மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 18 - பிள்ளை வரம் தருவாள் வடமலை நாச்சியாள்!

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 18 - பிள்ளை வரம் தருவாள் வடமலை நாச்சியாள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 18 - பிள்ளை வரம் தருவாள் வடமலை நாச்சியாள்!

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 18 - பிள்ளை வரம் தருவாள் வடமலை நாச்சியாள்!

பார்வையற்ற ஒரு பெண், மீனாட்சியம்மனை அணுகி, ‘எனக்குப் பார்வை கொடு தாயே’ என்று வேண்டியிருக்கிறாள். 

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 18 - பிள்ளை வரம் தருவாள் வடமலை நாச்சியாள்!

அவளுக்கு ஒரு கண்ணைக் கொடுத்த மீனாட்சி,  ‘இன்னொரு கண்ணை போடியிலிருக்கும் ராஜூவிடம் போய் வாங்கிக் கொள்’ என்று அனுப்பிவைத்திருக்கிறாள். அந்தப் பெண் வந்து, ‘மதுரை மீனாட்சி உன்னிடம் ஒரு கண்ணைப் பெற்றுக்கொள்ளச் சொன்னாள்’ என்று கேட்க, மறுப்பேச்சு பேசாமல் கண்ணைப் பிடுங்கிக் கொடுத்துவிட்டாராம் ராஜூ நாயக்கர்.

அப்போது அவர்முன் தோன்றிய மீனாட்சி, ‘நீ என் சகோதரன்... உன் அரண்மனையில் குடியிருக் கும் வடமலை நாச்சியாரும் என் சகோதரிதான். அவள் உன் படைபலத்துக்கு பின்னால் நிற்பாள்... என்றும் உனக்கு வெற்றிதான்’ என்று வாக்குக் கொடுத்தாளாம். அதன்பிறகு இவர், ‘கண்கொடுத்த ராஜூ நாயக்கர்’ என்று அழைக்கப்பட்டார்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 18 - பிள்ளை வரம் தருவாள் வடமலை நாச்சியாள்!



போடி அரண்மனையில் `லட்சுமி விலாசம்' என்றொரு வளாகம் உண்டு. ராமாயணக் காட்சிகள் வரையப்பட்டு, தமிழில் விளக்கம் எழுதப்பட்டிருக்கும் கலைப்பொக்கிஷம் அது.

அந்த வளாகத்தில் வடமலை நாச்சியாளுக்கு என்று ஓர் இடம் உண்டு. எட்டுக் கரங்களோடு சாந்த சொரூபியாக அமர்ந்திருப்பாள். அவ்வப்போது ராஜூ நாயக்கரிடம் இறங்கி வந்து பேசுவாளாம். இருவரும் தாயம் விளையாடுவார்களாம்.

இப்படி, போடி சமஸ்தானத்தில் ராஜூநாயக் கருக்கும் வடமலை நாச்சியம்மாவுக்கும் இருந்த சகோதர பந்தம் பற்றி நிறையக் கதைகள் உலவுகின்றன. 

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 18 - பிள்ளை வரம் தருவாள் வடமலை நாச்சியாள்!

போடி சமஸ்தான போர் தெய்வமாக இருந்த வடமலை நாச்சியம்மா குன்று தேடிச் சென்று தனித்து அமர்ந்தது ஏன்? யுத்த தேவதையாக இருந்தவள், திருமணமான பெண்களுக்கு வரமருளும் தாயுள்ள வடிவாக மாறியது எப்படி?

இன்றைய போடிநாயக்கனூருக்கு அந்த காலத்தில் இருந்த பெயர், திருமஞ்சனக்காடு. அடர்வனமாக இருந்த பகுதி இது. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர், சிலபோட நாயக்கருக்கு இந்தப் பகுதியைத் தந்து சமஸ்தானமாக்கி ஆளச் செய்தார்.

முதல் மன்னர், சிலபோட நாயக்கரின் பெயரால் பிற்காலத்தில் வந்த பெயர்தான் போடிநாயக்கனூர். போடி நாயக்க மன்னர்கள் தெய்வ பக்தி மிக்கவர்களாக இருந்தார்கள். தென் மாவட்டங்களில் ஏராளமான கோயில்களைக் கட்டியுள்னர். திருப்பணிகளும் செய்துள்ளார்கள்.

நாயக்கர்களின் தெய்வங்கள் அனைத்துமே உக்கிரமானவை. அவர்களின் குலதெய்வம், ஜக்கம்மா. ஜக்கம்மாவும் யுத்த தெய்வம்தான்.

தெய்வத்தோடு ஒன்றி, குறி, கோடங்கி, தெய்வ வாக்கு, குடுகுடுப்பை, கைரேகை, மாந்திரீகத் தொழில் செய்து அமைதியாக வாழ்ந்தவர்கள். தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்த இஸ்லாமிய மன்னர்கள், இவர்களின் சடங்குகள், வழிபாடுகள், வாழ்க்கைமுறையைக் குறிவைத்தார்கள். 

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 18 - பிள்ளை வரம் தருவாள் வடமலை நாச்சியாள்!

அதைச் சகிக்க முடியாமல் தமிழகம் நோக்கி இடம்பெயர்ந்து வந்தார்கள் நாயக்க மக்கள். ‘ஜக்கம்மா என்ற பெண்தான், அப்போது பாதுகாப்பாக மக்களைத் தலைமை வகித்து அழைத்து வந்தார்’ என்கிறார்கள். வரும் வழியில் பல தடைகள்... அனைத்தையும்  உடைத்து மக்களைக் காத்து அழைத்து வந்துள்ளார். அவரது வீரத்தாலும், மாந்திரீகத் திறனாலும் ஈர்க்கப்பட்ட மக்கள், ஜக்கம்மா இறந்தபிறகு நடுகல் ஊன்றி தெய்வமாக வழிபடத் தொடங்கினர். 
 
ஜக்கம்மா நாயக்க மக்களின் நாவில் இருப்ப தால், ‘அவர்கள் சொல்வது நடக்கும்’ என்று நம்புகிறார்கள் மக்கள். போடி சமஸ்தானத்து மன்னர்களும் குறி சொல்லுதல், மாந்திரீகம் போன்றவற்றில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள். தென்மாவட்டங்களில் நிலவும் கும்மி பாடல்கள் மூலம் இதை அறியலாம்.

அதிலும் ராஜு நாயக்கர் இணையற்றவராக இருந்தார். தெய்வங்கள் இவரோடு இறங்கிவந்து உரையாடுமாம். இவரது வார்த்தைகள் அனைத்தும் தெய்வ சாட்சிகளாக இருக்குமாம். அதிலும் வடமலை நாச்சி தன்னை சகோதரியாக ராஜு நாயக்கருக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறாள். மதுரை மீனாட்சி மீதும் ராஜு நாயக்கருக்கு மிகுந்த பக்தியுண்டு.

அதை நிரூபிப்பதுபோல் நடந்த சம்பவம்தான்... மீனாட்சியம்மை அனுப்பிவைத்த பக்தைக்கு, அம்மையின் ஆணைப்படி ராஜூ நாயக்கர் கண் கொடுத்த திருக்கதை! இந்த ராஜு நாயக்கர் காலத்தில்தான் வடமலை நாச்சி அரண்மனையை விட்டு வெளியேறியிருக்கிறாள்.

ஒருமுறை, யுத்தமொன்றை முடித்துவிட்டு அரண்மனைக்கு வந்த ராஜு நாயக்கரிடம், தான் அரண்மனையைவிட்டு வெளியேற விரும்புவதாகவும், வடக்குமலையில் தனக்கொரு குடிலமைத்துத் தரும்படியும், குலவையும் கொட்டுச் சத்தமும் என் காதில் ஒலிக்க வேண்டும் எனவும் கோரியிருக்கிறாள் வடமலை நாச்சி.

‘இந்த அரண்மனையே என் பிறந்த வீடு, நீ என் சகோதரன்... என்றென்றும் நம் உறவு தொடர வேண்டும்’ என்றும் ராஜு நாயக்கரின் கரம்பற்றிச் சொல்லியிருக்கிறாள் வடமலை நாச்சி.

அவள் விரும்பியபடி போடிநாயக்கனூரின் வடக்கெல்லையில், மல்லிங்கர் கரடு என்ற குன்றின் முடிவில் ஒரு சிறு கோயிலொன்றை எழுப்பியிருக்கிறார் ராஜு நாயக்கர். அங்குக் குடியேறிய நாச்சியாள், தன் பரிவாரங்களையும் உடன் அழைத்துச்சென்று தனக்கென ஓர் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டாள்.

போர் தெய்வமாக இருந்த வடமலை நாச்சி, அரண்மனையிலிருந்து மல்லிங்கர் கரட்டுக்கு பெயர்ந்ததும், கருணை வடிவாகிப்போனாள். சாந்த சொரூபியானாள். அவளுக்குப் பிடித்த இசை, தாலாட்டானது.
வடமலை நாச்சியைக் காணச்செல்லும் பயணமானது, மனசுக்கு இதமாக இருக்கிறது. அடர் மரங்கள்... நடுவில் ஒற்றையடியில் நீள்கிறது பாதை. திடீரென கரடு, குன்றாகிறது. ஆங்காங்கே நீர் சுரந்து ஊற்றெடுக்கிறது. வழுக்குப் பாறையில் ஈரத்தில் கால் பதித்து நடப்பதே சவாலாக இருக்கிறது.

திடீரென, இருளடர்ந்து மேகம் நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. குத்தீட்டியாகப் பாய்கிற தூறலுக்கு ஒதுங்க இடமில்லாது நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும்.

வடமலையாளைக் காண்பது அவ்வளவு எளிதல்ல... அவளே, அந்த அமானுஷ்ய வெளியில் நம்மையறியாமல் கைபிடித்து அழைத்துச் செல்கிறாள் என்றே சொல்லவேண்டும்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 18 - பிள்ளை வரம் தருவாள் வடமலை நாச்சியாள்!

நான்கு கிலோ மீட்டர் நடந்தால் பல்லாங்குழிப் பாறை வருகிறது. பாறையில் ஏழேழாகப் பதினான்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. வடமலை நாச்சி அவ்வப்போது வந்து இங்கு அமர்ந்து பல்லாங்குழி விளையாடுவாளாம். குழிகளில் கற்களைப் போட்டுவைத்தால் மறுநாள் கலைந்து கிடக்குமாம்.

அந்த இடத்தில் மெல்லிய அதிர்வு நமது உடலில் நிகழ்வதை உணரமுடிகிறது. இங்கு நான்கு தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்தத் தூண்களை மக்கள் வடமலையாளின் உருவாகக் கருதி வழிபடுகிறார்கள். அந்த இடத்துக்கு நெருக்கமாக, பாறையிலிருந்து ஒரு சுனையொன்று பீறிட்டுப் பெருகுகிறது. ஜில்லிடுகிற அந்த நீரில் உயிர்வாசம்!

அருகில் உருதுக் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. வடக்கிலிருந்து இஸ்லாமியப் பெரியவர் ஒருவர் வழிதவறி இந்த மலையில் சிக்கிக்கொண்டு தவித்தபோது, வடமலை நாச்சி அவரை அன்போடு உபசரித்துப் பாதுகாப்பாக கீழிறக்கி விட்டிருக் கிறாள். அவர் உருது மொழியில் பாறையில் கீறி வைத்துவிட்டுப் போனதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் பல்லாங்குழிப் பாறையைக் கடந்து சென்றால் பெரும் சரிவொன்று வாய்பிளந்து வரவேற்கிறது. முட்புதர்களடர்ந்த அந்தச் சரிவில் இறங்கி நீண்டு வளையும் ஒற்றையடிப்பாதையில் நடந்தால், பெரிய மரத்தின் அடியில் பரிவார தேவதைகள் அமர்ந்திருக்கிறார்கள்.

லாட சந்நியாசி, வனப்பேச்சி, பைரவர்... இவர்களைக் கடந்து மேலே ஏறினால் வடமலை நாச்சியாளின் கோயில் வருகிறது. கோயிலை ஒட்டிய இரண்டு பக்கங்களிலும் பெரும் சரிவுகள் இறங்குகின்றன. ஒரு பக்கம் குழந்தைகள் விளையாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக் கிறார்கள்.

குழந்தையில்லாத தம்பதிகள், கடும் மலைப் பாதையில் பயணித்து வந்து வடமலை நாச்சியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கிறார்கள். வேண்டுதல் பலித்து குழந்தை பிறந்ததும் கொண்டுவந்து அவள் காலடியில் வைத்து நன்றி செலுத்துகிறார்கள்.

வெள்ளிக்கிழமை நாச்சிக்கு உகந்தநாள். அன்று, பச்சரிசி, நெய், வெல்லம் போட்டு இடித்து தெள்ளுமாவு தயாரித்து மூன்று உருண்டைகளாகப் படைத்து, வடமலை நாச்சியாளை மனமுருகி வணங்கி, வழிபடுகிறார்கள்.

போடி சமஸ்தானம் மட்டுமல்ல... தேனி மாவட்டத்துப் பெண்கள் அனைவருமே வடமலை நாச்சியாளை தங்கள் தாயாக, சகோதரியாகக் கருதுகிறார்கள். எல்லா நல்ல நிகழ்வுகளையும் வடமலை நாச்சியாளின் இல்லத்திலிருந்தே தொடங்குகிறார்கள்.

ஒரு மூத்தாளாக வடமலை நாச்சி அவர்களோடு கலந்து வாழ்கிறாள்!

- மண் மணக்கும்...


வெ.நீலகண்டன், படங்கள்: வீ.சக்திஅருணகிரி