மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 21

சிவமகுடம் - பாகம் 2 - 21
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 21

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - பாகம் 2 - 21

‘‘அழகுக்கு ஓர் உதாரணம் சொல்லுங்கள் பார்க்கலாம்’’

திருக்கோயிலின் முன் திரளாகக்கூடியிருந்த கூட்டத்தில் நடுநாயகமாக அமர்ந்திருந்த அந்தப் பெரியவர் இப்படிக் கேட்டதும், கூட்டத்திலிருந்து வெளிப்பட்ட இளைஞன் ஒருவன் அவருக்குப் பதிலுரைத்தான்.

‘‘காமதேவன்’’

அதைக்கேட்டு அந்தப் பெரியவர் நகைத்தார்.

‘‘அப்பனே... யாரைச் சொல்கிறாய்? மகரக் கொடியுடைய மன்மதனையா?’’

‘‘ஆம் ஐயனே! அழகுக்கு அவனைவிட வேறு உதாரணம் ஏது?’’

சிவமகுடம் - பாகம் 2 - 21

மீண்டும் ஒருமுறை பெரிதாக நகைத்த பெரியவர், அந்த இளையவனுக்குத் தீர்க்கமாகப் பதிலுரைத்தார்.

‘‘இளையோனே... ஒன்றை நன்றாகப் புரிந்து கொள். அழியும் தன்மை கொண்டதில் நாம் காணும் அழகு அழகேயல்ல...’’

சிவமகுடம் - பாகம் 2 - 21‘‘எனில்..?’’ இளைஞன் கேட்டான்.

‘‘நான் குறிப்பிடுவது அழிவற்ற அழகு! முக்கண் ஈசனார், தம் நுதல் கண்ணைத் திறந்து கோபக்கனல் வீசி, நொடிப்பொழுதில் அழித்துவிடவில்லையா காமனின் அழகை? அப்படியிருக்க, அவனை உதாரணம் காட்டலாமா?’’

‘‘எனில், அழிவற்ற அழகுதான் எது? நீங்களே விளக்கிவிடுங்களேன் பெருமானே...’’

கூட்டத்தில் பலரும் சேர்ந்து ஒருமித்த குரலில் வேண்டுகோள் விடுக்க, ஆனந்தமாய் பேசத் தொடங்கினார் அந்தப் பெரியவர்.

‘‘சொல்கிறேன் கேளுங்கள்... ஆழி சூழ பாம்பணையின் மீது பள்ளிகொண்டிருக்கும் மாயோனின் திருக்கரத்தில் திகழ்கிறதே வெண் சங்கம்... அது, வெண்மையின் அழகு. அந்தச் சங்கினைப் போன்ற கழுத்தை கொண்டவன் ஒருவன் உண்டு. நான்முகனின் தேவி கலைவாணியோ நாதத்தின் அழகு. அதையும் பழிக்கும் மொழியழகுடையவன் அவன்.

வேதத்தின் மூலம் நம் நாதன் ஈசன். அவருக்கே பாடம் சொன்னதால், வேதத்துக்கும் அழகு சேர்த்தவன்  நான் குறிப்பிடும் அழகன். சுந்தரன் என்றும் பொன்னார்மேனியன் என்றும் நாமெல்லாம் போற்றித் துதிக்கிறோமே... நம் தென்னாடுடைய சிவனாரை! அவரின் பேரழகுக்கு ஒப்பானவன் அவன் மட்டுமே. ஆமாம்! குன்றுடைய குமரனையே நான் அழகனென்பேன்.

இங்கு, நான் குமரக்கடவுளைக் குறிப்பிட்டுப் பேசுவது ஏன் தெரியுமா?’’

- பெரியவர் கேட்க, பதிலுரைக்கத் தெரியாமல் திகைத்து நின்றிருந்தது கூட்டம். ஆகவே, அவரே தொடர்ந்தார்.

‘‘அந்த வேலுடைப் பிள்ளையைப் போன்றே அழகிலும் அறிவிலும் சிறந்த ஆளுடைப் பிள்ளையை இன்று நாம் தரிசிக்கப் போகிறோம். குமரனுக்கு சக்திவேல் கொடுத்த அம்பிகை, இந்தப் பிள்ளைக்கு ஞானப் பால் கொடுத்த அற்புதத்தை நீங்களெல்லாம் அறிவீர்கள்தானே...’’

‘‘யார்... சம்பந்தப்பெருமானையா சொல்கிறீர்கள்... ஆஹா... ஆஹா... நன்கு அறிவோமே’’ - என்றொருவர் பரவசத்துடன் கூற, ‘‘சீர்காழிச் சிவக்கொழுந்து நம் எல்லைக்கு வருகிறதா... நாம் செய்த பாக்கியம்’’ என்று வேறொருவர் ஆனந்தத்தில் கூவ, அனைத்தையும் தலையசைத்து ஆமோதித்தபடி அந்தப் பெரியவர் தொடர்ந்தார்.

‘‘அவரேதான்! அருமை தந்தை சிவபாதஇருதயருடனும், நீலகண்ட யாழ்ப்பாணருடனும் மற்றுமுள்ள சிவனடியார் களுடனும் ஓரிரு தினங்களுக்கு முன்னதாகவே அவரின் பரிவாரம் புறப்பட்டுவிட்டது. எப்போது வேண்டுமானாலும் அவர் நம் தலத்துக்குள் பிரவேசிக்கலாம்.’’

கூட்டத்தில் ஒருவனாக நின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த கோச்செங்கணின் உள்ளம் பூரித்துப் போனது. காணக்கிடைக்காத செல்வத்தை தரிசிக்கப்போகும் பெரும் பாக்கியத்தைக் கொடுத்த பாண்டிமாதேவியாருக்கு மனப்பூர்வமாக உள்ளுக்குள் நன்றிசொல்லிக்கொண்டான்.

ஆம்! உறையூர்க் காவலராம் மணிமுடிச்சோழரின் உப தளபதியும், நம்பிதேவனின் சகோதரனும், பாண்டிமாதேவியாரின் நம்பிக்கைக்கு மிக உகந்தவனுமான நம் கோச்செங்கண், தேவியாரின் ஆணைப்படியே இந்தத் தலத்துக்கு வந்து சேர்ந்திருந் தான். மதுரையிலிருந்து ஓலை வந்ததுமே புறப்பட்டுவிட்டான். ஓலையில், கட்டளைக்கான காரணம் சொல்லப்படவில்லை என்றாலும், `திருப்பாச்சிலாச்சிராமம் எனும் இவ்வூரை அவன் அடைந்ததும் காரணம் புலப்படும்’ என்ற குறிப்பு இருந்தது. அந்தக் காரணத்தை இப்போது அறிந்துகொண்டவன், மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளானான்.

`திருப்பாச்சிலாச்சிராமம்’ எனும் அந்த அழகிய கிராமம், தெளித்தேனென நன்னீர் பெருக்கெடுத்தோடும் காவிரியின் வடகரையில் அமைந்திருந்தது. அவ்வூரின் தற்போதைய பெயரைச் சொன்னால், உங்களுக்கும் எளிதில் புலப்படும் அதன் மகிமை. 

சிவமகுடம் - பாகம் 2 - 21

ஆம்! சிவனடியார்கள் அனைவரும் நன்கறிந்த `திருவாசி' திருத்தலம்தான் அது! திருச்சியிலிருந்து முசிறி செல்லும் வழியில், சுமார் 13 கி.மீ தொலைவிலுள்ளது, திருவாசி. பாடல்பெற்ற சிவத் தலங்களில் 67-வது தலம். திருஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடிப் பரவசம் அடைந்த ஆலயம் இங்குள்ளது.

அருள்மிகு மாற்றுரை வரதீஸ்வரர், அருள்மிகு சமீவனேஸ்வரர் ஆகிய திருப்பெயர்களோடு இறைவனும், அருள்மிகு பாலசௌந்தரி, அருள்மிகு பாலாம்பிகை ஆகிய திருப்பெயர்களோடு அம்மையும் அருள்பாலிக்கும் இந்தத் தலம், காசியை விடவும் கொஞ்சம் மேலான சக்திகொண்டது என்பது நம்பிக்கை. இதன்பொருட்டு, தினமும் இந்தக் கோயிலுக்கு சிவனையும் அம்பாளையும் தரிசிக்க பெருங்கூட்டம் கூடும்.

அற்புதமான இந்தக் கோயிலின் முன்னுள்ள திடலில்தான் அன்றும் அந்தப் பெருங்கூட்டம் கூடியிருந்தது.

‘‘ஐயனே! சம்பந்தப் பெருந்தகை வரும் வரை யிலும், அம்மையப்பன் அவருக்கு அருள்செய்த திருக்கதைகளை இங்குள்ளவர்களுக்குப் பகிரலாமே. அறியாதவர்கள் அறிந்து மகிழட்டும்; அறிந்தவர்கள் மீண்டும் கேட்டு இன்புறட்டும்’’

மிகப் பணிவோடு அன்பர் ஒருவர் முன்வந்து கேட்டுக்கொள்ள, அந்தச் சிவப்பெரியவரும் உவகையோடு சொல்ல ஆயத்தமானார்.

பெண்களும் குழந்தைகளும் ஆர்வத்துடன் நெருங்கி வந்து, அவரைச் சுற்றிலும் ஓர் அரைவட்டமாக அமர்ந்துகொண்டார்கள். அவர்களுக்கு இடவசதியை ஏற்படுத்தும் பொருட்டு இளையோரும் பெரியவர்களும் பெண்கள் கூட்டத்துக்கு அடுத்தபடியாக நின்று கொண்டார்கள். அவர்களுடன் நின்றிருந்த கோச்செங்கணும் ஞானக்கொழுந்தின் திருக்கதையைச் செவிமடுக்கத் தயாரானான்.

பெரியவர் சொல்லத் தொடங்கினார்...

‘‘முன்பொருமுறை, ஈசன் பணித்தபடி அம்பிகை நம் சம்பந்தப் பெருமானுக்கு ஞானப் பால் கொடுத்த திருக்கதையையும் அதைத் தொடர்ந்து `தோடுடைய செவியன்...’ என்று நம் ஞானப்பிள்ளை அந்தச் சீர்காழி நாதனைப் பாடித் தொழுததையும் சொன்னேன் அல்லவா. அதைத் தொடர்ந்து நிகழ்ந்த விஷயங்களை இப்போது பகிர்ந்துகொள்கிறேன்...’’ என்றவர் அந்த அற்புதக் கதையை விவரிக்க ஆரம்பித்தார்.

‘‘தோணிபுரமாகிய சீர்காழி கோயிலிலிருந்து நம் தெய்வக் குழந்தை தம் இல்லத்துக்குத் திரும்பியது முதல், சிவசிந்தையிலேயே லயித்திருந்தார். அன்று இரவிலும் சிவதியானம்தான் அவருக்கு.

பிறப்பெடுத்ததன் நோக்கம் - சிவத்தலங்களை தரிசிப்பதும், அங்கெல்லாம் கோயில் கொண்டிருக்கும் எம்பிரானைப் பாடுவதுமே என்று தீர்மானித்தவர், மறுநாளே `திருக்கோலக்கா’ எனும் ஊருக்கு எழுந்தருளினார்.

திருக்கோலக்காவை நீங்கள் அறிவீர்கள்தானே? நம்மூரைப் போன்றே அவ்வூரும் காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது. அங்கே, தாளமுடையாரின் திருக் கோயிலுக்குச் சென்ற அந்தப் பிள்ளை பாடிய பதிகத்தைக் கேட்க வேண்டுமே... மிக அற்புதமான பதிகம் அது...’’ என்ற பெரியவர், அதைப் பாடியும் காட்டினார்.

``மடையில் வாளை பாய மாதரார்...’’ எனத் தொடங்கி, உரிய பண்ணிசைத்து, நியதிப்படி அவர் அந்தப் பதிகத்தைப் பாடப்பாட, கூட்டத்துடன் சேர்ந்து செவிமடுத்த கோச்செங்கணும் உள்ளம் உருகிப்போனான்.

பதிகத்தின் மேன்மையால் மெள்ள மெள்ள தன்னுள் கரைந்துபோனவனின் புறக் கண்களுக்குக் காட்சிகள் மறைய, அவனின் அகக்கண்கள் விழித்துக்கொண்டன. பாடிக் கொண்டிருந்தவர் பரமனாகத் தெரிந்தார். பதிகத்தைச் செவிமடுத்துக் கொண்டிருந்த மாதர்கள் யாவரும் அரம்பையராகத் தோன்ற, மற்றுமுள்ளோர் சிவகணத்தவர்களாகத் தென்பட்டார்கள்!

சட்டென்று பெரிதாக ஒலித்த பொற்றாள ஓசை அவனை நிகழ்வுலகுக்கு இழுத்துவந்தது.

அவன் விழித்தபோது, தன் கையிலிருந்த தாளத்தை இசைத்தடி, ஞானசம்பந்தர் திருக் கோலக்காவில் பொற்றாளம் பெற்ற திருக்கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார் பெரியவர்.

‘‘தன் பிஞ்சுக்கரங்களால் தாளம்கொட்டி அந்தக் கோயிலில் உறையும் தாளமுடையாரைப் பாடித் தொழுதது ஞானப்பிள்ளை. தன் அன்புப் பிள்ளையின் அம்புஜக் கரங்கள், தாள வேகத்தில் சிவந்துபோவதைப் பொறுப்பாரா எம்பிரான்? அருளாடல் நிகழ்த்தினார்!

அஞ்செழுத்து எழுதப்பெற்ற - ஆடகப் பொன்னால் ஆன தாளம் ஒன்று, பிள்ளையின் பிஞ்சுக்கரங்களில் வந்து அமர்ந்தது. தலைமீது அந்தத் தாளத்தை வைத்து வணங்கிய திருஞான சம்பந்தர், மீண்டும் கைகளில் எடுத்து, அதைத் தட்டினார். பரமன் கொடுத்த தாளத்தைக் கொண்டு, செல்ல மகன் பாடல் இசைப்பதைப் பார்த்த அம்பிகை, உடனே, அந்தத் தாளத்துக்கு ஒலியும் ஓசையும் கொடுத்தாள்’’

அந்தப் பெரியவரை இடைமறித்த மாதரசி ஒருத்தி, ஆர்வத்துடன் ஒரு கேள்வி கேட்டாள்:

‘‘ஞானக்கொழுந்து நம் ஊருக்கும் வருகிறாரே... இங்கும் அதுபோன்று அற்புதம் நிகழுமா?’’

‘‘அந்த ஆளுடைப்பிள்ளையே ஓர் அற்புதம்தானே தாயே!  அவர் எழுந்தருளும் இடங்களில் அற்புதங்களுக்குக் குறையேது...’’

அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே முரசு ஒலிக்கும் ஓசை பெரிதாகக் கேட்டது. ஊர் எல்லையில் ஆளுடைப்பிள்ளை எழுந்தருளி விட்டதை, ஊர் மகிழ உரக்கச்சொன்னது அந்த ஓசை!

அதேநேரம், அங்கே மாமதுரையில் பாண்டியன் மாளிகையின் புறமதிலின் மீது, கரங்களில் கிடைத்த பிடிமானங்களைப் பற்றிய வண்ணம், மன்னவரின் துயில்மாடத்துச் சாளரத்தை நோக்கி மெள்ள நகர்ந்துகொண்டிருந்தது கரிய உருவம் ஒன்று! திடுமென பெரும் பறவையின் உருவில் பேராபத்து தன்னை அணுகுமென்று அந்த உருவத்துக்குரியவன் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லைதான்!

- மகுடம் சூடுவோம்...