மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 7

சிவமகுடம் - பாகம் 2 - 7
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 7

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

ஆல விருட்ச ரகசியம்!

ந்தி மயங்கத் துவங்கியிருந்தது! 

நாலாதிசையிலிருந்தும் தங்களது இருப்பிடமாகிய அந்த வனத்தின் விருட்சங் களுக்குத் திரும்பிய பல விதமான பட்சிகள், கூடடைவதற்கு முன்னோட்டமாக  படபடவென சிறகடித்தபடியும், பலவாறு குரலெழுப்பியபடி மேலும் கீழுமாகப் பறந்து திகழ்ந்தன. அதனால் உண்டான ஒலிக்கலவையோடு, சுழன்றடித்த பெருங்காற்றின் பேரோசையும், அந்தக் காற்றின் விசையால் விருட்சக்கிளைகள் அசைந்தாடியதால் எழும்பிய சத்தமும் சேர்ந்துகொள்ள, ஒருவித விநோத ஸ்வரத்தோடுகூடிய நாதத்தால் நிறைந்தது அந்த வனம். 

சிவமகுடம் - பாகம் 2 - 7

குலச்சிறையாரும் அவரது படைத் தோழர்களும் மூன்று நாழிகைகளுக்கு முன்பே அங்கிருந்து நகர்ந்துவிட்டிருந்தார்கள். இளங்குமரனுக்கோ வேறொரு கட்டளை கிடைத்திருந்தது, குலச்சிறையாரிடமிருந்து!

‘‘வெள்ளை வஸ்திரத்தின் புள்ளிகளும் கோடுகளும் சொல்லும் விளக்கப்படி, அவை சுட்டிக்காட்டும் இடத்துக்குச் செல்ல வேண்டும். எனது யூகம் சரியாக இருக்குமெனில், அந்த இடத்தில்தான் நம்பிதேவனும் இருப்பான். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அவனுக்கான ஆபத்துகள் அதிகமாகும். ஆகவே, விரைந்து புறப்படு!’’ என்று அங்கிருந்து கிளம்புமுன் இளங்குமரனுக்கு ஆணையிட்டிருந்தார் குலச் சிறையார்.

ஆணையின்படி, அவர்கள் தங்கியிருந்த அந்த வனச் சமவெளியிலிருந்து குலச்சிறையார் அகன்ற மறுகணமே இளங்குமரன் புறப்பட் டிருக்க வேண்டும். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. சற்று நிதானிக்க முடிவெடுத்தான். குலச்சிறையாரும் அவரின் சகாக்களும் கண்ணில் இருந்து மறையும் வரை, தானும் அங்கிருந்து புறப்பட ஆயத்தமாவது போன்று போக்குக் காட்டிக்கொண்டிருந்தவன், அதன் பிறகு அங்கே மதியப்பொழுதில் குலச்சிறையார் அமர்ந்திருந்த பாறையை நோக்கிச் சென்று அதன் மீது ஏறி அமர்ந்தான்.

குலச்சிறையார் அங்கே எப்படி எந்தத் திசையை நோக்கி அமர்ந்திருந்தாரோ, அதே நிலையில் தானும் அமர்ந்துகொண்டவன்... வீரர்களுக்கு சிவக்கதையைச் சொல்லும்போதும், குறத்திப் பெண்ணுடன் அளவளாவியபோதும் குலச்சிறையாரின் கண்கள் எந்தெந்த இடங்களை நோக்கியெல்லாம் அலைபாய்ந்தனவோ, அந்த இடங்களையெல்லாம் கூர்ந்துநோக்கி ஆராயத் தலைப்பட்டான்.

அந்த நேரத்தில் வெளிச்சம் மங்கத் துவங்கி யிருந்த படியால், அவன் எதிர்பார்த்த துப்புகளைத் தேடுவதில் சிரமம் இருக்கவே செய்தது. ஆனாலும் இளங்குமரன் தனது முயற்சியைக் கைவிடவில்லை.  

சிவமகுடம் - பாகம் 2 - 7

அவனது கண்கள் பாறையின் எதிர்ப்புறத்திலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்த அதேநேரம், அவனது சிந்தனையோ, ஆறேழு நாழிகைகளுக்குமுன்பாக அந்த இடத்தில் நின்று குறிசொல்லிப் பாடிய குறத்திப்பெண்ணின் பாடலுக்குத் தாவியது. குறிப்பாக பாடலின் அந்த இரண்டு வரிகள் இளங்குமரனுக்குள் அழுத்தமான வினாக்களை எழுப்பியிருந்தன!

அவள், தனது பாடலால் குறிசொல்லவில்லை; ஏதோவொரு ரகசியத்தை-வியூக திட்டங்களை  பாண்டிய தேசத்தின் பிரதம அமைச்சருக்குக் குறிப்பால் உணர்த்துகிறாள் என்பதை, அவள் பாடத் துவங்கிய சில கணப்பொழுதுகளிலேயே கண்டுகொண்டுவிட்டான் இளங்குமரன்.

ஆகவேதான் அவனது மனம் அவனையுமறி யாமல் அவள் பாடிய வரிகளை ஆராயத் தலைப் பட்டது. விளைவு... இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் அசை போட்டது அவன் மனம்.

தென்னவன் தேசம் காக்க
பொன்னியின் குழவிகள் வரும்...


இந்தப் பாடல் வரிகளில் `குழவிகள்’ என்று பன்மையில் சொல்கிறாள் எனில், வேறு யாரெல் லாம் பாண்டிய தேசத்தின் எல்லையைக் கடந்து வரப்போகிறார்கள் எனும் கேள்விதான் முதலில் எழுந்தது அவனுக்குள்.

ஆம்! பாடல் குறிப்பு சொல்லும் பொன்னியின் குழந்தைகளில் முதலாமவர்,  பாண்டிமாதேவியார் என்று அவனால் மிக எளிதாக யூகித்துவிட முடிந்தது. ஆகவே, மற்றவர்கள் யார் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

அத்துடன், மாமன்னர் கூன்பாண்டியரின் தலைமையில் கட்டுக் கோப்புடன் திகழும் பாண்டியதேசத்துக்கு, சோழம் தலையிட்டு காக்கும் அளவுக்கு அப்படியென்ன ஆபத்து நிகழப் போகிறது என்ற சிந்தனையும் அவனுள் எழாமல் இல்லை!

சிவமகுடம் - பாகம் 2 - 7



இப்படியான சிந்தனையோட்டத்துக்கு ஊடே அவன் பார்வைப்புலன் தொடர்ந்து ஈடுபட்டிருந்த ஆய்வுக்கு ஓரிடத்தில் தீர்வு கிடைத்தது.

ஆம்! பாறைக்கு எதிரே... மிகச் சரியாக குறத்திப் பெண் நின்றுகொண்டிருந்த இடத்தில் - தரையில் சில புள்ளிகளும் கோடுகளும் தென்பட்டன.

அவ்வளவுதான்! சட்டென்று பாறையிலிருந்து தரையில் குதித்தவன், அந்த இடத்துக்குச் சென்று   தரையில் அமர்ந்தான். அங்கே மெள்ள மெள்ள இருள்சூழத் துவங்கியிருந்தாலும், அதுவரை ஆய்வு செய்துகொண்டிருந்த  அவனுடைய கூரிய விழி களுக்கு அந்த இருள் பழகிவிட்டிருந்தபடியால், தரையில் தென்பட்ட புள்ளிகளும் கோடுகளும் சொல்லும் ரகசியத்தைப் பார்ப்பதில் அவனுக்கு எந்தச் சிரமமும் ஏற்படவில்லை. மேலும், அங்கே வெளிப்பட்டது புதிய ரகசியமும் இல்லை!

குறிசொல்லும்போது, அந்தக் குறத்திப்பெண் ஓரிடத்தில் நிற்கவில்லை; அவ்வப்போது தரையில் அமர்ந்தும் பிறகும் எழுந்தும் விநோத பாவனை யோடு அவள் பாடியதை அவன் கவனிக்கவே செய்தான். ஆகவேதான், இப்போது இங்கே சுற்றுப் புறங்களை ஆராய்ந்த இளங்குமரனின் கண்கள் அவள் நின்றிருந்த இடத்தையும் தீவிரமாக ஆராய்ந்தன. அதையொட்டி இதோ இந்த ரகசியத் தையும் கண்டுகொண்டன.

அதன் மீது பார்வையை நிலைக்கவிட்ட சில கணங்களிலேயே ஓர் உண்மை புலப்பட்டது இளங்குமரனுக்கு. ஆம்! அது, ஏற்கெனவே வெள்ளை வஸ்திரத்தில் இருக்கும் ரகசியம்தான்  என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்துகொண்டான்.  எனினும், தன் இடைக்கச்சையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த வெள்ளை வஸ்திரத்தை எடுத்து, தரைக்கோடுகளுக்கு அருகில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தான்.

இரண்டிலும் இருந்த ரகசியம் ஒன்றே!

எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்ட நம்பிதேவன், தனது நிலைகுறித்து தனது தரப்பினர் அறியும் வண்ணம் வெவ்வேறு முறையில் தகவல் விடுத்திருக்கிறான். அதில் ஒன்று வெள்ளை வஸ்திரம். மற்றொன்று தரையில் குறத்தியால் தீட்டப்பட்ட கோடுகள். 

சிவமகுடம் - பாகம் 2 - 7

ஆம்! அமர்ந்தும் எழுந்தும் விநோதமாகப் பாடிக்கொண்டிருந்தவள், கிடைத்த வாய்ப்பில் தன் கையிலிருந்த கொம்பினால் தரையில் வரைந்து, குலச்சிறையாருக்கு விளக்க முற்பட்டிருக் கிறாள். அவரும் அதை அப்போதே அறிந்திருக்க வேண்டும். ஆகவேதான், அன்றிரவு அங்கேயே தங்குவது என்ற தமது முடிவை மாற்றிக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டுவிட்டார் போலும்.

அதுசரி! குறத்திக்கு இந்த ரகசியம் தெரிந்தது எப்படி?

அடுத்ததாக ஒரு கேள்வி முளைத்தது இளங்குமரனின் மனதில். அத்துடன்,   வெள்ளை வஸ்திரத்திலும், குறத்தியிட்ட கோடுகளிலுமாக வரைபடம் சுட்டிக் காட்டும் இடம், அந்த வனத்திலிருந்து வெகுதூரத்தில் இல்லை என்றும் தோன்றியது அவனுக்கு.

மெள்ள எழுந்து வந்து மீண்டும் பாறையில் ஏறி அமர்ந்துகொண்டவன் சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு, ஏதோ முடிவுக்கு வந்தவனாக, ``ஆம்... அதுதான் சரியாக இருக்கும்!'' என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு,  தரையில் குதித்தான். தொடர்ந்து, உள்ளங்கைகளை வாயருகே சேர்த்துக்குவித்து  வைத்தபடி விநோதமாகக் குரலெழுப்பினான். அந்தக் குரல் புரவியொன்று கனைப்பது போலிருந்தது!

மறுகணம், எங்கிருந்தோ பாய்ந்து வந்தது அந்தப் புரவி!

அடுத்த சில நாழிகைப்பொழுதுகளில், தான் தீர்மானித்த இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தான் இளங்குமரன். புரவியை விட்டு இறங்கியவன், அதன் பிடரி யைத் தடவிக்கொடுக்க, அவனது குறிப்பைப் புரிந்துகொண்டதுபோல், சத்தம் எழுப்பாமல் பாதையைவிட்டு விலகி நடந்து இருளுக்குள் சென்று மறைந்தது புத்திகூர்மை மிகுந்த அந்தப் புரவி!

-பின்னர், எதிரில் தெரிந்த பாதையில் நடக்கத் துவங்கினான். சிறிது தூர பயணத்துக்குப் பிறகு, அவனை மலைச்சரிவான ஓரிடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது அந்தப் பாதை. மேற்கொண்டு செல்ல வேறேதும் மார்க்கமில்லை என்பதைப் புரிந்துகொண்டவன், சுற்றுமுற்றும் பார்த்தான்.

அவனுக்கு இடப்புறம் தெரிந்த காட்சி... அதிர்ச்சியில் அவனை உறையவைத்தது. ஆம்! அவன் தேடிவந்தது ஒருவரை, இங்கே காண்பதோ வேறோருவரை!

எண்ணற்ற விழுதுகளோடு பரந்துவிரிந்து மிகப் பிரமாண்டமாக வளர்ந்து நின்ற ஆலமரத்தில் ஏறிக்கொண்டிருந்தாள் பெண்ணொருத்தி. அதீத சிரமத்துடன் அந்த விருட்சத்தின் உச்சிக்கிளை ஒன்றை நோக்கி நகர முற்படும் அந்தப் பெண்...

சந்தேகமேயில்லை! பாட்டுப்பாடி, பாண்டிய தேசத்துக்கு எதிர்கால பலன்களைச் சொன்ன அந்த குறத்திப் பெண்ணேதான்!

அவளை அங்கு கண்டுகொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியைவிடவும், விருட்சத்தின் மேற்கிளை யில் அவளுக்குக் காத்திருந்த ஆபத்துதான், இளங் குமரனை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது!

இங்கே இப்படியான விசித்திர அனுபவத்தை இளங்குமரன் சந்தித்துக்கொண்டிருக்க, குகைச் சிறை ஒன்றில் அடைபட்டிருந்த நம்பிதேவனை, அடிகளார் உருவில் பேராபத்து நெருங்கியது!

வேறு எவரும் எளிதில் அணுகமுடியாத அந்த ரகசிய இடத்தை மிக எளிதாக அடைந்துவிட்ட அடிகளார், வேகவேகமாக நடந்து நம்பிதேவன் அடைபட்டுக்கிடக்கும் சிறையின் வாசலுக்கு வந்தார். உள்ளே மயங்கிக்கிடக்கும் நம்பியை சில கணங்கள் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தவர், பிறகு தன் கையிலிருந்த வஸ்துவை அவன் மீது வீசினார். மறுகணம், மிகப் பெரிதாக அலறினான் நம்பிதேவன்!

- மகுடம் சூடுவோம்...