மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 19

சிவமகுடம் - பாகம் 2 - 19
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 19

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

லவாயின் தலைவாயில் அதிர்ந்தது, `ஹோ’வென்று ஆர்ப்பரித்த பெருங்கூட்டத்தால். பாண்டிய மாமன்னரின் வழக்கம் இப்படித்தான். ஏதேனும் சூழலால் சுணக்கமுற்றுப்போகும் மாதுரையை நொடிப் பொழுதில் துடித்தெழச் செய்துவிடும் வல்லமை அவருக்கு உண்டு!

சிவமகுடம் - பாகம் 2 - 19

இப்போதும்கூட... ஏறக்குறைய போர்ச் சூழலில் மூழ்கிக்கிடந்த நான்மாடக்கூடல், இதோ பேரானந்தத்துடன் மிகப்பெரிதாய் ஆர்ப்பரித்து நிற்கிறதென்றால், அதற்குக் காரணம் கூன்பாண்டியரே.  

நள்ளிரவு முதலாக தலைநகரம் திடுமென இறுக்கத்தைப் போர்த்திக்கொண்டதன் காரணம் புரியாமல், வணிகர்களும் மக்களும் கவலையோடு கூடி விவாதித்துக்கொண்டிருந்த வேளையில், எவரும் எதிர்பார்க்காத வகையில், திடுமென விஜயபேரிகைகளும் துந்துபிகளும் முழங்க திறந்துகொண்டது கோட்டை வாயில்!

மறுகணம், அதிவேகத்துடன் உட்புகுந்தது பேரமைச்சரின் சிறு படை. அவரின் வருகையை மக்கள் வியப்போடு கவனித்தார்கள் என்றாலும், அதன்பொருட்டு எவ்விதச் சலனமும் ஏற்படவில்லை. அவரின் வருகையைத் தொடர்ந்து, பெரியதொரு கனைப்புடன் கரும்புரவியொன்றும் உள்ளே நுழைந்தது.

அதே தருணம், தனது பேருருவம் பெரிதாகக் குலுங்கும்படி நிலமதிர ஓடிவந்த பட்டத்துக் களிறு, கரும்புரவியில் இருந்தவர் தரையில் குதிக்குமுன், துதிக்கையால் அவரைத் தாங்கி தன் மீது ஆரோகணிக்கச் செய்த காட்சியை கண்டார்களோ இல்லையோ... தங்களையும் அறியாமல் ஆனந்தக் கூச்சலிட்டார்கள் அந்த இடத்திலிருந்த மக்கள். அதைக்கேட்டு அடுத்தடுத்து மக்கள் வெளிப்பட, கூட்டம் திரண்டது; ஆர்ப்பரிப்பும் அதிகமானது!

ஆம், அவர்களைப் பொறுத்தவரையில் பாண்டிமாதேவியை தரிசிப்பது, அந்த மீனாட்சி அம்மையையே தரிசிப்பதற்குச் சமம். அவர் மீது அவ்வளவு அன்பும் ஈர்ப்பும் அவர்களுக்கு.

சிவமகுடம் - பாகம் 2 - 19

அவ்வளவு ஏன்... தொட்டில் பிள்ளைகளுக்குத் தாலாட்டு பாடும் மதுரையின் மூதாட்டிகள் பலரும், ஆலவாயிலின் அங்கயற்கண்ணியை வர்ணித்துப் பாடிவிட்டு, அந்த வர்ணனைகள் அப்படியே பொருந்தும் நம் மகாராணிக்கு என்று அன்னை மங்கையர்க்கரசியாரையும் தவறாமல் சிலாகிப்பார்கள். அவர் வந்தபின் பாண்டியதேசத்தில் நன்மைகள், மங்கல காரியங்கள் பெருகுவதாக அவர்கள் நம்பிக்கை.

இப்படியிருக்க, இங்கே பட்டத்துக் களிறு ஆற்றிய செயல், தெய்வச் சம்பவமாகவே பட்டது அந்த மக்களுக்கு.

அத்துடன், எங்கிருந்தோ பறந்துவந்த கிளியொன்று பாண்டிமா தேவியாரின் தோளில் வந்து அமர்ந்த திருக்காட்சியும் அவர்களை மெய்சிலிர்க்க வைக்கவே, அந்தப் பரவசத்தில் அவர்களின் ஆனந்தக்கூச்சல் இரட்டிப்பானது!

ஆனால், கிளியின் விஜயத்தைத் தவிர மற்ற காரியங்கள் அனைத்துக்கும் கர்த்தா-  மாமன்னர் கூன்பாண்டியரே என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பாண்டிமாதேவியார் சடுதியில் நிலைமையைப் புரிந்துகொண்டார்.

மிக தீர்க்கதரிசியான மாமன்னர், எல்லையிலும் எல்லைக்கு அப்பாலும் நிகழ்ந்துவரும் அரசியலுக்கேற்ப தேசத்தைத் தயார்படுத்து கிறார் என்பது அவருக்குப் புரிந்தது. போர், நெருக்கத்தில் இல்லைதான் என்றாலும் அப்படியொரு சூழல் திடுமென ஏற்பட்டால். தன் மக்கள் திகைக்கக்கூடாது - கலக்கத்தில் ஆழ்ந்துவிடக்கூடாது என்ற சித்தத்துடன் போர்ச் சூழல் ஒத்திகையை தலைநகரில் நடத்தி முடித்திருக்கிறார் என்பதையும் அவரால் உணரமுடிந்தது. ஆனாலும் அவருக்குள் ஒரு சலனம் ஏற்படவே செய்தது.

தான், மிக ரகசியமாகப் புறப்பட்டதையும் அந்த ஏற்பாட்டுக்கான அவசியத்தையும் மன்னர்பிரான் நன்கு அறிவார். அப்படியிருக்க, இப்படியோர் ஆரவாரத்தை அவர் ஏற்படுத்தியது ஏன் என்பதுதான் பாண்டிமாதேவியாருக்குப் புலப்படவில்லை!

தற்போது, மன்னர்பிரான் தலைநகரில் ஏற்படுத்தியிருக்கும் சூழலை அறிந்தபின்னரே, மீண்டும் தலைநகருக்குள் பிரவேசிக்கலாம்; மக்கள் அறியாவண்ணம் அரண்மனையைச் சென்றடையலாம் என்று தீர்மானித்து வந்திருந்தார் பாண்டிமாதேவியார்.

தனது வருகையை நடமாட்டத்தை மக்கள் அறியக்கூடாது என்பதல்ல அவர் எண்ணம்; தனது நகர்வு எதிரிகளுக்குத் தெரியக்கூடாது என்பதாலேயே ரகசியத்தைக் கடைப்பிடித்தார். ஆனால், தனது விஜயத்தை மன்னர்பிரான் இப்படி வெளிப்படுத்திவிட்டாரே என்ற ஆதங்கம் அவருக்கு. அதேநேரம்,  காரணம் இல்லாமல் அவர் இப்படிச் செய்திருக்கமாட்டார் என்ற எண்ணமும் எழாமல் இல்லை.

சிவமகுடம் - பாகம் 2 - 19

இப்படி அவர் யோசித்திருந்த வேளையில்தான் அந்தப் பச்சைக்கிளி அவரின் தோளில் வந்திறங்கி, தத்தை நடையிட்டு தேவியாரின் செவிமடலை அணுகி, தன் செம்பவள அலகைக்கொண்டு உரசி, அவரின் காதணியை ஊசலாடச்செய்துவிட்டு, ஏதோ ரகசியம் உரைப்பது போல் `கீச்கீச்'சென்று குரலெழுப்பவும் செய்தது!

`பாண்டிமாதேவியாரின் திருச்செவியில் அந்தக் கிள்ளை அப்படியென்னதான் ரகசியம் சொல்லியிருக்கும்?’

அங்கு திரண்டிருந்த பாண்டியதேசத்து மைந்தர்களின் மனதில் இந்தக் கேள்வி எழுந்ததோ இல்லையோ? ஆனால், நம் மனதில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை!

காலத்தை வென்று நிற்கும் மாமதுரையின் மகிமைகளைப் புள்ளினங்களும் போற்றினவாம். அப்படிக் கிள்ளைகள் பேசிய பேச்சுக்களை புலவர் ஒருவர் அற்புதமாகப் பாடியிருக்கிறார்.

ஆடல்புரியும் அரன் என்றும் மூவர்தமிழ்ப்
பாடல்புரியும் பரன் என்றும் - கூடலிலே
நன்னரிவாசிக்கு நடைபயிற்றினோன் என்று
கின்னரி வாசிக்கும் கிளி


- என்கிறது அந்தப் பாடல். அதாவது, ‘மன்னனாகிய ஆடல்வல்லான் ஆடல்புரிவார் மதுரையில்’ என்றதாம் ஒரு கிளி. வேறொரு கிளியோ, ‘எங்கள் தலைவனாகிய சொக்கேசன் தேவாரப்பாடல்களைக் கேட்டு மகிழ்வார்’ என்று பேசியதாம். மற்றொன்றோ, ‘எங்கள் தலைவன் நரியைப் பரியாக்கி நடையினையும் பயிற்றுவிப்பான்’ என்று மொழிந்ததாம்!

இங்கே, இந்தக் கிளி `கீச் கீச்’சென்று நம் அன்னையிடம் சொன்னது என்ன... மகேசனின் மகிமையையா, மாதுரையின் மாண்பினையா?!

கிள்ளை நிகழ்த்திய விந்தையான அந்தக் காட்சியை கண்டதும் மக்களின் ஆரவாரமும் வாழ்த்தொலியும் பன்மடங்காக அதிகரித்தது; அவர்களோடு படையணி மறவர்களும் சேர்ந்துகொள்ள, தேவியாரின் மெய்க்கீர்த்தியும் உச்சஸ்தாதியில் ஒலித்தது!

வளவர்கோன் பாவை... பங்கையச் செல்வி...

மங்கையர்க்கரசியார்... பாண்டிமாதேவியார்...

வாழ்க... வாழ்க!


மெய்க்கீர்த்தியும் வாழ்த்தொலியும் விண்ணை எட்டின. ஆனாலும், பாண்டிமாதேவியாருக்கோ செவிக்கருகே ஒலித்த கிள்ளையின் மொழியே பெரிதாகப்பட்டது. ஆம், அந்தக் கிள்ளை கொண்டுவந்த ரகசியம் அப்படி!

கிளியின் தலையசைப்பும் அது தனது அலகால் அவரின் காதாபரணத்தை உரசி வெளிப்படுத்திய சமிக்ஞையும் பாண்டிமா தேவியார் எதிர்பார்த்த ஆபத்து வெகு அருகில் வந்துவிட்டதை அவருக்குத் தெளிவாய் உணர்த்தின!

அந்த ஆபத்துக்குக் காரணமானவர்கள், வைகை தீரத்தில் மிக மறைவான ஓரிடத்தில் ஒன்றுகூடியிருந்தார்கள். அங்கும் கிளியொன்று காத்திருந்தது விடியலுக்காக! 

- மகுடம் சூடுவோம்...