மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்மனிஷிகள் - தங்கம்மா தாயம்மா - 7

 Divine human beings - Aval Vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
Divine human beings - Aval Vikatan

தெய்வ மனுஷிகள் வெ.நீலகண்டன், ஓவியம் : ஸ்யாம் படம் : ரா.ராம்குமார்

கேசவய்யா அளவுக்கு அலங்காரமா நகை செய்ற பொற்கொல்லர் சோழ தேசத்துலயே கெடயாது. மனுஷன் பட்டறையில உக்காந்துட்டாருன்னா, ராத்திரி பகல்னு பொழுதுபோறது தெரியாம கண்ணை விரிச்சு வெச்சுக்கிட்டு பொன்வேலை பாத்துக்கிட்டிருப்பாரு. கோயில்ல ஈஸ்வரனுக்கு அணிவிக்கிற ஆபரணத்திலேருந்து, ராணிங்க, இளவரசிங்க போடுற அணிகலன்கள் வரைக்கும் எல்லாத்தையும் கேசவய்யாவைத்தான் செய்யச் சொல்லுவாரு ராசா.

அந்தக் காலத்துல காவிரிக்கரையோரம் முழுக்க பெரிசு பெரிசா கோயில் கட்டிக்கிட்டிருந்தாக. படையெடுத்துப்போற தேசத்துல இருந்து அள்ளிக்கொண்டாற செல்வத்தையெல்லாம் அந்தக் கோயில்களுக்குள்ள தான் வைப்பாக. கோயில்களுக்கெல்லாம் நகை செய்யறதுக்கு தலைமை பொற்கொல்லரா கேசவய்யாவைப் போட்டாரு ராசா. கேசவய்யாவுக்குக் கீழே ஓராயிரம் பொற்கொல்லருங்க வேலை செஞ்சாக.

கேசவய்யாவோட பொஞ்சாதி பேரு சின்னம்மா. அவளும் பரம்பரையா பொன்நகை செய்யற குடும்பத்துல பிறந்தவதான். கேசவய்யாவுக்கு முறைமைக்காரி வேற. மங்கலகரமான மனுஷி. எல்லாம் இருந்தும் ஒரு புழுப்பூச்சி வாய்க்கலே வவுத்துல. ரெண்டு பேருக்கும் இது பெரும் மனக்குறையா இருந்துச்சு. சின்னம்மா, வாரம் தவறாம ஏழு மங்கா கோயில்களுக்கும் போயி விளக்குப்போட்டு கும்பிட்டு வருவா.
தம் புருஷனைத் தங்கத்தால தொட்டில் செய்யச் சொல்லி கொண்டுபோய் கோயில்கள்ல கட்டுவா.

சின்னம்மாவோட மனக்குறையைப் போக்க அந்த ஏழு மங்கா, ஒண்ணுக்கு ரெண்டு புள்ளைகளை அள்ளிக்கொடுத்தா. ரெண்டும் பொம்பளைப் புள்ளைக. அழகுன்னா அப்படியோர் அழகு. தங்கம்மா, தாயம்மான்னு ரெண்டு புள்ளைகளுக்கும் பேரு வெச்சு வளர்த்தாக.

குணத்துலயும் சரி; அறிவுலயும் சரி... ரெண்டு புள்ளைகளும் நெறைகுடமா வளர்ந்துச்சுக. படிப்பு, பரதநாட்டியம், லாவணி, பாட்டுன்னு எல்லாக் கலைகளும் அதுகளுக்கு கைவந்துச்சு. இடுப்புக்குக் கீழே அலையடிக்கிற கூந்தல், செழிப்பான உடல்வாகு, நிலா மாதிரி பளிச்சுன்னு ஒளிவீசுற முகம்னு ரெண்டு புள்ளைகளும் தங்கத்துல வார்த்த மாதிரி தகதகன்னு இருந்துச்சுக. தம் புள்ளைகளுக்குப் பொன்னும் மணியுமா விதவிதமா செஞ்சுபோட்டு அழகுபார்த்தார் கேசவய்யா.

 Divine human beings - Aval Vikatan
Divine human beings - Aval Vikatan

சாதி சனங்கள்லாம், ‘எனக்குக் கொடு’, ‘எனக்குக் கொடு’ன்னு பொண்ணு கேட்டுவந்து நிக்குதுக. கேசவய்யா கறாரா சொல்லிட்டாரு... ‘எம்புள்ளைக ரெண்டும் அரண்மனையில நம்ம ராசா முன்னாடி பரதநாட்டியம் அரங்கேற்றம் செஞ்சு பட்டம் வாங்கின பின்னாடிதான் கல்யாணமெல்லாம்...’

‘சாமிக்குச் செஞ்ச அணிகலனெல்லாம் அழகா வந்திருக்கா’ன்னு பாக்கிறதுக்காக திடீர்னு ஒருநா பரிவாரங்களோட கேசவய்யாவோட வீட்டுக்கு வந்தாரு ராசா. கடவுளே தன் வீட்டுக்கு வந்ததா நெனச்ச கேசவய்யா ராசாவின் பாதம் கழுவி, வீட்டுக்குள்ளாற கூட்டிக்கிட்டுப்போய் பட்டாசனம்போட்டு உக்கார வெச்சாரு. சின்னம்மா ராசாவுக்குப் பழரசம் கொடுத்து உபசரிச்சா. ஒண்ணுபோல பொன்னா வார்த்த ரெண்டு புள்ளைகளையும் கூப்பிட்டு ராஜாவுக்கு முன்னாடி நிறுத்தி, ‘இதுதான் ராசா நான் பெத்த புள்ளைக தங்கம்மா, தாயம்மா’ன்னு அறிமுகப்படுத்துனாரு கேசவய்யா.

ராசா அந்தப் புள்ளைக அழகைப் பாத்து அசந்து போனாரு. மனசுக்குள்ள அந்தப் புள்ளைக ரெண்டும் கல்வெட்டு கணக்கா பதிஞ்சுபோச்சு. அந்த வெசனம் புரியாம, கேசவய்யா வெள்ளந்தியா பேசிக்கிட்டிருக்காரு. ‘தம் புள்ளைக பரதநாட்டியம் கத்துருக்குதுக’ன்னும், ‘ராசா மனசு வெச்சா ஒருநாள் அரண்மனையில அரங்கேற்றம் செய்யுங்க’ன்னும், ‘அதுக்குப்பெறவுதான் சுப காரியம் செய்யணும்’னும் சொன்னாரு. ராசாவுக்கு ரொம்ப சந்தோஷம். ‘சரி... அடுத்த வாரமே நாள் குறிச்சுடலாம்’னு சொல்லிட்டு, பேருக்கு அணிகலன்களைப் பாத்துட்டு அரண்மனைக்குக் கிளம்பிட்டாரு.

ராசாவுக்கு, அரண்மனையில இருப்புக் கொள்ளலே. அந்தப் புள்ளைக ஆளுக்கொரு கண்ணுல ஏறி நின்னுக்கிட்டு எறங்க மறுக்குதுக. தூங்க முடியலே, சாப்பிட முடியலே. மந்திரிமாரைக் கூப்பிட்டாரு ராசா.  அடுத்த நாளே பரத நாட்டியத்துக்கு நாள் குறிக்கச் சொன்னாரு. 

தங்கம்மாவும் தாயம்மாவும் செதுக்கி வெச்சச் செப்புச்செலை கணக்கா  அலங்காரம் பண்ணிக்கிட்டு ராச சபைக்கு வந்திருச்சுக. ரெண்டு புள்ளைகளும் சுத்திச் சுழண்டு ஆடினதைப் பாத்து அரண்மனையே மயங்கிப்போச்சு. ராஜா நிலைமை மோசமாகிருச்சு. இந்தப் புள்ளைக இல்லாம இருக்க முடியாதுன்னு ஆகிப்போச்சு.

நாட்டியம் முடிஞ்சு, ரெண்டு புள்ளைகளும் ராஜா கால்ல விழுந்து வணக்கம் செஞ்சுச்சுக. லம்பகம், கடிகை, கன்னசரம், குச்சம், கொண்டைத் திருகு, கோதை, சூரியப்பிரபை, சூளாமணி, சொருகுப்பூ, கொத்து, கொடி, கொத்தமல்லி மாலை, மருதங்காய் மாலைன்னு பாத்துப்பாத்து செஞ்ச ஆபரணங்களை எல்லாம் ரெண்டு புள்ளைகளுக்கும் அள்ளி அள்ளி கொடுத்தாரு ராசா. கேசவய்யாவுக்கு நடக்கிறதெல்லாம் நினைவா, கனவான்னு புரியலே. ராசாவைக் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொன்னாரு. புள்ளைக ரெண்டுக்கும் சந்தோஷம் தாளலே.

ராசா பேச ஆரம்பிச்சாரு. `இதுவரை இந்தச் சோழ மண்டலத்துல எத்தனையோ பெண்கள் நாட்டியமாடியிருக்காக. இதுமாதிரி இலக்கணம் தவறாத நாட்டியத்தை நாம் பாத்ததில்லை. இவ்வளவு பெரிய கலைமாமணிங்க, ஒரு பொற்கொல்லர் வீட்டுல இருக்கிறது நல்லதில்லை. இந்தப் பெண்கள் ரெண்டு பேரும் இனிமே என் அரண்மனையிலதான் இருக்கணும்'னு சொன்னார்.

ராசாவோட நோக்கம் புரிஞ்சுபோச்சு கேசவய்யாவுக்கு. கண்ணுக்கு முன்னாடி இருந்த பனியெல்லாம் விலகி உண்மை சொரூபம் தெரியுது. ‘அடப்பாவி மனுஷா... எம்புள்ளைகளை காவு கேக்குறீயே’ன்னு உள்ளுக்குள்ள பொருமுறாரு. சின்னம்மாவுக்கு மயக்கமே வந்திருச்சு. ‘கலையெல்லாம் கத்துக்கொடுத்து பூமாதிரி வளர்த்தெடுத்த புள்ளைகளுக்கு அந்தக் கலையே வினயமாப் போச்சே’ன்னு கலங்கிப்போனா. ஆனா, கேக்குறவன் ராசாவாச்சே... குடுக்கலேன்னா விடுவானா? அவனை எதுத்துப்பேச முடியுமா? இல்லைன்னுதான் சொல்ல முடியுமா?

 Divine human beings - Aval Vikatan
Divine human beings - Aval Vikatan

‘அய்யா... ராசா... எனக்கு ரெண்டு நாளு அவகாசம் கொடுங்க... அதுக்குள்ள புள்ளைகளை உங்க அரண்மனையில கொண்டுவந்து விட்டுர்றேன்’னு சொல்லிட்டு வந்தாரு கேசவய்யா.

வீடு திரும்பியாச்சு. ராசா என்ன நோக்கத்துல அரண்மனைக்கு வரச் சொல்றாருன்னு அந்த வெள்ளந்திப் புள்ளைகளுக்குப் புரியற வயசுமில்லை. ‘நாட்டியத்தைப் பாராட்டி பொன்னையும் பொருளையும் அள்ளிக்கொடுத்திருக்காரு ராசா. அப்பாவும் அம்மாவும் ஏன் இப்படிக் கதறி அழுவுறாங்க’ன்னு குழப்பமா பாத்துச்சுக.

ரெண்டு புள்ளைகளையும் தூங்க வெச்சுட்டு கேசவய்யாவும் சின்னம்மாவும் உறவுக்காரங்களை எல்லாம் கூப்பிட்டாக. ‘இந்த படுபாவி ராசா, புள்ளைகளை நிம்மதியா வாழ விடமாட்டான். ராசாவைப் பகைச்சுக் கிட்டு உயிரோடவும் வாழ முடியாது. கிளி மாதிரி வளர்த்து கோட்டான் கையில கொடுக்கிறது நம்ம தர்மம் கிடையாது. எங்களுக்கு நீங்கதான் நீதி சொல்லணும்’னு கேட்டாக. உறவுக்காரக ஆளுக்கொரு யோசனை சொன்னாக. ஒரே சலசலப்பா கெடந்துச்சு. இறுதியா எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தாக.

பொழுது விடிஞ்சுச்சு.

தங்கம்மாவுக்கும் தாயம்மாவுக்கும் புத்தாடை உடுத்திவிட்டாக... இருந்த நகை நட்டெல்லாம் எடுத்துப் போட்டு விட்டாக. கேக்குற பண்டத்தையெல்லாம் திங்கக்கொடுத்தாக. தலைநிறைய பூ வெச்சாக. ரெண்டு புள்ளைகளுக்கும் என்ன நடக்குதுன்னே புரியலே. ‘அம்மாகாரி, பாட்டிகாரியெல்லாம் ஏன் நம்மளைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுவுறாக’ன்னும் தெரியலே.

பொழுது சாஞ்சுச்சு. சின்னம்மாவும் கேசவய்யாவும் புள்ளைகளைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் பின்புறம் போனாக. அங்கே புதுசா ஒரு நிலவறை வெட்டியிருந்தாக. சின்னம்மா ரெண்டு புள்ளைகளையும் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தா. கேசவய்யா ரெண்டு புள்ளைக தலையிலயும் கைவெச்சு ஆசீர்வாதம் செஞ்சாரு. உறவுகள்லாம் சுத்தி நின்னு வேடிக்கை பாத்துச்சுக.

கேசவய்யா, தங்கம்மாவையும் தாயம்மாவையும் நிலவறைக்குள்ள இறங்கச்சொன்னாரு. அப்பா சொல் மறுத்துப் பேசாத புள்ளைக ரெண்டும் கையைக் கோத்துக்கிட்டு இருட்டா இருந்த நிலவறைக்குள்ள தட்டுத்தடுமாறி இறங்குச்சுக. இறங்கினதும், மேலே பெரிய கல்லை வெச்சு மூடிட்டாக. நிலவறைக்குள்ள மூச்சடங்கி ரெண்டு புள்ளைகளும் அலறுதுக. மூடியிருக்கிற கல்லுல பட்டு அந்த அலறல் சத்தம் எதிரொலிக்குது. வெளியில நிக்குற எல்லாரும் கதறி அழுவுறாக. கொஞ்சம் கொஞ்சமா நிலவறைக்குள்ள குரல்கள் அடங்கிப்போச்சு. வெளியில அழுகைச்சத்தம் அதிகமாகுது.

செத்துப்போன புள்ளைகளுக்கு சடங்குகளைச் செஞ்சுட்டு, உறவுக்காரக எல்லாரும் பெட்டிப் படுக்கையைக் கட்டுனாக. ‘இனியொரு நிமிஷம் இங்கேயிருந்தாலும் ராசா கூண்டோட அழிச்சிருவான்’. மாட்டு வண்டியில சாமான் செட்டை ஏத்திக்கிட்டு தெக்கால கிளம்பி, சேர நாட்டுக்குள்ள ஓடி ஒளிஞ்சுட்டாக.

போன இடத்துல நிம்மதியா வாழ முடியலே. வறுமை துரத்துச்சு. நோய்கள் உடம்புல ஏறி வதைக்கத் தொடங்குச்சு. சரசரன்னு சாவு கொடி மாதிரி படர்ந்து ஆளுக மேல ஏறி அமுக்குச்சு. சின்னது பெரிசுன்னு திடீர் திடீர்னு செத்துச்செத்து விழுகுதுக. எல்லாம் பயந்துபோயிட்டாக. எந்தப் பாவமும் அறியாத ரெண்டு கன்னிப் பொண்ணுகளை ராசாவுக்கு பயந்து நிலவறைக்குள்ள இறக்கி அநியாயமா கொன்ன பாவம்தான் நம்மளைச் சுத்தி வளைச்சு வாட்டுதுன்னு புரிஞ்சுக்கிட்டாக. ‘அம்மா கன்னிகளா... எங்களை கைவிட்டுறாதீய... காப்பாத்துங்க தாயி...’னு ரெண்டு புள்ளைகளுக்கும் பீடம் வெச்சு படைப்புப்போட்டு சாமியா கும்புட ஆரம்பிச்சாக.

கன்னியாகுமரி மாவட்டத்துல இரணியல்னு ஓர் ஊரு இருக்கு. அங்கே, ஒதுக்குப்புறமான ஓர் இடத்துல தங்கம்மாவும் தாயம்மாவும் வெட்டவெளியில பீடக்கல் வடிவத்துல உறைஞ்சிருக்காக. அந்த வெளியில ரெண்டு கன்னிகளோட ஏக்கமும் துக்கமும் வெம்மையா தகிச்சுக்கிடக்கு. கிட்டப்போய் கையெடுத்துக் கும்புட்டா, அது நமக்குள்ளயும் பரவி உசுரப் புடிச்சு உலுக்குது.

- வெ.நீலகண்டன், ஓவியம் : ஸ்யாம்