மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 11

சிவமகுடம் - பாகம் 2 - 11
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 11

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

கார் காலம் தொடங்கிவிட்டிருந்தபடியால், வழிநெடுக ஆங்காங்கே தூறலும் சாரலுமாய் விட்டுவிட்டுப் பெய்து, அவர்களது பயணத்தைச் சுணங்கச் செய்தது மழை. ஆனாலும், அந்தி மயங்குவதற்குள் மலைக் கிராமத்தை அடைந்துவிடும் துடிப்புடன், இயன்றவரையிலும் நடையில் வேகத்தைக் காட்டினார்கள், சேனை வீரர்கள்.

`அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை' என்பதுபோல், பல்லக்குத் தாங்கிகளும், ஓட்டமும் நடையுமாக விரைந்தார்கள்.

சிவமகுடம் - பாகம் 2 - 11

தோளில் இருக்கும் சுமையை, அவர்கள் பாரமாகக் கருதவில்லை என்பதை, எவ்வித சலிப்பும் சோர்வும் இல்லாத பொலிவுடன்கூடிய அவர்களின் திருமுகமே எடுத்துக்காட்டியது.  ஆஜானுபாகுவான அவர்களின் உடல்வாகு அதற்கொரு காரணம் என்றால், இன்னொரு காரணமும் உண்டு.

பல்லக்கில் அவர்கள் சுமந்து வந்தது, தாய்க்கு நிகராக அவர்கள் போற்றி மதிக்கும் - அவர்களின் உயிரினும் மேலான பாண்டிய தேசத்தின் பேரரசியை - பாண்டிமாதேவியை!

`தாயைச் சுமப்பது பிள்ளைகளுக்குப் பாரமாகுமா?’

இப்படியான எண்ணம் மனதில் கிளர்ந்தெழுந்ததால் உண்டான பரவசத்தோடும், இறை பூஜைக்கான பூக்களைக் கொண்ட பூக்குடலையைச் சுமப்பதுபோன்ற பவ்வியத்துடனும் தங்களின் பேரரசியை... இல்லை இல்லை... தங்களின் அன்னையை, அந்தப்  பல்லக்கில் சுமந்து சென்றார்கள் அந்தப் பிள்ளைகள்.

உண்மையில், அந்தப் பல்லக்கின் உள்ளே ஒரு பூக் குவியலாகவே அமர்ந்திருந்தார், பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியார்.  அவரது சிகையலங்காரத்திலும், ஆபரணங்களைவிட பூக்களே அதிகம் இடம்பெற்றிருந்தன.

அவ்வப்போது, பல்லக்கின் திரை களைத் தாண்டி உள்ளே தெறித்துவிழும் சாரலின் ஸ்பரிசம், அவரின் திருமுகத்தை மலரச்செய்ய, அந்தக் காட்சி... பூக் குவியலின் மையத்தில் ஒரு கமலம் இதழ் விரித்ததுபோன்று திகழ்ந்தது!

திருமுகம் மட்டுமா? அவரின் மனமும் மலர்ந்து மணம்வீசிக் கொண்டிருந்தது என்றே சொல்லவேண்டும்.

ஆம்! இளவரசி மானியாய் அவர் சோழ தேசத்தில் கோலோச்சியபோது இருந்ததற்கும், இப்போது பாண்டிய தேசத்தின் பேரரசியாய் இருப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை ஆராயத் தலைப்பட்டு, அந்த ஆராய்ச்சி யால் கிடைத்தத் தீர்வை அசைபோட்டுக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி, அவரின் மனதை அப்படி மலரச் செய்திருந்தது!

சார்ந்தோர்களிடம் கொண்டிருக்கும் பாசத்தில், குடிமக்கள் மீதான நேசத்தில், அரசாங்கக் காரியங்கள் சார்ந்த ஆளுமை முதலானவற்றில் எல்லாம் எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லைதான். ஆனால், அவருக்கே உரிய அந்தத் தாய்மையுணர்வு, அப்போதிருந்ததை விட, இப்போது அதிகப்பட்டிருப்பதை அவரால் உணரமுடிந்தது.

அதை அவருக்கு உணர்த்தியது, முந்தைய தினம் அந்தச் சிவனடியார் திருநீற்றுப் பிரசாதத்துடன் பகிர்ந்து கொண்ட சம்பவம்!

தற்காலத்தில், சிவநேசர்களெல்லாம் போற்றிக் கொண்டாடும் புண்ணியக் கதையாகிவிட்ட அந்த அருள்நிறைச் சம்பவம் இதுதான்...

சீர்காழித் திருநகர். வழக்கத்தில் இப்போது `சீர்காழி' என்று நாம் அழைத் தாலும், புராணங்களும் சமய நூல்களும் இவ்வூருக்குப் பல திருப்பெயர்களை வழங்கி பெருமைப்படுத்துகின்றன. எனினும், `பிரமபுரம்' எனும் திருப்பெயர் மிகப் பழைமையானது என்பார்கள்.

நாம், நாமறிந்த `சீர்காழி’ எனும் திருப்பெயரைக்கொண்டே இவ்வூரையும், இத்தலத்தில் நிகழ்ந்ததாகச் சிவனடியார் பாண்டிமா தேவியாரிடம் பகிர்ந்துகொண்டு சிலாகித்த திருக்கதையையும் அறிந்து மகிழ்வோம்.

சீர்காழியின் தோணியப்பர் திருக்கோயிலின் எதிரில் அமைந் திருக்கிறது பிரம்ம தீர்த்தம். பிரம்மதேவனால் உருவாக்கப்பட்டது  என்பதைவிடவும், அன்று நிகழ்ந்த அந்த அற்புதத்தாலேயே பெரும் பெருமையை தனதாக்கிக் கொண்டுவிட்டது இந்தத் தீர்த்தம் என்றே சொல்லவேண்டும்.

அதிகாலை வேளை! பிரம்ம தீர்த்தக் கரையை அடைந்தார், சிவபாத இருதயர். சிவபக்தச் சீலரான அந்த அந்தணருடன்  அவரின் பிள்ளையும் வந்திருந்தான். மூன்று வயதுகூட ஆகவில்லை. ஆனாலும் பிடிவாதம் அதிகம் அவனுக்கு. தந்தை எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேளாமல், தானும் உடன் வருவதாக அழுது அடம்பிடித்து வந்திருந்தான் அந்தப் பாலகன்.

தீர்த்தத்தின் தெற்குப் படிக்கட்டில் மகனை உட்காரச் செய்த சிவபாத இருதயர், அங்கேயே அமர்ந்திருக்கும்படி திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டுத் தீர்த்தத்துள் இறங்கினார்.

புன்னகையோடு தலையாட்டிய மகனை, பார்வையால் அரவணைத்துக் கொண்டே புனித நீரை வணங்கிவிட்டு நீராடத் தொடங்கினார். இடுப்பளவு நீரில் நின்றபடி மந்திரங்களை ஓதி வழிபட்டார்; பிறகு சிரம் மேல் கரம் குவித்து, தோணியப்பர் விமா னத்தை நோக்கி வணங்கினார். இங்ஙனம், தம்முடைய நித்தியக் கடமைகளைச் செவ்வனே செய்துகொண்டிருந்தவர், இடை யிடையே கரையில் அமர்ந்திருக்கும் தன் பிள்ளையைக் கவனிக் கவும் தவறவில்லை.

தந்தையார், தோணியப்பரின் விமானத்தைப் பார்க்கும்போது,  தானும் விமானத்தை நோக்குவான் பாலகன். பிறகு, அவர் கடமை களைத் தொடரும்போது, அவனின் கவனமும் அவர் மீது பதியும்.

சிவபாத இருதயர், மீண்டும் ஒருமுறை தோணியப்பர் விமானத் தைத் தொழுதுவிட்டு நீருக்குள் மூழ்கினார். மனதுக்குள் அந்த அற்புத மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கினார். நீருக்குள் மூழ்கிய நிலையில் ஓதப்படும் அந்த மந்திரம், மனதை மேலும் மேலும் செம்மைப்படுத்தும். இப்படியான மந்திர ஜபத்தின்பொருட்டு, சிவபாத இருதயர் நீர்மட்டத்துக்கு வெளியே தலையுயர்த்த சிறிது நேரம் பிடித்தது. விளைவு...

சிவமகுடம் - பாகம் 2 - 11

தோணியப்பர் விமானத்திலிருந்து பார்வையைத் திருப்பி தந்தை யைப் பார்த்த பிள்ளைக்கு அதிர்ச்சி! ‘தந்தையைக் காணோமே!’  என்று பரிதவித்துப்போனான் பாலகன்.  உதடுகள் பிதுங்கிக்கொள்ள, கண்களில் தாரை தாரையாய் நீர் வழியத் தொடங்கியது. தந்தை, தன்னை விட்டுவிட்டுப் போய்விட்டாரோ என எண்ணிய அந்தப் பாலகன் அழத் தொடங்கினான்.

அழுகையின் ஊடே அப்பா வணங்கித் தொழுத தோணியப்பர் விமானத்தையும் ஒரு முறை நோக்கினான்.

அவ்வளவுதான்... இப்போது, அவனது அழுகை இன்னும் அதிக மானது. அந்த விமானத்தை நோக்கி `அம்மா’ என்றழைத்து, மிகப்பெரிதாக அழத் தொடங் கினான். அப்போதுதான் நிகழ்ந்தது அந்த அற்புதம்!

உலகமாதாவான சாட்சாத் அம்பிகையே பொற்கிண்ணத்துடன் இறங்கி வந்து, அந்தக் குழந்தைக்கு ஞானப்பால் அளித்தாளாம்!  இது இப்படியென்றால், இதன் பிறகு தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் அதியற்புதம்! 

சிவமகுடம் - பாகம் 2 - 11

அவை குறித்து, அவற்றை நேரிலேயே தரிசித்து மகிழ்ந்த அந்தச் சிவனடியாரின் வாக்காலேயே கேட்டு மகிழ்வோமா?

ள்ளம் சிலிர்க்க அந்த அற்புதங்களை எல்லாம் பாண்டிமாதேவியாரிடம் பகிர்ந்து கொண்டார் சிவனடியார்: ``தண்ணீருக்கடியில் மந்திர ஜபத்தில் லயித்திருந்த சிவபாத இருத யருக்கு, பிள்ளையின் குரல் நடுவில் கேட்டிருக்க வேண்டும். ஜபம் முடிந்து நீருக்குள்ளிருந்து தலை நிமிர்த்தியவர், கரையில் அமர்ந்திருந்த பிள்ளையைத் தேடியிருப்பார் போலும்.

ஏற்கெனவே, அவர் அமர்த்தியிருந்த இடத்தி லிருந்து சற்றுத் தள்ளி அந்தப் பாலகன்  அமர்ந் திருக்க, அவன் கைகளில் அம்மையவள் கொடுத்த பொற்கிண்ணம், சூரியோதய ஒளி பட்டு தகதகத்ததாம்!

அது என்ன ஏதென்று பார்ப்பதற்காக படியேறி வந்த சிவபாத இருதயர், பிள் ளையை அருகில் நெருங்கியதும் பதறிப்போய்விட்டார் போலும். ஆனால் பிள்ளையோ, அவரைக் கண்டதும் தன் வாயிதழ்களில் பால் வழியச் சிரித்திருக்கிறான்.

சிவபாத இருதயரை ஆத்திரமும் ஆதங்கமும் ஆட்கொண்டுவிட, தன் மைந்தனை அதட்ட ஆரம்பித்துவிட்டார். அந்த அரவத்தைக் கேட்டு கூட்டம் கூடியது. அந்தக் கூட்டத்தில் அடியேனும் ஒருவன் தாயே!’’ என்று கூறி சற்று நிறுத்தியவர், ``சிவ சிவா...’’ என்று சிவநாமத்தை ஒருமுறை உச்சரித்து, தனது பரவசத்தை வெளிப்படுத்தி யவர், அற்புதம் குறித்து மீண்டும் விவரிக்கத் துவங்கினார்.

‘‘நாங்கள் அருகில் செல்லும்போது, மகனின் தோளைப் பற்றியபடி   ‘எங்கிருந்து எடுத்தாய்?’ எனக்கேட்டு உறுமிக்கொண்டிருந்தார் அந்தத் தந்தை.

‘எவரேனும் இறைவனுக்குச் சமர்ப்பிக்க வந்த பாலை இவன் எடுத்துக் குடித்திருப்பானோ’ என்ற அவரின் முணுமுணுப்பும் பரிதவிப்பும் அவரின் நிலையை, தெள்ளத் தெளிவாக  உணர்த்தின எங்களுக்கு.

நாங்கள் அவரைத் தேற்றுவதற்குள் அருகிலிருந்த கொம்பு ஒன்றை கையில் எடுத்து விட்டார் சிவபாத இருதயர். மறுகணம் அவனை அடிப்பதற்கும் கையை ஓங்கினார். நாங்கள் தடுக்க முனைவதற்குள், அதற்கு வாய்ப்பு தராதபடி அந்தப் பிள்ளை ஒரு திசையை நோக்கி கையை நீட்டினான்.

தாயே..! அவன் சுட்டிக்காட்டிய திசையில் நாங்கள் தரிசித்தது, தோணிபுரத்து விமானத்தில் காட்சியளித்த ரிஷபாருடர் மூர்த்தத்தை!

சடுதியில் உணரமுடிந்தது என்னால்... அனைத்துக்கும் காரணம் அந்த அம்மையும் அப்பனுமே என்று. எனது யூகத்தை மெய்ப்பிப் பது போல் நடந்தது, அடுத்ததாக ஓர் அற்புதம்.

ஆம், தாயே! மூன்று வயதுகூட நிரம்பிடாத அந்தக் குழந்தை, தமது கொவ்வைச் செவ் வாய் இதழ் பிரித்துப் பாடத் துவங்கியது...’’ என்ற சிவனடியார், அன்றைக்கு அந்தச் சீர்காழிச் சிவக்கொழுந்து பாடிய அந்தப் பதிகத்தை ராகத்தோடு பாடியும் காட்டினார் பாண்டிமா தேவியாரிடம்.

``தோடுடைய செவியன்  விடையேறிஓர்
    தூவெண்மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி
      என் உள்ளம் கவர்கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள்பணிந்து 
       ஏத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே...’’


அடடா! என்னவோர் அற்புதமான பாடல்!

இந்தச் சம்பவத்தையும் பதிகத்தையும் செவிமடுத்த அந்தக் கணத்திலிருந்து, தம்மையு மறியாமல் தமக்குள் ஏதோ பாசமும் பரித விப்பும் பொங்கிப் பெருகுவதை, பாண்டிமா தேவியார் உணரவே செய்தார்.

இதோ, இப்போதும்கூட அந்தச் சிவனடியாரின் குரல் ஒலிப்பது போன்றும், அந்தக் குரல் மீண்டும் அந்த இறையருள் சம்பவத்தை, சீர்காழிக் குழந்தை பதிகம் பாடிய அற்புதத்தைப் பகிர்வதுபோன்றும் ஒரு பிரமை அவருக்கு.

இப்படியான சிந்தனைகள் மனதின் மகிழ்ச் சியை, மலர்ச்சியை மென்மேலும் அதிகப்படுத்த, அதன் விளைவாக உள்ளுக்குள் சிலிர்ப்பு மேலிட மெய்ம்மறந்து அமர்ந்திருந்த அந்தப் பேரரசியை, திடுமென ஏற்பட்ட பல்லக்கின் குலுங்கல் இயல்புநிலைக்குத் திருப்பியது.

பல்லக்கு ஆட்டம் கண்டதற்குக் காரணம், அதைச் சுமப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஏதோ பிரச்னையாகத்தான் இருக்கும் என்று பாண்டிமாதேவியார் அனுமானித்த கணத்தில், மீண்டும் பலமாகக் குலுங்கியது பல்லக்கு. 

தொடர்ந்து... அதிபயங்கரமான பிளிறல் சத்தம்! வீரர்களின் கூச்சல்!

சட்டென்று பல்லக்கின் திரையை விலக்கி, வெளியே நோக்கிய பாண்டிமாதேவியார், ஒரு கணம் அதிர்ந்துபோனார். கருமைநிறக் குன்று ஒன்று எழுந்தோடி வருவதுபோல், மாபெரும் களிறு ஒன்று, அவர்களை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தது.

ஒரு கணம் பெரும் பீதிக்கு ஆட்பட்டாலும்,   மறுகணமே சேனை வீரர்களில் சிலர் சுதாரித்துக் கொண்டு, தங்களின் வேலாயுதத்தை பிரயோகப் படுத்தத் தொடங்கினார்கள். இன்னும் சிலர் அம்புதொடுத்தார்கள். ஆனாலும் பயனில்லை.

பேராபத்து நிகழ்ந்திருக்கவேண்டிய அந்தச் சூழலில், அந்தக் களிறு அடக்கப்பட்டு, அதுவே பாண்டிமாதேவியாருக்கு மாலை சூடி மரியாதையும் செய்ததென்றால்... அதை, அப்படி அடக்கியாண்ட அந்த மகாபுருஷர் அசாத்தியமானவர்தான்!

- மகுடம் சூடுவோம்...