மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 9

சிவமகுடம் - பாகம் 2 - 9
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 9

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

வந்தது அழைப்போலை!

ருணோதயம் துவங்கியிருந்தது. கிருதமால் நதிக்கரையில் நின்றபடி, அந்த நதியின் தண்ணீரைப் பருகி தாகம் தீர்த்துக்கொண்டிருந்தன புரவிகள் சில. அவற்றின் எஜமானர் களான பாண்டிய வீரர்கள், அடுத்த பயணத்துக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள்.  

சிவமகுடம் - பாகம் 2 - 9

மிக அற்புதமான நதி கிருதமால். ஆழ, அகலத்தைப் பொறுத்தவரையிலும் வைகைக்கு ஒப்பிட முடியாதுதான் என்றாலும், புனிதத்தில்... வைகை மட்டுமின்றி தண்பொருநையாம் தாமிரபரணி, காவிரி, கங்கை முதலான புண்ணிய நதிகளுக்கு எவ்விதத்திலும் இளைப்பில்லாதது கிருதமால்.

திருவரங்கத்தை அணைக்கும் பாக்கியம் காவிரிக்குக் கிடைத்ததெனில், கூடல்மா விண்ணகரத்தை (கூடலழகர் திருக்கோயில்) அணைத்துச் செல்லும் பாக்கியம் கிருதமாலுக்கு உண்டு. ஒரு பூமாலை போன்று அந்த விண்ணகரத் தையும் அதுனுள் உறையும்  கூடலழகரையும் அணைத்துத் தொழுதபடி வருவதால் என்னவோ, குறுநதியென்றாலும் அப்படியொரு குதூகலமும் ஆர்ப்பரிப்பும் உண்டு கிருதமாலுக்கு.

அதுமட்டுமா? புராணங்கள் சொல்லும் திருமாலின் அவதாரக் கதைகளில், முதலாவதான மச்சாவதாரம் நிகழ்ந்ததும் இந்த நதியில்தான். சத்தியவிரதன் என்ற மன்னனொருவன், அதிகாலை நீராடல் முடித்து கதிரோனுக்கு நீர்த்தாரை அளிக்கும்  தருணத்தில், அவன் கைகளில் சேர்ந்ததாம் சிறு மீனொன்று.

அதை அவன் நதியில் விட்டாலும், அந்த மீன் அவனை விட்டபாடில்லை. மீண்டும் மீண்டும் அவன் கரங்களில் அடைக்கலம் புகுந்தது. ஆகவே, அந்த மீனை இல்லத்துக்குக் கொண்டு சென்று, ஒரு நீர்க்கலத்தில் இட்டுவைத்தான் மன்னன். மீனாக வந்திருப்பது மாயவன் என்பது மன்னனுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

மீன் மாயம் செய்தது; மிகப் பெரிதாக வளர்ந்தது. அடுத்தடுத்து தொட்டியிலும், குளத்திலும், ஏரியிலுமாக அந்த மீனைக் கொண்டுபோய் சேர்த்தாலும், அந்த நீர்நிலைகளின் அளவையெல் லாம் மீறி வளர்ந்தது மீன். நிறைவில் அந்த மீனை சமுத்திரத்தில் சேர்த்தான் மன்னன். அங்கு நிகழ்ந்தது அற்புதம். மன்னவனுக்குத் தன்னை யாரென்று காட்டிய பரம்பொருள், வரப்போகும் பிரளயத்தை முன்னதாக அவனுக்கு எடுத்துச் சொல்லி, அவனையும் அவன் அணுக்கத்தாரையும் ரட்சித்ததோடு, அடுத்த சிருஷ்டிக்கான ஆயத்தத்தையும் நிகழ்த்தியது. ஆம்! அசுரர்களால் மறைக்கப்பட்ட வேதங்களையும் மீட்டருளியது, பகவானின் அந்த அவதாரம்.   

சிவமகுடம் - பாகம் 2 - 9

மீன்கொடி பறக்கும் பாண்டிய தேசத்தில் மீனாகவே பகவான் அவதாரம் நிகழ்த்தியது மிகவும் பொருத்தமானதுதான். மாலவனின் லீலை இப்படியென்றால், சிவ லீலைகளோ இந்தப் புண்ணிய பூமியில் அளவில்லாமல் நிகழ்ந்தேறின!

இப்படியான இந்த நதிக்கரையில் வீரர்கள் பயணத்துக்காக ஆயத்தமாகிக்கொண்டிருக்க, அவர்களின் தலைவரான குலச்சிறையாரோ  ஏற்கெனவே பயணத்தை ஆரம்பித்துவிட்டிருந்த படியால், இவர்களின் கண்ணைவிட்டு மறையும் தூரத்தில் நடந்துகொண்டிருந்தார். அவரின் நடைவேகத்துக்கு ஈடுகொடுக்கவிரும்பிய அவரது புரவி, தனது தளர்நடையை விடுத்து, சிறிது வேகத் தைக் கூட்டியது.

அவ்வளவு வேகமாக அவர் நடந்து கொண் டிருந்தாலும் சிறிதும் மூச்சிறைக்காமல், மேற் சொன்ன கிருதமாலின் புண்ணியக் கதைகளை, உடன் வந்துகொண்டிருந்த உபதளபதியிடம் வெகு ஆர்வத்துடன் விவரித்தபடி பயணித்துக் கொண்டிருந்தார். 

சிவமகுடம் - பாகம் 2 - 9ஒரு கட்டத்தில், தான் சொல்லும் விஷயங்களை உபதளபதி விருப்புடன் செவிமடுக்கிறானா என்பதை அறியும் ஆவலுடன் அவனை நோக்கினார். கதைகளை அவன் செவிமடுக்கிறான் என்றாலும் பூரணமாக அவற்றை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதை,  அவனின் திருமுகமே அவருக்குக் காட்டிக்கொடுத்தது.

`நடந்துகொண்டிருக்கும் வீரியமான விஷயங் களில் கவனம் செலுத்தவேண்டிய வேளையில், பேரமைச்சர் புராணக் கதைகளில் மூழ்கிவிடு கிறாரே’ என்ற சிந்தனையால் அவன் அகத்தில் உண்டான ஆதங்கம் முகத்திலும் வெளிப்பட்டது. பேரமைச்சரும் சடுதியில் அதைப் புரிந்து கொண்டார்.

‘‘உபதளபதியே! ஒன்றை நன்றாக மனதில் வாங்கிக்கொள். இப்படியான திருக்கதைகள்தான் நம் மண்ணின் மகிமைகளை, முன்னோரின் பெருமைகளை நமக்குச் செவ்வனே போதிக்கும். அவற்றையெல்லாம் அறிந்துகொள்ளாமல் ஒருவன் இந்த மண்ணின் மீது பற்றும் பாசமும் வைப்பது, இயலாத காரியம்.’’

‘‘புரிகிறது பிரபு. ஆனால்...’’

‘‘நடப்பு விஷயங்கள் உன்னைக் குழப்புகின்றன. அப்படித்தானே?’’ என்று கேள்வி கேட்டுவிட்டு, அதுதொடர்பாக அவனுக்குப் புரியும்படி விளக்கவும் முற்பட்டார் குலச்சிறையார்.

அவரைப் பொறுத்தவரையிலும், தன் வீரர்கள் சிந்தனைத் தெளிவுடையவர்களாக இருக்க வேண்டும். எதன் பொருட்டும் அவர்கள் குழப்பத் தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் அதீத கவனம் செலுத்துவார். இப்போதும் அப்படித்தான் உபதளபதிக்கும் அவன் மூலம் மற்றவர்களுக்கும் தெளிவை ஏற்படுத்த விரும்பினார்.

‘‘உபதளபதியே! இக்கட்டான நிலையில், இளங்குமரனை தன்னந்தனியே விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்ற கலக்கம் உனக்கு. எனது இந்த நடவடிக்கைக்கான காரணம் புரியாமல் தவிக்கிறாய் இல்லையா?’’ என்று அவர் கேட்கவும், `ஆம்' என்பது போல் தலையாட்டினான் உபதளபதி. பேரமைச்சர் தொடர்ந்தார்.

‘‘இளங்குமரனை தனியே விடவில்லை நான். அவனுக்கு நம்பிதேவனும், நம்பிக்கு இளங்குமரனும் உற்றத்துணையாக இருப்பார்கள்...’’ என்றவரை இடைமறித்து, உபதளபதி ஏதோ கேட்க முனைய, அவனைக் கையமர்த்திவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தர் குலச்சிறையார்.

‘‘எங்கோ எதிரிகளிடம் சிக்கிக்கொண்டிருக்கும் நம்பிதேவன் எப்படி இளங்குமரனுக்கு உதவியாக இருக்கமுடியும், அவனைத் தேடித்தானே இளங் குமரன் செல்கிறான். அப்படியிருக்க, வழியில் ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், ஒற்றையாளாகக் குமரனால் சமாளிக்க இயலுமா... இப்படியெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள், மதியூகியான உனது சிந்தையில் எழுவதில் வியப்பில்லைதான்.

ஆனாலும் சொல்கிறேன் கேள்... எனது கணக்குச் சரியாக இருந்தால் இன்னும் சில நாழிகைகளுக்குள் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள். நம்பிதேவன் சிறைமீட்கப்படுவான். அவர்கள் இருவரையும் என் சார்பில் அந்தக் குறத்திப்பெண் வழி நடத்துவாள்’’ என்று அவர் கூறி முடிக்கவும், உபதளபதி கேட்டான்.

‘‘ஸ்வாமி! நம்பிக்கும் இளங்குமரனுக்கும் அடுத்தடுத்து நீங்கள் கொடுக்கப்போகும் வேலை அசாத்தியமானதாயிற்றே. அந்தப் பெண் தாக்குப் பிடிப்பாளா?’’

உபதளபதி இப்படிக் கேட்டதும், அந்தப் பிராந்தியமே அதிரும் வகையில் மிகப்பெரிதாக நகைத்த குலச்சிறையார், தொடர்ந்து அவனிடம் வினவினார்: 

சிவமகுடம் - பாகம் 2 - 9

‘‘வீரனே! அதிபுத்திசாலியான உன்னால் கூடவா அவள் யாரென்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. உன் கண்களையே அவள் ஏமாற்றியிருக்கிறாள் எனில், நிச்சயம் அவள் சாதிப்பாள். சரி! அவள் பெயரைச் சொல்கிறேன். அதைக் கேட்டபிறகு நீ ஒரு முடிவுக்கு வா’’ என்றவர், சோழ மண்டலத்தில் பிரசித்திபெற்ற அந்தப் பெயரை  உச்சரிக்க முற்பட்டார்.

அப்போது, வெகுவேகமாக அவர்களைத் தாண்டிச் சென்ற வெண்புரவியொன்று, சிறிது தூரம் சென்றதும் சட்டென்று நின்று முன்னங் கால்களை உயரத் தூக்கி கனைத்ததோடு, ஓர் அரைவட்டமாக இவர்களை நோக்கித் திரும்பி நின்றது. அதன் மீது ஆரோகணித்திருந்தவன் தரை யில் குதித்து, அதே வேகத்தில் சிரம் தாழ்த்தி குலச்சிறையாருக்கு வணக்கம் செலுத்தினான். அத்துடன் அருகில் வந்தவன் ஓர் ஓலையை நீட்டினான் அவரிடம்.

பாண்டிமாதேவியாரின் பெயரிலான அந்த ஓலை, அவரை மிக அவசரமாக மாமதுரைக்கு அழைத்தது!

இங்கு இப்படியெனில், குகைச்சிறையை ஒட்டிய பகுதியில், குலச்சிறையாரின் வாக்கு பலிக்கும்விதமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன.

அடிகளாரின் ஆவேசம்!

விருட்சக் கிளை முரடனை நோக்கி இளங் குமரன் வேலாயுதத்தை ஏவியபோது, தனது வலக் கரத்தால்குறத்திப் பெண்ணைப் பிரயத்தனத்துடன் தாங்கிக்கொண்டிருந்தான் அந்த முரடன்.

கிளையில் தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்வ தற்காகவும், தனது பிடியை மேலும் வலுவாக்கிக் கொள்வதற்காகவும் மேற்கொண்ட முயற்சியில், அவன்  சற்றே இடப்பக்கமாக உடம்பை விலக்க, சீறிப்பாய்ந்து வந்த வேல் மிகச் சரியாக அவன் வலக்கரத்தைத் தாக்கியது!

மறுகணம் அவனது பிடி தளர, தரை நோக்கி அலறலுடன் விழத் துவங்கினாள் குறத்திப்பெண். இங்கே இந்தச் சம்பவம் குறத்திப் பெண்ணை அலறவைத்தது என்றால், குகைச் சிறையில் நம்பி சொன்ன பாதி ரகசியம், அடிகளாரை பெரும் பீதிகொண்டு அலறச் செய்தது.

ரகசியத்தைக் கேட்டதும் முதலில் பெரும் பீதியடைந்தவர், அதனால் ஏற்பட்ட அயர்ச்சி யோடு அப்படியே தரையில் சாய்ந்தார். ஆனாலும் அடுத்த சில கணங்களில் சுதாரித்து எழுந்தவர், ஆக்ரோஷமாக சுற்றுமுற்றும் பார்த்தார். எளிதில் அவரால் சுமக்க இயலாத பாறாங்கல் ஒன்று தென்பட, ஆவேசமாய்க் குரலெழுப்பியபடி அதை நோக்கிப் பாய்ந்தார். மிதமிஞ்சிய கோபம், காமம், குரோதம், இயலாமை முதலானவை கரைகடக்கும் போது, ஒருவனுக்கு அளவில்லாத தேக பலத்தைக் கொடுக்கும். அதே தருணம், புத்திபலத்தை உறிஞ்சிவிடும். இங்கும் அப்படித்தான் நடந்தது.

கோபத்தாலும் இயலாமையாலும் உந்தித் தள்ளப்பட்ட அடிகளார் பெரிதும் ஆவேசம் கொண்டார். தூக்க முடியாத அந்தப் பாறையையும் ஓர் எட்டில் பாய்ந்து சென்று சடுதியில் தலைக்கு மேல் தூக்கிவிட்டார். அதேநிலையில் அவனை நோக்கித் திரும்பியவர், ‘‘மீதியையும் சொல்லிவிடு. இல்லாவிடில், உன் சிரம் நசுங்கிவிடும்’’ என்று அந்தக் குகை அதிரக் கத்தினார்.

‘‘உம்மால் அது முடியாது’’ என்று கூறியதோடு, ஓர் ஏளனப் புன்னகையை அவரை நோக்கி வீசினான் நம்பிதேவன். அதேநேரம், அவனது வார்த்தையை மெய்ப்பிக்கும் விதம், அந்தக் குகைச் சிறைக்கு மிகச் சமீபமாய்க் கேட்டது, பாய்ந்து வரும் புரவியொன்றின் குளம்படிச் சத்தம்!

- மகுடம் சூடுவோம்...