தொடர்கள்
Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 27

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 27
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 27

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 27

னி நல்ல விஷயங்களையே அதிகம் பகிரணும்னு ஆசை. ஆனா, என்ன செய்யறது… ‘அங்கே நந்தவனம் இருக்கு; அழகான பூச்செடிகள் இருக்கு; காத்து சுகமா வீசுது. அங்கே போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வந்தா மனசு லேசாகும்’னு கை காட்டுற அதே நேரத்துல, ‘இந்தப் பக்கம் போகாதீங்க. சாக்கடை இருக்கு; பெரிய பள்ளம் இருக்கு; விஷ ஜந்துக்களும் உலவிக்கிட்டு இருக்கு.

ஜாக்கிரதை!’னு கெட்ட விஷயங்களையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கை பண்ண வேண்டியிருக்கே?

ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர்ல புத்தம் புதுசா டிஸ்டெம்பர் அடிச்சு, வெளிப்புறத்தை நல்லா பெருக்கித் துடைச்சு சுத்தமா வெச்சிருந்தா, அங்கே அசுத்தம் பண்ண, குப்பை போட யாருமே தயங்குவாங்க. ஆனா, யாராவது ஒரு அராத்துப் பேர்வழி இங்கிதமே இல்லாம அங்கே முதல் குப்பையை எறிஞ்சுட்டுப் போனான்னு வைங்க, அவ்வளவுதான்… அதுக்கப்புறம் கிடுகிடுன்னு அங்கே மலை மாதிரி குப்பை சேர்ந்துடும். ஒரு அராத்து பண்ற காரியம், மத்த நாகரிகமானவங்களையும் அவனைப் போலவே அராத்து ஆக்கிடுது. இதுதாங்க பொதுவா நம்மளோட மனோபாவம்.

கெட்ட விஷயங்களுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். சட்டுனு புடிச்சுக்கும். அதுவே நல்ல விஷயங்களைப் படிச்சுப் படிச்சுப் பத்து முறை, நூறு முறை சொன்னாதான் மண்டைல ஏறும். இதுக்காகத்தான் நல்லதையே பார்க்கணும், நல்லதையே கேக்கணும், நல்லதையே பேசணும், நல்லதையே பகிரணும்னு சொல்லி வெச்சிருக்காங்க நம்ம பெரியவங்க. 

பிறருக்கு உதவுவதில் நமக்குக் கிடைக்கிற ஆத்ம திருப்தியே அலாதியானது. உதவும் மனப்பான்மை பற்றி யூடியூப்ல தேடினா, நிறைய வீடியோக்கள் காணக் கிடைக்குது. அதைப் பார்க்கிறப்பவே அவ்ளோ சந்தோஷமா இருக்கு. மனசு நிறைஞ்சு போகுது.

நாம ஷேர் பண்ற ஒரு நல்ல விஷயம், இன்னும் அதுபோல பத்து நல்ல விஷயங் களுக்கு வழிவகுக்கும்னா அது நமக்கும் சந்தோஷம்தானே?

கம்ப்பா நாகேஸ்வரராவ்னு எனக்கொரு ஃபேஸ்புக் நண்பர் உண்டு. ஆந்திராக்காரர். உளவியல் பேராசிரியர். 400-க்கும் மேற்பட்ட டி.வி. நிகழ்ச்சிகள்ல கலந்துகொண்டு பேசியிருக்கார். பல நாடுகள்ல ஊக்க உரைகள் நிகழ்த்தியிருக்கார். அவர் தன் ஃபேஸ்புக்ல போட்டிருந்த ஒரு பதிவு என்னை நெகிழ வெச்சுடுச்சு.

ஒரு மேஜர் தலைமைல, ராணுவ வீரர்கள் பதினஞ்சு பேர் ஹிமாலயா நோக்கிப் போயிட்டிருந்தாங்களாம். அங்கே அவங்க ஒரு கேம்ப்ல தங்கி மூணு மாசம் வேலை செய்யணும். பல்லைக் கட்டுற குளிர்; உடம்பை உதறவைக்கும் சில் கிளைமேட்! ரொம்பச் சிரமப்பட்டு மலை ஏறிட்டிருந்தாங்க அவங்க.

மணிக்கணக்கா நடந்துட்டிருந்ததுல செம கால் வலி! ‘இந்த நேரத்துல, சூடா ஒரு டீ குடிச்சா எவ்ளோ நல்லாருக் கும்’னு எல்லார் மனசுக்குள்ளும் ஒரு நப்பாசை. அதுக்கேத்தாப்ல, வழியில சின்ன பெட்டிக் கடை மாதிரி ஒண்ணு தட்டுப்பட்டுது. ‘ஆஹா, அது டீக்கடையா இருக்கக்கூடாதா?’ன்னு ஏங்கிக்கிட்டே, அதை நெருங்கினப்பதான் தெரிஞ்சுது, அது இழுத்து மூடப்பட்டிருக்குன்னு. “ஹூம்… நமக்கு அதிர்ஷ்டம் இல்லை. சரி, வாங்க… இங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து ரெஸ்ட்டாவது எடுத்துட்டுப் போகலாம்”னார் மேஜர்.

அப்போ அந்த குரூப்ல ஒருத்தர், “சார், இதைப் பார்த்தா டீக்கடை மாதிரிதான் தெரியுது. அன்-டைமா இருக்கிறதால கஸ்டமர் யாரும் இனிமே வரமாட்டாங்கன்னு நினைச்சு அவங்க இதைப் பூட்டிட்டுப் போயிருக்கலாம். உள்ளே டீ தயாரிக்க எல்லாம் இருக்கும்னு நினைக்கிறேன். அட் லீஸ்ட், பிளாக் டீயாச்சும் நாம போட்டுக் குடிக்கலாம். நான் வேணா பூட்டை உடைச்சுப் பார்க்கவா?”ன்னு கேட்டார்.
மேஜருக்கு தர்மசங்கடமான நிலைமை. கொஞ்சம் யோசிச்சவர், “சரி, பூட்டை உடைங்க”ன்னு உத்தரவு கொடுத்தார்.

அவங்க அதிர்ஷ்டம், உள்ளே டீ தயாரிக்கத் தேவையான எல்லாமே இருந்தது. கூடவே, பிஸ்கட் பாக்கெட்டுகளும்!

எல்லாரும் பிஸ்கட்டுகளைத் தின்னு, டீ போட்டுக் குடிச்சுட்டு, உற்சாகமா புறப்படத் தயாரானாங்க.

அப்ப மேஜர், “இதப் பாருங்க! நாம ஒண்ணும் திருடங்க இல்லே. பாரத மாதாவின் பிள்ளைங்க. இந்தத் தேசத்தைக் காக்கிற புனிதப் பணியில் இருக்கிற நாம, இப்படிப் பூட்டிக் கிடக்கிற கடையை உடைச்சு, இருக்கிறதை காலி பண்ணிட்டு, கொள்ளைக்காரங்க மாதிரி கிளம்பிப் போறது தர்மமில்லே! அதனால, கொஞ்சம் இருங்க”ன்னு சொல்லிட்டு, தன்னுடைய பர்ஸ்லேர்ந்து ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து, அங்கே மேஜைல, சர்க்கரை டப்பா கீழே வெச்சுட்டு, வெளியே வந்தார். கதவைப் பழையபடியே இழுத்து மூடிட்டு, எல்லாரும் கிளம்பினாங்க.

அப்புறம் மூணு மாசம், அவங்க தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை முடிச்சுட்டு, அங்கிருந்து புறப்படத் தயாரானாங்க. போன அதே வழியில் அவர்கள் திரும்ப, வழியில் மறுபடியும் அதே டீக்கடை. இப்போ அது திறந்திருந்தது.

அந்தக் கடை ஓனர், வயசானவர். திடீர்னு தன் எதிர்ல பதினாறு கஸ்டமர்கள் வந்து நிக்கவும், பரபரப்பாகி, அவங்களை வரவேற்று உட்காரச் சொன்னார். எல்லாருக்கும் பிஸ்கட், டீ வழங்கினார்.

‘இப்படி யாருமே இல்லாத இடத்துல டீக்கடை போட்டிருக்கீங்களே, உங்களுக்கு வியாபாரம் ஆகுதா? குடும்ப வாழ்க்கை எப்படிப் போகுது?’ன்னு அவர்கிட்டே பேச்சுக் கொடுத்தார் மேஜர்.
அவரும் மனம் விட்டு இவங்ககிட்டே தன் கதைகளைப் பகிர்ந்துகிட்டார். ‘கடவுள் புண்ணியத்துல எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு’ன்னார்.

அப்போ ஒரு சோல்ஜர் கேட்டார்... “கடவுள் மேல இவ்வளவு பக்தி வெச்சிருக்கீங்க. ஆனா, கடவுள் இருக்கிறது உண்மைன்னா, அவர் ஏன் உங்களை இப்படி ஒரு அத்துவானக் காட்டுல கஷ்டப்படும்படி வெச்சிருக்கணும்?”

இதைக் கேட்டதும் அந்த டீக்கடைப் பெரியவர் பதறிட்டார். “அப்படிச் சொல்லா தீங்க ஐயா! கடவுள் நிச்சயம் இருக்கார். இதுக்கு உதாரணமா ஒரு சம்பவம் சொல் றேன்”னவர், அந்த நிகழ்ச்சியை நடுக்கமும் நெகிழ்ச்சியுமா விவரிக்க ஆரம்பிச்சார்.

“மூணு மாசத்துக்கு முன்னால, தீவிரவாதிங்க சில பேர் எதுக்காகவோ என் பையனைக் கடத்திக்கொண்டு போய் வெச்சுக்கிட்டு, அடிச்சு உதைச்சிருக்காங்க. அப்புறம் கொண்டுவந்து இங்கே போட்டுட்டுப் போயிட்டாங்க.

நான் பதறிப்போய், கடையை மூடிட்டு, என் பையனைக் கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனேன். டாக்டருங்க எழுதிக் கொடுத்த மருந்தை வாங்க, என்கிட்ட பணம் இல்லை. எனக்குக் கடன் கொடுக்கவும் யாரும் இல்லை. அப்போ எனக்கு இருந்த ஒரே துணை கடவுள்தான். அவர்கிட்டே என் நிலைமையைச் சொல்லிக் கதறி அழுதேன். பையனை ஆஸ்பத்திரில விட்டுட்டு, பணத்துக்கு என்ன பண்றதுங்கிற கவலை யோடயும் துயரத்தோடயும் மறுபடியும் இங்கே வந்தேன்.

ஐயா, சொன்னா நம்ப மாட்டீங்க. என் பிரார்த்தனை யைக் கேட்டுக் கடவுள் அன்னிக்கு என் கடைக்கு வந்திருந்தார். என் மேஜை மேல முழுசா ஆயிரம் ரூபா வெச்சுட்டுப் போயிருந்தார்.
அந்த ஆயிரம் ரூபாயோட மதிப்பை என்னால வார்த்தைல விவரிக்க முடியாதுங்க. அந்தப் பணத்தைக் கொண்டு என் பையனுக்கு சிகிச்சை அளிச்சு, இன்னிக்கு அவன் நல்லா இருக்கான். கடவுள் இருக்கார்; நிச்சயம் இருக்கார். அவ்வளவுதான் சொல்வேன்!”

பெரியவர் சொல்லி முடிச்சதும், பதினஞ்சு சோல்ஜர்களும் மேஜரைப் பார்த்தாங்க. அவர் கண் ஜாடை காட்டி, ‘எதையும் சொல்லாதீங்க’ன்னு உத்தரவிட்டார்.

அப்புறம் எழுந்து, பெரியவரை அன்போடு அணைச்சுக்கிட்டு, “எனக்குத் தெரியும் தாத்தா, நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. கடவுள் இருக்கார். சத்தியமா இருக்கார். உங்க கை மணத்தில் டீ அபாரமா இருந்தது. இந்தாங்க”ன்னு சொல்லி, தாங்கள் சாப்பிட்ட பிஸ்கட்டுக்கும் டீக்கும் ரூபாய் கொடுத்தார்.

அப்போ அவர் கண்கள் ஈரத்தில் நனைஞ்சிருந்ததை, அந்தப் பதினஞ்சு பேரும் கவனிக்கத் தவறலை. அப்புறம் அவங்க அந்தப் பெரியவர் கிட்டே நெகிழ்ச்சியோடு விடைபெற்றுக் கிளம்பினாங்க.
இது கற்பனைக் கதை இல்லை. காஷ்மீரில் உள்ள மார்க்கம் - கூப்வாரா செக்டார் பகுதியில் நடந்த உண்மைக் கதை.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 27

இந்தக் கதை நமக்குச் சொல்ற நீதி என்ன? நம்முடைய செயல்கள் எப்போதும் நேர்மையானவையா இருக்கட்டும்; நம்மால முடிஞ்சவரைக்கும் யாருக்கேனும் உதவிக்கிட்டே இருப்போம். யாரோ சிலரின் மனசில் நாமும் கடவுளா பதிஞ்சிருப்போம்.

இதைத்தான் கவியரசு கண்ணதாசன் ரொம்ப காலத்துக்கு முன்னேயே அழகா பாடி வெச்சாரு... ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம், வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்...’னு!
கடவுள் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. முதல்ல மனுஷனா இருக்க ட்ரை பண்ணுவோம், பாஸ்!

பரிசு யாருக்கு?

சென்ற இதழில் 25 சிறு கட்டங்கள் கொண்ட ஒரு சதுரம் கொடுத்து, அதில் கேள்விக்குறியிட்ட இடத்தில் என்ன எண் வரவேண்டும் என்று கேட்டிருந்தேன். எந்த வரிசையில் எத்தனையாவது கட்டம் என்பதைக் குறிக்கும்படியாகத்தான் மற்ற எண்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த வகையில், ஐந்தாவது வரிசையில் ஐந்தாவது கட்டத்தில் இடம்பெற வேண்டிய எண் 55.

இந்தச் சரியான விடையை எஸ்.எம்.எஸ். மூலமும் வாட்ஸப் மூலமும் பதில் அனுப்பியிருந்தவர்களில், வந்தவாசியைச் சேர்ந்த ஏ.சந்திரசேகர் என்ற வாசகருக்கு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் எழுதிய ‘உறக்கத்திலே வருவதல்ல கனவு!’ என்ற புத்தகம் பரிசாக அனுப்பிவைக்கப்படுகிறது.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 27

இளைஞர்களுக்கு, உலகின் தலைசிறந்த முதலீட்டு மேதை, வாரன் பஃபெட் சொன்ன யோசனைகளில் ஐந்து மட்டும் இங்கே...

தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிடாதீர்கள். இனி ஒருபோதும் உடைத்தெறியவே முடியாத இரும்புச் சங்கிலிகளாக ஆகும் வரையில், அவை அழகான தங்கச் சங்கிலிகளாகத்தான் உங்களுக்குத் தோன்றும். எனவே, ஏமாந்துவிடாதீர்கள்!

உங்களிடம் ஒரே ஒரு கார் இருக்கிறதென்றால், அதை எவ்வளவு அக்கறையாகக் கவனித்துக்கொள்வீர்கள்?! சரியான இடைவெளியில் ஆயில் மாற்றுவது, சர்வீஸுக்கு விடுவது, பாதுகாப்பாக ஓட்டுவது எனப் பார்த்துப் பார்த்துச் செய்வீர்கள் அல்லவா? உங்கள் உடம்பும் மனசும்கூட வாழ்நாள் முழுக்க ஒன்றே ஒன்றுதான். அதுதான் உங்களின் முக்கியச் சொத்து. அதை அக்கறையாகக் கவனித்துக்கொள்ளுங்கள்.

*  நமக்கு ஒன்று தெரியவில்லை என்பது தவறில்லை; நமக்கு அது தெரியாது என்பதே தெரியாமல் இருப்பதுதான் தவறு!

   நேர்மை என்பது விலைமதிப்பான பரிசுப் பொருள். அதை மலிவானவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது!

  நற்பெயர் எடுக்க இருபது ஆண்டுகள் ஆகும்; அதை அழிக்க வெறும் ஐந்து நிமிடங்கள் போதுமானது. இது புரிந்தால், நீங்கள் சரியாகச் செயல்படுவீர்கள்!

சவால்!

11223344 – இந்த எட்டு இலக்க எண்ணை வேறு ஒரு எட்டு இலக்க எண்ணாக மாற்றி அமையுங்கள். நிபந்தனை: இரண்டு 1-களுக்கு இடையில் ஒரு எண், 2-களுக்கு இடையில் இரண்டு எண்கள், 3-களுக்கு இடையில் மூன்று எண்கள், 4-களுக்கு இடையில் நான்கு எண்கள் இருக்கும்படியாக அந்த எட்டிலக்க எண் அமைய வேண்டும்.

உங்கள் விடையை உடனே 97911 21738 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸப்பில் அனுப்புங்கள். குரல் பதிவாகவும் அனுப்பலாம். புத்தகப் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.