
மகா பெரியவா - 14

ஓவியங்கள்: கேஷவ்
நண்பரின் வற்புறுத்தலின்பேரில் மகா பெரியவரை தரிசிக்கச் சென்றார் சாமண்ணா ஷான்பாக். ஜன்னலுக்குப் பின்னால் சாந்தமே உருவமாக அமர்ந்திருந்த மகா பெரியவரைப் பார்த்ததுமே சாமண்ணாவின் உள்ளத்தில் ஆனந்தம் பெருகிற்று.
சற்று நேரம் மாமுனியை தரிசித்துத் திளைத்தார். ‘இந்த சந்நியாசியை எங்கேயோ பார்த்திருக்கிறோமே’ என்ற யோசனையுடன் வீட்டுக்குத் திரும்பியதும், தன் பழைய பெட்டியைத் திறந்து பார்த்தார் சாமண்ணா. பல வருடங்களுக்குமுன் யாரோ ஒருவர் கொடுத்திருந்த படம் அதற்குள் வைக்கப்பட்டிருந்தது. லேசாகப் பழுப்பேறிய அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தார். ‘இந்தப் படத்தில் இருப்பவரும் ஜன்னலுக்குப் பின்னால் அமர்ந்திருந்தவரும் ஒருவரே. அவரைப் பார்த்தால் உத்தமமான ஒரு சாதுவாகத்தான் தோன்றுகிறது.’ என்று நினைத்துக்கொண்டார்.
அன்று முதல் தினமும் சங்கர மடம் செல்வதை வழக்கமாகக் கொண்டார் சாமண்ணா. வெறுங்கையுடன் அல்லாமல், தயிர், பால், பழ வகைகளுடன் செல்வார். ஒரு நாள் ஐந்து லட்ச ரூபாயை எடுத்து வந்து சுவாமிகளிடம் சமர்ப்பித்தார்.
“இதெல்லாம் எதுக்கு?” என்று கை ஜாடையிலேயே கேட்டார் மகா பெரியவா. சந்நிதியில் பணம் சமர்ப்பிக்கும் பழக்கம் நின்று பல ஆண்டுகள் கடந்துவிட்டன என்பது சாமண்ணாவுக்குத் தெரியாது.
“சுவாமிகளுக்கு இஷ்டமான நல்ல காரியத்துக்குச் செலவழிக்கத்தான்...” என்று தயக்கத்துடன் இழுத்தார் சாமண்ணா.
“இதை எடுத்துண்டு போய் உன் மனசுக்குத் தோணுற தர்ம காரியத்தைச் செய்...”
இது சாமண்ணா எதிர்பார்க்காதது. இதுவரை அவர் சந்தித்த சந்நியாசிகள் அனைவரும் முதலில் பேசியது பணத்தைப் பற்றியதாகத்தான் இருந்திருக்கிறது. பெரியவா பணத்தைத் தொடுவதற்குக் கூட மறுக்கிறார். எடுத்துச் சென்றுவிடுமாறு பணிக்கிறார்.
சில நாள்கள் கழித்து மேலும் சில லட்சங்களை எடுத்துக்கொண்டு மடத்துக்குச் சென்றார். ‘பரமாத்மா’ என்று அவர் விளிக்கும் மகா பெரியவரை தரிசித்தார்.
“பரமாத்மா... உங்களின் பாதங்களில் வைத்த பணத்தை திருப்பி எடுத்துக்கொண்டு போக என் மனம் ஒப்பவில்லை. இது தங்களுக்காகத்தான். நீங்கள் சொல்லும் தர்மத்தை நிறைவேற்றக் காத்துக்கொண்டிருக்கிறேன். தயவு பண்ணி நிராகரித்துவிடாதீர்கள்....” என்ற சாமண்ணாவின் குரல் நடுங்கியது.

“அப்போ ஒரு கோயில் கட்டேன்...” என்றது அன்புத் தெய்வம்.
“காத்திருக்கிறேன் பரமாத்மா... நான் ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கிற நிலம் இருக்கிறது. தாங்கள் ஆசி வழங்கினால் கட்டி முடிக்கக் காத்திருக்கிறேன். என்ன கோயில் கட்ட வேண்டும் என்று உத்தரவிடுங்கள் பரமாத்மா...”
“தட்சிண முகமாயிருக்கும் சுவாமிக்கு நீ சொல்ற இடத்துல ஒரு கோயில் கட்டலாமே...”
சுவாமிகள் தட்சிணாமூர்த்தியைக் குறிப்பிடுகிறாரா அல்லது தென்னகத்திலுள்ள ஒரு கோயிலையா என்ற சந்தேகம் சாமண்ணாவுக்கு. அவரது சந்தேகத்தை சுவாமிகள் தெளிவுபடுத்தினார்.
“நீ சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் போனது உண்டா?”
“இல்லை பரமாத்மா...”
“தெரிந்தவர்களை அழைத்துக்கொண்டு, அதைப் போய் பார்த்துவிட்டு வா...”
உடனே புறப்பட்டார். மகன் ரமேஷ் மற்றும் பேரன் இணைந்துகொண்டார்கள். நண்பர்கள் சிலரும் உடன் சென்று உதவினார்கள். நடராஜரை தரிசித்த சாமண்ணாவுக்கு கயிலாயத்துக்கே சென்று திரும்பிய பரவசம். சதாராவுக்குச் சென்று ‘பரமாத்மா’வின் பாதக்கமலங்களைச் சேவித்தார். சதாராவில் உத்தர சிதம்பரம் கோயில் நிர்மாணிப்பதில் தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்க ஆசி பெற்றார்.
ஆலயப் பணித் தொடங்கியது. அப்போது சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் சாமண்ணா. தீராத நோயின் பிடியில் சிக்கி பம்பாய் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர், உற்சாகமும் மன வலிமையும் குறைந்தவராகக் காணப்பட்டார். இருப்பினும் தெய்வத்தின் பெருங்கருணையாலும், ஆலயத்தைக் கட்டி முடிக்கும் வரை வாழ்ந்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தாலும் மேற்குக் கோபுரம் எழும்பும் வரை உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்துவிட்டு. ‘பரமாத்மா’வுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டோம் என்கிற பரமதிருப்தியுடன் பரமபதம் அடைந்தார்.
சாமண்ணாவின் மறைவுக்குப் பின்னர், ஆலயத்தைக் கட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு லேசான கவலை, பணி முழுமையாகப் பூர்த்தியாக வேண்டுமென்று. தந்தை இருந்த வரையிலும், அவருடைய மகன்கள் கோயில் நிர்மாணத்தில் அத்தனை ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தந்தையின் காலம் முடிந்த பிறகு, ஏதோ ஒரு சக்தி உள்ளிருந்து அவர்களை இயக்கியது. முழுமையாக மனம் மாறினார்கள்.
தந்தை தொடங்கிய பணியை முழுமையாக நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற தீவிரத்துடன் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். அதிலும் மூத்த மகன் ரமேஷ் பணம், உழைப்பு, நேரம் என்று எதைப்பற்றியும் துளியும் கவலைப்படாமல், இறைப்பணியில் முழுநேர ஊழியராக மாறிவிட்டார்!

‘இந்த மனமாற்றம் எப்படி ஏற்பட்டது?’ என்று அப்போது ரமேஷிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில், ‘அது எனக்கே புரியாத புதிர்!’
1985-ம் வருடம் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி சதாராவில் ஸ்ரீஜயேந்திரர் முன்னிலையில் நடராஜர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை நடத்திவைப்பதற்காக சிதம்பரத்திலிருந்து இருபதுக்கும் அதிகமான தீட்சிதர்கள் சென்றிருந்தார்கள். குடமுழுக்கு முடிந்ததும் இவர்களில் இருவர் சதாராவிலேயே தங்கி, ஸ்ரீநடராஜரின் பூஜை முறைகளைக் கவனித்துக்கொண்டார்கள். சிதம்பரத்தில் உள்ளது மாதிரியே எல்லாம் நடைபெற்றுவருகிறது.
சிதம்பரம் தீட்சிதர்கள், அவ்வூரை விட்டு வெளியே வந்து ஸ்ரீநடராஜரைப் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு செய்வித்து, தொடர்ந்து பூஜைகளும் செய்து வருவது வரலாற்றில் இதுவே முதல் தடவை.
ஸ்ரீகாஞ்சி முனிவரின் சித்தம் இது என்பது தெரிந்ததும், இதுகுறித்து எவ்வித மறு சிந்தனைக்கும் இடம் தராமல், அவருடைய அருளாணையை மகிழ்ச்சியுடன் ஏற்று, அதைச் செயல்படுத்த சதாராவுக்குச் சென்றார்கள் தீட்சிதர்கள்.
‘தமிழக அரசு அளித்த நன்கொடையில் தெற்கே எழும்பியது பிரதான நுழைவாயில். அதில் ‘தமிழ்நாடு பிரவேச த்வாரா’ என்ற இந்தி எழுத்துகள், மராத்திய மண்ணில் மணம் பரப்புகின்றன. அதேபோல் வடக்குக் கோபுரத்தை ஆந்திர அரசும், மேற்குக் கோபுரத்தை மகாராஷ்டிர அரசும், கிழக்குக் கோபுரத்தைக் கர்நாடக அரசும் கட்டிக்கொடுத்திருக்கின்றன. கேரளம் தன் பங்குக்கு, தேக்கு மரங்கள் தந்து உதவியிருக்கிறது’ என்று தனது கட்டுரையில் முன்பு எழுதியிருக்கிறார் பரணீதரன்.
`பக்தி’ பற்றி தமது அருள் உரைகளில் நிறையப் பேசியிருக்கிறார் மகா பெரியவா.
‘மனிதர்களுக்குச் சேவை செய்வதே பகவானுக் குச் செய்கிற பூஜை. தனியாக பகவத் தியானம், பூஜை எதுவும் வேண்டாம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கோயில்கள் முதலிய வழிபாட்டிடங்கள் வேண்டியதில்லை என்றும், அவற்றை வைத்தியசாலைகளாகவும், பள்ளிக்கூடங்களாகவும் மாற்றிவிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
மனிதர்களுக்கு ஆறுதல் தருவது, நோய்ப்பிணி போக்குவது, கல்வியறிவு தருவது எல்லாம் பரம உத்தமமான பணிதான். அதில் பகவான் நிச்சயமாகப் ப்ரீதி அடைகிறான் என்பதும் ரொம்ப உண்மைதான். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது, `மனித சேவையே பகவத் சேவை' என்பதையே திருப்பிவைத்துச் சொல்வதும் ரொம்ப உண்மை என்றே தெரிகிறது.
அதாவது, பகவத் சேவை செய்வதும் மனிதர் களின் நன்மைக்காகத்தான் என்று தெரிகிறது. அதுவே மற்ற சமூக சேவைகளைவிட, மனிதனுக்கு நிரந்தர நலனைத் தருவதாகும்.
ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளைச் சொஸ்தம் செய்து அனுப்புகிறோம். அப்புறம் அவர்கள் நல்லவர்களாக வாழவேண்டாமா? லோகத்துக்குக் கெடுதல் செய்கிறவர்களாகவும் தங்களுக்கே அனர்த்தம் செய்து கொள்பவர்களாகவும் அவர்கள் இருந்தால், அவர்களை சொஸ்தப்படுத்தியதன் பலனை நாம் அடைய முடியுமா?
இவ்வாறேதான் பள்ளிக்கூடம் வைத்துப் படிப்பை விருத்திசெய்கிறோம். படித்து வெளிவந்தவர்கள் யோக்கியர்களாக இல்லா விட்டால், பள்ளிக்கூடம் வைத்த பயன் நமக்கு ஏது? பக்தி, கட்டுப்பாடு, தியாகம் முதலானவை இல்லாமல், படிப்பால் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக்கொண்டால், சாதுர்யமாக அயோக்கியத்தனங்கள் செய்தும் தப்பித்துக்கொள்வதற்குதான் வழியாகிறது. வித்யாசாலையோடும் வைத்யசாலையோடும் மனுஷ்யனின் வாழ்வு முடிந்து விடுகிறதில்லை. அவன் நல்லவனாக இருக்கவேண்டும் என்பதுதான் லட்சியம்.
இப்படி நல்லவனாக்குகிற நிலையங்களாக ஆலயங்களும்... ஆஸ்பத்திரி, ஸ்கூல் போலவே - ஆஸ்பத்திரி, ஸ்கூலை விடவும் அவசியம் இருக்கத்தான் வேண்டும். நாம் நல்லவர் ஆவதற்கு பகவத் தியானம், பூஜை இவைதான் அவசியம்.
மனிதனையே தெய்வமாக நினைத்து அவனுக்குச் சேவை செய்வது சிலாக்கியம்தான். ஆனால் நாம் அப்படி நினைப்பதோடு நிற்காமல், அவனே உண்மையாகத் தன் தெய்விகத்தைக் கொஞ்சமாவது தெரிந்துகொள்ள நாம் ஆலயங்களை அவசியம் பேணவேண்டும்.

பக்தியின் லட்சியம் நல்லவனாக ஆக்குவது மட்டுமல்ல. நமக்குக் காரணமான சக்தியைத் தெரிந்துகொண்டு, அதற்கும் தமக்கும் பேதமில்லை என்ற பரமஞானத்தை அடைந்து, சம்ஸாரச் சூழலிலிருந்து தப்புவதே பக்தியின் லட்சியம். அதோடு, வெளி உலகுக்கு நல்லவனாக நடக்கவும் அதுவே மிகுந்த சக்தியுடன் உதவி புரிகிறது. கோபுரம் கட்டி எல்லார் கண்களிலும் படவைத்து பகவானை ஞாபகமூட்டுவதைவிடப் பெரிய சமூக சேவை இல்லை!’ என்று மிகத் தெளிவாக அருளியிருக்கிறார் மகா பெரியவா.
திருச்சி ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி கோயில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் ஏராளமான கோயில்களில் கும்பாபிஷேகம் நடக்க பெரியவா காரணமாக இருந்திருக்கிறார். முதல் கட்ட யாத்திரையை முடித்துவிட்டு பெரியவா கும்பகோணத்துக்குத் திரும்பியபோது, சுமார் ஐம்பதாயிரம் பேர் திரண்டு வந்து அவரை வரவேற்றதாகக் கூறப்படுகிறது.
அதன் பின் கல்லூர் என்ற இடத்துக்கு வருகிறார். இங்கே ஆறு மாதம் காஷ்ட மௌனம். சாதாரண மௌனமாக இருந்தால் ஜாடையாவது காண்பிப்பார். காஷ்ட மௌனத்திலோ கட்டைதான். எந்தவித ரியாக்ஷனும் இருக்காது.
ஒரு சீடர் தைரியமாக, ‘`பெரியவா காஷ்ட மௌனம் இருந்துவிட்டால், கைங்கர்யம் பண்ணுவது ரொம்ப கஷ்டமாகிவிடுகிறதே!” என்றாராம். பதிலுக்கு ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு, “நான் இத்தனை வருஷம் வாய் ஓயாமல் பேசிண்டே இருந்தேனே... அப்போ யாருமே ‘பெரியவாளுக்குக் கஷ்டமா இல்லையா’ன்னு கேட்கவே இல்லையே?’ என்று கேட்டபோது, கேள்வி கேட்ட சீடர் மௌனமாகி விட்டார்!
“என் பரம குருநாதர் போல் யாத்திரை பண்ண விரும்புகிறேன். அவரை மாதிரி மக்களிடம் சென்று உரையாடி தர்மத்தை நிலைநாட்ட வேண்டும். மூலை முடுக்கிலுள்ளவர்களும், படிப்பறியா பாமரர்களும் நமது ஒப்புயர்வற்ற வேத வேதாந்தக் கருத்துகளை புரிந்துகொள்ளும்படி முயற்சி செய்யவேண்டும்...” என்ற தனது தீர்மானத்தை வெளிப்படையாக அறிவித்துவிட்டு இரண்டாவது யாத்திரையைத் தொடங்கினார் மகா பெரியவா. கிட்டத்தட்ட 29 வருடங்களுக்கு இந்த யாத்திரை நீண்டது.
காஞ்சிபுரம் வருகிறார். காஞ்சி காமாட்சிக்கு கும்பாபிஷேகம் நூறு வருடங்களுக்குப் பின் நடந்தது. காமாட்சி அம்மனுக்கு மேலே, ஒரு காலத்தில் பொன் மயமாகத் தகதகத்த விமானம், இப்போது செம்பாக இருந்தது.
“விமானத்துக்குத் தங்க ரேக்கைப் பயன்படுத் தாமல் ஏன் வெறும் செம்பாக வைத்திருக்கிறீர்கள்?” என்று மானேஜரைக் கேட்டார் பெரியவா.
“பண வசதி போதாது...”
ஆசாரியை வரவழைத்து, ‘`எவ்வளவு பவுன் ஆகும்?” என்று கேட்டார். எஸ்டிமேட் தரப்பட்டது.
“பண்ண ஆசை இருக்கு... எப்படின்னு தெரியலையே!” என்று பெரியவா விசனப்பட்டுக் கொண்டிருந்தபோது, தரிசனத்துக்கு மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் வந்தார். சுவாமிகளின் கட்டளைப்படி தேவகானம் பொழிந்தார்.
“எனக்குக் காமாட்சி அம்மனின் விமானத்தைத் தங்க ரேக்கால் ஒளி வீசும்படி செய்யணும்னு ஆசை... ‘பவுனுக்கு எங்கே போறது?’ன்னு இங்கே இருக்கறவா கேட்கறா. உன் பாட்டைக் கேட்டதும் அந்தக் குறை தணிந்துவிட்டது. உனக்குக் கனகதாரா தோத்திரம் தெரியுமோ?”
“சுமாரா தெரியும்...”
அங்கிருந்த பெண்மணிகளில் சிலரும் விஸ்வநாத ஐயருடன் சேர்ந்து கனகதாரா தோத்திரத்தைச் சொல்லி முடித்தார்கள். அங்கே இருந்த தட்டில் பெண்மணிகள் தங்களின் நகைகளைக் கழற்றி வைத்தார்கள்.
“ஆதிசங்கரரின் ஸ்லோகத்தை இன்னிக்குச் சொன்னாலும் பொன்மாரி பொழியறதே!” என்ற பெரியவா, அத்தனை நகைகளையும் ஆசாரியிடம் கொடுக்க, ஐந்து நாள்களுக்குள் தங்க விமானம் தயார். ஆறாவது நாள் தங்க விமானம் பொருத்தப்பட்டு கும்பாபிஷேகமும் நடந்தது.
“அது எப்படின்னு தெரியலீங்க... நான் எடை போட்டு பார்த்தபோ விமானத்துக்குத் தேவையான பவுனுக்கு ஒரு குந்துமணிகூட கூடவும் இல்லை, குறைவாவும் இல்லை...” என்று வியந்திருக்கிறார் ஆசாரி!
- வளரும்...
வீயெஸ்வி