
சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி
கொஞ்ச நேரத்துக்கு முன்னால வாட்ஸப்புல வந்த தகவல் ஒண்ணு என் மனசை ரொம்ப பாதிச்சிடுச்சு. பரீட்சைக்கு சரியா படிக்கலைன்னு தன் பொண்ணை அம்மா கண்டிச்சிருக்காங்க. உடனே அந்தப் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிச்சு. இதனால மனசு உடைஞ்சு போன அம்மாவும் தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம். இங்கே சென்னை, விருகம்பாக்கத்துல நடந்த விஷயம் இது.
இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்னால, ஒரு பரீட்சையில கெமிஸ்ட்ரி பாடத்துக்கான கேள்வித்தாள் ரொம்ப கஷ்டமா இருந்ததால, தன்னால இந்த எக்ஸாம்ல பாஸாக முடியாதுன்னு ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டதா நியூஸ் வந்தது.
இப்பெல்லாம் படிப்பு வரலைங்கிறதுக்காகவோ, பரீட்சையில ஃபெயிலாயிடுவோம்கிறதுக்காகவோ தற்கொலை பண்ணிக்கிற மாணவர்களின் எண்ணிக்கை ரொம்ப அதிகமாயிட்ட மாதிரி தெரியுது.
எங்கே போயிட்டிருக்கு உலகம்னு ரொம்ப வேதனையா இருக்குங்க.

‘கல்விக் கண் திறந்தது’ன்னு சொல்வாங்க. நமது பார்வையை விசாலமாக்கி, நம்மோட சிந்தனைகளைத் தெளிவுபடுத்தி, நம்முடைய அகக் கண்களைத் திறந்து வைக்கிறதுதான் கல்வியோட வேலையே! ஆனா, இதுக்கு நேர் முரணா, கல்வியே மாணவர்களோட சிந்தனையை மழுங்கடிச்சு, படிக்கலேன்னா அவ்வளவுதான், பரீட்சையில பாஸ் பண்ணலேன்னா நீ உலகத்துல வாழவே லாயக்கில்லேன்னு தேவையில்லாத ஒரு பயத்தை ஏற்படுத்தி, அவங்களைத் தற்கொலைக்குத் தூண்டுதுன்னா, நமது கல்வித் திட்டத்துல எங்கே தப்பு இருக்குன்னு யோசிக்கணுமா, இல்லையா?

தன்னம்பிக்கையை ஏற்படுத்தவேண்டிய படிப்பே, பசங்களின் தைரியத்தைக் குலைச்சு, அவங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குதுன்னா, தப்பு படிப்பு பேர்லயா? ஆசிரியர்கள் பேர்லயா? அரசாங்கத்தின் பேர்லயா? இல்லே, கல்வித் திட்டத்தின் பேர்லயா?
பெற்றோர்களும் தங்களோட பிள்ளைங்க கெட்டிக்காரங்களா இருக்கணும், நல்லா படிச்சு, நல்ல மார்க் எடுத்துப் பாசாகணும், நல்ல வேலையில அமரணும், கை நிறையச் சம்பாதிக்கணும்னெல்லாம் நினைக்கிறாங்களே தவிர, முதல்ல அவங்க சந்தோஷமா இருக்காங் களான்னு பார்க்கிறதில்லே. தான் கஷ்டப்பட்டதுபோல பிள்ளைங்க கஷ்டப்படக்கூடாது, அதுக்கு அவங்க நல்லா படிக்கணும்னு நினைக்கிறதுல தப்பு இல்லே! நியாயமான ஆசைதான் அது. ஆனா, படிப்பு இல்லேன்னா எதிர்காலமே சூன்யம்தான்னு பசங்க மனசுக்குள்ளே பயத்தை விதைக்கிறதுதான் தப்பு. எதிர்கால வாழ்க்கையை வளமானதா, இனிமையானதா அமைச்சுக்க படிப்பும் ஒரு வழி. அதுக்கான ஒரு அளவுகோல்தான் பரீட்சை! மத்தபடி, பரீட்சையே வாழ்க்கை இல்லை. இதைப் பசங்களுக்குப் புரிய வெச்சு, அவங்களுக்கு தைரியத்தை ஊட்டி, தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது பெற்றோர்களோட கடமை!
இந்த முறை நம்ம குடியரசுத் தலைவர்கிட்டேர்ந்து பத்ம விருது வாங்கினவங்கள்ல ‘ஹல்தார் நாக்’ங்கிற வரும் ஒருத்தர். 66 வயசு. கவிஞர். ஒடிசாக்காரர். ஒரிய இலக்கியத்துக்கு அவரோட பங்களிப்பு அதிகம். 20 காப்பியங்கள் படைச்சிருக்காரு. ஐந்து பேர் அவரோட படைப்புகளை ஆராய்ச்சிக்கு எடுத்துட்டிருக்காங்க. அவரோட வாழ்க்கையைப் பத்தி பிபிசி ஒரு டாகுமென்ட்டரி படம் பண்ணியிருக்கு. சம்பல்பூர் பல்கலைக்கழகம் அவருடைய படைப்புகளைத் தொகுத்து, யுனிவர்சிட்டியின் சிலபஸ்லேயே சேர்க்க முடிவு பண்ணியிருக்கு.
மிக மிக ஏழைக் குடும்பத்துல பிறந்த அவர் ஒரு ஸ்வீட் ஸ்டால்ல பாத்திரம் கழுவுற வேலைதான் பார்த்தாரு. முக்கியமா சொல்லணும்னா, மூணாம் வகுப்புக்கு மேல படிக்காதவர் அவர்.
அவர் வாழ்க்கையில ஜெயிக்கலையா?
சரிங்க, ஒடிசா வரைக்கும் போக வேணாம். இங்கேயே, நம்ம சென்னையிலேயே எடுத்துக்குங்க. இப்ப சமீபத்துல பிரேஸில்ல நடந்த தடகளப் போட்டியில கலந் துக்கிட்டு, தங்கம் உள்பட மூணு மெடல்களை அள்ளிக்கிட்டு வந்திருக்கா ‘ஹெப்சிபா’ங்கிற 16 வயசுப் பொண்ணு.
சென்னைத் தெருவுலேயே பிறந்து, தெருவிலேயே வளர்ந்த பொண்ணுங்க அவ. அவளுக்கு மூணு வயசா இருக்கும்போது அவங்கப்பா இறந்துட்டார். அம்மாதான் பூ கட்டி வியாபாரம் பண்ணி, தன் நாலு பொண்களையும் காப்பாத்தினாங்க. வறுமைக்கோட்டுல வளர்ந்த பொண்ணு சாதிக்கலையா? படிப்பு, பணத்தை விட தைரியமும் தன்னம்பிக்கையும் தான் முக்கியம்!

கல்பனா சாவ்லா, மேரி கோம்னு எங்கேயோ உதாரணங்களைத் தேடிப் போக வேணாங்க... இந்த மாதிரி நம்ம கண் முன்னே வாழ்க்கையில் ஜெயித்த பெண்களை, பசங்களை உதாரணமா, ரோல்மாடலா எடுத்துக்கிட்டாலே போதுமே! தன்னம்பிக்கையும் தைரியமும் தன்னால வந்துடாதா?
இதை நம்ம ‘படிக்கிற’ பிள்ளைங்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியது அரசாங்கத்தோட, ஆசிரியர்களோட, பெற்றோர்களோட பொறுப்பு மட்டுமில்லீங்க; இந்தச் சமூகத்துல இருக்கிற நம்ம ஒவ்வொருத் தரோட கடமையும்கூட!

போதுங்க... பட்டினிச் சாவுகளைச்கூடச் சகிச்சுக்கலாம் போலிருக்கு, இந்தப் பசங்க சாவை ஜீரணிக்கவே முடியலீங்க. மார்க் வாங்குற எந்திரங்களா பசங்களை மாத்தி வெச்சதெல்லாம் போதும். இனியாவது வாழ்க்கை என்னங்கிறதை அவங்களுக்குக் கத்துக் கொடுப்போம். புரிய வைப்போம். முதல்ல நாம புரிஞ்சுப்போம்! என்ன பாஸ், நான் சொல்றது?!
- இன்னும் பேசலாம்
சவால்!

ஓர் ஐந்து இலக்க எண். அதன் ஆரம்பத்தில் 1 சேர்ப்ப தால் கிடைக்கும் ஆறு இலக்க எண்ணைப்போல், அந்த எண்ணின் கடைசியில் 1 சேர்ப்பதால் கிடைக்கும் ஆறு இலக்க எண் மூன்று மடங்கு ஆகும். அதாவது, 1-----
என்ற எண்ணை மூன்றால் பெருக்கினால், -----1 என்ற எண் கிடைக்கும். எனில், அந்த ஐந்து இலக்க எண் என்ன? பதிலைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் எனில், 044-66802923 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, ‘ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு’ என்று சொல்லிவிட்டு, உங்கள் குரலிலேயே உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள். அல்லது, 98406 67184 என்ற எண்ணுக்கு மெஸேஜ் தட்டிவிடுங்கள்; அல்லது வாட்ஸப்புங்கள்! குரல் பதிவாகக்கூட வாட்ஸப்பில் அனுப்பலாம். பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.
மியான்மர் மக்கள் தலைவி ஆங் சான் சுகி, இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே…
1) தெளிவாக ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட பாதையை நீ தேர்ந்தெடுத்தால், கடைசி வரை அதையே பின்பற்றிச் செல். சொந்தக் காரணத்துக்காகவோ, வேறு எந்தக் காரணத்துக்காகவோ அதிலிருந்து விலகிவிடாதே!

2) எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்.
3) உண்மையான சிறை என்பது பயம்தான்!
4) முயற்சி இல்லையெனில், நம்பிக்கை என்பது அர்த்தமற்ற சொல்லாகிவிடும்!
5) சவால்கள் சுவாரஸ்யமானவை. அவை நம்மை இன்னும் மேம்படுத்திக் கொள்ள உதவுகின்றன.
பரிசு யாருக்கு?
சென்ற இதழில் கேட்கப்பட்ட சவால் கேள்விக்கான விடை: இரண்டு முறை வெட்டினால் போதுமானது.
நீளமான தங்கச் சங்கிலியை ஏழு சம பாகமாகப் பிரித்துக்கொண்டு, முதல் பாகத்தை ஒரு துண்டாகவும், அடுத்து இரண்டு பாக நீளத்தை இன்னொரு துண்டாகவும் வெட்டிக்கொள்கிறான் அரசன். மீதி நாலு பாக நீளமுள்ள சங்கிலி மூன்றாவது துண்டாக இருக்கும்.
சிற்பி முதல் நாள் வேலையை முடித்ததும், தங்கச் சங்கிலியின் ஒரு பாக துண்டை பரிசாக அளிக்கிறான் அரசன். இரண்டாம் நாள் வேலையை முடித்ததும், இரண்டு பாக நீளமுள்ள துண்டைப் பரிசாகக் கொடுத்துவிட்டு, சிற்பியிடமுள்ள ஒரு பாக நீளத் துண்டைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறான். மூன்றாம் நாள் தன்னிடம் உள்ள அந்த ஒரு பாக துண்டைப் பரிசாக அளிக்கிறான். நாலாம் நாள் தன்னிடம் உள்ள நாலு பாக நீளமுள்ள சங்கிலித் துண்டைக் கொடுத்துவிட்டு, சிற்பியிடம் உள்ள மூன்று பங்கு அளவிலான இரண்டு சங்கிலித் துண்டுகளையும் பெற்றுக் கொள்கிறான் அரசன். ஐந்தாம் நாள் ஒரு பாக துண்டைக் கொடுக்கிறான். ஆறாம் நாள் இரண்டு பாக துண்டைக் கொடுத்து, ஒரு பாகத் துண்டைப் பெற்றுக் கொள்கிறான். சிற்பி ஏழாம் நாள் தன் வேலையைப் பூர்த்தி செய்ததும், கையில் உள்ள ஒரு பாக சங்கிலித் துண்டைப் பரிசாகக் கொடுக்கிறான் அரசன். ஆக, சிற்பி விரும்பியது போலவே, அரசன் அந்தச் சங்கிலியில் ஏழில் ஒரு பங்கை தினமும் பரிசாக அளித்துவிட்டான்.
இந்தச் சரியான விடையை குரல் பதிவாகவும் எஸ்.எம்.எஸ். வழியாகவும் அனுப்பி இருந்தவர்களில் சென்னை, மணப் பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தி தியாகராஜன் என்ற வாசகிக்கு, ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் எழுதிய ‘உறக்கத்திலே வருவதல்ல கனவு’ என்ற புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.
கஜ பூஜை!

யானைகள் செல்வத்தின் அடையாளமாகும். யானையை லட்சுமியாகப் போற்றுகின்றனர். பூஜைகளின் தொடக்கத்தில் செய்யப்படும் கஜபூஜையால் மகிழும் மகாலட்சுமி, அவ்விடத்தில் பரிவாரங்களுடன் எழுந்தருள்கிறாள் என்று நம்புகின்றனர். அவள் யானையின் பிளிறலால் மகிழ்வதால், பூஜையில் யானையைப் பிளிறச் செய்கின்றனர்.
- க.கண்ணன், மதுரை