
சிவமகுடம் - பாகம் 2 - 22

கோச்செங்கண் தரிசித்த புன்சிரிப்பு!
திருப்பாச்சிலாச்சிராமம் எனும் அந்தத் திருத்தலம் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இல்லையெனில், இப்படியொரு கொடுப்பினைகள் வாய்த்திருக்குமா?

அருமறைப் பிள்ளையார், ஆளுடைப் பிள்ளையார், ஆறணிசடையார்க்கன்பர், இறைவன் திருமைந்தர், இன்தமிழ் மறை தந்தார், காழி நன்னாடர், சிரபுரச் செம்மல்... இவ்வாறெல்லாம் பிற்காலத்தில் பற்பல திருப் பெயர்களால் போற்றிச் சிறப்பிக்கப்பட்ட ஆளுடைப்பிள்ளையாம் திருஞானசம்பந்தரின் வருகை முதல் கொடுப்பினை!
முதல் கொடுப்பினை என்றால்... வேறு என்னென்ன பாக்கியங்கள் கிடைத்தன அந்தத் தலத்துக்கு எனும் கேள்வி எழுகிறதல்லவா?
வரிசையாகக் காண்போம்.
சீர்காழிச் சிவக்கொழுந்தாம் திருஞானசம்பந்தப் பெருமான், தம் செம்பவழவாய் இதழ் பிரித்து, `துணிவளர்...’ எனத் தொடங்கி, பதிகம் அருளிச் செய்தது, அடுத்த கொடுப்பினை!
`மிகச் சிறிய துண்டாயிருந்து பின்னர் வளர்ந்து ஒளியுடன் திகழும் மதியைத் தம் சுடர்விடும் சடைமுடியில் கொண்டு, பாம்புகள் பொருந்திட, பூதகணங்கள் புடைசூழ, கரத்தில் கபாலத்தை ஏந்தியவண்ணம்... பேதம் இல்லாமல் எவ்வித பாகுபாடுமின்றி அனைவரிடத்தும் பிக்ஷை ஏற்பவர் எம்பெருமான்.
அவரே, சுந்தரக் கோலம் கொண்டு இந்தத் தலத்தில் எழுந்தருளும் நீலகண்டர். இவரா, இந்தப் பெண்ணை நோயால் வாட்டம்கொள்ளச் செய்தது. இதுவா இந்தப் பெருமானின் மாண்பு’ எனும் பொருள்பட சீர்காழிப் பிள்ளை பதிகம் பாடிட, அதனால் மகிழ்ந்து அவருக்காகவும் அந்த ஊர்த் தலைவனின் மனம் மகிழவும் சிவப்பரம்பொருள் அருள்புரிந்தது மூன்றாவது பாக்கியம்.
அதுவும் எப்படி... பதிகம் பாடினான் பிள்ளை, அதைக் கேட்டோம்; மகிழ்ந்தோம்; கொடுத்தோம் என்றில்லாமல், `கண்டவர் விண்டிலர்’ எனும்படி தாண்டவமும் ஆடிக் காட்டி அருள்புரிந்தாராம் அந்த அரனார்.
அணுக்கத் தொண்டராம் சம்பந்தச் சரணாலயர் பண் இசைக்க, பொற்கரத்திலிருந்த தாளத்தை இசைத்து ஆளுடைப் பிள்ளை பதிகம் பாட, ஊரின் அதிபதி கொல்லிமழவனும், அவன் வழிகாட்டியான சிவப் பெரியவரும், கூட்டத்தில் ஒருவனாய் நின்ற நம் கோச்செங் கணும், இன்னும் அங்கே கூடியிருந்த அடியார்கள் பற்பலரும் செவிக்கினிமையாய்ப் பாடலைக் கேட்டதோடு, அந்தப் பதிகத்துக்கேற்ப பரமன் ஆடிய ஆட்டத்தை மனக்கண்ணால் கண்டு மகிழ்ந்தார்கள் என்றே சொல்லவேண்டும்.
ஆம்! `துணிவளர் திங்கள் துலங்கி விளங்க...’ என்று பிள்ளை பாடத் தொடங்கியபோது, அவர்களுக்குப் பெம்மானின் பிறைமுடி தெரிந்தது. ‘சுடர்ச்சடை சுற்றி முடித்துப் பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ...’ என அடுத்த வரியைப் பாடும் தருணத்தில்... விரி சடையும், எரிபடையும், மரவுரியும், வீரக்கழலும், திருமுகமும் அடுத்தடுத்துத் தோன்றின. ஞானப் பிள்ளை தொடர்ந்து பாடிட, தென்னாடுடைய சிவனாரின் தாண்டவமும் பரிபூரணமாய்த் தொடங்கித் தொடர்ந்தது!
மான் ஆடியது; மழு ஆடியது; மதியும் ஆடியது. மாதொருபாகனின் தேவியும் உடனாட, மாலும், மறையும், மறை தந்த அயனும் சேர்ந்து ஆடுவதாகப்பட்டது அடியார்களுக்கு. அவர்களின் மனமும் ஆடியது ஆனந்தத்தால்!
ஆம்! திருஞானசம்பந்தப் பெருமான் இத்தலத்தில் பதிகம் பாடி வணங்க, கொல்லி மழவனின் மகள் குணமடைந்து எழுந்தாள். அவளின் பிணியை ஒரு பாம்பாக மாற்றி, அதன்மீது நின்றாடினார் சிவனார் என்றே விவரிக்கிறது, திருபாச்சிலாச்சிராமத்தின் (திருவாசி) தலபுராணம். சர்ப்பத்தின் மீது நின்றாடியதால், திருவடியின் கீழ் முயலகன் இல்லாமல் சர்ப்பத்தை மிதித்தபடி சர்ப்ப நடராஜராகவே இந்தத் திருக்கோயிலில் அருள்கிறார் ஆடல்வல்லான்.
சீர்காழிப் பிள்ளையின் வருகை, அவரருளிய பதிகம், பதிகத்தால் விளைந்த ஆனந்தம் அனைத்தையும் அனுபவித்துச் சிலிர்ப்பில் சிலையாகி நின்றான் கோச்செங்கண். திடுமென ஒலித்த ஆலயமணி அவனை உசுப்பி நிகழ்காலத்துக்கு அழைத்து வந்தது. பரமனை தீபத்தால் ஆராதித்துக் கொண்டிருந்தார்கள் வேதியர்கள். ஊரின் அதிபதி கொல்லிமழவன் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்திருந்ததை, அவன் கன்னங்களில் வழிந்த நீரும் முகத்தில் பொலிந்த மலர்ச்சியும் எடுத்துக்காட்டின. அருகில் பூர்ணமாய்ப் பொலியும் மதியென நின்றிருந்தாள் அவன் மகள்.
``அற்புதம்... அற்புதம்...’’ என்றபடியே, சிரமேற் கரம்குவித்து, கண்ணீர்மல்கிக் கசிந்துருகி வணங்கி நின்றான் கோச்செங்கண்.
அவன் உள்ளம் பாண்டிமாதேவியாரின் தீர்க்கதரிசனத்தை எண்ணிச் சிலாகித்தது. அவர் குறித்த எண்ணம் எழவும், அவருக்காகவும் வேண்டிக்கொண்டான். அவருக்காக வேண்டுதல் எனில், அது ஒட்டுமொத்த பண்டியதேசத்துக்காகவும்தான். பாண்டிய நாடு நலம்பெற்றால், அது சோழத்துக்கும் நலம் சேர்க்கும் என்பதை அவன் அறிந்தே இருந்தான். அதையொட்டியே அவனுடைய வணக்கமும் வேண்டுதலும் அமைந்தன.

வணங்கி முடித்தவன் வெட்டவெளியாகத் திகழ்ந்த ஆலயத்தின் திருச் சுற்றில் துவஜ ஸ்தம்பத்தை அணுகி, மீண்டுமொருமுறை அந்தப் பரமனை தரிசித்து வணங்கினான். பின்னர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான்.
அவன் எழுந்தபோது, எதிரில் சிரித்துக் கொண்டிருந்தது, சீர்காழிப் பிள்ளை!
பாண்டிய தேசத்துக்குப் பேரானந்த பெரு வாழ்வு வெகுவிரைவில் கிடைக்கப்போகிறது என்பதைச் சொல்லாமல் சொன்னது அந்தப் புன்சிரிப்பு!
நாக முத்திரை!
‘‘யார் நீ?’’
வலுவான முரட்டுக்கரம் தன் கழுத்தைச் சுற்றி இறுக்கிக்கொண்டிருந்த வேளையிலும், கொஞ்சமும் பதற்றப்படாமல், தன்னை அடக்கியாள முற்படுபவனிடம் அதட்டும் தொனியில் கேட்டான் இளங்குமரன்.
பதிலுக்கு பெரும் சிரிப்பொன்றையே உதிர்த்தான் முரடன். ஆனால் அந்தச் சிரிப்பு அடுத்த சிலவிநாடிகள்கூட நீடிக்கவில்லை. அந்த முரடன் எதிர்பாராத தருணத்தில் அவனது விலாப்புறத்தில் ஓங்கி முட்டியது இளங்குமரனின் முழங்கை. அவ்வளவுதான் `ஹக்..ஹா’ என்று விநோத முணகலுடன், எந்த நீர்ப்பரப்பிலிருந்து எழுந்து தாக்கத் தொடங்கினானோ, அதே நீர்ப்பரப்பில் வீழ்ந்து மூழ்கத் தொடங்கினான் முரடன்!
அவனது கனத்த சரீரத்தை வைகை தன்னுள் முழுமையாக இழுப்பதற்குள், முரடனின் கேசத்தைப் பற்றிக்கொண்டான் இளங்குமரன். முதலைக்குத்தான் நீருக்குள் பலம் அதிகம்; இந்த முரடனின் உடம்பு நீரின் இடையே இழுப்பதற்கு இலகுவாகவே இருந்தது இளங்குமரனுக்கு.
ஒருவாறு அவன் உடம்பைப் பற்றியிழுத்து கரைசேர்த்தவன், முரடனின் உடலைத் தரையில் கிடத்தி, அவன் நாடியைப் பரிசோதித்தான். பிராணன் நீங்கவில்லை என்பதை துடிப்பிலிருந்து உணர்ந்துகொண்டான்.
சிறு தாக்குதலால் உயிர் போய்விடுமா என்ன? போகாதுதான்! ஆனால், தாக்குதல் சிறியது என்றாலும் முரடனின் தேகத்தில் இளங்குமரன் வைத்த இலக்கு விபரீதமானது. ஆகவேதான், பரிசோதித்துப் பார்த்தான். முரடன் பாக்கியசாலி என்பதால் பிழைத்துக் கொண்டான் போலும்.
உயிர் இருப்பது உறுதியானதும் அடுத்த காரியத்தில் இறங்கினான் இளங்குமரன். அவனுக்கு மயக்கம் தெளிவிப்பதற்குள், முரடனின் அங்க அடையாளங்களை உற்று நோக்கி ஆராய்ந்தான். முரடனின் கச்சையில் திகழ்ந்த குறுவாளை எடுத்துப் பார்த்தான். அதில், அவன் யாரென்பதற்கு எவ்விதமான சாட்சியங்களோ, முத்திரையோ தென்படாத தால் சலிப்புடன் தரையில் விட்டெறிந்தான்.
அந்த முரடன், உருவத்தில் ஒட்டுமொத்தமாக தன்னை ஒரு பாண்டிய பிரஜையாகவே காட்ட முனைந்திருப்பதை அவன் ஆடையலங் காரங்களும் ஆபரண வகையறாக்களும் உணர்த்தின. அடையாளம் காணமுடியாத ஏமாற்றத்தில் மேலும் சலிப்புற்ற இளங்குமரன் அந்த எதிரியை வெறுப்புடன் புரட்டிவிட்டான்.
அப்போதுதான் கவனித்தான்... புரண்டு விழுந்த முரடனின் வலது புஜத்தில் திகழ்ந்த அந்த அடையாளத்தை. பயம் என்பதையே அறிந்திராத வீரனான இளங்குமரனுக்குள்ளும் பெரும் பீதியை உண்டாக்கியது அந்த அடையாளம். ஆம்! அதுவொரு நாக முத்திரை!
வைகை நதிக்கரையில் இப்படியான சம்பவம் நிகழ்ந்துகொண்டிருக்க, மனதைப் பாரமாய் அழுத்திக்கொண்டிருக்கும் பெரும் ரகசியத்தைப் பாண்டிமாதேவியாரிடம் இறக்கிவைத்துவிடும் வேகத்தில், மாமதுரையின் அரண்மனைக்குள் பிரவேசித்துக்கொண்டிருந்தாள் பொங்கிதேவி.
அந்த ரகசியம் ரகசியமேயல்ல என்பதை காலம் அவளுக்கு உணர்த்தியபோது, பாண்டிமா தேவியார் வகுத்திருந்த பெரும் திட்டத்துக்குக் கருவியாகியிருந்தாள் அவள்.
தவிர்க்கவே முடியாத பேரின்பச் சுமை அது!
- மகுடம் சூடுவோம்...
ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்