மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள் - நல்லம்மா! - 3

theekuchi amman: Divine human Gods stories - Aval Vikatan
News
theekuchi amman: Divine human Gods stories - Aval Vikatan

தெய்வ மனுஷிகள் வெ.நீலகண்டன் - படம் : கே.குணசீலன் - ஓவியம்: ஸ்யாம்

வையன், பக்தியில பழுத்த ஆளு. விடியக்காலம் எழுந்து காவிரியாத்து வாய்க்கால்ல குளிச்சு உடம்பெல்லாம் நீறுபூசி லலிதாம்பாளைக் கும்பிட்ட பிறகுதான் அன்னம் தண்ணி எடுப்பான். அவன் பொண்டாட்டி அமுதம்மாவும் அப்படித்தான். பக்தியில புருஷனுக்கு இளைச்சவ இல்லை. எப்பவும் கோயிலு, விரதம்னு பக்திமயமா இருப்பா.  யாராவது கையேந்தி நிக்குறதைப் பாத்துட்டா, வீட்டுக்குக் கூட்டியாந்து இருக்கிற சாப்பாட்டைப் போட்டு அனுப்புற மகராசி.  

நல்லம்மா! | theekuchi amman: Divine human Gods stories - Aval Vikatan
நல்லம்மா! | theekuchi amman: Divine human Gods stories - Aval Vikatan

நிலபுலத்துக்குக் குறைச்சலில்லை. காவிரியாத்தா புண்ணியத்துல போகம் தவறாம விளைச்சல் வந்திரும். ஒருபக்கம் நெல்லு, மறுபக்கம் கடலைன்னு வீட்டுல எப்பவும் தானிய இருப்பு இருந்துகிட்டே இருக்கும். ஆனா, என்ன இருந்து என்ன புண்ணியம்..? கல்யாணமாகி அஞ்சு வருஷமாகியும் அமுதம்மா வயித்துல ஒரு ஜீவன் வாய்க்கலே. ஊருப்பேச்சு ஒருபக்கம், உறவுப்பேச்சு ஒருபக்கம்னு புருஷனும் பொண்டாட்டியும் மனசுக்குள்ளயே வெதும்பிபோய் நின்னாக.

‘அடுத்தவக பசின்னு நின்னா வீட்டுக்குக் கூட்டியாந்து படியளக்குற அமுதம்மா வவுத்துல அந்த லலிதாம்பிகை ஒரு விதையைத் தூவக்கூடாதா’னு ஊரே ஆதங்கப்பட்டுச்சு. அந்த ஆதங்கக்குரல் ஒருக்கா லலிதாம்பிகை காதுல விழுந்திடுச்சு போல. அமுதம்மா முழுகாம இருந்தா. அவையனுக்கு மகிழ்ச்சின்னா மகிழ்ச்சி. ஊரையும் உறவை யும் கூட்டி விருந்து வெச்சான். ஊருத் தொழிலாளிக்கெல்லாம் உடையெடுத்துக் கொடுத்தான். கூலியாட்களுக்கு ஒரு மரக்கா கூட அளந்தான். அமுதம்மா பத்து மாசத்துல அழகான ஒரு பொம்பளை புள்ளையப் பெத்தெடுத்தா. அவையனுக்குத் தலைகாலு புரியலே. அவ்வளவு சந்தோஷம். தன் அப்பன் நல்லதம்பி நினைவா, தம் மவளுக்கு நல்லம்மான்னு பேரு வெச்சான்.

நல்லம்மா பேருக்கேத்தபடி  வளந்தா. அவ ஆத்தாளோட இரக்க குணமும், பக்தியும் அப்படியே இவகிட்டயும் இருந்துச்சு.  ஆளும் நல்லா வாளிப்பா இருப்பா. அந்தக் காலத்துல பொம்பளைக வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே கல்யாணம் கட்டி வெச்சிருவாக. அதுக்குப் பேரு, பால விவாகம். நல்லம்மாவுக்குப் பத்து வயசானபோது, சொந்தக்காரன் கட்டையனோட மவன் வீரனுக்குக் கல்யாணம் கட்டி வெச்சாக. அப்போ வீரனுக்கு வயசு பதினஞ்சு. 

அப்பல்லாம், கல்யாணத்தைவிட, கல்யாணம் முடிஞ்ச பொண்ணுங்க பெரிய மனுஷியாகுறதைத்தான் திருவிழா மாதிரி கொண்டாடுவாங்க. அதுக்கப்பறம்தான் புருஷன் பொண்டாட்டி உறவெல்லாம். நல்லம்மா 12 வயசுல பெரிய மனுஷியானா. ஊரே வியந்துபோற அளவுக்கு அதைப்பெரிய திருவிழாவா கொண்டாடினான் அவையன். சீனத்துச் சேலையில பளபளன்னு தேவதை மாதிரி நின்னா நல்லம்மா.

அது ஆடி மாசம். புள்ளைகளைச் சேரவிடமுடியாது. அதனால ஊரு வழக்கப்படி, அவையன் நல்லம்மாவை தன்னோட வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிட்டான். வீரனுக்கு விட மனசில்லை. நல்லம்மாவுக்கும் போக மனசில்லை. ஆனாலும், ஊரு முறைன்னு ஒண்ணு இருக்கே. ஆடியில சேந்தா சித்திரையில இல்லே குழந்தை பெறக்கும்? மாட்டு வண்டியைச் சோடிச்சு, மகளை மகாராணி மாதிரி உக்கார வெச்சு ஊர்வலமா வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனான் அவையன்.

போற வழியெல்லாம், நல்லம்மா பக்கத்துல உக்காந்துகிட்டு,  ‘புருஷன்கிட்ட எப்படி நடந்துக்கணும்’, ‘குடும்பத்தை எப்படிப் பாத்துக்கணும்’னெல்லாம் புத்திமதி சொல்லிக்கிட்டே வந்தா அமுதம்மா.
 
உசுரு வீரன்கிட்டயும், உடம்பு அப்பன் வீட்டிலயுமா கழிச்சா நல்லம்மா. ‘எப்படா மாசம் முடியும், அப்பன் வீட்டைவிட்டுக் கிளம்பலாம்’னு மனசு ஆலாப் பறக்குது. வீரனுக்கும் நிலைக்கொள்ளலை. ‘எப்படா நல்லம்மா முகத்தைப் பாப்போம்’னு இருந்துச்சு.

ஒருவழியா ஆடி முடிஞ்சிருச்சு. மருமவனை அழைச்சு மரியாதை பண்ணி, தலைவாழையிலை போட்டு விருந்து வெச்சு, கூடை கூடையா பதார்த்தம் கொடுத்து குதிரை வண்டியில மகளை ஏத்திவிட்டாக அவையனும் அமுதம்மாவும். ரெண்டுபேரும் குதிரை வண்டியில உக்காந்துகிட்டு போன அழகை அந்த ஊரே பாத்து வாழ்த்துச்சு.

நல்லம்மா புருஷன் வீட்டுக்கு வந்துட்டா.  அங்கே  சாந்தி முகூர்த்தத்துக்கான ஏற்பாடெல்லாம் தடபுடலா இருக்கு. மாக்கோலம், பூக்கோலம்னு  வீட்டை அலங்கரிச்சிருக்காக. உறவுக்காரப் புள்ளைகள்லாம் வந்து நல்லம்மாவை உக்கார வெச்சு அலங்காரம் பண்ணுதுக.  கோயில் பூசாரி குறிபாத்துக்குடுத்த நல்ல நேரம் நெருங்குது.

நல்லம்மாவுக்கு நினைச்சாலே நெஞ்செல்லாம் இனிக்குது. வீரன் அப்பப்போ அறைக்குள்ள வந்து ஓரக்கண்ணால பாத்துட்டுப் போறான்.  மனசுக்குள்ள வண்ண வண்ணமா கனவுகள் ஓடுது நல்லம்மாவுக்கு.

ராத்திரியாச்சு. ஆரஞ்சு கலர் பட்டுச்சேலை உடுத்தி வாசனைத் திரவியங்களும் பூக்களும் மணக்க மணக்க நல்லம்மாவைத் தோழிங்க அழைச்சுட்டுப்போயி அறைக்குள்ள விட்டாக.  எத்தனையோ முறை பாத்த முகம்தான். ஆனாலும், வீரன் முகத்தை ஏறெடுத்துப் பாக்க முடியலே. வெக்கத்துல மொகமெல்லாம் சிவந்து போச்சு நல்லம்மாவுக்கு. வீரன் கட்டில்ல உக்காந்திருக்கான். கதவுகிட்ட தயங்கி நின்ன நல்லம்மாவைக் கையைப் பிடிச்சு இழுத்தாந்து படுக்கையில உக்கார வெச்சான். குனிஞ்சிருந்த முகத்தை நிமித்தி, நேருக்கு நேரா பாத்துச் சிரிச்சான். நல்லம்மாவும் சிரிச்சா. அவளை அப்படியே இழுத்து மடியில படுக்க வெச்சுக் கிட்டுத் தலையைக் கோதிவிட்டான் வீரன்.

திடீர்னு அவன் கண்ணு சிவப்பா மாறுச்சு. உடம்பு வேர்த்துக்கொட்டுது. அப்படியே நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு சாஞ்சுட்டான் வீரன். நல்லம்மாவுக்கு என்ன நடக்குதுன்னே புரியலே. ‘மாமா... மாமா’னு கத்துறா... ‘தண்ணி’, ‘தண்ணி’னு சைகை காட்டுறான் வீரன்.    

நல்லம்மா! | theekuchi amman: Divine human Gods stories - Aval Vikatan
நல்லம்மா! | theekuchi amman: Divine human Gods stories - Aval Vikatan

கதவைத் திறந்துகிட்டு வெளியில ஓடியாந்து கத்துறா நல்லம்மா. எல்லாரும் பதறிப்போய் வீரனைப் பாக்க... அவன் தண்ணி கேக்க, நல்லம்மா தண்ணியெடுத்து வீரன் வாயில ஊத்துறா. ஊத்துன தண்ணி தொண்டைக்குள்ள இறங்குறதுக்கு முன்னாடியே அடங்கிப்போனான் வீரன்.  தொடங்குறதுக்கு முன்னாடியே முடிஞ்சுபோச்சு நல்லம்மா வாழ்க்கை.

அவையன் வகையறாவுக்கு ஆளு விட்டாச்சு. ஊரு உறவுகளோட வந்து எறங்கிட்டாக. ‘வாழைத்தண்டாட்டம் வாழவந்த பொண்ணு வாழ்க்கை,  காய்ஞ்ச வாழைமட்டை கணக்காப் போச்சே’னு மாருல அடிச்சுக்கிட்டு அழுவுறா அமுதம்மா. கட்டையன் வீட்டுல கூட்டம் கூடிருச்சு. உறவுக்காரங்கள்லாம் சாவை தாங்கிக்கமாட்டாம அழுது புலம்புறாங்க.  நல்லம்மா,  அவ பாட்டுக்கு உக்காந்திருக்கா. அவ கண்ணுல இருந்து ஒரு சொட்டு தண்ணி வரலே. மேனியில உடுத்தியிருந்த பட்டு கசங்கலே. கண்ணுல போட்ட மையி காயலே. பொணமாக்கெடக்குற வீரன் தலைமாட்டுல உக்காந்து எல்லாரையும் வேடிக்கை பாத்துக்கிட்டிருக்கா.

``நல்லம்மா...''னு கத்திக்கிட்டே ஓடி வந்து சித்திகாரி வந்து நல்லாம்மாவைக் கட்டியழுதா. அப்பவும் அவளுக்கு அழுகை வரலே. “அடிப்பாவி மவளே... புருஷன் செத்தது கூட தெரியாம இப்படி வெள்ளந்தியா  உக்காந்திருக்கியேடி”னு ஒப்பாரி வைக்க, ஊரே கலங்கிப்போச்சு. ஆனா, நல்லம்மா கலங்கலே.

இறுதிச் சடங்கு தொடங்கிருச்சு. வீரனோட உடலைக் குளிப்பாட்டி, பொட்டு சந்தனமெல்லாம் வெச்சு, வாசனைத் திரவியங்களைத் தெளிச்சு பட்டுடுத்தி பெரிய மாலையைப் போட்டு உக்கார வெச்சிருக்காக. தேரு தயாராயிருச்சு. பூவரசுக் கட்டையில மூங்கிக் குச்சிகளைக் கோத்து தென்னம்மட்டையைப் பின்னிக் கட்டி, தென்னங்குருத்து தோரணமெல்லாம் வெச்சு  பல்லக்கு மாதிரி சோடிச்சிருந்தாக.  அதுல வீரன் உடலை வெச்சாச்சு.

நல்லம்மாவை வீட்டுக்குள்ள அழைச்சிட்டுப் போனாக. அவ தலையில தண்ணிய ஊத்தி புதுப் பட்டுச்சேலை உடுத்தி கல்யாணத்துக்கு அலங்கரிக்கிற மாதிரி அலங்காரம் பண்றாக. வீரன் பொணம் முன்போக, கல்யாணக் கோலத்துல நல்லம்மாவைப் பின்னாடி அழைச்சுக்கிட்டுப் போறாக பொம்பளைக. மயானம் வந்திருச்சு. பொம்பளைக வெளியில நிக்க, நல்லம்மாவை மட்டும் கையைப் பிடிச்சு மயானத்துக்குள்ள கூட்டிக்கிட்டுப் போறாக உறவுக்கார ஆம்பளைக. பொம்பளைக நல்லம்மாவைப் பாத்து மாரடிச்சு அழுவுதுக. 

வீரன் உடம்பை சிதையில வெச்சாச்சு. அப்பங்காரன் கட்டையன் கொள்ளி வெச்சான். பக்கத்துல நின்னு, எரியிற நெருப்பையே இமைக்காம பாத்துக்கிட்டிருந்தா நல்லம்மா. எல்லாரும் அவளையே பாத்துக்கிட்டிருந்தாக. அந்த ஊரு வழக்கப்படி புருஷன் செத்தா பொண்டாட்டிக்காரி சிதையில குதிச்சு உடன்கட்டை ஏறணும்.

பெரியவங்க கூடிப்பேசுறாக. சில பேரு `தலைமுறை தலைமுறையா வர்ற மரபை மீறக்கூடாது'ன்னு சொல்றாக. `புருஷன் செத்தத்துக்கு அழக்கூட தெரியாத ஒரு வெள்ளந்திப் புள்ளையை உயிரோட எரிக்கணுமா?'னு சில பேரு கேக்குறாக. அவையன் உறுதியா சொன்னான்... ‘`எம் பொண்ணு வாழ்க்கையையே ஆரம்பிக்கலே. பச்சை மண்ணு. அவ உடன்கட்டை ஏறுறதுக்கு சம்மதிக்க மாட்டேன். சாதி சனமெல்லாம் நான் சொல்றதை ஏத்துக்கணும்...”னு சொல்லி மகளைக் கட்டிக்கிட்டுக் கதறி அழுதான். மயானத்துல நின்ன எல்லாரும் கலங்கிட்டாக. எல்லாரும் மயானத்தை விட்டு வெளிக்கிளம்பிட்டாக. அவையன், மகளைக் கூட்டிக்கிட்டு நடக்குறான்.

கொஞ்சம் தூரம் போன நல்லம்மா, திரும்பி எரியுற சிதையைப் பாக்குறா.  இதுவரைக்கும் உள்ளுக்குள்ள பொங்கிக்கிட்டிருந்த அழுகை அப்படியே வெடிச்சுக் கிளம்புது. பெருங்குரலெடுத்து அழுவுறா. தீயில வெந்த வீரன் உடம்பு  எழுந்து எழுந்து அடங்குது. அப்பன் கையைத் தட்டிவிட்டுட்டு  எரியற வீரன்கிட்ட ஓடுறா நல்லம்மா. பக்கத்துல நின்னு, ‘மாமா... மாமா’னு கத்தறா. கொழுந்து விட்டு எரியுது சிதை. ‘வா, வா’ன்னு வீரன் கைவிரிச்சு கூப்பிடுற மாதிரியே தோணுது. விறுவிறுன்னு அந்தத் தீக்குள்ள எறங்கிட்டா நல்லம்மா. அவையனும் மத்தவங்களும் என்ன நடக்குதுன்னு உணர்றதுக்குள்ள நெருப்போட நெருப்பாயிட்டா. தீ முன்னைக்காட்டிலும் உருண்டு புரண்டு வேகவேகமா எரியுது.எல்லாரும் திகைச்சுப்போய் நின்னாக. அவையன் மயங்கிச் சாஞ்சுட்டான்...  நல்லம்மா, வீரனோட சேர்ந்து சாம்பலாகி அடங்கிட்டா.

அதுக்கப்பறம் நெடுநாளைக்கு ஊராளுக மனசுல இருந்தா நல்லம்மா. அவையனுக்கு மக நினைப்பு மாறலே. அப்பப்போ கனவுல வந்து வந்து நின்னா.  ‘இனிமே நான் உனக்கு மக இல்லே... தாயி. என்னைக் கையெடுத்துக் கும்பிடு’னு ஆங்காரமா சொன்னா. உடனே அவையன், ஒரு கோயிலைக்கட்டி மக செலையைச் செஞ்சு வெச்சுக் கும்பிட ஆரம்பிச்சான். வழிவழியா காலம் நகர,  நல்லம்மா சாமியாகிப்போனா.

பட்டுக்கோட்டை பக்கத்துல தாமரங் கோட்டைன்னு ஓர் ஊரு இருக்கு. அங்கே  தாலி சரசரக்க, கன்னத்துல திருஷ்டி பொட்டு வெச்சு கல்யாணம் முடிச்ச பெண் கோலத்துல நிக்குறா நல்லம்மா. அவ முகத்துல ஏக்கமும் காதலும் கோபமும் ஒண்ணாக்கலந்து கனலாக் கொதிக்குது.

பொண்ணு பாக்கப்போறதுக்கு முன்னாடி நல்லம்மாகிட்ட பூப்போட்டுப் பாக்குறது, கல்யாணம் நிச்சயமானவுடனே, தாலி செஞ்சாந்து நல்லம்மா பாதத்துல வெச்சு வணங்குறதுன்னு அந்த வட்டாரத்துல நல்லம்மா இல்லாம ஒரு காரியமும் நடக்கிறதில்லை. அவளுக்கு இப்போ பேரு தீக்குளிச்ச அம்மன்.

- வெ.நீலகண்டன்

படம் : கே.குணசீலன் - ஓவியம்: ஸ்யாம்