மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 11

அன்பே தவம் - 11
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 11

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்ஓவியம் பாலகிருஷ்ணன்

அன்பே தவம் - 11

பேரறிஞர் அண்ணா, மரணத்தின் தலைவாசலில் படுத்திருந்த போதும் வாசித்துக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிர்பந்தம். அதை ஒரு நாள் ஒத்திப்போடச் சொன்னார். எதற்கு? அப்போது அவர் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். `அந்தப் புத்தகத்தைப் வாசித்து முடித்த பிறகு, சுவாசத்தை நிறுத்தினாலும் பரவாயில்லை’ என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.

அன்பே தவம் - 11

சுவாமி விவேகானந்தர் எதையும் வேகமாக வாசித்துவிடக் கூடியவர். சர் ஜான் லூப்பக் (Sir John Lubbock) எழுதிய புத்தகம் ஒன்றை நூலகத்திலிருந்து எடுத்து வந்தார். சில நாள்களிலேயே படித்து முடித்துவிட்டு, நூலகத்தில் கொண்டு போய் ஒப்படைத்தார். அது மிகப் பெரிய புத்தகம். நூலகருக்கு அதிர்ச்சி. `இந்தப் புத்தகத்தை இந்தத் துறவி படிப்பதுபோல எடுத்துக்கொண்டு போனார். ஆனால், படிக்காமல் அப்படியே திருப்பிக் கொடுத்துவி ட்டார் போலும்’ என்று நினைத்தார்.

விவேகானந்தருக்கு நூலகரின் எண்ண ஓட்டம் புரிந்தது. அவர் நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார். ``இந்தப் புத்தகத்தை நான் முழுவதும் படித்துவிட்டேன். இந்த நூலில் உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள், சொல்கிறேன்’’ என்றார். நூலகர், அந்தப் புத்தகத்தை விரித்துவைத்துக்கொண்டு, அதிலிருந்து பல கேள்விகளைக் கேட்டார். எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவாக விடை சொன்னார் சுவாமி விவேகானந்தர்.

அவரைப்போல பல மகத்தான மனிதர்கள் வாசிப்பையே சுவாசமாகக்கொண்டிருந்தார்கள். நம் தாயகத்தின் விடுதலைக்காகப் போராடிய பகத்சிங், எந்நேரமும் தூக்குக் கயிற்றை எதிர்பார்த்து, சிறையில் காத்திருந்தார். அவரைப் பார்ப்பதற்காக அவரின் அன்னை பலமுறை சிறைக்குச் சென்றார். அவரோ, அம்மாவைப் பார்ப்பதைத் தவிர்த்துக்கொண்டே வந்தார். எப்படியோ போராடி ஒருநாள் அந்தத் தாய் பகத்சிங்கைச் சந்தித்தார். ``மகனே, நீ மரணத்துக்கு அஞ்சியவனல்ல. நானும் உன் மரணத்துக்காக வருத்தப்படவில்லை. நம் தாயகத்துக்காக என் மகன் உயிரைத் தருகிறானே என்று இந்தப் பெற்ற வயிறு மகிழ்ச்சியடைகிறது; புனிதமடைந்து விட்டது. அதற்காக உனக்கு வாழ்த்து சொல்லத்தான் வந்தேன்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அன்பே தவம் - 11

பகத்சிங்கின் தந்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், `பகத்சிங் குற்றம் செய்தான் என்று குறிப்பிடப்படும் சம்பவம் நடைபெற்ற நாளில் அவன் ஊரிலேயே இல்லை’ என்று எழுதியிருந்தார். இதைக் கேள்விப்பட்டு பகத்சிங் பதறிப்போய் தன் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினார். `அப்பா,  எவ்வளவு பெரிய துரோகம் செய்துவிட்டீர்கள். நீங்கள் செய்ததை வேறு யாராவது செய்திருந்தால், `என் முதுகில் குத்திவிட்டார்கள்’ என்று நான் சொல்வேன். இவ்வளவு பெரிய துன்பத்தை எனக்கு இழைத்துவிட்டீர்களே! நம் தாயகத்துக்காக உயிரைத் தருவதற்கு நான் எப்போதும் சித்தமாக இருக்கிறேன். எனக்காக ஒருபோதும் நீங்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டாம். நான் குற்றம் புரியவில்லை என்றும் நீங்கள் சொல்ல வேண்டாம்’ என்று உறுதிப்படக் கூறியிருந்தார்.

பகத்சிங் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம்... ஒரு நாளுக்கு முன்னதாகவே அவரைத் தூக்கில் போட ஆங்கில அரசு தயாரானது. பகத்சிங் தனக்காகவும் தன் தோழர் களுக்காகவும் பிரிட்டிஷ் அரசிடம் கேட்டது ஒன்றைத்தான்... `எங்கள் மரணம் மரியாதையானதாக இருக்க வேண்டும். ஒரு போர் வீரனுக்குத் தருகிற மரியாதை எங்களுக்குத் தரப்பட வேண்டும். எங்களைத் தூக்கிலிட வேண்டாம். திறந்த வெளியில் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் பீரங்கிக்கும் எங்களை இரையாக்குங்கள். எங்கள் ரத்தம் இந்தத் தாய் மண்ணின் மீது விழ வேண்டும். அப்படிப்பட்ட ஒரு மரணத்தை எங்களுக்குத் தாருங்கள்.’

அன்பே தவம் - 11தூக்கிலிடப் போகிற தருணம்... பகத்சிங்கின் சிறைக் கதவு தட்டப்பட்டது. பகத்சிங் காவலர்களிடம் சொன்னார்... ``கொஞ்சம் பொறுமையாக இருங்கள். என் கடைசி அத்தியாயம் முடிவதற்குள், லெனின் குறித்த இந்தப் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தைப் படித்துவிட்டு வருகிறேன். ஒரே ஓர் அத்தியாயம்தான் பாக்கி. அதை முடித்துவிடுகிறேனே...’’

மரணத்தின் கடைசி நொடிவரை பகத்சிங், யாருக்காக வாசித்தார்? மனிதகுலத்தின் மேன்மைக்காக, தாயகத்தின் விடுதலைக்காக, ஒரு சமத்துவ சமூக அமைப்பு மலர்வதற்காக. அதைத்தான் `கல்வியின் பயன் அறிவு’ என்று திருவள்ளுவர் சொல்வார். எந்த அளவுகோலால் அறிவை நாம் அளக்கிறோம்? பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளும் பட்டங்களாலா... அரங்கத்தில் அருமையாகப் பேசுகிற மேதைமையாலா... நூல்களை எழுதிக் குவிக்கிற எழுத்துத் திறமையாலா?
 
திருவள்ளுவரே இதற்கும் பதில் சொல்கிறார்... `அறிவு என்பது துன்பத்தை நீக்குகிற மருந்து.’ உலகத்தில் நேற்றும் துன்பம் இருந்தது; இன்றும் இருக்கிறது; நாளையும் இருக்கும். ஆனால், `நேற்றைய துன்பத்தை எது இன்றைக்கு இன்பமாக மாற்றிக் காட்டுகிறதோ, அதற்குப் பெயர்தான் அறிவு’ என்கிறார் வள்ளுவப் பெருமான். கண்கூசும் அளவுக்கு ஒளிவீசும் மின்சார விளக்கு... அதைக் கண்டறிய ஒரு நாளல்ல, இரு நாளல்ல... பல ஆண்டுகள் முயன்றார் ஒரு விஞ்ஞானி. அதற்காகப் பகலும் இரவும் உழைத்தார். ஒரு நாள் நள்ளிரவு... பத்தாயிரமாவது முயற்சியின் போதுதான் நேர் மின்முனையும் எதிர் மின்முனையும் உரசிக் கொள்கிற சந்தர்ப்பம் அமைந்தது. மின்சார ஒளிக்கீற்று தோன்றியது. உடனே அவர், அருகே படுத்திருந்த தன் மனைவியைத் தட்டியெழுப்பிச் சொன்னார்... ``உலகின் முதல் மின்சார விளக்கு ஒளிவீசுகிற அற்புதத்தைப் பார்.’’ அவர் மனைவி, கண்களைக் கசக்கிவிட்டுச் சொன்னார்... ``கண் கூசுகிறது. விளக்கை அணைத்துவிட்டுப் படுங்கள்.’’ இது, ஓர் அறிவுஜீவிக்குக் கிடைத்த பாராட்டு.

அன்பே தவம் - 11

ஒரு நாள் தீ விபத்து ஒன்றில் அவர் ஆய்வுக்கூடம் எரிந்தது. ஆகாயம் தெரிந்தது. அவர் தன் மகனை அழைத்தார்... ``மகனே, உன் அம்மாவை அழைத்து வா. இந்த ஆய்வுக்கூடம் எரிகிற காட்சியைப் பார்த்தால், அவள் ஆனந்தப்படுவாள்’’ என்றார். அவரின் நண்பர்கள், ``உங்கள் ஆய்வுக்கூடம் எரிந்துவிட்டதே’’ என்று வருத்தப்பட்டுச் சொன்னார்கள். அந்த விஞ்ஞானி சொன்னார்... ``நேற்றுவரை நான் கண்டறிந்த தவறுகள்தான் எரிந்து போயின. இதற்குப் பிறகு நான் பல புதியன காணப் புறப்படுவேன்.’’ அதற்குப் பின்னர் பல கண்டுபிடிப்புகளை இந்த உலகத்துக்குத் தந்தார் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற அந்த மகத்தான விஞ்ஞானி.

அண்மையில் உலகின் உன்னதமான விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார். 76 வயதில் அவர் விண்ணுலகம் சேர்ந்தார். அவருடைய 15 வயதிலேயே அவரைக் கல்வி உலகம் புறக்கணித்தது; ஆசிரியர்கள் புறக்கணித்தார்கள்; சமூகம் புறக்கணித்தது. என்ன காரணம்? 15 வயதில் அவருக்கு ஏற்பட்ட நோயின் தாக்கம்தான் காரணம். கழுத்துக்குக் கீழே அவர் உடல்பாகங்கள் செயல்படாது. தலைப் பகுதி மட்டும்தான் இயங்கும். சக்கர நாற்காலியில்தான் வாழ்க்கை. ஆனால், உலகத்தின் அறிவுச் சக்கரத்தை அவர் புரட்டிப் போட்டார். இயற்பியலில் பல மர்மங்களுக்கு விடை கண்டுபிடித்தார். `இவர்தான் அடுத்த ஐன்ஸ்டீன்’ என்றெல்லாம் பலர் சொன்னார்கள். ``இல்லை, ஐன்ஸ்டீன் வேறு... நான் வேறு’’ என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.

அவர் எழுதிய `எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ (A Brief History of Time) என்ற புத்தகம், ஒரு கோடிப் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. அந்தப் புத்தகத்தின் விற்பனை வேகம் இங்கே முக்கியம் அல்ல. அந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கம்தான் முக்கியம். அவரின் அறிவுத் திறமை உலகெங்கும் வெளிச்சத்துக்கு வந்தது. அறிவுஜீவிகள் எப்போது சிந்திக்க மறந்துபோகிறார்களோ, அப்போதுதான் மரணமடைகிறார்கள்.

சிலருக்கு வயிறு மட்டுமே வாழ்க்கையாக இருக்கிறது; சிலருக்கு மூளை மட்டும் செயல்பட்டால் போதும் என்ற எண்ணம் இருக்கிறது. இவர்களுக்கு இடையே, இதயத்துக்காக வயிறு, மூளை இரண்டும் இயங்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தாம் மனிதத்தின் வாசலுக்கு அறிவை அழைத்துப் போகிறார்கள். அப்படி மனிதத்தின் தலைவாசலுக்கு அறிவை அழைத்துப் போக இளைய தலைமுறை, புதிய தலைமுறை தயாராக வேண்டும்.

சிலர் கலைமகள் விழாவன்று `படிப்பதில்லை’ என்று தீர்மானமாக இருப்பார்கள். நாம் எப்போதும் படிப்பதில்லை. அது வேறு விஷயம். கலைமகள் விழாவன்று, `புத்தகங்களைத் திறக்கக் கூடாது’ என்று அவற்றுக்குச் சிறப்பு விடுமுறை அளிக்கிறோமே... அதை மாற்றலாமே! உண்மையில், அன்றுதான் அறிவின் தலைவாசல் திறக்கப்பட வேண்டும். அன்றைக்குப் புதிய புத்தகங்கள் வாங்க வேண்டும். புத்தகங்களுக்குப் பொட்டிட்டு, பூவைத்துச் செய்வது மட்டுமல்ல கலைமகள் வழிபாடு. `அறிவின் வழிபாடு எங்கும் நடைபோட வேண்டும்’ என்று பாரதி சொன்னான். அந்த வழிபாட்டை நாம் நிகழ்த்த வேண்டும். புதிய புத்தகங்களை வாங்கி, படித்து, அறிவு வேள்வியை நடத்த வேண்டும். நம் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் புத்தகங்களைப் பரிசாகத் தர வேண்டும். அப்படிப்பட்ட உண்மையான வழிபாட்டுத் திருநாளை நாம் கொண்டாடுவோம்.

(புரிவோம்...) 

படம்: கே.ராஜசேகரன், ஓவியம் பாலகிருஷ்ணன்

அன்பே தவம் - 11

தூக்குப் போடும் இடம் நோக்கி, பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அந்தத் தருணத்தில் சிறையிலிருந்த மூவாயிரம் பேரும் ``இன்குலாப்... ஜிந்தாபாத்’’ என்று உரக்கக் குரலெழுப்பினார்கள். முதலில் பகத்சிங் தூக்கிலிடப்பட அழைக்கப்பட்டார். ``இன்குலாப்...’’ என்று பகத்சிங் உரக்கச் சொல்ல, சுகதேவும் ராஜகுருவும் ``ஜிந்தாபாத்...’’ என்று சொன்னார்கள். அடுத்து ராஜகுருவைத் தூக்கிலிட அழைத்துப் போனார்கள். ராஜகுரு, ``இன்குலாப்...’’ என்றார். சுகதேவ் ``ஜிந்தாபாத்’’ என்று முடித்தார். கடைசியாக சுகதேவ் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டினார்கள். ``இன்குலாப்...’’ என்று சுகதேவ் சொன்னார்.  அந்த நேரத்தில் ``ஜிந்தாபாத்’’ என்று சொல்ல ராஜகுருவோ, பகத்சிங்கோ இல்லை. ஆனால் அப்போது, யார் இவர்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றினாரோ, அந்தச் சிறைக் காவலாளி ``ஜிந்தாபாத்’’ என்று சொல்லி முடித்தார்.

பிறகு கண்களில் நீர் மல்க அந்தக் காவலாளி தன் சக ஊழியர்களிடம், ``நான் இந்த நாட்டில் ஏழெட்டுச் சிறைச்சாலைகளில் எத்தனையோ பேருக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியிருக்கிறேன். வாழவேண்டிய வயதிலுள்ள இளைஞர்களுக்கு இந்தத் தண்டனையை நிறைவேற்றவேண்டிய அவலம் நேர்ந்துவிட்டதே!’’ என்று மனம் வருந்தினார்.