
முத்து இல்லாத வாழ்க்கையைக் கற்பனைகூட செய்ய முடியலே.
முத்து ஊர்ல துணியெடுத்து வெளுத்துக் குடுக்குற தொழிலாளி. ஆளு ரொம்ப வலுவானவன். பார்க்க லட்சணமாவும் இருப்பான். முத்துவோட அப்பங்காரனும் தொழிலாளியா இருந்தவன்தான். அவனுக்கு ஒரு காலு சூம்பிப்போயிருக்கும். கழுதையை ஓட்டிக்கிட்டுப்போயி வீட்டுக்கு வீடு துணியெடுத்து ஏத்திவிடுவான். கழுதை பாட்டுக்கு வெடவெடன்னு நடந்து துவைக்கிற துறைக்குப் போயிரும். அளவா உவர்மண் போட்டுத் துணிகளை ஊற வெச்சு பெரிய ஈயப்பானையில போட்டு வேகவைச்சு வெளுப்பான்.
முத்துவுக்கு இந்தத் தொழில்மேல விருப்பமில்லை. வீட்டுக்கு வீடு அடிமை போல நின்னு துணி கேக்குறதும் பழங்கஞ்சிக்காகப் பாத்திரமேந்திக்கிட்டு நிக்கிறதும் அவனுக்குச் சுத்தமாப் புடிக்கலே. அழுது அடம்புடிச்சு சின்ன வயசுலயே பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சுட்டான். அவன் தலைமுறையிலேயே பள்ளிக்கூடம் போன பய, முத்து ஒருத்தன்தான். எட்டாவது வரைக்கும் படிச்சான். ஒருக்கா, முத்துவோட அப்பங்காரன், உவர் மண்ணு அள்ள கரம்பைக்காட்டுக்குப் போகும்போது ஏதோ விஷம்தீண்டி உடம்பெல்லாம் ஊந்தண்ணியா வடிய ஆரம்பிச்சிருச்சு. அஞ்சாறு மாசம் இழுத்துக்கிட்டுக் கெடந்து ஒருநா செத்துப்போனான். அவனுக்குப் பெறவு ஊர்த்தொழில் செய்ய ஆளில்லை. சாவு, பூப்புன்னு எந்தத் தீட்டு காரியம் நடந்தாலும் தொழிலாளிதான் முதல்ல நின்னு சடங்கு செஞ்சாகணும். வழக்கமா, அப்பன் செத்தா புள்ளதான் அதைச் செய்யணும். ஆனா, முத்து அதுக்கு இசையலே. ஊர்ப் பஞ்சாயத்துக்கூடி, `கட்டாயம் செஞ்சுதான் ஆகணும்’னு சொல்லிப்புட்டாக. ஊரை விட்டுப் போகலாம்னா, வயசான அம்மாவையும் நாலைஞ்சு தொத்தக் கழுதைகளையும் கூட்டிக்கிட்டு எந்தூருக்குப் போயி என்ன தொழில் செஞ்சுப் பொழைக்கிறது... `ஆனது ஆகட்டும்’னு நினைச்சுக்கிட்டு அப்படியே இருந்துட்டான் முத்து.

ஆனாலும், யார்கிட்டயும் வளைஞ்சு பேச மாட்டான். கஞ்சிக்குன்னு யார்கிட்டயும் போய் நிக்கமாட்டான். அவுகளா கொடுத்தா மட்டும் வாங்கிக்குவான். அவன் உண்டு, அவன் வேலையுண்டுன்னு திரியற பய.
அந்தூர்ல பெரிய மனுசன் ஒருத்தர் இருந்தாரு. ஊர்க்கோயில் நிர்வாகத்துல இருந்து வயக்காடு, வரப்புக்காடு பஞ்சாயத்து வரைக்கும் அவருதான். காசு, பணத்துலயும் பெரிய ஆளு. ஊருல யாரு வீட்டு நல்லது கெட்டதும் அவரில்லாம நடக்கிறதில்லை. பெரிய சனக் கட்டு வேற. அவரு வீட்டுக்குத் தெனமும் வந்து அழுக்குத்துணி எடுத்துக்கிட்டுப் போவான் முத்து. சாயங்காலமா வெளுத்த துணிகளை எடுத்தாந்து குடுத்துட்டு சோறு வாங்கிட்டுப் போவான்.
அந்தப் பெரிய மனுஷனுக்கு ஒரு மக. பேரு பாப்பு. ஒத்தைப் புள்ளை. ஆளு வடிவா இருப்பா. குணத்துலயும் தங்கம். அவளுக்கு முத்துமேல எப்பவும் ஒரு கரிசனம் உண்டு. அவன் துணியெடுக்க வரும்போதும், துவைச்சுக்கொண்டு வரும்போதும் வரத்தண்ணி கொடுத்து, சுடுசோறும் போட்டு அனுப்புவா. முத்துவும் குனிஞ்ச தலை நிமிராம வாங்கிக்கிட்டு கிளம்பிருவான். ஊர்ல எல்லாரும் அவன் பாக்குற வேலையைச் சொல்லி அழைக்கும்போது, பாப்பு மட்டும் `முத்து’, `முத்து’னு பேரைச் சொல்லிக் கூப்பிடுவா. முத்துவுக்கும் அவ மேல மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனா, அவ முகத்தை ஒருக்காகூட நிமிர்ந்து பாக்க மாட்டான். எப்பாவது, அவ பாக்காத நேரத்துல ஒளிவாப் பாத்துட்டு குனிஞ்சுக்குவான்.
ஒருக்கா, முத்துவுக்கு அம்மை வாத்திருந்துச்சு. ஏழெட்டு நாளா அவன் ஊருக்குள்ள துணியெடுக்க வரலே. ஊராளுங்கெல்லாம் ஏசுவாகளேனு அவனோட அம்மாதான் கழுதைகளைப் பத்திக்கிட்டு வீடு வீடா வந்துநின்னு துணி வாங்கிட்டுப்போனா. பாப்புவுக்கு ஒரு மாதிரியாயிருச்சு. முத்துவப் பாக்கணும்போல இருந்துச்சு. திரும்ப திரும்ப அவன் முகம் மனசுக்குள்ள வந்து வந்து நின்னுச்சு. அவளுக்கே அது புதுசாவும் புதிராவும் இருந்துச்சு. `ஏன் அவனுக்காகக் காத்திருக்கோம்...’, `ஏன் அவன் வரணும்னு எதிர்பாக்குறோம்’னு புரியலே. ஆனா, அவனுக்கு என்ன ஆச்சோனு கவலையும் குழப்பமுமா இருந்துச்சு. சில நேரங்கள்ல அழுகையும் வந்துச்சு. அவன் பக்கத்துலயே இருந்தா நல்லாயிருக்கும்போல இருந்துச்சு.
`எப்பவும், மலர்ந்த முகத்தோட வளைய வர்ற மக ஏன் வதங்கிப்போன பூ மாதிரி மங்கியிருக்கா’ன்னு ஆயி, அப்பனுக்குக் கவலையாப் போச்சு. உடம்புக்கு என்னவோன்னு நினைச்சுக்கிட்டாக.
ஒரு நா, துணியெடுக்க வந்த முத்துப் பயலோட அம்மாக்கிட்ட, “ஏந்தாயி வயசான காலத்துல இப்பிடி அலையுறே... உம்புள்ளைய வரச்சொல்லலாம்ல”னு கேட்டா பாப்பு. “அதையேம்மா கேக்குறே... ராஜாவாட்டம் திரிஞ்சுக்கிட்டிருந்த பய அம்மை வார்த்து படுக்கையில கெடக்கான். அந்த மாரியாத்தாளுக்கு மாவௌக்குப் போட்டு இலுப்பை எண்ணெய் விளக்கு ஏத்துறதா வேண்டியிருக்கேன். புள்ளை உடம்புலருந்து ஆத்தா எப்ப எறங்கப்போறாளோ தெரியலே”னு கண்ணைக் கசக்குனா ஆத்தாகாரி.
பாப்புவுக்கு ரொம்பக் கஷ்டமாப்போச்சு. வீட்டுல காச்சிருந்த அஞ்சாறு நார்த்தங் காயையும் ரெண்டு எளநியையும் கையில குடுத்து, ``இதையெல்லாம் வெட்டி நீரெடுத்துக் குடு”னு குடுத்து அனுப்புனா. மகராசியோட பெரிய மனசைப் பாத்து புல்லரிச்சுப்போனா முத்துவோட ஆத்தா. ``நீ நல்லாயிருப்பேம்மா”னு வாழ்த்திட்டு வந்தா.
முத்துவுக்கு அம்மையெல்லாம் இறங்கிருச்சு. திரும்பவும் வீடுவீடாப் போயி துணியெடுக்க ஆரம்பிச்சான். அன்னிக்கு பாப்புவோட உறவுக்காரர் ஒருத்தர் பக்கத்தூர்ல செத்துப் போனார். அதுக்கு வீட்டுல இருந்த எல்லாப் பேரும் போயிட்டாக. பாப்பு மட்டும் வீட்டுல இருந்தா. பெரிய வீட்டுக்கு வந்த முத்து, ``அம்மா, துவைக்கத் துணியிருந்தா குடுங்க”னு குரலெழுப்புனான். பாப்பு வெளியில வந்தா... சூரியனைக்கண்ட பூ மாதிரி மலர்ந்து போயிருந்துச்சு அவ முகம்.

``முத்து... வீட்டுக்குள்ள வா”னு கூப்பிட்டா. இதுவரைக்கும் முத்து தன்னோட வாழ்க்கையில கேட்காத வார்த்தை.
``அது எப்படி தாயி... பெரியவுக வீட்டுக்குள்ள வர்றது”னு கேட்டான்.
``அதெல்லாம் எதுவும் ஆயிடாது... வா”னு சொல்லி கையைப் பிடிச்சு உள்ளே அழைச்சுட்டுப் போனா. உக்கார வெச்சு சாப்பாடு போட்டா. முத்து மனசுக்குள்ள திக்குத்திக்குன்னு இருக்கு. என்னவாகப் போகுதோன்னு பயம். ஆனா, இப்பிடியே பாப்புவோட இருந்திட மாட்டோமானு இருக்கு. வேகவேகமா சாப்பிடுற முத்துவோட முகத்தையே பாத்துக்கிட்டே இருந்தா பாப்பு. முத்துவுக்கு வெக்கமா இருக்கு. அவளை நிமிந்து பாக்கத் தைரியமில்லை.
முத்து சாப்பிட்டு முடிச்சான்... ``அம்மா... துணிகளைக் கொடுத்தா கிளம்பிருவேன். வெள்ளாவி வெக்கணும்”னான். பாப்பு அவனை இருக்கையில உக்கார வெச்சா. பாப்பு அவன் பக்கத்துல உக்காந்தா.
``முத்து... என்னைக் கல்யாணம் கட்டிருக் கிறீயா”னு கேட்டா. பயலுக்கு வியர்த்துக் கொட்டுது. உடம்பெல்லாம் நடுங்குது.
``தாயி... நான் இந்த வீட்டுக்குள்ள வந்து, அய்யாமாருங்க உக்கார்ற நாற்காலியில உக்காந்து சாப்பிட்டேன்னு தெரிஞ்சாலே என்னை உசுரோட கொளுத்திருவாக. இதுமாதிரியெல்லாம் பேசாதீய தாயி.எல்லாப்பேரும் `தொழிலாளி’, `தொழிலாளி’னு கூப்பிடும்போது நீங்க மட்டும் `முத்து’னு பேரு சொல்லி அழைச்சு என்னை மனுஷனா மதிச்சிக. அம்மா மாதிரி உக்கார வெச்சு சோறு போட்டிக. இதுபோதும் தாயி. இந்த மாதிரி எண்ணத்தை வளத்துக்க வேண்டாம்”னு சொல்லிட்டுக் கிளம்பிட்டான். அவன் கையைப் புடிச்ச பாப்பு, ``முத்து... இந்த ஜென்மத்துல உனக்கு நான். எனக்கு நீனு எழுதியிருக்கு. அதை மாத்த முடியாது. நிச்சயம் நாம ஒண்ணு சேருவோம்”னு சொன்னாள்.
முத்துவுக்கு வேலையிலயே கவனம் இல்லை. ஒருபக்கம், தேவதை மாதிரி ஒரு பொண்ணு. அதுவும் பக்கத்துல நடந்தாலே தீட்டுன்னு சொல்ற ஊர்ல, கையைப் புடிச்சு வீட்டுக்குள்ள கூட்டிக்கிட்டுப்போயி `கட்டிக்கிறியா’னு கேட்குறா. ஆனா, இது நடக்குமா... பாப்புவோட அப்பங்காரனுக்குத் தெரிஞ்சா கொன்னுல்ல போட்டுருவான்... ஒரு பக்கம் பயம்... இன்னொரு பக்கம் பாப்பு முகம் மனசுக்குள்ள வந்துவந்து போகுது.
புள்ள முகம் குழம்பிக்கிடக்கிறதை முத்துவோட அம்மாகாரி கண்டுபிடிச்சுட்டா. பக்கத்துல உக்கார வெச்சு என்ன, ஏதுன்னு விசாரிச்சா. நடந்ததைச் சொன்னான் முத்து. பதறிப்போனா அம்மாகாரி. ``முத்து... ஏதோ கெட்ட சகுனம் மாதிரி இருக்கு. மனசைப் போட்டுக் குழப்பிக்காதே. நாம அழுக்கோடவும் கழுதையோடவும் வாழுறவுக. அவுக வாழ்க்கை முறை வேற. இனிமே பெரிய வீட்டுக்குத் துணி எடுக்கப்போகாதே. நான் போயி எடுத்துக்கறேன்”னு சொன்னா. அவ முகம் கலங்கிப்போச்சு.
அதுக்கப்புறம் முத்து, பெரிய வீட்டுக்கு மட்டும் போறதில்லை. அம்மாகாரி போயி துணி எடுத்தாந்தா. முத்து வராதது பாப்புக்குப் பெரும் துயரமாப் போச்சு. ஒருநாள், யாருமில்லாத நேரத்துல கிளம்பி ஆத்தங்கரைக்குப் போனா. முத்து வெள்ளாவி அடுப்பை ஊதி எரிய வெச்சுக்கிட்டிருந்தான். பாப்புவைப் பாத்ததும் அவனுக்கு என்ன செய்யறதுனே தெரியலே. யாராவது பாத்துப் புட்டா பிரச்னையாயிருமேன்னு பயம் வேற.
பாப்பு, முத்துவோட கையைப் பிடிச்சுக்கிட்டா... ``முத்து... ஏன் வீட்டுக்கு வர்றதேயில்லை...”னு கேட்டா. முத்துகிட்ட பதில் இல்லை. அவன் கண்ணுல இருந்து தண்ணி ஊத்துது. முத்து... என்னை ஏத்துக்க. இந்த ஊரை விட்டே ஓடிருவோம். எங்காவது கண்காணாத இடத்துக்குப் போய் நம்மால என்ன வேலை செய்ய முடியுமோ... அதை செஞ்சு வாழ்ந்துக்குவோம்...”ன்னா. முத்து பதில் பேசாம இருந்தான்.
பாப்பு, விறுவிறுன்னு ஆத்தை நோக்கி நடந்தா. பெரும் சுழலெடுத்து ஆறு வேகமா ஓடிக்கிட்டிருக்கு. ``முத்து... இப்போ நான் சொல்றதைக் கேட்கலைன்னா ஆத்துல குதிச்சு உசுரை விட்டிருவேன்”னா. முத்து கலங்கிப்போனான். இனி இழக்க எதுவுமில்லை.
``பாப்பு... நிச்சயம் நாம கல்யாணம் பண்ணிக்குவோம்... இந்த ஊர்ல இருந்தா நம்மள வாழவிட மாட்டாக. நாளைக்கு மறுநாள் பவுர்ணமி. நடுராத்திரியிலே ஊரைவிட்டுக் கிளம்பிருவோம். கட்டுன சேலையோட வா... எங்க அம்மாவை இங்கே விட்டுட்டு வந்தா உங்க அப்பாவோட ஆளுங்க வெட்டிப் போட்டுருவாக. அவளையும், நாலு தொத்தக் கழுதைங்க இருக்கு. அதுகளையும் கூட்டிக்கிட்டுப் போவோம். எல்லாம் ஆண்டவன் விட்ட வழி...”ன்னான் முத்து. பாப்பு அவனைக் கட்டிப்பிடிச்சு அழுதா.
காடு, கரையெல்லாம் இந்தக் காட்சியை வேடிக்கை பாத்துச்சு. கூடவே, வயித்துக்குச் சரியில்லாம கரைப்பக்கம் ஒதுங்கவந்த ஊருக் கணக்கனும் பாத்துப்புட்டான். பதறிப்போயி, நேரா பெரிய வீட்டு மனுஷங்கிட்ட தான் பாத்ததையும் கேட்டதையும் ஒண்ணுவிடாமச் சொல்லிப்புட்டான். பெரிய வீட்டு மனுஷனால இதைச் சகிச்சுக்க முடியலே.
தன்னோட ஆளுகளைக் கூப்பிட்டான். ``இன்னிக்கு ராத்திரிக்குள்ள அந்த முத்துப் பயலோட தலையோட வரணும். இனிமே யாருக்கும் இப்படியோர் எண்ணமே உருவாகக் கூடாது”னு சொன்னான். ஆளுக நேரம் பாத்துக் காத்திருந்தானுக.
சாயங்காலம் ஊர்ச்சோறு வாங்குறதுக்காக தெருவுக்குள்ள வந்தான் முத்து. வாங்கி ஒரு வெள்ளை வேட்டியில கட்டி தோள்ல மாட்டிக்கிட்டு வீட்டுக்கு நடந்துகிட்டிருந்தான்.பெரிய வீட்டு மனுஷன் ஏவிவிட்ட ஆளுக, பின்தொடர்ந்து வந்தானுக. கள்ளிக்காட்டைத் தாண்டி வீட்டுக்கு முத்து நடந்தப்போ மூணு பேரும் சுத்தி வளைச்சுட்டானுக. ஒருத்தன் காலை வெட்ட, இன்னொருத்தன் கையை வெட்டுனான். ஒருத்தன் கழுத்துல கீறுனான். எதிர்பாராத தாக்குதல்ல நிலை குலைஞ்சு போனான் முத்து. பலத்தையெல்லாம் திரட்டி போராடி கொலைகாரப் பாவிகள்கிட்டத் தப்பிச்சு காலை இழுத்து இழுத்துக்கிட்டு ஓடுனான் முத்து. சத்தம் கேட்டு அந்தப் பகுதியில இருந்த ஆளுக ஓடிவர, துரத்திக்கிட்டே வந்த பயலுக தப்பிச்சுப் போயிட்டானுக. ரத்தம் ஒழுக, தடுமாறி விழுந்த முத்து கொஞ்ச நேரத்துல செத்துப்போனான்.
முத்து செத்துப்போன செய்தி ஊருக்குள்ள பரவுச்சு. பாப்புவுக்கும் செய்தி எட்டுச்சு. கதறி அழுதா. முத்து இல்லாத வாழ்க்கையைக் கற்பனைகூட செய்ய முடியலே. துயரம் தாங்காம அரளிக்காயை அரைச்சுக் குடிச்சுட்டு அறைக்குள்ள படுத்துட்டா.பொணமாத்தான் தூக்குனாக.
முத்துவும் பாப்புவும் செத்துப்போன கொஞ்ச நாள்ல பெரிய மனுஷன் அம்மை வந்து படுத்துட்டான். ஊராளுக பல பேருக்கு அம்மை வந்திருச்சு. ஊரே வெம்மையாகிப் போச்சு. சிண்டு சிறுசுகெல்லாம் தவிச்சுச்சுக. `எல்லாத்துக்கும் முத்துவும் பாப்புவும்தான் காரணம்’னு எல்லாரும் சொன்னாக. பெரிய வீட்டு மனுஷனும் தன் தப்பை உணர்ந்து தன் மகளுக்கும் முத்துவுக்கும் பீடம் வெச்சு சாமியாக் கும்புட ஆரம்பிச்சான். அதுக்குப்பிறகு ஊரு குளிர்ந்துச்சு. நோய் நொடியெல்லாம் தீர்ந்து தெளிவானாக மக்கள்.
தூத்துக்குடி மாவட்டத்துல சிங்கத்தாங் குறிச்சின்னு ஓர் ஊரு... அங்கேதான் முத்துவும் பாப்புவும் இப்போ குடியிருக்காக. செஞ்ச தப்புக்காக எல்லாரும் கையெடுத்துக் கும்புட்டு கால்ல விழுந்துட்டுப் போறாக. பரிவார பீடங்களோட இந்த வேடிக்கையை கண்கொட்டாம பாத்து ரசிச்சுக்கிட்டிருக்காக ரெண்டு பேரும்.
- வெ.நீலகண்டன், படங்கள் : எல்.ராஜேந்திரன், ஓவியம் : ஸ்யாம்