ்மேன்.
ரஜோ குணம், தமோ குணம், ஸத்வ குணம் ஆகிய மூன்றை ஸ்டம்ப்புகளாகக் கொண்டு பிராணன் எனும் ‘பெய்ல்ஸ்’ நிற்கிறது.
மனம் எனும் பந்தை வீசி இந்தப் பிராணனை வீழ்த்தக் காத்திருப்பவர், சிறந்த பந்து வீச்சாளரான யம தருமன். இந்த பந்து வீச்சாளருக்குத் துணை நிற்பவர்கள், பத்து ஃபீல்டு மேன். அவர்கள் கர்மேந்திரியங்கள் ஐந்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும் ஆவார்கள்.
பாஸ்ட், ஸ்பின், பேஸ், கூக்ளி என்று பலவகைகளில் சஞ்சலத்தை ஏற்படுத்தி, ஃஎதிர்தரப்பினர் அவுட் ஆக்க முயற்சித்தாலும், ஓர் ஓட்டம் எடுத்து இடம் மாறி துக்கத்தையோ அல்லது இரண்டு ஒட்டங்கள் எடுத்து இருக்கும் இடத்துக்கே வந்து சுகத்தையோ அடைகிறோம்.

நாம் விளையாடும் இந்த விளையாட்டை மிக கவனமாக கண் காணிப்பவர் ஆத்மா எனும் அம்பயர். அவரின் சிக்னலுக்கு ஏற்றாற்போல் சித்ரகுப்தன் ஸ்கோர் போர்டில் பாவ புண்ணியங்களைக் குறிக்கிறார்.
‘க்ளீன் போல்டு’ இயற்கை மரணத்தையும், ‘காட் அண்டு போல்டு’ என்பது பஞ்ச இந்திரியங்களுக்கு ஆட்பட்டு அதனால் ஏற்படும் மரணத்தையும், எல்.பி.டபிள்யு என்பது ஆசாபாசங்களுக்கு ஆட்பட்டு அதனால் ஏற்படும் பயத்தினால் நாமாகத் தேடிக்கொள்ளும் மரணத்தையும், ரன் அவுட் விபத்தினாலும்-இப்படி ஏதாவது ஒரு வகையில் அவுட்டாகி வெளியேறுகிறோம். பெளண்ட்ரி, சிக்ஸர் என்பதெல்லாம் புண்ணியக் கணக்கில் சேரும்.

மனிதராகப் பிறவி எடுத்து வரும் நாம் அனைவருமே பெளண்ட்ரி, சிக்ஸர்களாக எடுத்துச் சதம் எடுக்கும் எண்ணத்துடன் ஆட வருகிறோம். இது நிச்சயம் இல்லாத ஒரு விளையாட்டு. அதனால்தான் கிரிக்கெட் என்பது, எப்போது என்ன நடக்கும் என்று யாரும் ஆருடம் கூற முடியாத ஒரு விசித்திர விளையாட்டு- வாழ்க்கையைப் போலவே! அதனால்தான் இந்த விளையாட்டு எல்லோராலும் ரசிக்கப்படுகிறது என்பது அனுபவபூர்வமான உண்மையும்கூட.
(மதுரையில் ஸ்ரீஜெயராமசர்மா ஆற்றிய உரையிலிருந்து கேட்டவர் சரஸ்வதி சுந்தரேசன்)
* 7.8.88 ஆனந்த விகடன் இதழிலிருந்து...
குறைவும் இல்லை, நிறைவும் இல்லை!
முகநூலில் நண்பர் ஒருவர் பதிந்திருந்த தகவல். படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. நீங்களும் படித்துப் பாருங்களேன்.

வாடாமல்லிக்கு வண்ணம் உண்டு; வாசம் இல்லை
மல்லிகைக்கு வாசம் உண்டு, நீண்ட ஆயுள் இல்லை;
கீரிப்பிள்ளைக்கு வீரம் உண்டு, கொம்பு இல்லை;
கொம்புள்ள மானுக்கோ வீரம் இல்லை;
கருங்குயிலுக்கு தோகையில்லை;
தோகை மயிலுக்கோ இனிய குரலில்லை;
காற்றுக்கு உருவம் இல்லை;
கதிரவனுக்கு நிழலில்லை;
நெருப்புக்கு ஈரமில்லை!
ஒன்றைக் கொடுத்து ஒன்றை எடுத்தான் இறைவன். ஆக எவர் வாழ்விலும் நிறையும் இல்லை; எவர் வாழ்விலும் குறையும் இல்லை.
- சங்கீதா சண்முகராஜ், சென்னை-44
அழகாகச் சொன்னார்கள்!
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், நல்ல நண்பர்கள் தேவை. வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால், ஒரு எதிரியாவது தேவை!

- ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்
ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதைவிட, தோற்பது எப்படி என்று யோசித்துப் பார், ஜெயித்து விடுவாய்!
- ஹிட்லர்
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு, உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளும் தண்டனை.
- புத்தர்
விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவது இல்லை!
- காரல் மார்க்ஸ்
தண்ணீர் எங்கே?
திரு ஜே.கிருஷ்ணமூர்த்தி சொன்ன கதை என்று நண்பர் ஒருவர் வாட்ஸ் அப்-ல் பகிர்ந்துகொண்ட தகவல் இது.
பக்தன் ஒருவன் கட்வுளை அணுகித் தனக்குச் சத்தியத்தை போதிக்கும்படி வேண்டினான். அப்போது நல்ல கோடை காலம். கடவுளுக்கு ஒரே தாகம். பக்தனை நோக்கி ‘‘முதலில் குடிக்கத் தண்ணீர் கொண்டு வா’ என்றார். அவன் ஒரு வீட்டுக் கதவைத் தட்டினான். அழகான பெண்ணொருத்தி கதவைத் திறந்தாள். முதல் சந்திப்பிலேயே இருவரும் காதல் கொண்டனர். கொஞ்ச நாட்களில் திருமணமும் செய்து கொண்டனர். குழந்தைகள் பிறந்தன. காலம் ஓடியது. ஒருநாள் பெரு மழை பொழிந்து, பிரளய வெள்ளம் பெருக்கெடுத்தது. மனிதனின் வீடும் தண்ணீரில் மூழ்கியது. ‘கடவுளே’ என்று கூப்பாடு போட்டான். கடவுள் தோன்றினார். ‘என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சினான்.
‘‘அதுசரி, சற்று நேரத்துக்கு முன்பு நான் உன்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டேனே என்ன ஆயிற்று?’’ என்று திருப்பிக் கேட்டார் கடவுள்!
ரொட்டிக்கு சுவை எது?
ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் “ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?’’ என்றொரு கேள்வி கேட்டார்.
“வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்’’ என்றான் ஒருவன். ‘‘ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்’’ என்றான் மற்றொருவன். மூன்றாவதாக ஒருவன் எழுந்து, “பாலில் தோய்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்’’ என்றான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டிருக்க, ஒரு மாணவன் மட்டும் எழுந்து, ‘‘ஐயா, ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்துகொண்டு சாப்பிட் டால்தான் மிகவும் சுவையாக இருக்கும்’’ என்று கூறினான். ஆசிரியர் மிகவும் மகிழ்ந்துபோய், அவனைக் கட்டியணைத்துப் பாராட்டினார்.
இந்தத் தகவலை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த நண்பர், கடைசியில், அந்த மாணவன் யார் தெரியுமா எனக் கேட்டுவிட்டு, ‘‘நான்தான்!’’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அப்படி அவர் குறிப்பிட்டிருப்பது வேடிக்கையாகத்தான் என்றாலும், தகவலில் இருந்த நீதி எனக்குப் பிடித்திருந்தால்; பகிர்ந்துகொண்டேன்.
- மு. வினோத்ராஜ், கடலூர்