
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படங்கள்: கே.ராஜசேகரன், சாய் தர்மராஜ் - ஓவியம் பாலகிருஷ்ணன்
`உலகமே உதறி எறியட்டும்; உறவுகள் அனைத்தும் விட்டு விலகிப் போகட்டும்; நண்பர்கள்கூட நட்டாற்றில் விட்டுச் செல்லட்டும். எல்லா உறவுகளும் நம்மைக் கைவிட்டுவிட்ட நிலையில், நம்மை திடீரெனத் தனிமைச் சிறையில் வைத்தாலும், நம்மை விட்டு விலகாத உறவு எது?’ - உலகம் முழுக்க இந்தக் கேள்வியைக் கேட்டால், ஒரே ஒரு பதில் கிடைக்கும். அது, `புத்தகங்கள்... புத்தகங்கள்... புத்தகங்கள்.’

புத்தகம் நம் வழிகாட்டி; ஆசான்; தோழன். இப்போது அதன் அருமையை உணர்ந்து, உலகப் புத்தக தினமெல்லாம் கொண்டாடிவருகிறோம். உலகப் புத்தக தினத்தின் தோற்றுவாய் எது? ஸ்பானிஷ் எழுத்தாளர் மிகுள் டே சர்வன்டீஸ் (Miguel de Cervantes) 1616-ம் ஆண்டு, ஏப்ரல் 23-ம் தேதி மறைந்தார். ஸ்பெயினிலிருக்கும் காடலோனியா (Catalonia) நகரத்தில் புத்தக வியாபாரிகள், 1923-ம் ஆண்டு முதல், மிகுள் டே சர்வன்டீஸ் மறைந்த ஏப்ரல் 23-ம் தேதியைப் புத்தக தினமாகக் கொண்டாடினார்கள். அதனுடைய தொடர்ச்சிதான் 1995-ம் ஆண்டு, ஏப்ரல் 23-ம் தேதியை யுனெஸ்கோ `உலக புத்தக தின’மாக அறிவித்தது. ஆக, நாம் புத்தக தினத்தைக் கொண்டாடுவதிலும் பின்தங்கித்தான் இருக்கிறோம். அறிவுலகத்தின் பயணத்தில் நமக்கு இன்னமும் வேகம் தேவைப்படுகிறது.
காந்தியடிகள் சொல்வார்... ``நான் ஒரு சாதாரண மோகன்தாஸ்; ஒரு மனிதாத்மா. என்னை மகாத்மாவாக உலகுக்குக் காட்டியது புத்தகங்கள்தான். டால்ஸ்டாயின் `இறைவனின் அரசாங்கம் உனக்குள் இருக்கிறது’ என்ற புத்தகத்தை வாசித்தேன். அது எனக்கு ஆன்மிக மறுமலர்ச்சியை ஏற்படுத்தித் தந்தது. ரஸ்கினின் `கடையனின் கடைத்தேற்றம்’ கற்றுத் தெளிந்தேன். அது என்னை சர்வோதயப் பாதைக்குக் கைபிடித்து அழைத்துப் போனது. ஹென்றி தோரேயின் `சட்ட மறுப்பு’ நூலை வாசித்தேன். அது என்னை அகிம்சைப் போராளி ஆக்கியது.’’

இன்றைக்கு உலகைப் புரட்டிப் போடுகிற வல்லரசு என்று தன்னைச் சொல்லிக்கொள்கிற அமெரிக்கா, ஒரு காலத்தில் அடிமை தேசம். பிரிட்டனின் காலனி நாடாக, அடிமையாக இருந்தது. அந்த அமெரிக்காவில் `பகுத்தறிவு’ (Common Sense) என்ற புத்தகம் வெளியானது. முழுப் புத்தகமும் மொத்தமே 47 பக்கங்கள்தான். அது, அமெரிக்காவையே புரட்டிப் போட்டது. அமெரிக்க மக்கள் இதயத்தில் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியது. ஒவ்வோர் அமெரிக்கரும் `நாம் எவ்வளவு பெரிய கண்டத்துக்குச் சொந்தக்காரர்கள்; ஆனால், ஒரு சிறிய தீவுக்கு அடிமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறோமே!’ என்று சிந்திக்க ஆரம்பித்தார்கள். `சுதந்திர அமெரிக்கா உடனடித் தேவை’ என்று பிரகடனம் செய்ய ஆரம்பித்தார்கள். உடனடியாக அமெரிக்க காங்கிரஸ் கூடியது. சில ஆண்டுகளில் சுதந்திர அமெரிக்கா உதயமானது. அதற்குக் காரணமாக இருந்தது, 47 பக்கங்கள்கொண்ட `பகுத்தறிவு’ என்ற புத்தகம் ஏற்படுத்திய புரட்சி சிந்தனை.
அதே அமெரிக்காவில் உள்நாட்டுப் போர். `கறுப்பின மக்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகளை யார் மாற்றப் போகிறார்கள்?’ என்று காலம் காத்திருந்தபோது, ஆபிரஹாம் லிங்கனை அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆசனத்தில் அமரத் தூண்டுகோலாக இருந்தது, `டாம் மாமாவின் குடில்’ என்ற புத்தகம். அது, ஹாரியட் பீச்சர் ஸ்டவ் (Harriet Beecher Stowe) என்ற பெண்மணி எழுதிய புத்தகம். குடியரசுத் தலைவரானதும் ஆபிரஹாம் லிங்கன், 1863-ம் ஆண்டு, வெள்ளை மாளிகையின் கதவுகளைத் திறந்து விட்டார். `இன்றிலிருந்து இந்த அமெரிக்காவில் 40 லட்சம் கறுப்பின மக்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்’ என்று தன் தங்கப் பேனாவால் கையெழுத்திட்டார். அந்தப் புரட்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் படித்த புத்தகம்தான்.
நாம் புத்தகத்தைப் புரட்ட மறக்கலாம். ஆனால், உலகைப் புரட்டிப் போட்ட புத்தகங்கள் ஏராளம். காரல் மார்க்ஸ், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் நூலகத்திலேயே கூடுகட்டிக்கொண்டு வாழ்ந்தார். ஒரு நாளல்ல, இரு நாளல்ல 15 ஆண்டுகள்... உலகத்துக்கு `மூலதனம்’ புத்தகம் கிடைத்தது. `மூலதனம்’ புத்தகத்தின் மூன்று பாகங்கள் முடிவடைந்த நள்ளிரவு நேரம்... மார்க்ஸ் நன்றி கூறினார். யாருக்கு? தன் வாழ்வில் எல்லா நிலைகளிலும் உறுதுணையாக இருந்த ஜென்னியைவிட, தான் `மூலதனம்’ நூல் எழுத மூலதனமாக இருந்த ஏங்கெல்ஸுக்கு நன்றி சொல்கிறார். `ஏங்கெல்ஸ்... நீ எங்கே இருக்கிறாய்? உன்னை நான் இப்போது கட்டித் தழுவிக்கொள்ள வேண்டும். `மூலதனம்’ மூன்று பாகங்கள் இப்போது முழுமை பெற்றுவிட்டன. இதற்கு முழுக் காரணமும் நீதான். நீ இல்லையென்றால், இந்த மூன்று பாகங்களை நான் தந்திருக்க முடியாது. இங்கிருந்தே உன்னை நான் கட்டித் தழுவி என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று மார்க்ஸ் உணர்ச்சிமயமாக எழுதினார். ஓர் அறிவின் தோழமை இப்படித்தான் இருக்க வேண்டும்.

கடந்த தலைமுறை அறிவை எப்படியெல்லாம் தேடியிருக்கிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும். `தமிழ்த்தாத்தா’ என்று போற்றப்பட்ட உ.வே.சா, கரையான்களுக்கு இரையாகிக்கொண்டிருந்த இலக்கியங்களையெல்லாம், ஓலைச்சுவடிகளில் குடியிருந்த அற்புதப் படைப்புகளையெல்லாம், காணாமற்போகவிருந்த பொக்கிஷங்களையெல்லாம் அச்சுக்கூடத்தில் உயிர்ப்பித்தார். உ.வே.சா., நம் குன்றக்குடி ஆதீனத்திடமிருந்தும் சிலப்பதிகாரத்தின் திருத்தமான மூலப்படியைப் பெற்றார். அந்த வகையில் தமிழ்ப்பணியில் தன்னை இணைத்துக்கொண்டது நம் திருமடம்.
உ.வே.சா-வின் ஞான ஆசிரியர், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவர் இளமைக்காலத்தில் பள்ளியில் படிக்கிறபோது வறுமையில் வாடினார். அவர் கற்கவேண்டிய ஓர் இலக்கண நூல், ஒரு பரதேசியிடம் இருந்தது. அந்தப் பரதேசியிடம் அந்த நூலைத் தரும்படி கெஞ்சிக் கேட்டார். ``பணம் இருக்கிறதா?’’ என்று பரதேசி கேட்டார்.
``இல்லை.’’
``அப்படியென்றால் கிடையாது. நடையைக் கட்டு.’’
பலமுறை பரதேசியிடம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை கெஞ்சினார். கடைசியில் அந்தப் பரதேசிக்கும் இரக்கம் பிறந்தது. ``காசு இல்லையென்றால் பரவாயில்லை; நான் சொல்கிற வேலையைச் செய்ய முடியுமா?’’ என்று கேட்டார்.
``உத்தரவு’’ என்றார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

``நாளையிலிருந்து எனக்குப் பதிலாக இந்தப் பிச்சைப் பாத்திரத்தை வீடு வீடாகத் தூக்கி வர வேண்டும். அன்னக்காவடி பாத்திரத்தில் பிச்சையெடுத்து வந்து கொடுத்தால்தான் இந்தப் புத்தகத்தைக் கொடுப்பேன்.’’
``அப்படியே ஆகட்டும்’’ என்று வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து வந்தார் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. `கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற நறுந்தொகைப் பாடலின் உண்மையான அர்த்தத்தை உலகுக்கு உணர்த்திய நிகழ்வு இது.
காந்தியடிகள் எழுதுகிறார்... ``நான் ஓர் இளம் வழக்கறி ஞராகத்தான் தென்னாப்பி ரிக்காவுக்குப் போனேன். ஒரு சத்தியாக்கிரகியாக இந்தியாவுக்குத் திரும்பி வந்தேன். அப்படி என்னை ஆக்கியது யார்? `இந்தியத் திருமணச்சட்டம் செல்லாது’ என்று தென்னாப்பிரிக்காவில் அறிவிக்கப்பட்டபோது, தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அவர்களில் 16 வயது மங்கை வள்ளியம்மை சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டாள். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த அவளை ஒரு ஜமுக்காளத்தில் சுற்றி, என்னிடம் கொண்டு வந்தார்கள். உயிர் போகிற தறுவாயிலிருந்த அந்தப் பெண்ணின் காதில் ``வள்ளியம்மை, நீ சிறைக்குச் சென்றதற்காக வருத்தப்படுகிறாயா?’’ என்று கேட்டேன். ``அதற்காக நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. இன்னொருமுறை அந்த வாய்ப்பு கிடைத்தாலும், சிறைக்குச் செல்ல சித்தமாக இருக்கிறேன். அங்கேயே உயிர்விடவேண்டிய சூழல் ஏற்பட்டாலும், அதற்கு நான் தயங்க மாட்டேன்’’ என்றாள் அந்தப் பெண். இப்படிச் சொன்ன சில நாள்களில் வள்ளியம்மை, தன் விழிகளை மூடிவிட்டாள். சாதாரண வழக்கறிஞராக இருந்த என்னை அகிம்சைப் போராளியாக மாற்றியது தமிழர்கள்தாம். வள்ளியம்மை போன்றவர்கள்தாம் என்னை சத்தியாக்கிரகியாக ஆக்கினார்கள். தமிழர் மீதுகொண்ட அன்பின் காரணமாகத்தான் நான் தமிழை, குறிப்பாகத் திருக்குறளைக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். என் பணிச்சுமை காரணமாக அது முடியாமற்போயிற்று.’’

உலகத்தின் எல்லா சந்தேகங்களுக்கும் தீர்க்கதரிசனமாகத் தெளிவுரை தந்திருக்கிறார் திருவள்ளுவர். அனைத்து ஐயங்களுக்கும், பிரச்னைகளுக்கும் திருக்குறளில் தீர்வு இருக்கிறது. எப்போதும் நெகிழ்ந்தும் கனிந்தும் மகிழ்ந்தும் பேசுகிற திருவள்ளுவர், ஆணையிட்டுச் சொல்லும் இடமும் உண்டு. `கற்க’ என்பார். `கற்பது மட்டுமல்ல; கற்றதன்வழி நிற்க’ என்பார். இன்றைய சமூகம் கற்றதன் வழியில் நடைபோடுகிறதா?
ஒரு பட்டதாரி இளைஞன் ஒரு கிராமத்துக்கு வந்தான். கிராமத்துச் சாலையில் ஓர் ஆட்டுமந்தை சென்றுகொண்டிருந்தது. மேய்ப்பவன் வெகு கவனமாக ஆடுகளைச் செலுத்திக்கொண்டி ருந்தான். அந்த இளைஞன் ஆடு மேய்ப்பவனிடம் கேட்டான்... ``உன் மந்தையில எத்தனை ஆடுங்க இருக்கு?’’
மேய்ப்பவன், இளைஞனை அலட்சியப்படுத்தி விட்டு, தன் கடமையிலேயே கண்ணாக இருந்தான்.
விடவில்லை இளைஞன். ``உன் மந்தை யிலிருக்கும் ஆடுங்களோட எண்ணிக்கையை நான் கம்ப்யூட்டர்ல பார்த்து சரியாகச் சொன்னா, நீ ஒரு ஆட்டைப் பரிசாகத் தரணும்’’ என்றான்.
இப்போதும் ஆடு மேய்ப்பவன் பேசவில்லை. அவன் தன் மடிக்கணினியில் புவியின் வரைபடத்தின் மூலம் பார்த்து, அந்த ஆட்டு மந்தை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து வட்டமிட்டான். மந்தையிலிருக்கும் ஆடுகளைக் கணக்கிட்டான். இளைஞன், ஆடு மேய்ப்பவனிடம் ``உன் மந்தையில 1,632 ஆடுகள் இருக்கு. சரிதானே? இதற்குப் பரிசா ஒரு ஆட்டை எடுத்துக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, ஓர் ஆட்டைத் தூக்கிக்கொண்டான்.
இப்போதுதான் ஆடு மேய்ப்பவன் பேசினான்... ``ஐயா... என் மந்தையில எத்தனை ஆடுங்க இருக்குன்னு எனக்குத் தெரியும். தூக்கத்துல தட்டி எழுப்பிக் கேட்டாலும், ஆட்டுக் கணக்கைச் சரியா சொல்லிடுவேன். அதுக்கு எனக்கு கம்ப்யூட்டர் தேவையில்லை. ஏன்னா, ஒரு ஆடு தொலைஞ்சுபோனாலும் என் தூக்கம், பசி பறந்து போகும். அந்த ஆடு கிடைச்சதுக்கு அப்புறம்தான் நான் பசியாறுவேன், தூங்குவேன். 1,632 ஆடுகள்ங்கிற கணக்கு எனக்கு நல்லாத் தெரியும். இந்தக் கணக்கைச் சொல்லிட்டு நீங்க ஒரு ஆட்டைத் தூக்கிட்டுப் போறீங்களே... அது ஆடு இல்லை, நான் வளர்க்கிற நாய்க்குட்டி. அதைக் கீழே இறக்கி விடுங்க.’’
படிப்புக்கும் அதை நடைமுறைப்படுத்து வதற்கும் இப்படித்தான் முரண்பாடு இருக்கிறது. இப்படிப்பட்டவர்களைப் பார்த்துத்தான் பாரதி ஆவேசப்பட்டான். `படித்தவன் சூது பண்ணினால் போவான், போவான்... ஐயோ என்று போவான்’ என்று சபித்தான்.
இவர்களுக்காகத்தான் திருவள்ளுவரும் வருத்தப்பட்டார். எப்படி? `யார் முட்டாள்? ஒன்றும் தெரியாதவன் முட்டாளல்ல; தெரிந்திருந்தும் தவறு செய்கிறானே... அவன்தான் முட்டாள்; முட்டாள்களின் முட்டாள்’ என்றார் திருவள்ளுவர். `கற்றவன், கற்றதைக் கேட்டவன், கேட்டதைச் சிந்தித்தவன், சிந்தித்ததன் பாதையில் செயல்பட மறுக்கிறவன்தான் சமூகத்துக்குத் தீமை செய்கிறவன். அவன்தான் பேதைகளின் பேதை’ என்று முத்திரை குத்துகிறார்.
(புரிவோம்...)

சீன தேசத்திலிருந்து இந்தியாவில் ஞானத்தைக் கற்க ஒரு துறவி வந்தார். காடு, மேடு, கடல் கடந்து மழை, வெயிலில் உழன்று வந்தார். இந்தியாவில் அவருக்கு, அள்ளக் குறையாத ஞானக் கருவூலங்கள் ஓலைச்சுவடிகளாகக் கிடைத்தன. அவற்றை அள்ளிக்கொண்டு ஒரு படகில் கிளம்பினார். படகு பாரம் தாங்காமல் தத்தளித்தது. கங்கை நதியைக் கடந்தாக வேண்டும். முதலைகள் வாழ்கிற கங்கை, ரத்தத்தை உறையச் செய்கிற குளிர். படகோட்டி, படகைச் செலுத்த முடியாமல் தடுமாறினான். துறவியிடம், பாரத்தைக் குறைக்கச் சொன்னான். `கொஞ்சம் ஓலைச்சுவடிகளை எடுத்து கங்கையில் போட்டால் நிம்மதியாகக் கரை சேரலாம்’ என்றான். துறவி எதுவும் சொல்லவில்லை. விருட்டென்று, தண்ணீரில் பாய்ந்து நீந்தத் தொடங்கினார். `இந்த ஓலைச்சுவடிகளை அக்கரையில் இருக்கிற மடத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடு. முடிந்தால், நான் வந்து சேர்கிறேன்’ என்றபடி நீந்த ஆரம்பித்தார். சீனாவிலிருந்து வந்த அந்தத் துறவியின் பெயர் பாஹியான்.