
ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்
அதிவேகத்துடன் சுழற்றியடித்தது காற்று. வனச் சமவெளியிலிருந்து புறப்பட்ட போது இளந்தென்றலாக வீசத் துவங்கியது, இப்படியொரு பெருங்காற்றாகப் பரிணமித்தது எப்போது என்பதை இளங்குமரனால் திட்டமாக அனுமானிக்க இயலவில்லை. புறப்பட்ட இடத்திலிருந்து இப்போது அவன் வந்தடைந்திருக்கும் இந்த மலைச்சரிவு வரையிலுமான பயணம் குறுகியதுதான். எனினும், பயணத் தின்போது ஆழ்ந்த சிந்தனைக்கு அவன் ஆட்பட்டிருந்தபடியால், வெளிச்சூழலை அவன் மனம் அவதானிக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.

ஆம்! மீண்டும் மீண்டும் அவன் மனம் அந்த வனச்சமவெளிப் பகுதிக்கே அழைத்துச் சென்றதால் உண்டான சிந்தனைகள் அவனைப் பெரிதும் அலைக்கழித்தன.
சமவெளியிலிருந்து குலச்சிறையார் புறப்படுமுன் கட்டளையிட்டபடி, அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுவிடாமல், அவருக்குப் போக்குக் காட்டிவிட்டு அந்த இடத்தை இளங் குமரன் ஆராயத் தலைப்பட்டதையும், அங்கே அவனுக்கு தரைக்கோடுகளாகவும் புள்ளிகளா கவும் சில குறிப்புகள் கிடைத்ததையும் அறி வோம். அந்தக் குறிப்புகளும் வஸ்திரத்தில் இருந்த குறிப்புகளும் சொன்னது ஒரே ரகசியம் தான் என்பதை கண்டுகொண்டவன் அதற்குமேலும் தாமதிக்கவில்லை.
ஒரு வரைபடம் போன்று அந்தக் குறிப்புகள் சுட்டிக்காட்டிய திசையில், உரிய பாதைகளில் பயணித்தவன், இதோ இந்த இடத்துக்கு வந்து சேரும்வரையிலும் வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.
அவன் மனம் முழுக்க குறத்திப்பெண்ணின் பாடல் வரிகளும், `அவை சொன்ன நபர்கள் யார்’ என்ற கேள்வியுமே ஆக்கிரமித்திருந்தன.
இப்படியான சிந்தனையுடன் வரைபடக் குறிப்பு சொன்ன இலக்கை வந்தடைந்தவன், புரவியை விலக்கி விட்டு எதிரில் தென்பட்ட பாதையில் நடக்கத் தொடங்கினான். அந்தப் பாதை முடிவடைந்த இடத்தில் மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்த்தான்.
பெரிது பெரிதான விழுதுகளைப் பரப்பி மிகப் பிரமாண்டமாக வளர்ந்து நின்ற ஆல விருட்சத்தின் உச்சிக் கிளையை நோக்கி, அதன் விழுதுகளையே பிடிமானமாகப் பற்றியபடி ஏறிக்கொண்டிருந்தாள் குறத்திப்பெண்.

இளங்குமரன், பாதைநெடுகக் கிடந்த சருகு களின் மீது பாதங்களைப் பதித்து நடந்து வந்த தால் உண்டான சத்தமும் புதியவன் ஒருவ னின் வருகையால் சலனப்பட்ட பட்சிகளின் குரல்களும் அவளது கவனத்தை ஈர்க்கவே, பெரும் பதற்றத்துடன் இவன் இருக்கும் திசையை நோக்கினாள். அதனால் அவளின் கவனம் சிதறவே, விழுதுகளிலிருந்த பிடிமானம் நழுவியது.
பெரும் அலறலுடன் விருட்சத்திலிருந்து அவள் கீழே விழுவதற்கிருந்த நிலையில், அவளுக்கும் மேற்புறமிருந்த கிளையிலிருந்த நீண்ட முரட்டுக் கரம் ஒன்று, கீழே விழுந்து விடாதபடி அவளைப் பிடித்துக்கொண்டது.
அந்த முரட்டுக் கரத்துக்குச் சொந்தக் காரனைக் கண்ட இளங்குமரன் பெரிதும் ஆவேசம் அடைந்தான். சிறிதும் தாமதிக்காமல், தன் முதுகுப்புறத்தில் பிணைக்கப்பட்டிருந்த அஸ்திரக் கூட்டிலிருந்து வேலினை எடுத்து அந்த மனிதனின் மார்பை நோக்கி வீசினான்.

இளங்குமரன் இங்கே வேலாயுதத்தை வீசிய அதே தருணம்தான், அங்கே குகைச்சிறையில் நம்பி தேவனின் முதுகை நோக்கி அந்த வஸ்துவை வீசியெறிந்தார் அடிகளார்.
நம்பிதேவன் சொன்ன ரகசியம்!
கை-கால்கள் பிணைக்கப் பட்டு தரைநோக்கிக் கிடத்தப் பட்டிருந்த நம்பிதேவனின் முதுகில், அடிகளார் வீசியெறிந்த அந்த வஸ்து வந்து விழுந்ததும் ‘ஆ’வென்று பெருங் குரலெடுத்து அலறினான் அவன்.
உப்புநீரில் நனைக்கப்பட்ட அந்தச் சிறு துணிப்பொதி, தன் முதுகின் வெட்டுக்காயத்தில் விழுந்ததால் உண்டான எரிச்சலும் வேதனை யுமே அவனை அப்படி அலறச் செய்தது.
`அடிகளாரா இவர்? அரக்கர்!’ என்று உள்ளுக்குள் கொக்கரித்தான் நம்பிதேவன்.
அவன் மட்டும் இப்படியொரு நிலைமைக்கு ஆளாகாமல் இருந்திருந்து, அவன் எதிரில் இதேபோன்று இந்த அரக்க அடிகளார் தோன்றியிருந்தால், மறுகணம் அவரின் உயிர் உடலில் தங்காது; மேலோகத்துக்குப் பறந்து விட்டிருக்கும்.
இப்போதும்கூட அப்படியொரு ஆவேச நிலைதான் அவனுக்கு. கடும் பிரயத்தனத்துடன் இரும்பெனத் திகழும் தன்னுடைய மேனியை மேனியை முறுக்கி, பிணைப்புக் கயிறுகளைத் தெறிக்கவிட யத்தனித்துக் கொண்டிருந்தான் நம்பிதேவன்.
அதன்பொருட்டு அவனிடமிருந்து வெளிப் பட்ட முனகலையும், அப்படியும் இப்படியுமாக அவன் புரண்டுகொண்டிருந்ததையும், இப்படி யான அவனுடைய முயற்சிகள் கைகொடுக்காத தால் ஏற்பட்ட இயலாமையால் அவன் கண் கள் நீர் உகுத்ததையும் கண்டு ரசித்தவாறு, மெள்ள அவனை அணுகினார் அடிகளார்.

அருவருக்கத் தக்க குரூரச் சிரிப்புடன்,அவன் சிரத்துக்கு அருகே குனிந்து அவனது தாடை யைப் பெற்றி முகத்தை சற்று நிமிர்த்தியவர், தன் கையிலிருந்ததை வேறொரு வஸ்துவையும் அவனிடம் காட்டினார்.
அந்தக் கூராயுதம் பார்க்கவே அதிபயங்கர மாக காட்சி தந்தது. ஊசிபோன்ற அதன் கூர் முனையை அவன் கண்ணருகில் கொண்டு சென்ற அடிகளார்,
‘‘இது என்னவென்று பார்த்தாயா? உன்னைப் போன்ற விருந்தாளிகளை இதைக் கொண்டு தான் அதிகம் உபசரிப்பேன். ஆனால் என் உபசாரங்கள் முடிவதற்குள் அவர்கள் உயிரை விட்டுவிடுவார்கள். உனக்கு அந்த நிலை வேண்டாம்.
உன்னிடம் ஏதோ ரகசியம் இருப்பதை நானறிவேன். அதை அப்படியே என்னிடம் ஒப்புவித்துவிடு. இல்லாவிட்டால், இந்தச் ஆயுதம் உன் கால் விரல் நகக்கண் ஒவ்வொன் றிலும் முத்தமிடும். பிறகு ஆசையோடு உள்ளுக் குள்ளும் இறங்கும். என்ன சொல்கிறாய்?’’
என்று கர்ணக்கொடூரமான குரலில் கூறி விட்டு சில கணங்கள் நிதானித்தார், அவனிட மிருந்து ஏதேனும் பதில் வருமென்று.

ஆனால், அப்படியேதும் பதில் அவனிட மிருந்து வராததால் கடும் சீற்றத்துக்கு ஆளா னார். அந்த சீற்றம் குறையாமல் அவனிடம், ‘‘இதோ பார் நம்பிதேவா! கால் நகக்கண்களில் மட்டுமல்ல, தேவைப்பட்டால் உன்னைப் புரட்டிப் போட்டு இதய பாகத்திலும் இதை இறக்குவேன்’’ என்றார், முகத்தைக் கொடூரமாக வைத்துக்கொண்டு.
நம்பிதேவனின் விழிகள் அகல விரிந்தன. உயிர்ப்பயத்தால் அல்ல; அடிகளார் எனும் ஆபத்தை எப்படிச் சமாளிப்பது என்ற சிந்தனையால்.
நம்பிதேவன் எப்போதும் மரணத்துக்குப் பயந்தவன் இல்லை. ஆனால், இப்போதைக்கு அவன் உயிர்ப்பிழைத்திருக்க அவசியம் இருக்கிறது. அவனிடம் மிக ரகசியமாகப் பொதிந்துகிடக்கும் அந்த ஒற்றைச் சொல்லை பாண்டிமாதேவியாரிடம் சொல்லிவிட்டால் போதும். மறுகணமே உயிர் போவதென்றாலும் அவனுக்கு மகிழ்ச்சிதான். ஆகவேதான், அடிகளாரின் சிறையில் உயிர்ப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறான்.
இப்போது அவனுக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. அவரிடம் இருந்து தப்பிக்க ஒரே வழி... உயிருக்குப் பயந்தவனாக நடித்து, பாண்டிமாதேவியாரிடம் சொல்லவேண்டிய ரகசியத்தில் பாதியை அடிகளாரிடம் சொல்ல வேண்டியதுதான் என்று தீர்மானித்தான்.
அதேவேளையில், `அப்படிச் சொன்னதும் அடிகளார் இந்த நிலையிலேயே தன்னைக் கொன்று போட்டுவிட்டால்...’ எனும் சிந்தனை யும் அவனுக்குள் எழுந்தது. ஆனாலும், ‘நடப்பது நடக்கட்டும்... கடைசி அஸ்திரமாக இதைப் பிரயோகப்படுத்திப் பார்ப்போம்’ எனும் முடிவுக்கு வந்தவன், திக்கித் திணறியவனாகப் பேசத் தொடங்கினான்.
அந்நேரம் அவனின் வலக்கால் கட்டை விரலின் நகக்கண்ணில் கூராயுதத்தின் முனையால் அழுத்திப் பதம்பார்த்தபடி, தனக்கேயுரிய அதிபயங்கர உபசரிப்புக்குத் தயாராகிக் கொண்டிருந்தார் அடிகளார்.
நம்பிதேவனின் திணறல் பேச்சைச் செவிமடுத்ததும் ஆர்வத்துடன் பாய்ந்து வந்து அவன் முகத்தருகில் தன் முகத்தை நீட்டினார். தனது திட்டப்படியே கண்களில் பயத்தை வரவழைத்துக்கொண்டு பேசினான் நம்பிதேவன். குழறலான அவனது பேச்சு பிடிபடாமல் போகவே, எரிச்சலுற்றவர், ‘‘சொல்வதைத் தெளிவாகச் சொல்லித் தொலை’’ என்று மிரட்டவும் செய்தார்.
நம்பிதேவன் சொன்னான் தனது ரகசியத் தில் ஒருபாதியை. அது அடிகளாரின் உயிரில் ஒருபாதியை உறிஞ்சிவிட்டது என்றே சொல்ல லாம். பெரும் பீதியோடு மேனி தளர்ந்து, வேரற்ற மரமாக தரையில் சாய்ந்தார்!
அதேநேரம், மாமதுரையின் எல்லையோர கிராமம் ஒன்றில் பாண்டிய வீரர்களின் கட்டுத் தளைகளிலிருந்து மாவீரன் ஒருவனை விடுவித்துக் கொண்டிருந்தார் பாண்டிமா தேவியார்.
அவர் அந்த இடத்தில் பிரவேசித்தபோது, பாண்டிய சேனைகளின் ஏளனப் பேச்சுகளுக்கும் கேலிக்கும் நடுவே பெரும் தண்டனையை ஏற் கத் தயாராகிக் கொண்டிருந்தான் அந்த வீரன்.
அவன் முகத்தைக் கண்டதுமே அப்பழுக்கற்ற வீரன் என்பதைப் புரிந்துகொண்ட பாண்டிமா தேவியார் ``நிறுத்துங்கள்’’ என்று ஒற்றைச் சொல்லில் ஆணையிட்டார்.
கம்பீரமான அந்தக் குரலைக் கேட்டதும் ஒட்டுமொத்த கூட்டமும் ஸ்தம்பித்தது. அதுவரையிலும் அந்த இடத்தை நிறைத்திருந்த ஆர்ப்பாட்ட கூக்குரல்கள், ஆரவாரம், கேலிப் பேச்சுகள் நின்றுபோக, அடுத்தசில கணங்களில் அந்த வீரனுக்கான தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து, தேவியாரால் விசாரிக்கப்பட்ட அந்த வீரன் சொன்ன திருக்கதை எல்லோரையும் நெகிழவைப்பது!
- மகுடம் சூடுவோம்...