
ஜனவரி-2 மகா பெரியவா ஆராதனைஓவியங்கள்: கேஷவ்
வருடம் 1933.
இந்தியச் சட்டசபையில் சர் ஹரிசிங் கவர் என்பவர், மாதர்களுக்குத் தம் விவாகத்தை ரத்து செய்துகொள்வதற்கு உரிமை தரவல்ல ஓர் சட்டத்தை நிறுவ முயன்ற விவகாரம் குறித்து விரிவான தலையங்கம் எழுதியிருக்கிறார், ‘கலாநிலயம்’ இலக்கிய வார இதழின் ஆசிரியர் டி.என். சேஷாசலம்.

அப்போது சென்னையில் எழுந்தருளியிருந்த மகாபெரியவா ஓர் உபந்நியாசத்தில், மண வாழ்க்கையின் வண்ணத்தைப் பற்றியும் விவாகத் தின் தத்துவத்தைப் பற்றியும் ஆற்றிய உரையைப் பற்றி அதில் குறிப்பிட்டிருக்கிறார். மகா பெரியவா கருத்துகளையும்... ஒப்பீடாக மேல்நாட்டு அறிஞர்கள் தெரிவித்துள்ள எண்ணங்களையும் இந்தத் தலையங்கக் கட்டுரைகளில் ஆராய்ந்திருந் திருக்கிறார் ஆசிரியர்.
மகா பெரியவா அருள் உரையைப் பார்ப்போம்..
“பாதி விரத்தியம் என்பது பதிக்குத் துரோகம் பண்ணாமலிருப்பது மட்டுமன்று. பரமேச்வரனே இப்படி வந்திருக்கிறான். அவரிடத்தில் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்கவேண்டும். அந்தந்தச் சித்தத்துக்கு எப்படி இருக்கவேண்டுமோ, அப்படியப்படி இருக்க வேண்டும். நமக்கென்று ஒன்று எதற்கு? நிழலைப் போல் அந்த மனதை அனுசரித்து நாம் நடக்கவேண்டும்.

நமக்கு வேறு காரியமில்லை. பிரம்மசார்யத்தில் குருவினிடத்தில் இருப்பதுகூட அந்த அளவு இல்லை. ஆத்ம வித்தைக்கு குரு வேறு இருக்கிறார். பெண்களுக்கோ அப்படியில்லை. பதியே ஈஸ்வரன் என்று இருக்கவேண்டும். விவாகமான பின்பு பதியை ஈஸ்வரனாக நினைத்து பூஜை செய்யவேண்டும். ‘நான் முன் பூஜை செய்த பரமேஸ்வரன் இப்படி வந்திருக்கிறார்’ என்ற ஞாபகம் இருக்கவேண்டும்.
ஸ்ரீராமர் அவதாரம் செய்தார். அவரின் பத்தினியாக சீதாதேவி இருந்ததுகூட அவ்வளவு பாதிவிரத்யமில்லை. ராமர் புருஷனாக வந்தால், யாரும் சீதைக்கு மேல் இருக்கலாம். மனதுக்குச் சலனம் ஏற்படக்கூடிய பல ஆபத்துகளில் ஜாக்கிரதையாக இருந்தாள் என்பதால்தான் அவளுக்குக் கௌரவம் ஏற்பட்டிருக்கிறது. ராமன் காட்டுக்குப் போகும்போது நானும் வருவேனென்று சண்டைபோட்டாள்.
பாதி விரத்தியத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தவள் நளாயினி. அவள் திரௌபதியின் முற்பிறப்பு. அவள் இருந்ததுதான் உத்தம பாதிவிரத்தியம். பரம விபரீதமான குணங்களும் பரம குத்ஸிதமான சரீரமும் இருந்தாலும் பதியினிடத்தில் பக்தி பண்ணினாள்.
தேகம் நன்றாக இருந்தால் நாமென்ன விரதமா யிருக்கிறது. மகாமகக் குளத்தில் ஊற்றுப்போட்டு ஜலம் இறைத்தால் வெள்ளைக்காரன்கூட ஸ்நானம் செய்வான். எவ்வளவு சேறானாலும் அது தீர்த்தம் என்று முழுகினால் அப்போதுதான் உண்மையான பக்தி உண்டு என்று தெரியும். பதியானவன் நிரம்பப் பணக்காரனாகவும் அழகுடையவனாகவும் இருந்தால், எல்லோரும் அவனிடத்தில் பிரியமாக இருப்பார்கள். மூடனாகவும் குரூபியாகவும் இருக்கிறவனிடத்தில்... ‘அவர் எப்படியிருந்தாலும் நமக்கு வெறுப்பு கூடாது. நம் மனது என்று ஒன்று நமக்கு வேண்டாம். நாம் அப்படிப் பிறந்தால் என்ன பண்ணுவோம்?’ என்று நினைக்க வேண்டும்.

அவளுக்கு அவருடைய செய்கையால் மான கஷ்டம் முதலிய குறைகள் வரும். அதற்காகப் பெண்கள் வருந்தக் கூடாது. நமது ஒரு மனது; அது அவர் மனது என்று அனுசரித்து வருபவள்தான் பதிவிரதை. அவர் நல்ல பதியாக இருந்தால் நம் பதிவிரதத்தைக் காட்ட முடியாது.
‘பரமேஸ்வரன் இப்படிக் கொடுத்துப் பார்க்கிறார்’ என்று சந்தோஷமாக இருக்கவேண்டும். அவமானம், கஷ்டமெல்லாம் கொஞ்சம் காலம்தான் இருக்கும். ‘இருக்கட்டும். அவர் மனதுதான் நம் மனது. நமக்கென்று வேறு இல்லை’ என்று இருந்துவிட்டால் அதிகப் புண்ணியம் உண்டாகிறது. அவமானம் முதலியவற்றுக்குப் பயந்துகொண்டு விரோதித்துக் கொண்டிருந்தால் கொஞ்சம் இகத்தில் லாபமிருக்கலாம். ஆனால் நஷ்டம் அதிகம். சித்த விருத்தியையே அர்ப்பணம் பண்ணிவிட வேண்டும். பதி நன்றாக இருந்தால், அவர் நன்றாக இருக்கிறார் என்பதற்காக அன்பாக இருப்பது பாதி விரத்தியம் ஆகாது.”
இப்படி, மணமான பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைத் தர்க்கரீதியாக விளக்கியிருக் கிறார் மகா பெரியவா. அதே அருளுரையில் மகான் மேலும் தொடர்கிறார்.
“எல்லோரும் தங்களுக்கு இருப்பவற்றை ஓரிடத்தில் அர்ப்பணம் செய்ய வேண்டும். புருஷன் குருவினிடத்தில் அர்ப்பணம் செய்ய வேண்டும். பெண்கள் பதியிடம் அர்ப்பணம் செய்யவேண்டும். ஏழெட்டுப் பேர்களை குருவாக வைத்துக்கொண்டால் கஷ்டம். அப்போது மனம் மாறும். ஆகையால் ஒரு குருவைத்தான் வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் ஸ்திரீ மனதை ஒருவரிடம் அர்ப்பணம் பண்ணவேண்டும்.
நமது மனதுக்குத் தோன்றுவதை விட்டுவிட வேண்டும். லோகத்தில் லாப நஷ்டம் என்பவை உண்மையில் இல்லை. அவை கொஞ்சம் நாள் இருப்பன போல் தோன்றும். பாக்கி இடங்களில் தான் லாப நஷ்டம் பார்க்கவேண்டும். அந்தக் குருவிடம் சரணாகதி பண்ணவேண்டும்.
மாடியிலிருந்து விழுந்தால் பூமி தாங்கும். மரத்திலிருந்து விழுந்தாலும் பூமி தாங்கும். பூமியிலிருந்து விழுந்தால் பூமிதான் தாங்கும். ஈஸ்வர அபசாரத்தைக் குருவினிடம் சொல்லித் தீர்த்துக்கொள்ளலாம். குருவிடம் அபசாரம் பண்ணினால், எங்கே அபசாரம் பண்ணினோமோ அங்கேதான் சொல்லிக்கொள்ள வேண்டும்.
புருஷன் குருவைத் தேட வேண்டும். எந்த நேரத்தில் விவாகமாயிற்றோ, அப்போதே புருஷன் ஸ்திரீக்குக் குருவாகின் றான். அவன் எவ்வளவுக் கெவ்வளவு துஷ்டனாயிருக்கின்றானோ அவ்வளவுக்கவ்வளவு அர்ப்பணா சக்தி அதிகமாகின்றது. அவன் மனதின்படி போவது நமது காரியம் என்று நினைக்கவேண்டும். அதுதான் பாதிவிர்த்தியம். இவன் பணக்காரன், அழகா இருக்கிறான் என்ற ஞாபகங்கள் தோன்றுவதற்கு முன்பே `நமக்கு ஏற்பட்ட இடம் இது’ என்று நினைத்து, அப்புறம் அந்த இடத்தில் எல்லாவற்றையும் அர்ப்பணம் பண்ணவேண்டும்.
பதி எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அப்படி இருக்கிறானே என்று துக்கப்படக் கூடாது. அப்படி அவன் இல்லாமல் இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். கொஞ்சம்கூட சலிப்பில்லாமல் இருக்க வேண்டும். அவன் பின்னோடே போகவேண்டும். அதனால்தான் பத்தினிக்கு ‘சாயா’ என்று ஒரு பெயர் ஏற்பட்டிருக் கிறது.”
முத்தாய்ப்பாக ‘கலாநிலயம்; ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தக்கது.
“இவ்வாசகங்களை அருளியுள்ள ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள், இந்தியர் தம் பண்டை நாகரிகச் சிறப்புகள் அனைத்துக்கும் ஆதாரமாகிய சாத்திரங்கள் அனைத்தையும் கற்றுத் துறைபோகிய பெரியவர். அதனோடு மேனாட்டுச் சிந்தனையாளர் வரைந்துள்ள நூல்களையும் ஓதி உணர்ந்திருக்கும் நலமுடையவர். துறவுநெறி வாழ்க்கையர். தெய்வபக்தி சிறந்தவர். நுண்ணிய அறிவின் மேன்மையை அவருடன் ஒருமுறை பயின்றிருப்பவரும் எளிதில் தெரிந்துகொள்வர்.
அன்னதோர் அரிய பெரியவர் ஒருவர் உரையினை ஏற்றுக்கொள்ள வேண்டா என்று இயம்பத் துணிபவர், அவருக்கு இணையான அறிவும் கல்வியும் படைத்தவர்களாக அன்றோ இருத்தல்வேண்டும்.
அவ்வாறு இருந்து அவருடைய மொழிகளில் இவையிவை தர்க்கத்துக்கும், அனுபவத்துக்கும், அதனால் மாந்தர்தம் நன்மைக்கும் விரோதமானவை யாக இருக்கின்றன என்று நாம் தர்க்கம் முதலியனவை வழுவாமல் எடுத்துக்காட்ட வேண்டும்.
அதற்கு பின்புதான் வேறொன்று பேசுவதற்கு அவர்களுக்கு வாயுண்டு. அதுவரையில், சும்மா இருங்கள் என்று சொல்வார்மீது விரோதம் கொண்டக்கால் யாருக் குக் குறை உண்டாகும் என்பதை இயம்பவும் வேண்டுமா.”
விவாகமான மாந்தர்கள் அவர்கள் தம் கணவர்மாரிடம் அனுசரிக்க வேண்டிய தர்மம் குறித்து 85 வருடங்களுக்கு முன் மகாபெரியவா அறிவுறுத்தியவை. அப்போது அந்த மகானுக்கு 39 வயது!
வாழ்க்கையில் தாங்க முடியாத துயரம் ஏற்படும்போது, ‘பகவான் எனக்கு மட்டும் ஏன் இப்படி அடுத்தடுத்து கஷ்டத்தைக் கொடுக்கிறார்? கடவுளுக்கே கண்ணே கிடையாதா? கசியும் இதயமே இல்லையா?” என்றெல்லாம் தூற்றிடும் பலர் உண்டு.
இப்படித்தான் கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனைச் செய்தபடியே இருந்த ஒருவர் மகா பெரியவரை தரிசிக்க வந்திருந்தார்.
- இன்னும் வரும்...
வீயெஸ்வி