
உதவலாம் வாருங்கள்

வாசகர்களே!
கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை-கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களின் வினாக்களுக்கு வாசகர்களே பதில் பெறப்போகிறார்கள் என்பதுதான். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம் வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். அத்துடன், சக்தி விகடனின் ‘உதவலாம் வாருங்கள்’ முகநூல் பக்கத்திலும் தங்களது சந்தேகங்களை பகிரலாம்.
பிணி நீக்கும் தேவாரப் பதிகங்களைப் பற்றிய (தேவார திரட்டு) தொகுப்பு எங்கே கிடைக்கும் என்பதைத் தெரியப்படுத்தினால், வாங்கிப் பயன் பெறுவேன்.
- பி.ஜெயலட்சுமி, திருவானைக்காவல்
கே.வீரமணி பாடிய ‘கந்தர் அனுபூதி’ சி.டி. தேவைப்படுகிறது. எங்கு கிடைக்கும் என்று யாரேனும் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
- எம்.ஜனகன், தேனி
வாராஹி நவராத்திரி பற்றியும், வாராஹி வழிபாடு பற்றியும் அறிய விரும்புகிறேன். அது சம்பந்தமான புத்தகங்கள் எதுவும் இருக்கிறதா? விவரம் தெரிந்தவர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
- ஆர்.லக்ஷ்மி, செங்கல்பட்டு
உதவிக்கரம் நீட்டியவர்கள்
** சக்தி விகடன் 7.6.16 தேதியிட்ட இதழில், அம்பிகையின் ஷோடச நாமங்கள் குறித்து, கோட்டயத்தைச் சேர்ந்த வாசகி கனகம் கேட்டிருந்தார். அதைப் படித்த சென்னை வாசகர்களான ஜி.கிருஷ்ணவேணியும் ஸ்வாசம் ஹரிஹரனும் அம்பிகையின் 16 நாமங்கள் பற்றிய குறிப்பை அனுப்பியுள்ளனர். அது சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
** அதே இதழில், ‘பந்தம் அகற்றும் அநந்த குணப் பரப்பும்...’ என்று தொடங்கும் பாடல் குறித்து செகந்திராபாத்தைச் சேர்ந்த வாசகர் வி.வெங்கட்ராமன் கேட்டிருந்தார். பெங்களூர் வாசகி இந்திரா சீனிவாசன், பாடலின் நகலை நமக்கு அனுப்பியுள்ளார். அது சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
** மேலும், ‘ஆசாரக்கோவை’ என்னும் பழந்தமிழ் நூல் எங்கு கிடைக்கும் என்று திருவள்ளூரைச் சேர்ந்த வாசகர் கு.துரைசுவாமி கேட்டிருந்தார். அதற்கு சென்னையைச் சேர்ந்த எம்.ஏ.ராஜசேகரன் என்ற வாசகர், ‘ஆனந்த வாழ்வுக்கு ஆசாரக் கோவை’ என்ற புத்தகம் எல்.கே.எம்.பப்ளிகேஷன், ப.எண். 15/4, பு.எண். 33/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (தொலைபேசி எண்: 044-24361141) என்ற நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது, என்ற தகவலைத் தந்துள்ளார்.
** தேவார ஸ்தலமான ‘எலும்பியன் கோட்டூருக்கு எப்படிச் செல்லவேண்டும்?’ என்ற தகவலை வேலூரைச் சேர்ந்த சாம்பவசிவமூர்த்தி கேட்டிருந்தார். அதன் சரியான பெயர் இலம்பையங்கோட்டூர் என்றும்,ஸ்ரீபெரும்புதூரி லிருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் மேற்குப் பக்கம் பிரியும் சாலையில் பேரம்பாக்கம் என்ற ஊர் உள்ளது என்றும், அங்கிருந்து 8 கி.மீ. தூரத்தில் இந்த ஊர் உள்ளது என்றும் ராஜசேகரன், வி.சந்தானகிருஷ்ணன், ஸ்வாசம் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தகவல் தந்துள்ளனர். சென்னை மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து அவ்வூருக்கு பஸ் வசதி உண்டு.
** குடும்பத்தில் தொடர்ந்து நிலவிவரும் பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் தீராத பிணிகள் நீங்குவதற்காக வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய எளிய கடவுள் வழிபாடுகளைப் பற்றி திருச்சியைச் சேர்ந்த பி.சந்திரா என்ற வாசகி கேட்டிருந்தார். அதைப் படித்துவிட்டு, சக்தி விகடன் வாசகர் எல்.சுந்தரராமன், அவர் தொகுத்த புத்தகத்தை அனுப்பியுள்ளார். அது வாசகி பி.சந்திராவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.