
இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியம்: ம.செ - படம்: என்.ஜி.மணிகண்டன்
‘கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந்திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேரு மரங்கமே!’
-நாச்சியார் திருமொழியில் ஆண்டாள்.
கிளிச்சோழன், ராஜமகேந்திர சோழன் வரிசையில், நந்தசோழன் என்பவன் திருவரங்கத்தில் செய்த கைங்கர்யமும் அலாதியானது! இவன், அரங்கநாதரைத் தன் பெண்ணின் பொருட்டு மாப்பிள்ளையாகவே அடையும் பேறு பெற்றவன்.

இவனாலேயே உறையூர் எனும் தலத்தில் அழகிய மணவாளராய் அரங்கநாதப் பெருமாள் பிரதி உருக்கொண்டார். நமக்கெல்லாமும் உறையூர் அழகிய மணவாளப் பெருமாள் ஆலயமும் கிடைத்தது. இதன் பின்னே நயமான காதல் கதை ஒன்றுண்டு.
நந்தசோழனுக்குப் புத்ர ப்ராப்தி இல்லை. அதனால் அரங்கநாதரிடம் மன்றாடினான். பெருமாளும் நந்தசோழன் புத்திரப்பேற்றுக்கு வேறு விதமாய் ஆளாகும்படிச் செய்தார்!
ஒரு தாமரைத் தடாகத்தில் - அன்றலர்ந்த தாமரைகளுக்கு நடுவில், ஓர் அழகிய பெண் மகவை அயோனியாகக் கிடத்தி அழச்செய்தார். குழந்தையின் அழுகுரல் அந்தப் பக்கமாய் சென்ற நந்தசோழனை இழுத்து வந்து குழந்தையைக் காணச் செய்தது!
குழந்தையா அது? குங்குமப்பூ!
அள்ளி எடுத்தவன், அப்போதே புரிந்து கொண்டான்... இவள் அரங்கன் பரிசென்று!
தாமரை நடுவில் கிடந்தெடுக்கப்பட்டவள் என்பதால், `கமலவல்லி' எனும் திருநாமத்தை அவளுக்குச் சூட்டினான். கமலவல்லியும் தென்றலாய் திரிந்து, திங்களாய் வளர்ந்து, தேயாத நித்ய பௌர்ணமியாய் நிலைகொண்டாள்.
ஒருநாள் கமலவல்லியை உசுப்பவென்றே வந்தார் அரங்கன். வெண்குதிரை மேல் ஏறி வந்தவர், பலாச தீர்த்தப் பகுதியில் திமிலோக மாய்ப் புரவியைச் செலுத்தினார். அதுவரை, தந்தையான நந்தசோழனையின்றி வேறு ஆண் மகன் எவரையும் நேருக்கு நேர் பார்த்திராத கமலவல்லி, வெண் புரவி அரங்கனை மட்டும் தன்னை மறந்து நோக்கினாள். அந்த நொடியே அவரின் மீது காதல்வயப்பட்டாள். அவரைப் பின்தொடர்ந்தாள். அரங்கனும் `வா... வா...’ என்பது போல், அவளைப் பார்வையால் அழைத்தபடியே திருவரங்கக் கோபுரம் கடந்து உள் சென்று மாயமாய் மறைந்தார்.
கமலவல்லிக்குப் புலனாகிவிட்டது, வந்தவர் கர்ப்பத்தில் உதித்த மானுடனல்ல, கர்ப்பத்தையே உதிக்கச் செய்த மாமாயன் என்று. அந்த மாமாய னைப் பார்க்காமல் திரும்புவதில்லை எனும் வைராக்கியத்துக்கு ஆட்பட்டாள் கமலவல்லி.
இதன் நடுவே கமலவல்லியின் தோழியர் அவளைக் காணாது தேடி வந்தனர். குதிரையின் குளம்படித் தடயங்களும் கமலவல்லியின் பாத அச்சுகளும் அவர்களுக்கு வழிகாட்டியதில், அரங்கன் ஆலய கோபுரம் முன்னால் உறைந்து போய் நின்றுவிட்டவளைக் கண்டு ஓடி வந்து, `‘இளவரசி இங்கா இருக்கிறீர்கள். உங்களை எங்கெல்லாம் தேடுவது?’ என்று ஆலாபித்தனர்.
கமலவல்லியோ தோழியரின் குரலைக் கேட்டாளில்லை. மனம் முழுக்க அந்த புரவி வீரனின் புன்னகை முகமும், அந்த வெண் புரவியின் ஓட்டமுமே வியாபித்திருந்தன. அவள் நிற்கும் இடத்தோடு முடியாமல், அந்த புரவித் தடயங்கள் முன்னோக்கி கோபுரம் கடந்தும் அவள் கண்ணில் பட்டன. அவள் அதைப் பின்பற்றி உள் செல்லத் தொடங்கினாள்.

இதற்குள் செய்தியறிந்து ஆலயம் சார்ந்த அந்தணர்களும் காவலர்களும் கமலவல்லியை வரவேற்க ஓடிவந்தனர். கமலவல்லி எவரையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவள் நயனங்கள் குதிரைக் குளம்படிகள் மேல்தான் இருந்தன. ஆனால் அந்தக் குளம்படித் தடயங்கள் பிறர் பார்வைக்குப் புலனாகவில்லை!
“தேவியார் நிலத்தில் காண்பது எதனை?” என்று பணிவாகக் கேட்டார் ஒரு வேதியர்.
“தங்கள் கண்களுக்கு புலனாகவில்லையா? ஓர் அழகிய மணவாளனுடைய புரவியின் குளம்படித் தடயங்களையே நான் பின்தொடர்ந்தேன்... இதோ இங்கும் தொடர்கிறேன்” என்றாள்.
“புரவியின் குளம்படித் தடயங்களையா? எங்கள் கண்களுக்கு எதுவும் புலனாகவில்லையே! அதிலும், இது பட்டியக் கற்கள் வேயப்பட்ட கல் தரை. இதில் எப்படி தடயம் பதிவாகும்?’’ - அவர் மிகுந்த அசூயையோடு கேட்டார்.
“புலனாகாமலா நான் தொடர்கிறேன்? அதோ! அதோ...!” - கமலவல்லி தன் கண்களுக்குப் புலனான குளம்படித் தடயத்தைப் பார்த்தபடியே வேறு எவரையும் பாராமல் வேகமாய் நடந்தாள். தடயங்கள் அரங்கன் திருச்சந்நிதி நோக்கித் தொடர்ந்திருந்தன.
வேதியர்களும் காவலர்களும் கமலவல்லியைத் தொடர்ந்தனர். மனதுக்குள் ‘தேவிக்கு ஏதும் சித்தப் பிரமையோ?’ என்றும் கேட்டுக்கொண்டனர். திருச்சந்நிதியைக் கமலவல்லி நெருங்கவும் குதிரையின் கனைப்புச் சத்தம் எல்லோருக்கும் கேட்டது. கமலவல்லி நிமிர்ந்தாள். சந்நிதி வாயிலில் முகப்பு மண்டபத் தில் வெண்புரவி ஒன்று... நெற்றி பிடரி, முதுகுப் பிட்டம் வரை மஞ்சள் பூசப்பட்டு, அதன் மேல் குங்குமப்பொட்டு மின்ன, மதர்த்த தன் வாலைக் குழைத்தபடி நின்று கொண்டிருந்தது.
“இதே புரவிதான்... இதே புரவிதான்...'' என்றாள் கமலவல்லி.
“இளவரசியாரே, இது ஆலயத்தின் அஸ்வம். கூடுதலாக யானை, பசுவும் உண்டு. இப்போது அஸ்வ பூஜை நிகழ்ந்துள்ளது.’’
“எனக்கு அதெல்லாம் தெரியாது. இதன் மேல்தான் அந்த அழகன் வந்தான். என்னை தன் கண்களாலேயே வாவென்றும் அழைத்தான். பலாச தீர்த்தமருகே பந்து விளையாடச் சென்ற நானும் அவனைக் கண்ட மாத்திரத்தில் அங்கிருந்து பின்தொடர்ந்து வந்துள்ளேன்” என்றாள்.
அதைக் கேட்ட அஸ்வக் காப்பாளன் அங்கிருந்த காவலதிகாரி ஒருவர் அருகே சென்று , ‘`அதிகாரி... சற்றுமுன் இந்த அஸ்வமும் காணாமல் போய்விட்டது. காப்பகத்திலிருந்து இதை அழைத்து வந்து இங்கே நிறுத்திய நான், இதன் மேலான பட்டு வஸ்திரத்தை எடுத்து வரத் தவறியதால், அதை எடுத்து வரச் சென்றேன், திரும்பி வந்து பார்த்தால் அஸ்வத்தைக் காணவில்லை.
நாலாபுறமும் தேடியும் கிடைக்கவில்லை. நான் பதைத்துப் போய் திருச்சந்நிதி முன் நின்று கண்ணீர் மல்க ‘பெருமாளே... இது என்ன சோதனை?’ என்று பிரார்த்தனை புரியவும், ஒரு பேரழகு மாவீரன் என் தோள்பற்றி ‘நீ தேடும் அஸ்வம் அதோ’ என்று காண்பித்தான். நான் அதைக் கண்டு திரும்பும்போது, அவன் திருச்சந்நிதிக்குள் நுழைவதைக் கண்டேன். இந்த நொடி வரை அவன் வெளிவரவில்லை. தேவியார் குறிப்பிடுவதும் அவனாகத்தான் இருக்க வேண்டும். அவன் தோளில் கூட நீலவஸ்திரம் தொங்கிக்கொண்டிருந்தது’' என்றான்.
அடுத்த நொடியே வேதியர் கூட்டம், `அவன் யார்' என்று காண திருச்சந்நிதிக்குள் சென்றது. உள்ளே சந்நிதி வேதியர் மட்டும் இருந்தார். அவரும் தியானத்தில் இருந்தார். எல்லோரும் வரவும் கண் மலர்ந்தார்.
“என்னாயிற்று... ஏன் இத்தனை படபடப்பு?” எனக் கேட்டார்.
“யாரும் உள்ளே வரவில்லையா வேதியரே...”
“இங்கா... இந்தக் கர்ப்பக் கிரகத்துக்குள்ளா...? தீட்சை பெற்ற எங்களையன்றி இங்கே யார் வர முடியும்?” - அந்தப் பதிலோடு கேள்வி கேட்டவர், அரங்கனின் சயனக் கோலத்தைப் பார்த்தார். சயனகோலத் திருமேனியின் மேல் அந்த நீலப் பட்டாடை!
அதைக் கண்ட மாத்திரம் அவர் நெக்குருகினார். “எம்பெருமானே நீயா வந்தது?” என்று கண்களில் நீர் ஏந்தினார். கமலவல்லியும் ஓர் ஓரமாய் நின்று, அந்த நீலப்பட்டாடைக்கு மேல் கண்மூடிய நிலையில் துயில் கொண்ட தோற்றத்தில் கிடந்த அரங்கனைக் கண்டாள். அப்படியே நிலைகுத்தி நின்றுவிட்டன அவளின் நீல நயனங்கள்!
நந்தசோழன் மந்திரிப் பிரதானியர்களோடு ராஜ்ஜிய நிர்வாக ஆலோசனையில் இருந்த தருணம். தலைமைத் தாதி ஒருத்தி ஆலோசனை மண்டப வாயிலில் வந்து மண்டியிட்டுத் தலை குனிந்து அமர்ந்தாள். அப்படி அவள் செய்தால், ‘முக்கிய விஷயம். பேச அனுமதி வேண்டும்’ என்று பொருள். நந்தசோழனும் அவளைக் கண்டவனாய், தரை உரசும் தன் பால் வண்ணத் தோளாடையை இழுத்து தோளில் போட்டவனாய் அவளை நெருங்கி ‘`என்ன விஷயம்?’' என்று கேட்டான்.
“அரசே! தோழியரோடு நம் இளவரசியார் பலாச தீர்த்தத்தில் நீராடச் சென்று விளையாடிய வேளையில், அங்கே ஓர் அழகிய யுவ புருஷன் குதிரைமேல் செல்லக் கண்டு அவனைப் பின்தொடர்ந்துள்ளார். அந்த யுவ புருஷனும் திருவரங்கத் திருக்கோயிலுக்குள் புகுந்து, பின் திருச்சந்நிதிக்குள்ளும் புகுந்து மறைந்துவிட்டதைப் பின்னர் அறிந்துள்ளார். அந்த யுவ புருஷரே அரங்க மகாபிரபு என்று இளவரசியார் மட்டுமல்ல, ஆலயம் சார்ந்த எல்லோருமே கருதுகின்றனர்.
இளவரசியார் இப்படியோர் அனுபவத்திற்கு ஆட்பட்டதிலிருந்து ஓர் யோகியைப் போல் சதா அந்த அரங்கப் பிரபுவின் நினைப்பாகவே இருக்கிறார். உண்ணவும் உறங்கவும் மறுத்தவராய் ‘அரங்கப்பிரபு எதற்காக என்னை அழைத்தீர். ஏன் என்னைத் தனித்துவிட்டு மறைந்தீர். இனி என்னை ஆட்கொள்ள எப்போது வருவீர்’ என்று பிதற்றியபடியே இருக்கிறார்!”
- தாதி சொன்னதைக் கேட்டு, நந்த சோழன் முகம் முதலில் அதிசயித்தது; பின் கலங்கியது. தாதியிடம், தன் திருமகள் அருகில் ஆதரவாக இருக்கும்படி சொல்லிவிட்டு திரும்பி வந்து, மந்திரிப் பிரதானிகளிடம் நடந்ததை விவரித்து, ஆலோசித்தான். “மந்திரிப் பிரதானிகளே! என் மகளின் மனோ லயம் குறித்த தங்கள் கருத்து என்ன?” என்றும் கேட்டான்.
“மன்னா முதலில் நாம் இளவரசியாரைக் காண்போம். அவரிடமும் நேரில் கேட்டறிவோம். பிறகு ஒரு முடிவுக்கு வரலாம்” என்றனர் அவர்கள். அதேவேகத்தில் கிளம்பி அந்தப்புர மண்டபத்துக்கு வந்தபோது, அங்கே இளவரசியார் திருவரங்கனின் சிறிய கற்சிலைக்கு தூபதீபம் காட்டி பூஜித்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்டு துணுக்குற்றனர். ‘ஓடியாடியும் ஆடிப்பாடியும் பாடிக் கூடியும் கூடித் தேடியும்’ என்று குதூகலத்தில் மனம் மிதக்கும் பருவம்... அப்படித்தான் கமலவல்லியும் இருந்தாள். இன்றோ தலைகீழ் மாற்றம்!
மனித வாழ்வில் மாற்றங்கள் மிக சகஜ மானவையே. அதற்காக இப்படிக் கூடவா ஒரு மாற்றத்துக்கு ஓர் இளம் பெண் ஆளாவாள்?
நந்தசோழன் சற்றே கலங்கித்தான் போனான். மகளிடம் பேச்சு கொடுத்தான்.
“என்னம்மா இதெல்லாம்?”
“வழிபாடப்பா... பார்த்தால் தெரியவில்லையா?”
“இப்போது இதற்கென்னம்மா தேவை?”
“இதற்குக் காலமெல்லாம் கிடையாதப்பா...”
கமலவல்லியின் தெளிந்த பதிலால் மந்திரி மார்களும் அதிர்ந்தனர்.
“இளவரசியார் இதன் பொருட்டு பசியும் பட்டினியும் கிடப்பது சரியா? சுவர் இருந்தால் தானே சித்திரம் தீட்ட முடியும்?” - என்று ஒரு மந்திரி இடையீடு செய்தார்.
கமலவல்லி அவரை அழகாய் ஏறிட்டாள். பின் மெல்லிய குரலில் ‘`நான் அமுதனைக் கண்டவள்! அதனாலோ என்னவோ பசியே இல்லை!” என்றாள்.
அவர்கள் சற்றும் எதிர்பாராத பதில்தான் அது!
- இன்னும் வரும்...