மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள் - நீலி - 2

Neeli amman: Divine human Gods stories - Aval Vikatan
News
Neeli amman: Divine human Gods stories - Aval Vikatan

தெய்வ மனுஷிகள்வெ.நீலகண்டன் - படங்கள்: ரா.ராம்குமார் - ஓவியம்: ஸ்யாம்

பெரிங்கோட்டு நாயர் வகையறாவுலேயே நீலிக்கு நிகரான அழகி யாரும் கிடையாது.  பௌர்ணமி நிலா மாதிரி வட்டமான முகவெட்டு. இடுப்புக்குக் கீழே தொங்கியாடுற அடர்ந்த தலைமுடி.  நவ்வாப்பழ நெறம். மின்னலைச் சொடுக்கி விடுறமாதிரி சுண்டி இழுக்கிற பார்வை. 16 வயசு. என்னதான் ஆளு வளர்ந்தாலும் நீலிக்கு விவரம் போதாது... வெள்ளந்தியாவே திரிஞ்சா.   

 Neeli amman: Divine human Gods stories - Aval Vikatan
Neeli amman: Divine human Gods stories - Aval Vikatan

அப்பா கிடையாது. நீலிக்கு நாலு வயசாகும்போது மனுஷன் போய்ச் சேந்துட்டாரு. அம்மைக்காரி  கொஞ்ச காலம் வேலைவெட்டிக்குப் போயி கிடைச்ச வருமானத்துல குடும்பத்தை ஓட்டுனா. ஒரு கட்டத்துக்கு மேல வண்டி ஓடலே. நீலியைக் கையில புடிச்சுக்கிட்டுப் பொறந்த வீட்டுக்கே வந்து சேந்துட்டா. 

பெரிங்கோட்டு நாயருங்க, ரொம்பவே ஆச்சாரம் பாக்குறவங்க. சாதியிலயும் கறாரா இருப்பாங்க. அந்த ஊர்ல நிறைய கணியர் குடும்பங்க இருந்துச்சு. மந்திரம் பண்றது, கூத்து நடத்துறதுன்னு எளிய தொழில்களைச் செஞ்சு வாழ்ந்துக்கிட்டிருந்த அந்த மக்களோட நாயர் குடும்பங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நல்லது, கெட்டத்துக்குக்கூடக் கை நனைக்க மாட்டாக.  நீலியோட குடும்பமும் அப்படியான மடியான குடும்பம்தான்.

நீலிக்கு ஒரு மாமங்காரன் உண்டு. அவனுக்கு அக்காமக மேல  கொள்ளைப்பாசம். அவன் பொண்டாட்டியோ சதிகாரி. அவளுக்கு நீலியைச் சுத்தமாப் பிடிக்காது. ஊர்க்காரப் பொம்பளைக, நீலியோட அழகைப் பத்திப் பேசும்போதெல்லாம் அத்தைக்காரிக்கு உடம்பெல்லாம் எரியும். ‘இவளையும் இவ அம்மைக்காரியையும் எப்படியாவது இந்த வீட்டைவிட்டு வெரட்டிப்புடணும்’னு கங்கணம் கட்டிக்கிட்டுத் திரிஞ்சா. யாரும் இல்லாத நேரத்துல நீலியை வையிறது, அடிக்கிறதுன்னு அவ வேலை எல்லை மீறிப் போயிருச்சு. புருஷங்கிட்டயும் இல்லாதது பொல்லாதது சொல்லி நீலி மேல வெறுப்பை உண்டாக்கிட்டா. ஆனா, நீலி எதையும் அவ அம்மைக்கிட்டயோ, பாட்டிக்கிட்டயோ சொல்லமாட்டா.

ஒருநா, நீலியோட அம்மையும் பாட்டியும் வயக்காட்டுக்கு வெதை வெரவ போயிட்டாக. மாமங்காரன் வேலைக்குப் போயிட்டான். நீலியும் அத்தைகாரியும் மட்டும்தான் வீட்டுல இருந்தாக. ‘நீலியையும் அவ அம்மையையும் வீட்டைவிட்டு  விரட்ட இதுதான் சந்தர்ப்பம்’னு முடிவு பண்ணிட்டா அத்தைக்காரி.

ஒரு கொட்டாங்கச்சியை நீலிக்கிட்ட குடுத்து, ``பக்கத்துல இருக்கிற கணியர் வீட்டுல போய் நெருப்புக்கங்கு வாங்கிட்டு வாடி’'ன்னு அனுப்புனா. நீலிதான் வஞ்சம் அறியாதவளாச்சே... ‘அத்தைக்காரி ஏதோ  சூழ்ச்சி பண்றா’ங்கிறதை அறியாம கொட்டாங்கச்சியோட கணியர் வீட்டுக்குப் போனா. கணியர் பொஞ்சாதிக்கு சந்தோஷமாப் போச்சு. ‘நாயருங்க நம்ம வூட்டு நிழலைக்கூட மிதிக்க மாட்டாக... இந்தப் பொண்ணு நம்மகிட்ட கங்கு வாங்க வந்திருக்காளே’ன்னு உக்கார ஆசனம் எடுத்துப்போட்டுட்டு, உள்ளே போயி கொட்டாங்கச்சி நிறைய தீக்கங்கு அள்ளிக்கிட்டு வந்து குடுத்தா.  

Neeli amman: Divine human Gods stories - Aval Vikatan
Neeli amman: Divine human Gods stories - Aval Vikatan

சந்தோஷமா வாங்கிட்டு வீட்டுக்கு வந்துகிட்டிருந்தா நீலி. அப்போ, ஒரு கங்கு கொட்டாங்கச்சியில இருந்து தவறி நீலி விரல்ல பட்டுருச்சு. பாவம் புள்ளை... ` எச்சில் பட்டா இதமா இருக்குமே'னு சூடுபட்டக் கையை வாயில வெச்சுக்கிட்டே வந்தா.
 
அத்தைக்காரிக்கு வாய்ப்பு அமைஞ்சு போச்சு. ‘`தீக்கங்கு வாங்கிட்டு வரச்சொன்னா, கணிய வீட்டுல தீனி வாங்கித் தின்னுட்டா வாரே... அந்தாளுக வீட்டுல அன்னம் தண்ணி புழங்குனா தெய்வக்குத்தம் ஆயிருமே. நம்ம குல மானத்தையே வாங்கிட்டியேடி. தீட்டுப்பட்ட கழுதே’'னு வார்த்தை பாக்காம வைய ஆரம்பிச்சுட்டா. அகப்பைக் கம்பால அடிக்கவும் செஞ்சா. அப்போன்னு பாத்து மாமங்காரனும் வந்துட்டான். அவனைக் கண்டவுடனே, சத்தம் போட்டு ஒப்பாரி வெச்சு அழுவ ஆரம்பிச்சுட்டா அத்தைக்காரி.

‘`அப்பவே இந்தச் சனியங்களை ஒழிக்கச் சொன்னேன் கேட்டியளா... தீக்கங்கு வாங்கிட்டு வரச்சொல்லி அனுப்புனா, கணிய வீட்டுலயே தீனி வாங்கித்தின்னுட்டு கையைச் சப்பிக்கிட்டு வந்து நிக்குறா. இவளையும் இவ ஆத்தாளையும் முதல்ல வீட்டைவிட்டுத் துரத்துங்க. நம்பூதிரிமாரைக் கூட்டியாந்து சாக்கியம், சடங்கெல்லாம் செய்யணும். இல்லேன்னா, இந்த வீடு வெளங்காது.  நான் எம் அப்பன் வீட்டுக்குப் போயிருவேன்’'னு அவ பெட்டியைத் தூக்க, மாமங்காரனுக்கு வேற வழி தெரியலே. கெடந்த ஒரு விறாக்கட்டையை எடுத்து நீலியை விளாச ஆரம்பிச்சுட்டான். அடின்னா அடி. 

‘`நான் ஒரு தப்பும் பண்ணல மாமா’'ன்னு கத்துறா நீலி. பாவிப்பய, காதுலயே வாங்கலே. வலி பொறுக்காத நீலி வீட்டைவிட்டு வந்து ஊரெல்லையில இருக்கிற பாம்புங்க நெறஞ்ச புதருக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டா. மாமங்காரன் விறாக்கட்டையை வீசியெறிஞ்சுட்டு வீட்டுக்குள்ள போயிட்டான். ‘நினைச்சது நடந்திடுச்சு’ங்கிற சந்தோஷத்தை மனசுக் குள்ளயும், அழுகையை மூஞ்சியிலயும் வெச்சுக்கிட்டு எதுவுமே நடக்காத மாதிரி வேலையைப் பாக்க ஆரம்பிச்சுட்டா அத்தைக்காரி.   

Neeli amman: Divine human Gods stories - Aval Vikatan
Neeli amman: Divine human Gods stories - Aval Vikatan

பொழுது சாஞ்சிருச்சு. நீலிக்குப் புதரை விட்டு வெளியே வர பயம். திரும்பவும் மாமங்காரன் அடிச்சுப்போட்டான்னா..? அதுக்குள்ளயே உக்காந்து அழுதுக்கிட்டி ருந்தா. கண்ணுபடுற தூரத்துல கட்டு விரியனும் சாரையும் சரசரன்னு திரியுது. நேரமாக ஆக பயமாப்போச்சு. `வேலைக்குப் போன அம்மையும் பாட்டியும் இருட்டினபிறகு தான் வீட்டுக்கு வருவாக. அவுக வந்தபிறகு வீட்டுக்குப் போகலாம்.அதுவரை இதுக்குள்ளயே இருக்கலாம்'னு ஒளிஞ்சிருந்தா நீலி.

அந்த வழியா மாந்திரிகத் தொழில் செய்ற கணியர் ஒருத்தரு வந்தார். புதருக்குள்ள ஒரு பொண்ணு இருக்கிறதைப் பாத்து, பக்கத்துல போயி ‘என்ன, ஏது’ன்னு விசாரிச்சார். எல்லாக்கதையும் சொன்னா நீலி. புதரைவிட்டு வெளியே வரச்சொல்லி, தன்கிட்ட இருந்த இளநீ, பழம், அவல் எல்லாத்தையும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். பசியாலயும் வலியாலயும் துவண்டு போயிருந்த நீலி, அவர் கொடுத்ததை வாங்கித் தின்னா. தின்னு முடிச்சதும் அவளுக்கு ஆறுதல் சொல்லி ‘வீட்டுக்குப் போ’ன்னு அனுப்பி வெச்சுட்டு அவரோட வழியில கிளம்பிட்டார் கணியர்.

அங்கே, வீட்டுல ஒரே பதைபதைப்பா கெடக்கு. வயக்காட்டுல வேலை முடிச்சு வீட்டுக்கு வந்த அம்மையும் பாட்டியும் நீலி இல்லாததைக் கண்டு பதறிட்டாக. அண்டை வீட்டுக்காரங்கள்லாம், அத்தைக்காரி பண்ணின சூழ்ச்சியையும் மாமங்காரன் நீலியை இழுத்துப்போட்டு அடிச்சதையும் ஒண்ணுவிடாம சொல்லிட்டாக. நீலியோட அம்மை ஒருபக்கம் ஒப்பாரி வைக்கிறா. பாட்டி, தம் மருமவளை மண்ணைவாரித் தூத்தி ஏசுறா. அம்மையும் பாட்டியுமா நீலியைத் தேடி அலையுறாக. 

அப்போ, அந்த வழியா வந்த அந்த மாந்திரிகக் கணியர், பாம்பு புதருக்குப் பக்கத்துல நீலியைப் பார்த்ததா சொல்ல, அங்கே ஓடினாங்க. நீலி அழுது அழுது வீங்குன முகத்தோட அங்கே உக்காந்திருந்தா. ‘`அடிப்பாவி மவளே... என்னதான் மாமங்காரன் அடிச்சாலும் இப்பிடியா பாம்பு புதருக்குள்ள வந்து ஒளிஞ்சுக்கிட்டிருப்பே...'’னு வஞ்சு, அவளைக் கூட்டிக்கிட்டுக் கிளம்புனாக.

அம்மை முன் நடக்க, பாட்டி பின் நடக்க, நடுவுல நடந்தா நீலி. காலு ரெண்டும் ஒண்ணோட ஒண்ணு மல்லுக்கட்டுது. வழியில ஒரு குளம். தளும்பத் தளும்பத் தண்ணி நிறைஞ்சிருக்கு. நடந்துக்கிட்டிருந்த நீலி நின்னா. 

“அம்மை... கணிய வீடு போனதால எம்மேல தீட்டுப்பட்டிருச்சுன்னுதான் அத்தை ஏசுச்சு. அதனால, இந்தக் குளத்துல குளிச்சு நான் தீட்டைப் போக்கிக்கிட்டு வாரேன்''னு அம்மைக்கிட்டச் சொன்னா.

அம்மைக்கும் அதுதான் சரின்னு பட்டுச்சு. ``சரி தாயி, நானும் பாட்டியும் கரையில நிக்குறோம். போயி குளிச்சுட்டு வா''னு அனுப்புனா. நீலி அம்மையையும் பாட்டியையும் ஒருகணம் நிமிர்ந்து பார்த்தா. கண்ணுல நீர் தளும்புது.  ‘நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிருங்கம்மா’னு அம்மை கால்லயும் பாட்டி கால்லயும் விழுந்து வணங்குனா. `மக ஏன் இப்படியெல்லாம் செய்றா'ன்னு அம்மைக்கும் பாட்டிக்கும் புரியலே. 

நீலி விறுவிறுன்னு குளத்துக்குள்ள இறங்குனா. தண்ணிக்குள்ள மூழ்குனா. அம்மையும் பாட்டியும் ‘மக வருவா, வருவா’ன்னு கரையில காத்திருக்காக. வரவேயில்லை. ஏதோ நடந்திருக்குன்னு குளத்துக்குள்ள இறங்கிப்பாத்தா, பொணமா மெதக்கிறா நீலி. அம்மையால தாங்க முடியலே... ‘அய்யோ மவளே... உன்னைப் பலி கொடுத்திட் டேனே... இனி நான் யாருக்காக வாழணும்’னு கதறி அழுதா. அடுத்த நொடி அவளும் குளத்துக்குள்ள குதிச்சு மூழ்கிட்டா. மகளும் பேத்தியும் தன் கண்ணு முன்னாடியே  தண்ணிக்குள்ள மூழ்கி இறந்ததைப் பார்த்த பாட்டி, புத்திபேதலிச்சுப் போனா. அவளும் அதே குளத்துக்குள்ள மூழ்கி தன்னை மாய்ச்சுக்கிட்டா. மூணு பேரேட உடலும் மாயமா மறைஞ்சு போச்சு.

மறுநாள், ஊரே பரபரப்பா ஆயிருச்சு. அந்தக் குளத்துல கத்தை கத்தையா தலைமுடிகள் மிதக்க ஆரம்பிச்சுச்சு. அத்தைக்காரி வடிச்ச சோத்துலயும் முடிகள் மிதந்துச்சு. மாமங்காரன் கையெல்லாம் தாடி மாதிரி முடிகள் முளைச்சிருச்சு. பயந்துபோன மாமங்காரன் மாந்திரிகக் கணியனை அழைச்சு வந்து குறி கேட்டான். ‘நீலி வெறிகொண்டு திரியுறா. நீயும் உன் தலைமுறையும் அவளைக் கையெடுத்துக் கும்பிட்டு வணங்கணும். அவளுக்குக் கணிய வீட்டு ஆளுகதான் பூசை செய்யணும்'னு பரிகாரம் சொல்லிட்டுக் கிளம்பிட்டாரு. உடனே மாமங்காரன், நீலி உயிர் பிரிஞ்ச குளக்கரையிலயே  அவளுக்கும், அவ அம்மைக்கும், பாட்டிக்கும் தலைவிரிகோலமாப் பீடம் வெச்சு கும்பிட ஆரம்பிச்சான். தலைமுறை தலைமுறையா அந்த வழிபாடு வளர்ந்துச்சு.

குலசேகரம் பக்கத்துல இட்டகவேலி கிராமத் துல நீலி இன்னமும் உக்கிரம் குறையாம உக்காந்திருக்கா... கணிய வீட்டுப் பூசாரி அவளை ஆசுவாசப்படுத்திக்கிட்டேதான் இருக்காரு. இப்போ அவளுக்குப் பேரு நீலகேசியம்மா. அவளுக்குப் பக்கத்திலேயே அவ அம்மையும் பாட்டியும் உக்காந்திருக்காக. அவங்களுக்கும் ஆங்காரம் அடங்கலே.

அந்தக் குளத்துல இப்பவும் தண்ணி தளும்பித் தான் நிக்குது. 

- வெ.நீலகண்டன்

படங்கள்: ரா.ராம்குமார் - ஓவியம்: ஸ்யாம்