தொடர்கள்
Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 18

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 18
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 18

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 18

வாசகர்கள் நிறையப் பேர் தங்களோட இன்டர்வியூ அனுபவங்களை வாட்ஸ்-அப் மெஸேஜ் மூலமாவும் குரல் பதிவாகவும் பகிர்ந்துட்டு வராங்க. ஒவ்வொண்ணும் செம சுவாரஸ்யம்! பலருக்கும் பயன்படுமேன்னு, அதுல முக்கியமான சிலதை மட்டும் இங்கே கொடுக்க விரும்பறேன்.

போன இதழ்ல சென்னை, விருகம் பாக்கத்தைச் சேர்ந்த வாசகர் ரமேஷ்குமார் பகிர்ந்துகிட்ட நேர்காணல் அனுபவத்தை ஒரு புதிர் மாதிரி பின்குறிப்புல கொடுத்திருந்தேன். யாராவது அதுக்கான விடையை யோசிச்சுப் பார்த்தீங்களா?

ரமேஷ்குமார் ஒரு இன்டர்வியூவை அட்டெண்ட் பண்ணப் போயிருக்கார். நல்ல வெயில் நேரம். இவரை இன்டர்வியூ பண்ணின அதிகாரி, ‘‘களைப்பா, சோர்வா இருக்கீங்களே! முதல்ல இந்தத் தண்ணியைக் குடிச்சு, ரிலாக்ஸ் பண்ணிக்குங்க. அப்புறம் நம்ம இன்டர்வியூவைத் தொடங்குவோம்’’னு சொல்லிட்டு, தன் பக்கத்துல இருந்த ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்து மேஜை மேல ரமேஷுக்கு முன்னால வெச்சாரு. பாட்டில் ஃபுல்லா, கழுத்து வரைக்கும் தண்ணி இருந்துது. பிளாஸ்டிக் மூடி இறுக்கமா மூடியிருந்துது. ரமேஷ் அதை எடுத்துக் குடிக்கப் போகும்போது, “கொஞ்சம் இருங்க. மூடியைத் தொடாம நீங்க இந்த தண்ணியைக் குடிக்கணும்”னாரு அதிகாரி.

‘சரிதான், ஆட்டம் இப்பவே ஆரம்பமாயிடுச்சு!’ன்னு புரிஞ்சுடுச்சு ரமேஷுக்கு. தன்னோட புத்திசாலித்தனத்துக்கு அந்த அதிகாரி வைக்கிற டெஸ்ட் இதுன்னு ரமேஷுக்குத் தெரிஞ்சதும், கொஞ்சம் ஜெர்க் ஆயிட்டார். கொஞ்ச நேரம் அவருக்கு எந்த வழியும் இருக்கிறதா தெரியலை. அப்புறம், சமாளிச்சுதான் பார்ப்போம்னு முடிவு பண்ணி, “சார், நீங்க என்னை டெஸ்ட் பண்றீங்களோன்னு தோணுது. உண்மையில், இது காலி பாட்டில்! இதுல ஒரு சொட்டுகூடத் தண்ணி இல்லை. அப்படித்தானே சார்?”னு கேட்டு சிரிச்சாராம்.

“இல்லை ரமேஷ்! இதுல ஃபுல்லா தண்ணி இருக்கு. நீ குடிக்கலாம்; ஆனா, மூடியைத் திறக்காம!”ன்னார் அதிகாரி.

“இல்லை சார், நிச்சயமா சொல்வேன். இதுல தண்ணி இல்லை. எந்த நிலையிலயும் நான் ஏமாறாம உஷாரா இருக்கேனான்னு பார்க்கிறதுக்காக எனக்கு நீங்க வைக்கிற டெஸ்ட் இதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்!”னார் ரமேஷ்.

“ரமேஷ்! பி சீரியஸ். இதுல ஃபுல்லா தண்ணி இருக்கு. கழுத்தளவு இருக்கிறதால தண்ணி இல்லாத மாதிரி உனக்குத் தோணுது. பாட்டிலை கையில் எடுத்துப் பாரு. தண்ணி இருக்கா, இல்லையானு தெரியும்!”னார் அதிகாரி.

“ஒண்ணைப் பார்க்கும்போதே அதன் சாதக, பாதகங்கள், சாத்தியக்கூறுகள் எல்லாத்தையும் 100 சதவிகிதம் கச்சிதமா என்னால யூகிக்க முடியும், சார்! இந்த பாட்டில் காலி பாட்டில்தான்! இதுல தண்ணி இல்லை. அதை என்னால உறுதியா சொல்ல முடியும்!”னார் ரமேஷ்.

அவரை இன்டர்வியூ செய்த அதிகாரி மெர்சலாயிட்டார். “ரமேஷ்! நீங்க ஏமாந்துட்டீங்க. ஐ மீன், நாங்க வெச்ச டெஸ்ட்ல நீங்க தோத்துட்டீங்கன்னுதான் சொல்வேன். நீங்க நினைச்சது தப்பு. இங்க பாருங்க, இதுல தண்ணி இருக்கவே செய்யுது”ன்னு சொன்னவர், பாட்டிலைத் திறந்து அருகில் இருந்த டம்ளரில் ஊற்றிக் காண்பித்தார்.

அதை எடுத்துக் குடிச்ச ரமேஷ், “இல்லை சார், நீங்க வெச்ச டெஸ்ட்ல நான் ஜெயிச்சுட்டேன்!”னு சொல்லிச் சிரிச்சாராம். அதிகாரி ஸ்டன்னா யிட்டார். உடனே சுதாரிச்சு, அவருமே சேர்ந்து சிரிச்சாராம்.
அப்புறம் நடந்த சம்பிரதாயமான கேள்விகள்லயும் நல்லபடியா ஆன்ஸர் பண்ண, தனக்கே அந்த வேலை கிடைச்சுதுன்னு சொன்னார் ரமேஷ்.

கிட்டத்தட்ட இதே மாதிரியான அனுபவம்தான் கோவை மனோஜுக்கு.

அவரை நேர்காணல் செஞ்ச அதிகாரி, “மனோஜ், இன்டர்வியூவை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, உனக்கு ஒரு சின்ன டெஸ்ட்! சவால்னே வெச்சுக்கோயேன். இப்ப... நீ ஒண்ணு சொல்லி, அதை என்னைச் செய்ய வைக்கணும். ட்ரை பண்ணு, பார்க்கலாம்!”னாராம்.

கொஞ்சம் தயங்கிய மனோஜ், அடுத்த விநாடி முகத்தைக் குழப்பமா வெச்சுக்கிட்டு, “பார்டன் மி, சார்! நான் சரியா கவனிக்கலே! ஸாரி, கேன் யூ ரிப்பீட் யுவர் கொஸ்டின்?”னு கேட்டாராம்.
அந்த அதிகாரி தனது சவால் கேள்வியை மீண்டும் ஒருமுறை கேட்க, “உங்க சவால்ல நான் ஜெயிச்சுட்டேன்தானே, சார்?”னு கேட்டுப் புன்னகைச்சாராம் மனோஜ். இது எப்படி இருக்கு!
ஷ்யாமான்னு மதுரை வாசகி, வாட்ஸப்ல தன்னோட இன்டர்வியூ அனுபவத்தை அனுப்பியிருந்தாங்க.

துறை சார்ந்த, திறன் அறி தொடர்பான வழக்கமான கேள்விகளையெல்லாம் கேட்டு முடிச்சப்புறம், “கடைசியா ஒரு கேள்வி. நாளைக் காலையில் கண்விழிச்சு எழும்போது, நீ கர்ப்பமா இருப்பதை உணர்றே! அப்போ உன்னோட ரீயாக்‌ஷன் என்னவா இருக்கும்?”னு கேட்டாங்களாம்.

பொதுவா, திருமணம் ஆகாத எந்தவொரு பெண்ணுக்கும் இந்தக் கேள்வி அதிர்ச்சியூட்டும்; சங்கடப்படுத்தும். யாரும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பமாட்டாங்க. கொஞ்சம் டென்ஷனாகி, கோபப்படக்கூட செய்வாங்க. ஆனா, ஷ்யாமா சட்டுனு, “அன்னிக்கு நான் ஆபீசுக்கு லீவு போடுவேன், சார்”னு சொன்னாங்களாம்.

“லீவா! எதுக்கு?”ன்னு அதிகாரிகள் புரியாம கேக்க, “ஆமா சார், இந்த மகிழ்ச்சியான செய்தியை என் கணவர்கிட்டே சொல்லி, அந்த நாளை அவரோடு சேர்ந்து நான் சந்தோஷமா கொண்டாட வேண்டாமா?”னு கேட்டாங்களாம்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 18

“வாட்?! உங்களுக்குக் கல்யாணமாயிடுச்சா? ஆனா, உங்க ரெஸ்யூம்ல அன்மேரீட்னுதானே கொடுத்திருக்கீங்க?”னு அதிகாரிகள் கேக்கவும், “ஆமா சார், நான் திருமணம் ஆகாதவள்தான். ஆனா, நான் கர்ப்பமா இருக்கிறதா நீங்க கற்பனையா ஒரு சிச்சுவேஷனைச் சொல்லி கேள்வி கேக்கறப்போ, நானும் எனக்குத் திருமணம் ஆனதா கற்பனையா ஒரு கணவரை சிருஷ்டிச்சுக்கலாம்தானே?”ன்னு புன்சிரிப்போடு கேட்டாங்களாம்.

அந்த வேலை அவங்களுக்கே கிடைச்சு, இப்பவும் அதிலே நல்ல சம்பளத்தோடு தொடர்றதா சொன்னாங்க.

இவங்க அனுபவங்களேர்ந்து நாம கத்துக்க வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்! வேலையோ, வாழ்க்கையோ… எதுல ஜெயிக்கணும்னாலும், எதிராளியின் கோணத்திலிருந்து பார்த்து, அவங்களை கன்வின்ஸ் பண்ற மாதிரி பதில் சொல்லி, உறவுகளை பலப்படுத்த வேண்டியது அவசியம்; நிதானமும் பொறுமையும் முக்கியம்; டென்ஷன் கூடவே கூடாது. குறிப்பா, நம்மை கேலி செய்யற மாதிரியோ, காயப்படுத்தற மாதிரியோ யாரேனும் கேள்வி எழுப்பினா, அதுக்காகக் கோபப்படாம ஒரு புன்சிரிப்போட அதை எதிர்கொள்ற பக்குவத்தை வளர்த்துக்கணும்.

வளர்த்துப்போம்; வளர்வோம்! வர்ட்டா?

- இன்னும் பேசலாம்

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 18

கவிப்பேரரசு வைரமுத்து ,இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே…

** பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு? ஆசை துறந்தால் அகிலம் உனக்கு!

**  மனசு பின்னாடியே மனுஷன் போனான்னா, அவன் மிருகம்; மனுஷன் பின்னாடியே மனசு வந்துச்சுன்னா, அவன் தெய்வம்!

** அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா; மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா!

** விடியாத இரவென்று எதுவுமில்லை; முடியாத துயரென்று எதுவுமில்லை..!

** வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு; தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு!

சவால்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 18



ஐ.ஐ.எம். இன்டர்வியூ ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வியைத்தான் இந்த இதழ் சவாலாகக் கொடுத்துள்ளேன். எங்கே, பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

“உங்களிடம் இதில் மூன்று கொடுக்கப்பட்டால், உங்களிடம் மூன்று இருக்கும்; இரண்டு கொடுக்கப்பட்டால், இரண்டு இருக்கும். ஆனால், இதில் ஒன்றே ஒன்று மட்டும் கொடுக்கப்பட்டால், உண்மையில் உங்களிடம் இது இல்லை என்றே பொருள்! அது என்ன?”

என்ன, கண்டுபிடித்துவிட்டீர்களா? உங்கள் பதிலை உடனே 97911 21738 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸப்பில் அனுப்புங்கள். குரல் பதிவாகவும் அனுப்பலாம்! பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

பரிசு யாருக்கு?

1 முதல் 9 வரையிலான எண்கள் ஒவ்வொன்றை யும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி, மூன்று இலக்க எண்கள் மூன்று எழுத வேண்டும்; முதல் எண்ணைப் போல் இரண்டாவது எண் இரண்டு மடங்கும், மூன்றாவது எண் மூன்று மடங்கும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. உ-ம்: 192, 384, 576.

இந்த உதாரணம் தவிர, இன்னும் சில ‘செட்’கள் இதோ…

அ) 219, 438, 657 ஆ) 273, 546, 819 இ) 327, 654, 981

இந்த மூன்று விடைகளில் ஒன்றைச் சரியாகக் கணித்து அனுப்பினாலும் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு என்று சொல்லியிருந்தேன். ஆனால், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மூன்று விடைகளையுமே சரியாகக் குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். (மற்றும் வாட்ஸப் மூலமாகவும்) அனுப்பியிருந்தார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். சரியான விடைகளை அனுப்பியவர்களில் சென்னை, மாதம்பாக்கத்தைச் சேர்ந்த டி.பானுமதி என்ற வாசகிக்கு ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் எழுதிய, ‘உறக்கத்திலே வருவதல்ல கனவு’ என்ற புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.