
ஆலயப் பணியில் இளைஞர்களின் ஆர்வம்!

“என்னிடம் நூறு இளைஞர்களைக் கொடுங்கள். வலிமையான பாரதத்தை உருவாக்கிக் காட்டுகிறேன்’’ என்றார் சுவாமி விவேகானந்தர். அவரின் வார்த்தைகளுக்கு வலிமை சேர்க்கும் முயற்சியில், கல்லூரியில் படிக்கும் தன் மாணவர்களை ஒருங்கிணைத்து, சிதிலமடைந்து கிடக்கும் கோயில்களை மீட்டெடுக்கும் பணியில் இறங்கியிருக்கிறார் பொறியியல் பேராசிரியர் கோபிநாத். மேலும் பாழ்பட்டுக் கிடக்கும் கோயில்களைப் பற்றிய கட்டுரைகளையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, வரலாற்றின் எச்சங்களாய்த் தொக்கி நிற்கும் பல புராதனச் சின்னங்களை மீட்டெடுத்து வரும் கரூர்வாசி இவர். அவருடனான ஒரு சந்திப்பிலிருந்து...

கோயில்களை புனரமைக்கும் எண்ணம் எப்படி உருவானது?
கட்டடக் கலைக்குப் பெயர் பெற்றது நம் தமிழகம். திண்டுக்கல் மாவட்டம், தீண்டாக்கல் மலையில் வீரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட தொன்மை வாய்ந்த வீரபாண்டீஸ்வரர் திருக் கோயில், திருமுக்கூடலூரில் மூன்று ஆறுகள் சந்திக்கும் இடத்தில், ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் இருக்கும் மணல் லிங்கம், சோமூரில் இருக்கும் சோமேஸ்வரர் திருக்கோயிலின் கருவறை விமானத்தில், நான்கு கற்களால் ஆன நந்தியின் தத்ரூபக் காட்சி ஆகியவை எங்கள் பகுதியில் இருக்கும் அக்காலக் கட்டடக் கலைக்குச் சிறந்த உதாரணங்கள்.
சுமார் நான்கரை வருடங்களுக்கு முன்னர், சித்திரைத் திருவிழாவுக்கு, சேலம் மாவட்டத்திலுள்ள என் நண்பனின் ஊருக்குப் போயிருந்தேன். அங்கே, பராமரிப்பின்றிப் பாழ்பட்டுக் கிடந்த நாயக்கர் காலத்துக் கோயிலைப் பார்த்தேன். இப்படியான பராமரிப்பற்ற கோயில்களைப் பார்க்கும்போது, மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அழிந்து வரும் கோயில்களின் வரலாறு, சிற்பக் கலைகள் குறித்த சுவடுகளைப் பற்றியும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் நம் வருங்கால சந்ததியினருக்குப் புரிய வைக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. என்னுடன் பணிபுரிந்த பேராசிரியர்கள் சிலர், கொஞ்சம் பொருளுதவி செய்தார்கள். அதற்குப் பிறகு நானும், என்னிடம் படித்த முன்னாள் மாணவர்கள் சிலரும் சேர்ந்து ஒரு குழு அமைத்து, திருக்கோயில்களை மீட்டெடுக்கும் உழவாரப் பணிகளில் இறங்கினோம். எங்களின் முயற்சிகளைப் பார்த்த மாணவர்கள் பலர், எங்களுடைய பணிகளில் ஆர்வமாக இணைந்தனர்.

இன்றைக்கும் நாடெங்கும் புராதன ஆலயச் சின்னங்கள் முறையாகப் பராமரிக் கப்படாமல் உள்ளன. அவற்றை மீட்டெடுக் காமல் இருந்துவிட்டோமேயானால், கலைப் பொக்கிஷங்களாகத் திகழும் மிகப்பழைமை வாய்ந்த திருக்கோயில்கள் பல நம் நாட்டில் இருந்ததற்கான சுவடுகளே இல்லாமல் போய்விடும்.
கோயில்களை புனரமைக்கும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் காரணம் என்ன?
திருக்கோயில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு இளைஞனும் முன்வந்தால், நம் பண்டைய நாகரிகத்தைப் பற்றிய வரலாறுகளை முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நான் கல்லூரியில் வகுப்பெடுக்கும்போது, இறுதியாக 5 நிமிடம் சிதிலமடைந்து கிடக்கும் புராதனச் சின்னங்கள் குறித்து மாணவர்களிடம் பேசுவேன். அதில் ஆர்வம் ஏற்பட்ட மாணவர்கள் என்னோடு சேர்ந்து உழவாரப் பணிகளில் ஈடுபட வருகிறோம் என்றனர். நாட்கள் செல்லச் செல்ல உழவாரப்பணிகளில் ஈடுபட வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இதனால் மாணவர்கள் மீதான என் நம்பிக்கை மென்மேலும் அதிகரித்தது. வருங்காலத்தில் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் இருக்கிற இளைஞர்கள் அனைவரும் இணைந்து, நம் நாட்டின் பாரம்பரியச் சின்னங்களை மீட்டெடுக்க முன்வர வேண்டும். அதற்கு எங்களுடைய குழு ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.

இதுபோன்ற பணிகளைச் செய்வதற்கு யாரெல்லாம் உதவியாக இருக்கிறார்கள்? அதற்குத் தேவையான பணம் எங்கிருந்து கிடைக்கிறது?
விடுமுறை தினங்களில், ஒரு குறிப்பிட்ட ஊரைத் தேர்வு செய்து, அங்கு பாழ்பட்டுக் கிடக்கும் கோயில்களைத் தேடி நானும், எனது முன்னாள் மாணவன் பெரியசாமியும் வெவ்வேறு திசைகளில் பயணிப்போம். அப்படி கிடைக்கப்பெற்ற கோயில்களின் தல வரலாறுகளை ஊர் பெரியவர்களின் உதவியோடு தொகுப்போம். பழங்கால கோயில்கள், கல்வெட்டுகள், அவை குறித்த ஆதாரபூர்வமான தகவல்களை ஆராய்ச்சியாளர் பாலசுப்ரமணியன் அவர்களின் உதவியுடன் திரட்டுவோம். பின்னர் அவ்வூர் தலைவர்களிடம் அனுமதி பெற்று, ஒரு விடுமுறை தினத்தில் என் மாணவர்களை அழைத்துக்கொண்டு, திருக்கோயிலை சுத்தம் செய்தல், வண்ணம் பூசுதல், மரக்கன்றுகள் நடுதல் போன்றவற்றை மேற்கொள்வோம். நடப்பட்ட அந்த மரக்கன்றுகளுக்குத் தொடர்ந்து நீர் விடுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் கோயிலுக்கு விளக்குகள் அமைத்தல் போன்ற வேலைகளுக்கு அவ்வூர் மக்களைத் தயார் செய்து, அவர்களிடம் கோயிலை ஒப்படைத்துவிடுவோம். அதன் பிறகு, திருக்கோயில் குறித்த ஆவணங்களை, இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுப்பி வைப்போம். இப்பணிகளுக்கு உண்டான செலவுகளுக்கு நானும், என் முன்னாள் மாணவன் பெரியசாமியும் ஒரு குறிப்பிட்ட தொகையை, எங்களின் மாத வருமானத்திலிருந்து தனியாக ஒதுக்கிவிடுவோம். எங்களோடு உழவாரப் பணிகளுக்கு வரக்கூடிய மாணவர்கள் தங்களுடைய பயணச் செலவுகள், சாப்பாடு போன்றவற்றை அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். திருக்கோயில்களில் மரக் கன்றுகள் நடுவதற்காக, கரூரைச் சேர்ந்த ராமர் என்கிற பசுமை அன்பர், இலவசமாக மரக் கன்றுகளைக் கொடுக்கிறார். இதில் ஆர்வமுள்ள மற்ற பேராசிரியர்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்கின்றனர். இதற்கு என் மனைவி மற்றும் என் கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் தினேஷ், வினோத் ஆகியோர் பக்கபலமாக இருக்கிறார்கள்.

கோயில் திருப்பணிகளுக்குச் செல்லும்போது தங்களுக்குச் சிரமங்கள் ஏதேனும் நேர்ந்ததுண்டா?
கரூர் மாவட்டம் சங்கரமலைப்பட்டி கிராமத்தில் பொன்னர்-சங்கர் கதையில் வரும் கோயில் ஒன்று இருக்கிறது. அந்தக் கோயிலில் கல்வெட்டுகளைத் தேடியபோது, பாறைகளில் சறுக்கிக் கீழே விழுந்திருக்கிறேன். பின்னர், குண்டலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, நிறைய நாய்கள் துரத்தின. அனைவரும் மரத்தில் ஏறித் தப்பித்தோம். பல இடங்களில் ஊர்த் தலை வர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். ஊர் மக்களும் பல தருணங்களில் எதிர்ப்பு தெரிவிப்பதுண்டு. அதையெல்லாம் தாண்டித்தான், இந்தப் பணிகளைச் செய்துகொண்டிருக்கிறோம்.

உங்களுடைய களப் பணிகளை டிஜிட்டலில் ஆவணப்படுத்துவதன் நோக்கம் என்ன?
அழிந்துவரும் கோயில்களைப் பற்றிய ஆவணப் பதிவுகளை சமூக வலைதளங்கள் மற்றும் யூ-டியூப் போன்ற சேனல்களில் பதிவிடும்போது, இதுபோன்ற உழவாரப் பணிகளில் ஆர்வமுள்ள இன்னும் பலரின் நட்பு கிடைக்கிறது. அந்த நண்பர்களை ஒருங்கிணைத்து, அழிந்துவரும் திருக்கோயில்களை மீட்டெடுக்க முடியும். கோயில்களின் வரலாறுகளைப் பற்றிய வீடியோ பதிவுகளை வெளியிடும்போது, அது குறித்துத் தெரிந்துகொள்ள இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் மூலம் கோயிலுக்குச் செல்லும் பழக்கம் அதிகரிக்கிறது. மக்களின் நடமாட்டம் இருந்துகொண்டே இருந்தால்தான் அரசாங்கமும் அந்தத் திருக்கோயிலை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கிறது.
-நம்பிக்கைக்கு நல்லது நடக்கட்டும்!
- ம.மாரிமுத்து
படங்கள்: சே.பெரியசாமி

பேராசிரியர் கோபிநாத் பேசிய வீடியோவினைக்காண, இங்கு இருக்கும் QR-code -ஐ ஸ்கேன் செய்யுங்கள்.