
வீயெஸ்வி
கற்பகத் தருவே
சரணம்
தெய்வத் திருவுருவே
சரணம்
ஞானக் கருவே
சரணம்
ஜகத்குருவே
சரணம் சரணம்
“மகா பெரியவா வாழ்க்கையை மையமா வச்சு நீங்க ஒரு தொடர் எழுதணும்...” என்று சக்தி விகடன் ஆசிரியர் சொன்னபோது, முதலில் தயங்கினேன்.

குருவித் தலையில் பனங்காய். பாரம் தாங்காதே என்று அஞ்சினேன். முதலில் தொலைபேசியில் சொன்ன ஆசிரியர். இரண்டொரு நாள்களில் நேரில் வந்துவிட்டார்! மறுபடியும் தயக்கத்தைச் சொன்னேன். பயத்தை விளக்கினேன். அப்படி யும் விடுவதாக இல்லை.
“`மகா பெரியவா..’ என்று இந்தக் கட்டுரைத் தொடருக்குத் தலைப்பு வச்சுக்கலாம்...” என்று சொல்லி என்னை ‘கமிட்’ செய்ய வைத்து விட்டார்.!
இதனை பரம குருவின் கட்டளையாகக் கருதி சம்மதித்து விட்டேன். மகா பெரியவரின் தாள் வணங்கி, எழுதவும் ஆரம்பித்தேன். இந்தத் தொடரில் என்னுடைய கை வண்ணம் எதுவுமே இல்லை என்பது சத்தியம்.
‘தெய்வத்தின் குரல்’ ஐந்து பாகங்களை, 101 சிறு புத்தகங்களாக விகடன் வெளியிட்ட ‘அருள் உரை’ என்னுடைய முயற்சிக்கு மூலாதாரம்.

காஞ்சி மாமுனிவர் பற்றி விகடனில் எனது சீனியரான பரணீதரனும், என்னுடன் நட்புடன் பழகிவரும் மகா பெரியவரின் தீவிர பக்தரான கணேச சர்மாவும் எழுதிய நூல்களை பக்க பலமாகக் கொண்டிருக்கிறேன்.
வேறு பலர் எழுதியிருக்கும் நூல்களையும் துணைக்கு வைத்துக் கொண்டிருக்கிறேன். காஞ்சி மகான் பற்றி பலரும் நிகழ்த்தி வரும் சொற் பொழிவுகளில் நான் கேட்டவற்றில் சில எனக்குப் பயன்படக் கூடும்.
மகாராஷ்டிர மாநிலத்தில், சதாராவில் ஓர் புத்தாண்டு அன்று நடமாடும் தெய்வத்தை விகடன் ஆசிரியர் குழுவுடன் தரிசித்து ஆசிப்பெற்றதை அசைப்போட்டுக் கொண்டே இந்தத் தொடரை எழுதத் துவங்குகிறேன்.
`பிள்ளையார் சுழி’
நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரிய வரின் ‘குரல்’ கேட்க விரும்பி, முதல் பாகத்தைக் கையிலெடுத்துப் புரட்டியபோது, முதல் அத்தியாயத்திலேயே விநாயகர் தரிசனம் கிடைத்தது, பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது. மகா பெரியவரின் வாழ்க்கை எனும் அமுதத்தில் ஒரு துளி பருக முனையும் போது, அதை விநாயக துதியோடு ஆரம்பிப்பது முறைதானே!

தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக்கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்று இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவு இடம் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
அவரைப் ‘பிள்ளையார்’ என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேஸ்வரரின் ஜேஷ்ட புத்திரர் அவர். ‘பிள்ளை’ என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே ‘பிள்ளை’ என்று சொல்லக் கூடாது என்பதால் மரியாதையாகப் ‘பிள்ளையார்’ என்று சொல்வது தமிழ்நாட்டின் சிறப்பு.
‘குமாரன்’ என்றால் ‘பிள்ளை’ என்றே அர்த்தம். பாரத தேசம் முழுவதிலும் குமாரன், குமாரன்வாமி என்றால் பார்வதி பரமேஸ் வரரின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணி யரையே குறிப்பிடும். தமிழிலும் ‘குமரக்கடவுள்’ என்கிறோம். ஆனால், அவரைக் ‘குமரனார்’ என்பதில்லை. ‘குமரன்’ என்றுதான் சொல்வர். மூத்தப் பிள்ளைக்கே மரியாதைத் தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்’ என்று பிள்ளையாருக்கு அறிமுகம் தருகிறார் பரமாசாரியார். அடுத்து, ‘பிள்ளையாருக் தேங் காய் உடைப்பது ஏன்?’
விக்நேசுவரர், தன் அப்பாவான ஈஸ்வர னைப் பார்த்து ‘உன் சிரசையே எனக்குப் பலி கொடு’ என்று கேட்டுவிட்டாராம். எல்லாவற்றையும் விட உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணிலால்தான் மகா கணபதிக்கு பிரீதி ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈஸ்வரனைப் போலவே மூன்று கண்களை உடைய தேங்காயை சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈஸ்வரன் அனுக்கிரகம் செய்திருக்கிறார்.
தேங்காயை உடைக்கும்போது சிதறும் துண்டங்கள், குழந்தைகளுக்குத்தான் உரிமை என்கிறார் காஞ்சி மகான். ஒரு குழந்தை மூலமாகத்தான் அவருக்கே அந்த உண்மை தெரிய வந்திருக்கிறது.
அப்போது (1941) நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வந்திருக் கிறார் பெரியவர். அங்கே கோயிலில் பிள்ளை யாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம்கொடுக்காத
அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடுவார்கள்.
திபுதிபுவென்று அவர்கள் ஓடி வருவதில் பெரியவர் மீது விழுந்து விடக்கூடும் என்கிற பயம் அவருடன் வந்தவர்களுக்கு. குழந்தைகளைக் கண்டித்து விரட்டியிருக்கிறார்கள் அவர்கள்.
அப்போது துடிப்பு மிகுந்த ஒரு சிறுவன், ‘பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, பிறகு எங்களை வரவேண்டாம் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? சிதறுகாய் போட்டால் அது எங்கள் உரிமைதான். அதை எடுத்துக்கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்...’ என்று கூறியிருக்கிறான்.
அவன் பேசிய வேகம், அதில் இருந்த உறுதியைப் பார்த்தபோதுதான், ‘உண்மைதான் குழந்தை ஸ்வாமியின் பிரசாதத்தில் குழந்தை களுக்குத்தான் முழு உரிமையும்’ என்பது காஞ்சி பெரியவருக்குத் தெரிந்ததாம்!
அவர் மேலும் விநாயகர் புராணம் விவரிக் கிறார்: குழந்தைக்கு எது அழகு? குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறைய சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம் கூட இளைக்கக் கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால், அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா?.

குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாக கொழுகொழுவென்று இருந்தால்தான் அழகு. நிறையச் சாப்பிடுவதுதான் அழகு. குழந்தை நல்ல புஷ்டியாக இருக்கவேண்டும் என்பதை இந்தக் குழந்தைச்சாமியே காட்டிக் கொண்டிருக்கிறார், கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு.
பிள்ளையாருக்கு எதிரில் நின்று தோப்புக் கரணம் போடுபவர்கள் அநேகம் பேர். அதை நமக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்தவர் மகாவிஷ்ணுதான் என்று ஒரு கதை உண்டு.
ஒரு முறை, மகா விஷ்ணுவின் சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக்கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் பொருந்தியவர்.
அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்கவைத்துச் சந்தோஷத் தில் அவர் வாயிலிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் வாங்கிக்கொண்டு விடலாம் என்று மகா விஷ்ணுவுக்குத் தோன்றியதாம்.
உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக்கொண்டுவிட்டார்.
அவதாரம் நிகழ்ந்தது!
தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்த சேவப்ப நாயகர், வேதப் பண்டிதர்களையெல்லாம் ஆதரித்துத் தன்னுடைய சோழ தேசத்தில் குடியேற்றியவர்.

சேவப்ப நாயக்கரிடம் அமைச்சராக இருந்தவர் கோவிந்த தீட்சிதர். கன்னட தேசத்தைச் சேர்ந்த ஹொய்சாளர். இவரும், அந்தணர்கள் பலரும் காவேரிக்கரையில் குடியேறியதாக வரலாறு. திருவையாறுக்கு அருகில் இருக்கும் ஈச்சங்குடி என்ற கிராமத்தில் இருந்தது, கோவிந்த தீட்சிதரின் பரம்பரையில் வந்த நாகேஸ்வர சாஸ்திரிகள் குடும்பம். இவருடைய மகள், மகாலட்சுமி.
ஒரு முறை, திருவிடைமருதூர் சென்றிருக் கிறார் நாகேஸ்வர சாஸ்திரிகள். கையில் மகாலட்சுமியின் ஜாதகம். நாராயண சாஸ்திரிகள் என்ற மகானின் வழியில் வந்தவரான கணபதி சாஸ்திரிகளை சந்தித்திருக்கிறார். பரஸ்பரம் அறிமுகம் ஆனது.
“என் பொண்ணு மகாலட்சுமியின் ஜாதகத்தைக் கொண்டு வந்திருக்கேன்... உங்க மூத்த மகன் சுப்ரமணியனின் ஜாதகத்தோடு நீங்க பொருத்தம் பார்க்கணும்... சமசப்த ஜாதகமா இருந்தால், பெரியவர்கள் ஆசிர்வாதத்தோடு இந்தக் கல்யாணம் நடக்கணும்கறது என் பிரார்த்தனை...” என்றார், நாகேஸ்வர சாஸ்திரிகள். பக்கத்துக் கோயிலில் இருந்து மணியோசை ஒலித்தது.
‘`பிராப்தம் இருந்தா நடக்கட்டும்...” என்றபடியே ஜாதகத்தை வாங்கிக்கொண்டு பூஜை மாடத்தில் வைத்தார் கணபதி சாஸ்திரிகள். நம்பிக்கையோடு விடைப்பெற்றுக் கொண்டார். நாகேஸ்வர சாஸ்திரிகள், வரும் வழியில் மகாலிங்கேஸ்வரரை தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பினார்.
ஒருசில மாதங்களில் மகாலட்சுமியின் கரம் பற்றினார் சுப்ரமணியன். ஈச்சங்குடியில் எளிமையான முறையில், சாஸ்திர சம்பிரதாயங் களுடன் திருமணம் நடந்தேறியது. நல்லறமாக சென்று கொண்டிருந்தது இல்லறம்.
இந்தத் தம்பதிக்கு முதல் மகன் பிறந்தபோது, குழந்தைக்கு கணபதி என்ற தாத்தாவின் பெயரை வைத்தார்கள். குழந்தையும் கொழுகொழு வென்று வளர்ந்தது. அடுத்தப் பத்து ஆண்டு களுக்கு மகாலட்சுமிக்கு இன்னொருக் குழந்தை
|பிறக்கவில்லை. குடும்பத்துக்கு இது ஒரு குறையா கவே இருந்தது. இரண்டாவது குழந்தைக்காக மகாலட்சுமி தவமிருந்தாள்.
ஒரு முறை, ‘‘ஏம்மா... எப்பவும் உன் முகம் வாடியபடியே இருக்கு...?” என்று கேட்டான், பத்து வயது சிறுவன் கணபதி. “ஒண்ணுமில்லேடா... உன்னோட விளையாட ஒரு தம்பியோ, தங்கையோ இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன்...” என்றாள் மகாலட்சுமி.
நாட்கள் உருண்டோடின...
மகாலட்சுமியின் பிரார்த்தனைப் பலித்தது. தர்மசம்வர்த்தினி அருள்பாலித்தாள். மறுபடியும் கருவுற்றாள். சுற்றமும் நட்பும் சந்தோஷித்தது. 1894-ம் வருடம் மே மாதம் 20-ம் தேதி. அதாவது, ஜய வருடம், வைகாசி மாதம் 8-ம் தேதி அனுஷம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுப நாளில், பகல் 1:16 மணிக்கு குழந்தை பிறந்தது. சுவாமிநாதன் என்று குழந்தைக்கு நாமகரணம் செய்தார்கள்.
“குழந்தையோட முகத்தைக் கவனிச்சியா மகாலட்சுமி... எத்தனைக் களையோடு இருக்கு பார்...” என்று அப்பா சுப்ரமணியன் பூரிக்க, ‘`அப்படியே உங்களை உரிச்சு வச்சுருக்கு...” என்று மகாலட்சுமி வெட்கத்துடன் மகிழ...
பரமாசாரியாரின் திரு அவதாரம் நிகழ்ந்தது!
(வளரும்)

கம்பன் தமிழ்
வால்மீகி ராமாயணத்தில் உள்ள பெயர்களை கம்பன் தமிழில் எப்படி மொழிப் பெயர்த்துள்ளார்? மாதிரிக்குச் சில...
இலக்குமிபதி : திருவின் நாயகன்
பாததூளி : கழல் துகள்
லட்சுமி : தாமரைச் சேயவள்
கிருஷ்ணன் : கரியவன்
பங்கஜம் : அள்ளற் பூ
யக்ஞ சத்ரு : வேள்விப் பகை
பிராண நாயகர் : உயிரனைய கொழுநர்
ஹிரண்யன் : கனகன்
ரிஷ்ய சிருங்கர் : கலைக்கோட்டு முனி