
ஓவியங்கள்: கேஷவ்
சங்கீதத்தில் மகா பெரியவா கொண்டிருந்த புலமையையும் பிரியத்தையும் மேலும் சிறிது அனுபவிப்போம்.
மகா பெரியவா தேனம்பாக்கத்தில் முகாமிட்டிருந்த தருணம். இசை ஆராய்ச்சியாளர் ஒருவர் தரிசனம் பண்ண வந்திருந்தார்.

“நீ தவில் பற்றி ஆராய்ச்சியெல்லாம் பண்றி யாமே, ரொம்ப சந்தோஷம்...” என்றார் பெரியவா.
“எல்லாம் உங்க ஆசிர்வாதம் பெரியவா...”
“அதுசரி... கோயில்கள்ல சுவாமி புறப்பாடு ஆரம்பிக்கறச்சே... மல்லாரி வாசிக்கும்போது, ஏன் கம்பீரநாட்டை ராகம் வாசிக்கறா தெரியுமோ?” என்று கேட்ட பெரியவா, அதற்கான பதிலையும் கூறினார்.
“ஆகம சாஸ்திரத்தில் கோயில் சடங்குகள் எல்லாம் ஐந்து எண்ணிக்கையில் இருக்க விதித்திருப்பதால், ஐந்து ஸ்வரங்கள் கொண்ட கம்பீரநாட்டை ராகத்தைத் தேர்வு செய்திருக்கிறார் கள். தவில் வித்வானும் முதலில் ஐந்து அக்ஷரம் கொண்ட கண்ட நடையில் வாசிப்பதுதான் வழக்கம்...”
இதேபோல் இன்னொரு தருணத்தில் ஒரு கேள்வி கேட்டார் பெரியவா.

“காமாக்ஷியைப் பற்றிப் பாடும்போது ஏன் ‘விநாயகுநி...’ என்று தியாக ராஜர் ஆரம்பிக்க வேண்டும்? அதாவது, `விநாயகனைக் காப்பது போல் என்னையும்...’ என்று அவர் ஆரம்பிக்கக் காரணம் என்ன தெரியுமோ?’’ என்று கேட்டுவிட்டு, அதற்கான விளக்கத்தையும் அளிக்கிறார்.
“காஞ்சிபுரம் உபநிஷத் பிரம்மேந்திராள் ஸ்ரீமுகம் அனுப்பியதன் பேரில் காஞ்சிபுரம் வந்தார் தியாகராஜர். காமாக்ஷி கோயிலுக்கு அம்பாள் தரிசனம் செய்ய அவர் வந்தபோது, கோபுர வாசலில் நர்த்தன கணபதியில் ஆரம்பித்து, சிந்தூர கணபதி, உள் பிராகாரத்தில் ஆதிசேஷன் சந்நிதியிலும் கணபதி என்று ஒரே விநாயகர் தரிசனமாகவே செய்தார்.
மேலும் உற்சவ காமாக்ஷியைக் கடந்து வந்தால், அங்கே துண்டீர மகாராஜா. அவர் கணபதி அவதாரமாக ஆகாச பூபதிக்குப் பிறந்தவர். அம்பாள் காமாக்ஷி ஏகாம்பரநாதனை அடைய முப்பத்திரண்டு அறங்களைச் செய்து, அது தொடர்ந்து நடக்கத் தன் பிள்ளை யான கணபதியைப் பட்டங்கட்டி வைத்தாள். துண்டீர ராஜா ஆண்டதால், மண்டலமே துண்டீர மண்டலம் என்று விநாயக க்ஷேத்திரமாக இருக்கிறது. இந்தப் புராணச் செய்தியை அறிந்தார் தியாகராஜர்.
தரிசனம் முடிந்து வெளியில் வரும்போது, ஜயஸ்தம்பத்துக்கு அருகில் வரஸித்தி விநாயகரையும் தரிசித்தால்தான் அம்பாள் தரிசன பலன் ஸித்திக்கும் என்று தெரிந்தது. ‘அம்பாபுர வாஸிநீ பகவதி ஹேரம்பமாதாவது’ என்று புகழ்கொண்ட காமாக்ஷிக்கு, விநாயகர்தான் உகந்த பிள்ளை என்று தியாகராஜருக்குத் தோன்றியிருக்க வேண்டும். அதே பாவத்தில், `அந்த விநாயகரைப் போலவே என்னையும் நினைத்துக் காப்பாய்’ என்று பாடியி ருப்பார்” என்று பெரியவா விளக்க, ரா.கணபதி உள்படச் சுற்றியிருந்தவர்கள், அந்த மத்யமாவதிராகக் கீர்த்தனையின் முழுப் பொருளை அறிந்து தெளித்தார்கள்.
அவர் ஒரு பாடகர். மகா பெரியவாவின் பக்தர். மடத்துக்கு வந்தார் அவர். பெரியவா முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
“பெரியவா... சங்கீதத்துல முன்னுக்கு வரணும்னு விரும்பறேன். உங்க பக்த கோடிகள்ல அந்தப் பெரும்புள்ளியும் ஒருவர். சங்கீத உலகிலும் அவருக்கு நிறைய செல்வாக்கு உண்டு. பெரியவா அவர்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா எனக்கு உபகாரமா இருக்கும்...”
“அவரைவிட அவர் சம்சாரத்தை யார் மூலமாவது பிடி. இன்னும் சுலபமா உனக்குக் காரியம் முடிஞ்சுடும்...” என்று பெரியவா புன்னகைத்த படியே சொன்னார்.

உடனே அந்தப் பாடகர், “பெரியவா மன்னிக்கணும்... அந்தப் பெரிய புள்ளியாலதானே சபா செகரட்டரிகிட்டேயெல்லாம் சொல்ல முடியும். அந்த அம்மா...’ என்று இழுத்தார்.
“அவர் இன்ஃபுளுயன்ஸ் உள்ளவரா இருக்கலாம். ஆனா, தியாகராஜரே சொல்லியி ருக்காரே... உதய சந்திரிகா ராக - ‘எந்த நேர்ச்சின’ கீர்த்தனைல... ‘என்ன படிச்சாலும், என்ன தெரிந்தவரானாலும், எவராயினும் பெண்டாட்டி தாஸர்களே’ன்னு அந்தப் பாட்டுல சொல்ற மாதிரி, நீ சொல்ற பெரும்புள்ளியும் அந்த ரகம்தான். அதனால, அந்தம்மாகிட்ட போய் கேளு... உனக்கு நிச்சயம் நல்லது நடக்கும்” என்று கூறி, அந்தப் பாடக பக்தரை அனுப்பிவைத்தார் மகா பெரியவா.
‘யாமாமா நீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா’
- இது திருஞானசம்பந்தர், சீர்காழிப்பதிகத்தில் ‘மாலை மாற்று’ என்கிற ‘Palidrome’ ஆகப் பாடியிருக்கும் பதிகம். இந்தப் பதிகத்துக்குப் பொருள் கூறி விளக்கியிருக்கிறார் மகா பெரியவா.
யாம் ஆமா? நீ ஆம் ஆம். மாயாழீ! காண் நாகா!
காமா காமா! காழீயா? மாமாயா! நீ மாமாயா!
- என்று முதலில் இதைப் புரிகிற மாதிரி பதம் பிரித்தார்.
யாம் ஆமா - அற்ப மனிதர்களான எங்களால் எதுவும் பண்ண முடியுமா?
நீ ஆம் ஆம் - நீ பண்ண முடியும் - நிச்சயம் முடியும்- சர்வசக்தனான உன்னால் எதுவும் பண்ண முடியும் - நிச்சயமாக முடியும்.
மாயாழீ - பெரிய யாழைக் கையில் உடையவரே. வீணாதார தட்சிணா மூர்த்தியான பரமேஸ்வரனே...
காமா - பேரழகனே.
காண்நாகா - காணும்படி நாகாபரணம் பூண்டவனே.
காணா காமா - காமனைக் கண் காண முடியாதபடி எரித்து விட்டவனே.
காழீயா - சீர்காழியில் உறைபவனே.
மாமாயா - மகாமாயனான விஷ்ணுவே, மகாலட்சுமி பதியான மாயனே.
நீ மாமாயா - இங்கு ‘நீ’ என்றால் ‘you’ இல்லை. நீ என்றால் நீக்கு என்று பொருள். எதை நீக்கவேண்டும்?
‘மா’ பெரிய, ‘மாயா’ மாயையை ஒரே இருட்டான மாயையை, அஞ்ஞான இருளை நீக்கு என்று பொருள்.
தருமபுரம் மடாதிபதி ஒருமுறை காஞ்சிமடம் வந்திருந்தார். உடன் பலரும் வந்திருந்தார்கள். மகா பெரியவா அவர்களைப் பார்த்துவிட்டு ‘ஓதுவார்கள் எங்கே?’ என்று கண் ஜாடையால் கேட்டிருக்கிறார்.
உடனே அவர்கள் வரவும், அப்பர் சுவாமிகள் அருளிய திருத்தாண்ட கத்தில் வரும் ‘நிலை பெறுமாறு எண்ணுதியேல்’ என்ற பாடலை பாடச் சொன்னார் பெரியவா. ஓதுவா மூர்த்திகள் பாடினார்கள்.
அவர்கள் பாடிக்கொண்டிருந்த போதே, பெரியவா தன்னை மறந்து, தன் மடாதிபதி பதவியையும் வயதையும் மறந்து, பாடலுக்கு அபிநயம் பிடித்தார்.

இதனை நாம் நேரில் பார்க்கக் கொடுத்துவைக்க வில்லை எனினும், மனக்கண் வழியே அந்த அபூர்வக் காட்சியைக் காணும்போது உடல் சிலிர்க்கிறது.
மற்றொரு முறை மடத்தில் வியாசபூஜை முடிந்து, மறுநாள் புனர்பூஜை செய்தார் சுவாமிகள். பூஜையில் ‘கீதம் ஸ்ராவயாமி, நாட்யம் தர்சயாமி’ என்கிற மந்திரம் வந்தது. மந்திரம் மட்டுமல்ல, மின்னல் போல் ‘புஜங்கத்ரா கரணம்’ (நடராஜர் போல்) காட்டி, பெரியவா செய்த அபிநயம் அருகிலிருந்தவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, புளகாங்கிதம் அடையவைத்தது.
காஞ்சியில் நடந்த ஆகம சில்ப சதஸில் அப்பர் சுவாமிகளின் சரிதத்தை வில்லுப்பாட்டில் இசைக்குமாறு கவிஞர் சுப்பு ஆறுமுகத்திடம் உத்தரவிட்டார் பெரியவா.
ஒரே இரவில் சரிதம் தயாரானது. நிகழ்ச்சியின் போது, ‘அன்னையே... உன்னிடம் இல்லாத ஒரு பொருள் என்னிடம் உள்ளது. அதை உன் காலடியில் சமர்ப்பிக்கிறேன். அது ‘கவலை’ என்கிற மூன்றெழுத்து. நீயோ கால் பெருவிரலால் அந்த மூன்று எழுத்தில் நடுவிலுள்ள ‘வ’வை அழித்துவிட்டு, மீதமுள்ள இரண்டெழுத்தை (கலை) வளர்க்க ஆசி தருவாய்’ என்ற அர்த்தமுள்ள பாடலைப் பாடினார்.
சபையில் எழுந்தருளி, கேட்டுக்கொண்டிருந்த மகா பெரியவா, சுப்புவை அருகில் அழைத்து ஒரு பொன்னாடை வழங்கி, ‘`அம்பாள் ‘வ’வை அழிச்சுட்டா... இனி உனக்குக் கலை மட்டும்தான். நன்கு வளர்ப்பாயாக” என்று ஆசி அருளினார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், ‘`ஏன் உன்னைப் பார்த்துண்டே இருக்கேன் தெரியுமா? நீ நிஜமாகச் சிரிக்கிறாய்... நிஜமாகப் பேசுகிறாய்... உன் வில்லைப் பார்த்தால், ‘ராமேஸ்வரம்’ ராமர் கை விரல் தெரிகிறது. உடுக்கையைப் பார்த்தால், ‘காசி’ சிவனுடைய கை தெரிகிறது.
ராமச்சந்திரனும் காசி விஸ்வநாதனும் தெரிவதால் சிவபரம், விஷ்ணுபரம் இரண்டுமே இருக்கின்றன. காசி நார்த், ராமேஸ்வரம் சவுத். ஆக நேஷனல் இன்டக்ரேஷன் என்பதே உன் வில்லுப்பாட்டில் இருக்கு...” என்று பெரியவா சொல்ல, மெய்சிலிர்த்தார் சுப்பு ஆறுமுகம்.
- வளரும்...
வீயெஸ்வி