
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
`வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.’
- மாணிக்கவாசகப் பெருமான் கரைந்து உருகிச் சொன்னார். `இறைவா... அளவற்ற ஆற்றல் உடையவனே. நீ விண்ணிலே நிறைந்திருக்கிறாய். மண்ணிலே மறைந்திருக்கிறாய். காற்றில் கலந்திருக்கிறாய். நீரில் உறைந்திருக்கிறாய். நெருப்பில் இருக்கிறாய். பிரபஞ்சத்திலும், பஞ்சபூதங்களிலும் கலந்து, கரைந்து, வியாபித்திருக்கிறாய்.’ அங்கு இங்கு எனாதபடி எங்கும் இருக்கும் உன்னை நாங்கள் திருக்கோயில் எழுப்பி, எழுந்தருளச் செய்து, அருள்பாலிக்கச் செய்ய வேண்டுகிறோம்.

கோயில், இறைவன் எழுந்தருள்பாலிக்கும் இடம் மட்டுமா... இறைவன், `இப்படி ஓர் இடம் எனக்கு வேண்டும்’ என்று நம்மிடம் கேட்டுப் பெற்றானா... வானமே அவன் எல்லை. பிரபஞ்சமே அவன் ஆளுகை. அப்படியிருக்க, ஒரு சின்னஞ்சிறிய இடத்தில் அவன் தன்னைச் சுருக்கிக்கொள்வது எதற்காக? தனக்காக அல்ல. தன்னை மக்கள் வழிபட வேண்டும் என்கிற எண்ணத்துக்காகவும் அல்ல. தன்னை வழிபடும் மக்கள் பக்குவம் பெற வேண்டும் என்பதற்காக.
ஆனால், நமக்கோ நிறைய கவலைகள், பிரச்னைகள், சிக்கல்கள், சின்னச் சின்ன ஆசைகள்... அவையே காலப்போக்கில் பேராசையாக உருவெடுத்துவிடுகின்றன. இப்படி ஆசைகளுக்கு மத்தியில் அல்லல்படுகிற நாம், இறைவனிடம் நிறைய கோரிக்கைகளைக் கொண்டுபோய்க் கொட்டுகிறோம். அதற்காக அந்த மகாதேவனை எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டிருக்கிறோம். எங்கு தேடினாலும் அவன் நமக்குத் தென்பட மறுக்கிறான். இறைவன் நமக்கு எப்போது தென்படுவான்?

`உறவுக் கோல் நட்டு, உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே...’ என்று அப்பர் பெருமான் சொல்வார். தாய்மார்கள் தயிரைக் கடைவார்கள். கடைகிறபோது வெண்ணெய் பிரிந்து வரும். அதைப்போல இறைவன் நமக்குத் தெரிய வேண்டுமா? அன்பால் இறைவனை நினைத்து, அவனருளாலே அவன் தாள் வணங்கி, `நானும் பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய், ஆனால், வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே...’ என்று மாணிக்கவாசகர் சொன்னதைப்போல அழுது அழுது அவனைத் தொழ வேண்டும். அந்த அழுகை நமக்கானதாக இருக்கக் கூடாது... உலகத்தின் நன்மைக்கான பிரார்த்தனையாக இருக்க வேண்டும். உலக நன்மைக்காக ஆண்டவன் சந்நிதானத்தில் அழுகிறபோது, அந்தக் கண்ணீர் புனிதநீராக மாறும். அப்படிப்பட்ட பிரார்த்தனைகள் இன்று வலிமை பெற வேண்டும்.
ஒருவர் கோயில் வாசலுக்கு வந்தார். பழக் கடைக்குப் போனார். தேங்காய்க் குவியலில் ஒவ்வொன்றாக எடுத்து அத்தனையையும் காதோரம் வைத்து ஆட்டிப் பார்த்தார். கடைசியாக ஒரு தேங்காயைத் தேர்ந்தெடுத்தார். அதை அர்ச்சனைக்கு எடுத்துப் போனார். உடன் வந்த நண்பர் கேட்டார்... `இப்படி நல்லா முத்தின தேங்காயிலதான் அர்ச்சனை செய்யணுமா?’
`அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை.’
`அப்புறம் ஏன் இத்தனை தேங்காய்களைப் புரட்டியெடுத்தீங்க?’
`வீட்டுக்குப் போனதும், இந்தத் தேங்காயிலதானே சட்னி அரைக்கணும்?’
எல்லாவற்றிலும் நமக்குத் தன்னலம். நம்முடைய தேவைகள், ஏக்கங்கள், குறைகள்... இவைதான் பிரார்த்தனையில் பிரதானப்படுத்தப்படுகின்றன.

மருத்துவமனை. அவசர சிகிச்சைப் பிரிவு. ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மாரடைப்பு. மருத்துவர்கள் அவர் உயிரைக் காப்பாற்றப் போராடிக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் அவர் மனைவி, கடவுளிடம் வேண்டிக்கொண்டாள். `என் கணவர் எப்படியாவது உயிர் பிழைக்கணும். அவர் நல்லபடியா வீடு வந்து சேர்ந்துட்டா, எங்க வீட்டுல இருக்குற பசுமாட்டை உனக்குத் தானமாகத் தந்துடுறேன்.’ மங்கலநாணைக் கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.
அந்தப் பெண்ணின் பிரார்த்தனை பலித்தது. கணவன் நலம் பெற்று, வீடு வந்து சேர்ந்தான். இரு தினங்களுக்குப் பிறகு மனைவி மெதுவாக அவனிடம் சொன்னாள்... `நீங்க ஆஸ்பத்திரியில உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்தப்போ, நான் சாமிகிட்ட வேண்டிக்கிட்டேன். அதை நிறைவேத்தணும்.’
`என்ன வேண்டிக்கிட்டே?’
`உங்களுக்கு உடம்பு சரியாகிடுச்சுன்னா, நம்ம பசுமாட்டை கோயிலுக்கு தானமா தர்றதா...’
கணவனுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்படுகிற அளவுக்கு ரத்த அழுத்தம் உயர்ந்தது. `எதுக்கு இப்படி வேண்டிக்கிட்டே... கொஞ்சம் பொறுத்துப் பார்த்திருக்கலாம்ல... சின்னதா ஏதோ ஒண்ணைத் தர்றேன்னு சாமிகிட்ட வேண்டியிருக்கலாமே. பசுமாட்டைப் போய் தானமாகத் தர்றேனு வேண்டியிருக்கியே... உனக்குக் கொஞ்சமாவது புத்தி இருக்கா?’ என்று கோபித்துக்கொண்டான். பிறகு, `நான் கடவுளைப் பார்த்துக்குறேன்’ என்று சொல்லிக்கொண்டான்.
அடுத்த நாள் பசுமாட்டை இழுத்துக்கொண்டு, மற்றொரு கையில் வீட்டிலிருந்த குட்டிப்பூனையை எடுத்துக்கொண்டு சந்தைக்குப் போனான். சந்தையில் நின்று உரக்கக் கூவினான்... `இந்தப் பசுமாட்டோட விலை ஒரு ரூபா... வாங்குறவங்க வாங்கிக்கலாம்.’

`ஆஹா... ஒரு ரூபாய்க்குப் பசுமாடா?’ கூட்டம் திரண்டது.
அவன் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னான்... `ஒரு ரூபாய்க்கு இந்தப் பசுமாடு வேணும்னா, இந்த மாட்டோட பாலையே குடிச்சு வளர்ந்த பூனைக்குட்டியையும் விலைக்கு வாங்கிக்கணும். பசுவோட விலை ஒரு ரூபா. பூனையோட விலை மூவாயிரம் ரூபா.’
கூட்டத்திலிருந்த ஒருவன், பசுவையும் பூனையையும் விலைக்கு வாங்கிக்கொண்டு போனான். இவன், பசுமாடு விற்ற பணமான ஒரு ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டான். பூனையை விற்ற மூவாயிரம் ரூபாயை முந்தியில் முடிந்துகொண்டான்.
கோயிலுக்குப் போய், ஆண்டவனின் சந்நிதானத்துக்கு முன்னே நின்றான். `கடவுளே... எனக்காக என் மனைவி பசுவை உனக்குத் தானமா தர்றதா வேண்டிக்கிட்டா. எனக்கு குணமாகிடுச்சு. இப்போதான் பசுமாட்டை சந்தையில வித்துட்டு வந்தேன். அதை வித்த பணம் ஒரு ரூபா. அது உன்னைச் சேர்ந்தது...’ என்று சொல்லி, ஒரு ரூபாயை உண்டியலில் போட்டுவிட்டு, வீடு வந்து சேர்ந்தான்.
அங்கே அவனுக்கு முன்பாக பூனையை மூவாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியவன் காத்துக்கொண்டிருந்தான். `பூனை இங்கே ஓடி வந்துடுச்சு. மரியாதையா அதைப் பிடிச்சுக் கொடு. இல்லைன்னா, மூவாயிரம் ரூபாயை எடுத்து வை’ என்று சொன்னான்.
இவன் பூனையைப் பிடிக்க ஓடினான். அது துள்ளித் துள்ளி ஓடியது. இவனும் தாவிக்கொண்டு ஓடினான். அதைப் பிடிக்க முயன்றபோது, வழுக்கி விழுந்தான். மறுபடியும் மாரடைப்பு வந்துவிட்டது. மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு போனார்கள்.
மருத்துவர், அவசரமாக ஒரு மருந்தை வாங்கிவரச் சொல்லி இவன் மனைவியிடம் ஒரு மருந்துச்சீட்டைக் கொடுத்தார்.

அவள் மெல்லிய குரலில், `இந்த மருந்து என்ன விலை இருக்கும் டாக்டர்?’ என்று கேட்டாள்.
`என்ன... மூவாயிரம் ரூபா இருக்கும்.’
கடவுளை ஏமாற்ற நினைத்தால், அப்படி நினைப்பவன் ஏமாந்துபோவான். கடவுளை மட்டுமல்ல, யார் யாரை ஏமாற்ற நினைத்தாலும், அவர்கள் ஏமாந்துபோவார்கள். இதுதான் இயற்கையின் நியதி; இறைமையின் விதி. இதை உணர்ந்துகொண்டால் நாம் வாழ்க்கையில் ஒருபோதும் வழுக்கி விழ மாட்டோம்.
அதனால்தான் நம் சமயத்தில், வழிபடுகிற உயர்நிலையில் மட்டும் இறைவனை வைத்துப் பார்க்காமல், நம்மோடு அன்றாடம் கலந்து பேசுகிற உறவாக எண்ணுகிறோம். பெற்ற தாயாக, வளர்க்கும் தந்தையாக, உரிமையுள்ள தோழனாக, எல்லா நிலைகளிலும் நம்மோடு வருகிற உற்ற உறவாக இறைவனைப் பார்த்தது நம் சமய வழக்கு.
இதைத்தான் அப்பர் பெருமான்,
`அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்புடைய
மாமனும் மாமியும் நீ,
ஒப்புடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும்
சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணையாய் என்
நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து நீ, இறைவன் நீ-ஏறு
ஊர்ந்த செல்வன் நீயே’ என்கிறார். இப்படி எல்லா உறவுகளாகவும் இறைவனை நினைப்பது நம் ஆன்மிக நெறி. இறைவனை வழிபடும் நிலையிலிருந்து வழிகாட்டும் நிலைக்கு அழைத்துச் செல்கிற நிலை அது. ஆக, தெளிவான ஆன்மிகச் சிந்தனை இன்றைய மனிதகுலத்துக்குத் தேவையாக இருக்கிறது.
ஆன்மிகம் என்பது கலை, இலக்கியம், பட்டறிவு, வாழ்வியல், இசை... என எல்லாத் துறைகளையும் உள்ளடக்கியது. இறை நம்பிக்கையும், இறை வழிபாட்டுப் பிரார்த்தனையும், சடங்குகளும் மட்டுமல்ல ஆன்மிகம். அவற்றையும் தாண்டி மனிதகுலம் எப்படி வழிநடத்தப்பட வேண்டும், எந்த திசையில் அது செலுத்தப்பட வேண்டும் என்ற அக்கறையும் பொறுப்பு உணர்வும் அதற்கு உண்டு. அந்தப் பொறுப்பு உணர்வோடு பல்வேறு சிந்தனைகளை, பல தளங்களில், பன்முகப் பரிமாணங்களில் சிந்திப்போம்!
(புரிவோம்...)
படங்கள்: கே.ராஜசேகரன்வி
ஒளிவதற்கு இடமில்லை!
ஒருவர் ஆண்டவன் சந்நிதானத்துக்கு வந்தார். `ஆண்டவா... இப்போதான் நிலத்தை உழுதுட்டு வந்திருக்கேன். நெல் விளைய மழை வேணும்’ என்று கேட்டுப் போனார். இன்னொருவர் இறைவனின் சந்நிதானத்துக்கு வந்தார். `தை மாசம் வருது. பொங்கல் பானைகள் செய்யணும். மண்ணைப் பிசைஞ்சுவெச்சிருக்கேன். அது காயணும். அதனால மழை பெய்யாம பார்த்துக்கோ கடவுளே...’ என்று கோரிக்கை வைத்தார்.

என்ன செய்வார் ஆண்டவன்... பயிர் விளைய ஒருவர் மழை கேட்கிறார்; மற்றொருவர் மட்பாண்டம் செய்வதற்கு மழையை நிறுத்தச் சொல்கிறார். இது போன்ற சிக்கல்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, மனிதர்களே இல்லாத ஓர் இடத்துக்குப் போய்ச் சேர முடிவெடுத்தார். எவ்வளவு தேடியும் அப்படி ஓரிடம் அவருக்குத் தென்படவில்லை. எங்கும் மனித நடமாட்டம். உடனே ஓர் ஆலோசனைக்குழுவைக் கூட்டினார். `மனிதர்களே இல்லாத ஓரிடத்தை எனக்குக் காட்டுங்கள்’ என்றார் கடவுள்.
`நீங்கள் இமயமலையில்போய்அமர்ந்துகொள்ளலாமே...’ ஆலோசனைக்குழுவிலிருந்த ஒருவர் சொன்னார்.
`ஐயய்யோ... இப்போதெல்லாம் மனிதர்கள் போர்க்கருவிகளுடன் அங்கே வந்து விடுகிறார்கள். அங்கு செல்வது ஆபத்து.’
`சந்திரமண்டலத்தில் போய் ஒளிந்து கொள்ளுங்களேன்...’ இன்னொருவர் சொன்னார்.
`மனிதன் எப்போதோ தன் காலடியை அங்கே பதித்துவிட்டான். விரைவில் பலர் அங்கே வந்துவிடுவார்கள். அதுவும் சாத்தியமில்லை.’
`நட்சத்திரக் கூட்டத்தில் ஒளிந்துகொள்ளலாமே...’ இன்னொருவர் ஆலோசனை சொன்னார்.
`அதற்கும் வாய்ப்பில்லை’ என்றார் கடவுள். எங்கே ஒளிவது... ஆலோசனைக் குழுவினருக்குப் புரியவில்லை. அந்த நேரத்தில் பூமியைப் பார்த்தார் ஆண்டவன். அங்கே ஓர் அம்மா, தன் மகனைப் பற்றிக் கணவனிடம் குறை கூறிக்கொண்டிருந்தார்.
`நம்ம பையன் எங்கே பணத்தைவெச்சாலும் எடுத்துடுறான். பீரோவுல வெச்சேன்... பணம் காணாமப்போயிடுச்சு. அலமாரியில யாருக்கும் தெரியாம ஒளிச்சுவெச்சேன்... அப்பவும் காணாமப் போயிடுச்சு. மேஜை டிராயர்ல பூட்டிவெச்சேன். அப்பவும் போயிடுச்சு. எங்கேவெச்சாலும் நம்ம பையன் எடுத்துடுறான். அவன் கண்ணுலேருந்து பணத்தை மறைக்கவே முடியலை.”
அப்பா சொன்னார்... `அவ்வளவுதானே... நீ பணத்தைப் பாதுகாப்பாக வைக்கிறதுக்கு நான் இடம் சொல்றேன். அதை பீரோவுல பூட்டிவெக்க வேணாம். அலமாரியிலேயோ, மேஜையிலேயோ பத்திரப்படுத்த வேணாம். இனிமே பணத்தை நம்ம பையனோட பாடப்புத்தகத்துக்குள்ள வெச்சுடு. அதைத்தான் அவன் திறந்து பார்க்கவே மாட்டான். பணமும் பத்திரமாக, பாதுகாப்பாக இருக்கும்.’
இந்தக் காட்சியைக் கவனித்தார் கடவுள். அவருக்கு ஒரு தெளிவும் வந்தது. `நான் ஒளிந்துகொள்ளவேண்டிய இடம் தெரிந்துவிட்டது. இனி நான் ஆலயங்களில் இருக்கத் தேவையில்லை; வேள்விச்சாலைகளில் இருக்கத் தேவையில்லை. வேதியர்களின் மந்திர முழக்கங்களில் இருக்கத் தேவையில்லை. நான் ஒளிந்துகொள்ளவேண்டிய இடம் மனிதர்களின் மனம். அங்கே நான் மறைந்துகொண்டால், தன்னைத் திறந்து, `நான் எங்கே இருக்கிறேன்’ என்று தேடிப்பார்க்க மாட்டான் மனிதன்’ என்று சொல்லிவிட்டு, பத்திரமாக, பாதுகாப்பாக மனிதர்களின் மனதுக்குள் ஒளிந்துகொண்டார்.
ஓவியம்: பிரேம் டாவின்ஸி